கள்ளர் சரித்திரம் – 7

ஆறாம் அதிகாரம்

நன்மக்கள், தற்கால நிமை, சீர்திருத்தம் :

கள்ளர் அல்லது அரையர் குலத்தவர் அரசராயும், குறுநில மன்னராயும், அமைச்சராயும், படைத்தலைவராயும் தொன்று தொட்டு இருந்து வந்திருப்பது முன்பு காட்டிய வரலாறுகளானே அறியலாகும், இங்ஙனமே சிறந்த பக்தர்களும், ஞானிகளும், புலவர்களும் , வள்ளல்களும் ஆக எண்ணிறந்த பெரியோர்கள் இக்குலத்தில் இருந்திருக்கின்றனர்.

பெரிய புராணத்திற் கூறப்பட்ட திருத்தொண்டர்களில் கூற்றுவர், நரசிங்கமுனையரையர், ஐயடிகள் காடவர்கோன், கழற்சிங்கர், மெய்ப்பொருளார் ஆகிய ஐவரும் இக்குலத்துக் குறுநிலமன்னராவர், திருமால் அடியாருள் ஒருவரும், பெரிய திருமொழி முதலிய ஆறு சிறந்த பிரபந்தங்களியற்றி நான்கு கவிப்பெருமாள் என்னும் பட்டம் பெற்றவரும், திருவரங்கத்திற் பல திருப்பணிகள் இயற்றிய பெரியாருமாகிய திருமங்கையாழ்வார் இவ்வகுப்பினரென்பது பிரசித்தம்.

இவர் திருமங்கை யென்னும் நாட்டிலே தோன்றிய சிற்றரசராகலின் திருமங்கை மன்னன் எனவும் கூறப்படுவர். இவருடைய பாசுரங்களினால் இவருக்குரியவாக அறியப்படுகின்ற பரகாலன், கலிகன்றி முதலிய பெயர்களிலிருந்து இவருடைய வீரமும், நேர்மையும் முதலியன நன்கு விளங்கும். நல்லறிவுடையார், இவரது வரலாற்றிற் கலந்துள்ள புனைந்துரைகளை நீக்கி உண்மை காணற்பாலராவர். இவ்வாழ்வாரது பெருமை அளவிட்டுரைக்கற்பாலதன்று, திருவேங்கடத்தை யாண்ட முனித்தொண்டைமானுக்குத் திருவேங்கடமுடையான் சங்காழி நல்கியதாயும், அத்தொண்டைமான் திருமகளாராய அலர்மேல் மங்கையாரைத் திருமணஞ் செய்த தாயும் திருமலை மான்மியம் கூறுகின்றது.

முனையதரையன் என்பான் ஒருவன் வீரசோழனக்குத் தண்டத்தலைவன் என்றும், திருமால் பத்தியிற் சிறந்தவனென்றும் திருக்கண்ணபுர புராணம் கூறுகின்றது. முனையதரையன் பொங்கல் என்று இவன் பெயரால் வழங்கும் திருவமுதே இவனது பத்தியின் மேன்மையைப் புலப் படுத்தும். காடுவெட்டியின் சிவபத்தி மேன்மையைத் திருவிளையாடற் புராணத்தால் அறியலாகும். இவ்வரலாறு முன்பு கூறப்பட்டுளது. இக்குலத்துக் கருணாகரத் தொண்டைமான் என்பான் ஒருவன் அரசற்கு அமைச்சனாயிருந்து, திருவாரூரில் தியாகேதஸ்சரது திருவடியில் கலந்தான் என்று கருணாகரத்தொண்டைமான் என்பதும் ஒன்றாக இருத்தலினாலேயே அவனது அன்பு முதிர்ச்சியை அறியலாகும்.

‘அருணயத் தொண்ட ரனைவருந்தா னென்னுங்
கருணையைப் பார்முழுதுங் காணத் – திருவடிக்கீழ்
மன்னுங் கருணா கரத்தொண்டை மான்வந்தான்
என்னுந் திருச்சின்னத் தெம்பிரான்.’

என்று திருவாரூருலாக் கூறுவது காண்க. திருவரங்கத்தில் சிற்றரசராயிருந்த அகளங்க நாட்டாள்வார் என்பார் இராமாநுசரது சீடரென்றும், சிறந்த பக்தெரென்றும் முன்பே காட்டியுள்ளாம்.

