பல ஆண்டுகளுக்கு முன்பு வீரபாகு என்ற மன்னன் பாண்டிய நாட்டை ஆண்டு வந்தான். இவன் இரவில் தலைநகரை காவல்காக்கும் பொறுப்பையும் ஏற்று இருந்தான். குறிப்பாக, வெளியூர் செல்பவர்களின் வீடுகளை கூடுதலாக காவல்காத்து வந்தான்.
ஒருநாள் வழக்கம்போல் வீரபாகு பாண்டியன் காவல் பணியில் இருந்த போது, வெளியூர் சென்ற அந்தணர் ஒருவர் நள்ளிரவில் வீடு திரும்பினார். அவரை திருடன் என்று கருதிய பாண்டிய மன்னன் அவரை கொன்று விட்டான்.
இதனால் பிரம்மஹத்தி தோஷத்துக்கு மன்னன் ஆளானான். மேலும், அவனது நாட்டிலும் குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையை பயன்படுத்தி சோழமன்னன் விக்ரமன், பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தான். இதனால் பெரும் கவலை அடைந்த பாண்டிய மன்னன் வீரபாகு, இறைவனை வேண்டினான்.
அன்றிரவே அவன் கனவில் தோன்றிய சிவபெருமான், `சோழனை எதிர்த்து நீ போரிடு, அப்போது நானும், எமது பூதக்கணங்களும் உதவுவோம்’ என்று கூறினார். அதன்படி படை நடத்தி சென்ற பாண்டிய மன்னன் போரில் வெற்றி பெற்றான். ஆனாலும் சோழ மன்னன், பாண்டிய மன்னனுக்கு தொடர்ந்து பல இன்னல்கள் செய்து வந்தான்.
போரில் வெல்ல முடியாத பாண்டிய மன்னனை, சூழ்ச்சியால் வீழ்த்த நினைத்தான். பாண்டியனை கொல்லும் எண்ணத்தோடு, ஒரு நச்சாடையை (நஞ்சு கலந்த ஆடை) தயார் செய்து தூதுவன் முலம் அனுப்பி வைத்தான்.
இதையறிந்த சிவபெருமான், பாண்டியன் கனவில் தோன்றி, `தூதுவன் கொண்டு வரும் ஆடையை திருக்குளத்தில் நீராடியதும் அணிய வேண்டாம். அதை ஒரு கம்பால் எடுத்து தூதுவன் மேலே போர்த்தி விடு’ என்று கூறினார்.
அதன்படியே தூதுவன் கொண்டுவந்த நச்சாடையை அவன் மேலேயே போர்த்திய தனது உயிரை காத்து கொண்டான் பாண்டிய மன்னன். அவனுக்கு நச்சாடையால் ஏற்பட இருந்த தீமையை போக்கிய ஈசன் `நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி’ என்று அழைக்கப்படுகிறார்.
இக்கோவில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள அம்மன், தவம்பெற்றநாயகி என்று அழைக்கப்படுகிறார்.
இப்பகுதி மக்களால் பெரிய கோவில் என்று அழைக்கப்படும் இக்கோவில், தென் தமிழகத்தின் பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத் தலமாக திகழ்கிறது.
இக்கோவில் கொடி மரத்துக்கு முன்பு தனிக்கல்லில் செதுக்கப்பட்டுள்ள ஆமையின் உருவம் சிறப்பானதாக கருதப்படுகிறது. ஆபத்து வரும் காலத்தில் ஆமை தனது உறுப்புகள் ஐந்தையும் உள்ளிழுத்து தன்னை காப்பாற்றி கொள்ளும். அதைப்போல, இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள், தங்களது ஐந்து பொறிகளையும் அடக்கி ஆசாபாசங்களை கட்டுப்படுத்தி செல்லவேண்டும் என்பதை குறிப்பால் தெரிவிக்கும் பொருட்டே, ஆமையை இங்கு பீடத்தில் பதித்துள்ளதாக தெரிகிறது.
..