திருவாரூர்:
திருவாரூர் அருகே, 1,100 ஆண்டுகள் பழமை வாய்ந்த, எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட, மூன்று கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. திருவாரூர் மாவட்டம், சீதக்கமங்கலம் கிராமத்தில், மிகப் பழமையான சோழர் காலத்து சிவன் கோவில் சிதிலமடைந்து உள்ளது.
இக்கோவில் இடிந்து தரைமட்டமாகிக் கிடந்ததால், அப்பகுதியினர், கோவில் பக்கம் செல்ல அச்சப்பட்டு வந்தனர். கோவிலைப் புதுப்பிக்க, முன்னாள் ஊராட்சித் தலைவர் ராமலிங்கம், சிவராமன் உள்ளிட்ட குழுவினர் முயற்சித்தனர். முதற்கட்டமாக, நேற்று முன்தினம் முட்புதர்களை அகற்றி, பழைய கற்களை சரி செய்தனர். அப்போது, பள்ளம் தோண்டியதில், மூன்று கல் தூண்கள் கிடைத்தன.
ஆய்வு :
இதுகுறித்து, கல்வெட்டு ஆய்வறிஞர் குடவாசல் பாலசுப்ரமணியனுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆய்வறிஞர் பாலசுப்ரமணியன், தமிழ்ப் பல்கலைக் கழகக் கண்காணிப்பாளர் டாக்டர் ஜெம்புலிங்கம்
அடங்கிய ஆராய்ச்சிக் குழுவினர், கல் தூணை ஆய்வு செய்தனர். ஆய்வறிஞர் பாலசுப்ரமணியன் கூறுகையில், “இக்கல்வெட்டு கி.பி., 912ம் ஆண்டைக் குறிக்கிறது. அதில், அவ்வூரின் பழமையான பெயர் ஸ்ரீதொங்கமங்கலம் என்னும் அபிமான சதுர்வேதி மங்கலம் என
குறிக்கப்பட்டுள்ளது. மற்றொரு கல்வெட்டான நிலைக்கால் ஒன்று, ராஜராஜனின் 27ம் ஆட்சியாண்டில் (கி.பி., 1,012)ல் பொறிக்கப் பெற்றது. அந்த சாசனத்தில் அவ்வூரின் இரு பெயர்கள் பதிக்கப்பட்டு உள்ளன. ஸ்ரீதுங்கமங்கலம் என்றும் அபிமான பூஷண சதுர்வேதி
மங்கலம் என குறிக்கப்பட்டு உள்ளது. அபிமான பூஷணன் என்பது ராஜராஜனின் பட்டப் பெயர்.
நாகப்பட்டினத்தில் கடாரத்து (மலேசியா) அரசன் கட்டிக் கொண்டிருந்த பவுத்த விகாரத்துக்கு மாமன்னன் ராஜராஜன் 97 வேலி நிலத்தை தானமாகக் கொடுத்து, அதை செப்பேட்டில் சாசனமாகப் பதிவு செய்துள்ளான். அதில், கையொப்பமிட்ட துர்பில் ஸ்ரீதரப்பட்டன் என்பவர் ஸ்ரீதுங்கமலங்கலத்தை சார்ந்தவன் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. 1,100 ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோவிலைப் புதுப்பிக்க முயன்ற மக்களைப்
பாராட்டுகிறேன்’ என்றார்