சிவகங்கை ஸமஸ்தானத்திற்குத் தலைவராக ஏறக்குறைய 150 வருடங்களுக்கு முன்பு மருத சேர்வைகாரர் என்பவர் இருந்தார். அவருடைய பெருமையையும் நல்லியல்பையும் அறிந்த குடிகளும் வித்துவான்களும் அவரை மருத பாண்டியர் என்று வழங்கிவந்தனர்; மகாராஜாவென்றும் தமக்குட் பேசிக்கொள்வார்கள். அவர் பல வித்துவான்களை ஆதரித்துப் பல வகைப் பரிசுகள் வழங்கினார். தமிழறிவுடையவராதலால், வந்த வித்துவான்களோடு ஸல்லாபம் செய்து சாதுர்யமாக அவர்களுக்கு ஏற்பப் பேசுதலும் அவர்கள் கூறுவன வற்றைக் கேட்டு மகிழ்ந்து உடனுடன் பரிசளிப்பதும் அவருக்கு இயல்பு. அவர்மீது வித்துவான்கள் பாடிய பிரபந்தங்களும், சமயத்திற்கேற்பப் பாடப்பெற்ற பல தனிப்பாடல்களும் அங்கங்கே வழங்கிவருகின்றன. சிறந்த வீரர். அவர் ஆட்சியின் எல்லையில் திருட்டுப்பயம் முதலியன கிடையா. அவருடைய ஆணைக்கு அஞ்சி யாவரும் நடந்து வந்தனர்.
அவர் தெய்வ பக்தி உடையவர். தம் ஆட்சிக்குட்பட்ட ஆலயங்களில் நித்திய நைமித்திகங்கள் விதிப்படி காலத்தில் நடந்துவரும் வண்ணம் வேண்டியவற்றைச் செய்து வந்தார். பல தலங்களில் அவர் திருப்பணிகள் செய்துள்ளார். ஆலயங்களுக்குத் தேவதானமாக நிலங்களை அளித்திருக்கின்றார். முருகக் கடவுள் கோயில் கொண்டெழுந்தருளியுள்ள முக்கிய ஸ்தலமாகிய குன்றக்குடியில் திருவீதிக்குத் தென்பாலுள்ள ஒரு தீர்த்தத்தைச் செப்பஞ்செய்து படித்துறைகள் கட்டுவித்தனர். அக்குளம் மருதாபுரி என்று அவர் பெயராலேயே வழங்கும். அதனைச் சூழ அவர் வைத்த தென்னமரங்களிற் சில இன்றும் உள்ளன. குன்றக்குடிமலைமேற் சில மண்டபங்களைக் கட்டி யிருக்கின்றனர். அவை கட்டப்பட்ட பொழுது மிக உயர்ந்த சாரங்கள் அமைக்கப் பட்டன. அவற்றில், மேலே உள்ளது மருதபாண்டியரால் அமைக்கப்பட்ட சாரம். கீழ்ச்சாரம் வெங்களப்ப நாயக்கர் என்னும் ஒரு ஜமீன்தாரால் அதற்கு முன் கட்டப்பட்டது. அவற்றைக்குறித்து, “மேலைச்சாரம் எங்களப்பன், கீழைச்சாரம் வெங்களப்பன்” என்னும் பழமொழி ஒன்று அந்தப் பக்கத்தில் வழங்கிவருகிறது.
அக்காலத்தில் ஜனங்கள் மருதபாண்டியரை, ‘எங்களப்பன்” எனச் சொல்லிவந்தனரென்பதனாலேயே அவருடைய உத்தமகுணங்க்ளும் அவர் பால் இருந்த அன்பும் புலப்படும். காளையார் கோவிலிலுள்ள மிகப் பெரிதான யானைமடு என்னும் தீர்த்தத்தைச் செப்பஞ்செய்து நாற்புறமும் படித்துறை கட்டுவித்தார். அந்த ஸ்தலத்தில் கோபுரமும் கட்டுவித்தார். அப்பொழுது மிக்க தூரத்திலிருந்து செங்கற்கள் வரவேண்டி யிருந்தன. அதற்காக வழி முழுவதும் சில அடிகளுக்கு ஒவ்வொரு மனிதராக நிற்க வைத்து ஒருவர் கை மாற்றி ஒருவர் கையிற் கொடுக்கும்வண்ணம் செய்து செங்கற்களை வரவழைத்தனர். அவ்வாறு மாற்றுபவர்களுக்கு அவல் கடலை முதலிய உணவுகளையும் தண்ணீரையும் அடிக்கடி கொடுத்து அவர்களுக்குக் களைப்புத் தோன்றாமல் செய்வித்தார்.