முத்தரையர், முனையதரையர்,செழியதரையர், பல்லவதரையர் என்றார் போலப் பல பட்டப்பெயர்கள் தரையர் என்னம் பெயருடன் சேர்ந்து கள்ளர்களுக்கு வழங்குகினறனவென்றும், ‘இரவலவா……திருவேங்கட நாதா’ ‘தேன்பிறந்த…….பிறந்தான் முன்’ என்னும் பட்டுக்களாற் குறிக்கப்படும் திருவேங்கடநாதர் என்னும் வள்ளல் கள்ளர் குலத்தில் செழியதரையர் என்னும் பட்டமுடையவரென்றும், பாண்டி நாடு பஞ்சமுற்ற பொழுது சங்கப்புலவர்களை வரவழைத்து ஆதரித்தவனும், சோழ நாட்டவனும் ஆகிய ஆலஞ்சேரி மயிந்தன் என்னும் உபகாரியும் இக்குலத்தவனே யென்றும், இக் குலத்தவைரைக் குறித்து மூவரையர் வண்ணம் என்பதொரு பிரபந்தம் உண்டென்றும், இக்குலத்தவரில் பல சிறந்த தமிழ்ப்புலவர்களுண்டென மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் அடிக்கடி பாராட்டிக் கூறுவதுண் டென்றும் மகாமகோபாத்தியர் உ.வே.சாமிநாத ஐயரவர்கள் இளங்காடு நற்றமிழ்ச்சங்கத்தின் ஓர் ஆண்டு விழாவில் தலைமை வகித்த பொழுது கூறியுள்ளார்கள்.

நன்னூலின் தொல்லுரையாளரான மயிலை நாதரால் இந்தப் பத்தெச்சமும் புவி புகழ் புலமை அவிநய னூலுட் டண்டலங் கிழவோன் றகைவரு நேமி யெண்டிசை நிறை பெயர் இராச பவித்திரப் பல்லவதரையன் பகர்ச்சி யென்றறிக’ என்று சிறப்பித் தோதப்பெற்ற அவிநய உரையாசிரியராகிய பல்லவதரையரும், அகப்பாட்டுரைகாரரான பால்வண்ணதேவன் வில்லவதரையனார் என்பாரும் கள்ளர் குலத்தினரென்பது தேற்றம்.

மிக அணித்தாய காலத்திலும் இவ்வகுப்பில் கற்றோர் பல் இருந்திருக்கின்றனர். தத்தனூரிலிருந்த அண்ணாசாமி நாடாள்வார் திருவானைக்கா மீது ‘ திருவெண்ணாவற்கோவை’ என ஓர்அகப் பொருட்கோவை பாடியுள்ளார். தத்தனூரிலிருந்த கனகசபைச் சர்க்கரையப்ப நாடாள்வார் ‘பிம்பைக் கோவை’ என ஓர் அகப்பொருட்கோவை பாடியுள்ளார். செங்கரையூரிலிருந்த குழந்தைக் களத்து வென்றார், ‘பஞ்சாட்சா மும்மாலையந்தாதி’ என ஓர் அந்தாதி பாடியள்ளார்.

அதற்கச் சாத்துக்கவியளித்த சோடசாவதானம் வேலாயுதக் கவிராயர், சோடசாவதானம் சரவணப் பெருமாள் கவிராயர் முதலிய புலவர்கள் களத்து வென்றாரைப் பெரிதும் புகழ்ந்து பாடியிருக்கின்றனர். பிரம்பூரிலிருந்த நடராசச்சர்கரையப்ப நாடாள்வார் ‘திருவையாற்றந்தாதி’ என்னும் பிரபந்தம்பாடி, மாகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் முன்பு படித்ததுக்காட்டி

பிள்ளையவர்களாலும், தியாகராசச் செட்டியாரவரகளாலும் சாத்துக்கவியளிக்கப் பெற்றனர்.

மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பாடியது:
மறைமுடிவாழ் மாதேவன் வண்செவிக்கண் வாக்கு
நறையெனநூ லோர்ந்தருட ராசன் –பிறைநுதலார
கையாற்றந் தாதிவர்பூங் கஞ்சந் திகழ்கழனி

யையாற்றந் தாதியரைத் தான்.

தியாகரரசச் செட்டியாரவர்கள் பாடியது:

மன்னுதிரு வையாற்றின் வாழ்பரம னார்ச்செவிக்குத்
துன்னு மருளுமையின் சொல்லாகும்– நன்னூல்கள்
நந்தா தினிதோர் நடராசன் சொலயமக
வந்தாதி யென்னு மது.