காளையார் கோவிலுக்குத் தேர் ஒன்று மிகப் பெரியதாக அமைக்கவேண்டுமென்று அவர் கருதித் தக்க சிற்பிகளை வருவித்து வேண்டியவற்றை யெல்லாம் சேகரித்து முடித்தா. அத்தேரின் அச்சுக்கு ஏற்றதாக ஒரு பெரிய மரம் கிடைக்கவில்லை. பல இடங்களுக்குச் செய்தி அனுப்பி விசாரித்து வந்தார். அப்பொழுது அவருடைய ஆட்சிக்குட்பட்ட திருப்பூவணத்தில் வையை ஆற்றிற்குத் தென்கரையில் ஆலயத்துக்கு எதிரில் மிகப் பழையதும், பெரியதுமாக மருதமரம் ஒன்று இருப்பதாக அறிந்தார். அதனை அச்சுக்கு உபயோகப் படுத்தலாமென்றெண்ணி, உடனே அதனை வெட்டி அனுப்பும்படி அங்கே உள்ள அதிகாரி களுக்கு உத்தரவு அனுப்பினார்.
அதனைப் பெற்ற அதிகாரிகள், அவ்வாறே செய்ய நினைந்து வேண்டிய வேலையாட்களை ஆயுதங்களுடன் வருவித்து மரத்தை வெட்டத் தொடங்கினார்கள். அப்பொழுது, அதனைக் கேள்வியுற்று அத்தலத்தில் திருப்பூவணநாதருக்குப் பூசை செய்து வருபவர்களுள் ஒருவராகிய புஷ்பவனக் குருக்களென்னும் பெரியோர், “அந்த மரத்தை வெட்டக் கூடாது” என்று ஓடிவந்து தடுத்தார். “ராஜாக் கினைக்கு மேலேயோ உம்முடைய ஆக்கினை?” என்று சொல்லிவிட்டு அதிகாரிகள் அதனை வெட்டும்படி வேலைக்காரர்களை ஏவினார்கள். அதைக் கண்ட குருக்கள் ஆத்திரம் மிக்கவராகி, “மகாராஜா மேல் ஆணை! நீங்கள் இந்த மரத்தை வெட்டக் கூடாது!” என்று மீட்டும் தடுத்தார். அவ்வாறு ஆணையிட்டு மறித்ததனால் அவர்கள் அஞ்சி வெட்டுதலை நிறுத்திவிட்டு உடனே அச்செய்தியை மருத பாண்டியருக்குத் தெரிவித்தார்கள்.
அதனை அறிந்த மருத பாண்டியர், “ஸ்ரீ காளீசுவரருடைய திருத்தேருக்காக நாம் வெட்டச் சொல்லி யிருக்கும்பொழுது அதைத் தடுக்கலாமோ? அவ்வளவு தைரியத்தோடு தடுத்ததற்கு என்ன காரணம் இருக்கக் கூடும்?? நாமே நேரிற் போய் இதை விசாரித்து வர வேண்டும்” என்றெண்ணித் தமது பரிவா ரங்களுடன் சென்று திருக்கோயில் வாயிலில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்கினார். கோவில் அதிகாரிகள் மரியாதைகளோடு வந்து அவரைக் கண்டனர். பாண்டியர் விபூதி குங்குமப் பிரஸாதங்களைப் பெற்று அணிந்து கொண்டார்.
அப்பால், “கோயிற் காரியங்கள் குறைவின்றி நடந்து வருகின்றனவா?” என்று விசாரித்தார். பின்பு, அவர்களை நோக்கி, ” இங்கே உள்ள குருக்களில் ஒருவர், வையைக் கரையிலுள்ள மரத்தை வெட்டக் கூடாதென்று தடுத்ததாகக் கேள்விப் பட்டோம். நம்முடைய கட்டளையைத் தடுத்த அவர் யார்? இப்பொழுது அவர் எங்கே உள்ளார்?” என்று கேட்டார். அவர்கள், “இதோ, இப்பொழுதுதான் மகாராஜா அவர்களுக்குப் பிரஸாதங்கள் கொடுத்துவிட்டு அவ்விடத்துக்கு அஞ்சி மதுரைக்குப் போய்விட்டார். இவ்வளவு நேரத்திற்குள் வெகு தூரம் போயிருப்பார்.” என்று நடுநடுங்கிச் சொன்னார்கள்.
புஷ்பவனக்குருக்கள், தாம் செய்த செயலால் தமக்கு என்ன துன்பம் வருமோ வென்றஞ்சி, மருத பாண்டியருடைய அதிகாரத்துக்குட்படாத இடத்திற்குப் போகவேண்டுமென்று கருதி, முன்னரே ஸித்தம் செய்து வைத்திருந்த வண்டியில் ஏறி, மதுரை போய்ச் சேர்ந்துவிட்டார்.
மருத பாண்டியர், உடனே மதுரைக்குச் சென்ற குருக்களுக்கு ஓரபய நிருபம் எழுதுவித்து அதைக் காட்டி அவரை அழைத்துவரும்படி ஒருவரை அனுப்பினா. அபயநிருபம் என்பது, பழைய காலத்தில் குற்றவாளி களுக்கேனும், அஞ்சி ஓடி ஒளித்த பகைவர்களுக்கேனும், “நீங்கள் அஞ்ச வேண்டாம்; இங்கே வந்தால் உங்களுக்கு ஒரு துன்பமும் நேராது” என்று அரசர்களால் அவர்களுக்குள்ள பயத்தைப்போக்குவதற்காக எழுதப் படுவது.
அந்நிருபத்தைப் பெற்ற புஷ்பவனக்குருக்கள் திருப்பூவணம் வந்து மருதபாண்டியர் முன்னே நடுக்கத்தோடு நின்றார். பாண்டியர் கோபத்தை வெளிக்காட்டாமல் அடக்கிக் கொண்டு அவரை இருக்கச் சொல்லி, “நீர்தாம் அந்த மரத்தை வெட்டக் கூடாது என்று சொன்னவரோ?” என்று கேட்டார்.
குருக்கள்: ஆமாம், மகாராஜா!
பாண்டியர்: காளையார் கோயில் தேருக்கு உபயோகித்தற்காக நாம் அதை வெட்டச் சொல்லியிருக்கும்போது நீர் தடுக்கலாமா??
குருக்கள்: அதற்குத் தக்க காரணங்கள் இருந்தமையால்தான் அப்படிச் செய்தேன்.
உடனிருந்த அதிகாரிகளும் ஊராரும் பிறரும் மருத பாண்டியர் குருக்களை என்ன செய்து விடுவாரோ வென்றும் குருக்கள் தாம் செய்த குற்றத்திற்கு என்ன சமாதானம் சொல்லப் போகிறாரோவென்றும் அஞ்சி அவ்விருவர்களுக்கும் இடையே நடந்த சம்பாஷணையை ஆவலோடு கவனித்து வந்தார்கள்.
பாண்டியர்: என்ன காரணங்கள் இருக்கின்றன? அஞ்சாமற் சொல்லும்.
குருக்கள்: இந்த ஸ்தலம் மிகவும் சிறந்தது; பழமையானது; மதுரைச் சுந்தரேசுவரர் பொன்னணை யாளுக்காக இரசவாதம் செய்த இடம். இறந்து போன ஒருவனுடைய எலும்பு இத்தலத்தில் வையை யாற்றிற் போட்ட பொழுது புஷ்பமாக ஆயிற்று. அதனால் இது புஷ்பவன காசி என்று பெயர் பெறும். இந்த ஸ்தலத்தை மிதிக்க அஞ்சி நாயன்மார் மூவரும் வையைக்கு வடகரையிலேயே இருந்து தரிசனம் செய்து கொண்டு சென்றார்கள். அதற்கு அறிகுறியாக வடகரையில் அம்மூவர்களுக்கும் ஆலயம் உண்டு. இவை போன்ற பெருமைகளால் ஒரு யாத்திரை ஸ்தலமாகவே இவ்வூர் இருந்து வருகிறது. அயலூரிலிருந்து எவ்வளவோ ஜனங்கள் நாள்தோறும் வந்து வந்து வையையில் ஸ்நானம் செய்து ஸ்வாமி தரிசனம் செய்துவிட்டுச் செல்லுகிறார்கள். வையையில் எப்பொழுதும் நிறைய ஜலம் ஓடுவதில்லை. கோடைக் காலத்தில் வடகரை ஓரமாகத் தான் கொஞ்சம் ஜலம் ஓடும். அப்பொழுது அங்கே சென்று ஸ்நானம் செய்து வருபவர்கள் மணலில் நடந்து துன்பமுற்று வெயிலின் கொடுமையை ஆற்றிக் கொள்வதற்கு இந்த மருத மரத்தின் கீழிருந்து இளைப்பாறிவிட்டுச் செல்வது வழக்கம். இந்த மரம் எவ்வளவோ நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. நூற்றுக்கணக்கான ஜனங்கள் நிழலுக்காக இதன் கீழ் இருக்கலாம்.
மருத பாண்டியர், இங்ஙனம் குருக்கள் கூறும் காரணங்களைக் கேட்டுக் கொண்டே வந்தார்; அவை பொது ஜனங்களின் நன்மையைக் கருதியவை என்பதை அறிய அறிய அவருடைய கோபம் சிறிது சிறிதாகத் தணிந்துகொண்டே வந்தது. பின்னும் கூர்ந்து கேட்கலாயினர்.
“மகாராஜாவுக்கு, இந்த மரத்தினால் ஜனங்களடையும் பெரும் பயன் தெரிந்திருந்தால் இப்படிக் கட்டளை பிறந்திராது என்று எண்ணினேன். இந்த மரத்தை வெட்டிவிட்டால், அயலூர்களிலிருந்து, பிரார்த்தனை களைச் செலுத்தும்பொருட்டு, ஸ்நாநம் செய்துவிட்டுவரும் கர்ப்ப ஸ்திரீகளும், குழந்தைகளோடும் பிராயம் முதிர்ந்தவர்களோடும் வரும் பக்தர்களும், பிறரும் வெயிற்காலத்தில் மிக்க துன்பத்தை அடைவார்கள். அக்கரையிலிருந்து வருபவர்களும் வெயிலில் வந்த இளைப்பை ஆற்றிக் கொள்ள இடமில்லாமல் தவிப்பார்கள். மகாராஜா நினைத்தால் இந்த ஸமஸ்தானத்தில் எவ்வளவோ மரங்கள் கிடைக்கக் கூடும். இந்த ஒரு மரந்தான் இருக்கிறதென்பதில்லை, இந்த மரத்தைப் பார்க்கும் பொழுதெல்லாம் எனக்கு மகாராஜாவின் ஞாபகம் வரும். இது பல ஜனங்களுடைய தாபத்தைப்போக்கி அவர்களுள்ளங் குளிரச் செய்து நிழலளித்து மகாராஜாவைப் போல் விளங்கிவருகின்றது. அன்றியும் மற்றொரு முக்கியமான விஷயந்தான் என்னுடைய மனத்தில் அதிகமாகப் பதிந்திருக்கின்றது. இந்த அருமையான மரம் மகாராஜாவுடைய பெயரைத் தாங்கிக்கொண்டு நிற்கின்றது. இந்த மரம் நெடுங்காலம் இருக்கவேண்டுமென்பதே, மகாராஜாவின் க்ஷேமத்தையே குறித்து ஸந்நிதியில் அர்ச்சனை செய்துவரும் எனது பிரார்த்தனை. இதை வெட்டலாமா?” என்று கூறிக் குருக்கள் நிறுத்தினார்.
பக்கத்தில் நின்ற யாவரும் தம்மையே மறந்து, “ஹா!ஹா!” என்று தங்கள் உணர்ச்சியை வெளிப் படுத்தினார்கள். “மகாராஜாவினுடைய பெயரைத் தாங்கிக் கொண்டு இது நிற்கின்றது” என்று சமயோசிதமாக அவர் சொல்லிய வாக்கியமானது எல்லோருக்கும் ஆச்சரியத்தையும் உருக்கத்தையும் உண்டாக்கிவிட்டது.
பராமுகமாகக் கேட்டுக் கொண்டு வந்த மருத பாண்டியர் முகமலர்ந்து நிமிர்ந்து குருக்களைப் பார்த்தார். அவருடைய உள்ளம் குருக்களுடைய நல்லெண்ணத்தை அறிந்து கொண்டது. உண்மையான அன்பே அவரை அவ்வாறு தடுக்கச் செய்ததென்பதை அவர் உணர்ந்து, “சரி; நீர் செய்தது சரியே! உமக்கு நம் மேல் உள்ள விசுவாசத்தையும் பொது ஜனங்களின் மேல் உள்ள அன்பையும் கண்டு சந்தோஷிக்கிறோம்.” என்று கூறினார்.
மருத மரம் வெட்டப்படாமல் நின்றது. குருக்கள் அச்சம் நீங்கினார். காளையார் கோயில் தேருக்கு வேறொரு மரம் அச்சு ஆயிற்று.
சிறு வயல் ஜமீன்தாராக இருந்த முத்துராமலிங்கத் தேவரவர்களும், குன்றக்குடி மடத்தில் தலைமைக் குமாஸ்தாவாக இருந்த அப்பாப் பிள்ளையவர்களும் இந்த வரலாற்றை எனக்குச் சொன்னார்கள்.