பூண்டி வீரையா வாண்டையார் திருப்பூவண நாதர் மீது தோத்திரங்கள் பாடியிருக்கினறனர். இளங்காடு, உறத்தூர், கடையக்குடி, நடுக்காவேரி, முதலிய இடங்களில் தமிழ் புலமை யுடையோர் சிற்சிலர் இருந்திருக்கின்றனர். சில ஆண்டுகளின் முன் அன்னம்பட்டீயத்திற்கு விளக்கம் எழுததி ‘தருக்க விளக்கம்’ என வெளிப்படுத்திய சோமசுந்தரம் பிள்ளையும் இவ்வகுப்பினரே. பொதுவாக இக்குலத்தவர் தமிழிலே அளவு கடந்த ஆர்வமும் பற்றுமுடையர் என்று கூறுதல் பொருந்தும்.

மூன்றாண்டின் முன் இவ்வுலகில் புகழுடம்பைவைத்துச் சென்றாரும், கல்வியிலும். வண்மையிலும், நற்குணத்திலும் மிக்காரும், அரசஞ்சண்முகனார், பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், ஜி. சதாசிவவிஞ்சைராயர், சர்க்கரை இராமசாமிப் புலவர், மு.ரா.அருணாசலக்கவிராயர், கோபால கிருஷ்ணையர், வி. சாமிநாதப்பிள்ளை முத்துசாமி ஐயர்,சேதுராம பாரதியார் முதலிய எண்ணிறந்த புலவர்களாற் புகழ்ந்து பாடப்பெற்ற பெருமை வாய்ந்தாரும் ஆகிய அரித்து வாரமங்கலம் கோபாலசாமி ரகுநாத இராசாளியார் இக்குலத்தவரென்பது யாவரும் அறிவர். சோழவந்தான் சண்முகம்பிள்ளையவர்களால் எழுதப்பட்ட தொல்காப்பியப் பாயிர விருத்தி என்னும் புத்தகம் இராசாளியாரவர்களால் பதிப்பிக்கப்பட்டதென்பதை அதன் முகவேட்டினின்றும் அறியலாகும். மற்றும் பிள்ளையவர்கள் அப்புத்தகத்தில் நன்றி கூறல் என்னும் பகுதியில் இராகாளியாரைக் குறித்துக் கூறியிருப்பது நோக்கத்தக்கது. அது,

” பின்பு சுவாமிகள் கட்டளைப்படி முறையே பாயிரவிருத்தி முதலாயின அச்சிடுமாறு கருதிக் குரோதி வருடம் தை மாதம் தஞ்சை சென்றேன். சென்று வேலை தொடங்கிய சினாளுட் சுரங்கண்டு உணவொழித்துக் கிடைப்படுத்திற்றாகலின் அச்சிடு முயற்சியும் நின்றது. அக்காலை, எனக்கு மிக்க நண்பினரும், வடமொழி, தென்மொழி ஆங்கில நூலாராய்ச்சியே பொழுது போக்கும் விளையாட்டாகவுடையாரும், பிரபு சிகாமணியும், வள்ளலும் ஆகிய அரித்துவாரமங்கலம் மகா ராரா ஸ்ரீ வா. கோபாலசாமி ரகுநாத ராசாளியாரவர்கள் என்னைத் தம்மூர்க்கழைத்துச் சென்று, பல நன்மருத்துவரைக்கொண்டு மருந்தளித்தும், வேதமுணர்ந்த அந்தனரைக் கொண்டு கிரக சாந்தி முதலாயின செய்தும் பிணி தீர்த்து, வெண்பொற்காசு முந்நூற்றின்மேலாக என்னிமித்தம் செலவு செய்ததுவுமின்றி, அப்பொழுது தேகவன்மை யெனக்கின்மையால் தமக்குள்ள இன்றியமையாதனவாகிய உலகியல் பலவற்றையுங் கருதாமல் தாமே பரிசோதித்தும், பிரைக்கொண்டு பரிசோதிப்பித்தும் இப்புத்தகத்தைப் பதிப்பித்து முடித்துப் பேருதவிபுரிந்தார்கள்.

அவர்கள் செய்த உதவியேயன்றிக், குணமாட்சியும் பன்னாளுடனிருந்து பழகித் தெரிந்தேனாகலின் அவர்களது நாட்பை எழுமையும் மறப்பேனல்லேன்” என்பது.

தொடரும்…

This entry was posted in ந.மு. வேங்கடசாமி நாட்டார் and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *