பாண்டியர்கள் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒருவராவர். மற்ற இரு மூவேந்தர்கள் சேரர்களும் சோழர்களும் ஆவர். பாண்டியர்கள் மதுரை, திருநெல்வேலி, மற்றும் தற்போதைய கேரளத்தின் தென்பகுதி ஆகியவற்றை ஆட்சி செய்தனர்.
பாண்டிய நாடு :
இந்து சமுத்திரத்தில் மூழ்கிவிட்டதெனக் கருதப்படும் குமரிக்கண்டத்தில் 72 நாடுகளும் தலைநகராக தென்மதுரையும் விளங்கியது. பாண்டிய மன்னர்களின் தலைநகராக விளங்கிய இத்தென்மதுரை கடற்கோளினால் அழிவுற்றது.இக்கடற்கோளில் அழியாது இருந்து எஞ்சிய நாடுகளின் தலைநகராக கபாடபுரம் விளங்கியது.இரண்டாம் கடற்கோளால் அந்நாடும் அழிவுற்றது.இவ்வழிவின் பின்னர் தற்போதுள்ள மதுரை பாண்டியர்களின் தலைநகராயிற்று. பாண்டிய மன்னர்களால் தமிழ்ச் சங்கம் வைத்து தமிழ் வளர்க்கப்பட்டது.
பாண்டியரின் தோற்றம் :
சேர,சோழர்கள் போன்ற பேரரசுக்களைக் காட்டிலும் மூத்த குடியினர் பாண்டியரே ஆவர்.இவர்களின் தோற்றம் கூற முடியாத அளவிற்குத் தொன்மை வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.குமரிக் கண்டத்தில் தோன்றிய ஆதி மனித சந்ததியினரே பாண்டியராக உருப்பெற்றிருக்கலாம் என்பது பொதுவாக நிலவும் கருத்து.பாண்டியர்களின் தோற்றத்திற்குச் சான்றாக கி.மு 7000 ஆண்டளவில் உருப்பெற்றதனக் கருதப்படும் தொல்காப்பியத்தில் கூறியபடி
“
“முன்னீர் விழவின் நெடியோன்
நன்னீர் மணலினும் பலவே” —(புறம் – 9)
அதாவது குமரிநாடானது முதற் கடற்கோளால் அழிவுற்ற வேளை “அங்கு பஃறுளி ஆற்றை வெட்டுவித்துக் கடல் தெய்வங்களிற்கு விழா எடுத்தவர் பாண்டியர்” என விளக்குகின்றது இப்பாடல் வரிகள்.மேலும் இச்செய்தியைக் கூறும் தொல்காப்பியம் பாண்டிய மன்னர்களால் தலைச்சங்கத்தில் அரங்கேற்றப்பட்டது எனவும் கடைச்சங்கத்தில் அரங்கேற்றப்பட்டது எனவும் பொதுவான கருத்து நிலவுகின்றது. பாண்டியர்கள் மீன் கொடியினைகொண்டு ஆண்டதால் மீனவர் என்றும்,பின்னாட்களில் பரத கண்டம் என்று அழைக்கப்பட்டதாலும்,பாண்டியர் கடல் சார்ந்த ஆளுகை கொண்டிருந்ததாலும் பரதவர் எனும் இனத்தவராக இருக்கக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது.
பாண்டியரைப் பற்றிய பதிவுகள் :
இராமாயணத்தில் :
பாண்டிய மன்னர்களின் தலைநகர் பொன்முத்துக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.முத்து,பொன் அலங்கரித்த கோட்டை வாயில் இருந்தது இவ்வாறு இராமாயணத்தில் உள்ளது.
மகாபாரதத்தில் :
திருச்செங்குன்றில் பாண்டவர் படுக்கை உண்டு.திருப்பாண்டி கொடுமுடிதான் விராடநாடு.பாண்டவர் கொடுமுடியின் புறநகரில் வன்னி மரத்தில்தான் ஆடைகளையும் ஆயுதங்களையும் மறைத்து வைத்தனர்.மேலும் அர்ச்சுனன் பாண்டிய மன்னன் ஒருவன் மகளை மணந்தான் எனவும் உள்ளது.
அசோகனின் கல்வெட்டுக்களில் :
மகத நாட்டு அரசர்கள் மௌரியர்கள்.மௌரிய அரசன் அசோகன் கல்வெட்டுக்களில் பாண்டிய நாடு பாண்டியர் பற்றிய செய்திகள் உள்ளன.
மகாவம்சத்தில் :
இலங்கையை ஆண்ட விஜயன் தனியாட்சி புரிந்தவன் இவன் பாண்டிய மன்னன் ஒருவனின் மகளை மணந்தான்.அப்பாண்டிய மன்னனுக்கு ஆண்டுதோறும் பல பரிசுகளை அனுப்பினான் என்று மகாவம்சம் கூறுகின்றது.
பிற நாட்டவர் பதிவுகள் :
கி.மு மூன்றாம் நூற்றாண்டு சந்திரகுப்தன் ஆண்ட காலமான கடைச்சங்க காலத்தின் துவக்கம் ‘மெகஸ்தனீஸ்’ என்ற யவன நாட்டுத் தூதுவன் பாண்டிய நாட்டிற்கு வந்ததாகக் கருதப்படுகின்றது மேலும் அவனது நாட்டுக் குறிப்பில் பாண்டிய நாடு பற்றி தகவல்கள் பல உள்ளன. கொக்கிளிசுக்குப் ‘பண்டேயா’ என்ற பெண் பிறந்தாள்.அவளுக்கு கடல்சார்ந்த தென்னாட்டைக் கொடுத்தான்.அதில் 350 ஊர்கள் இருந்தன.நாள்தோறும் அரசிக்கு ஓர் ஊர் மக்கள் திறை செலுத்த வேண்டும் என்று ஆணையிட்டான்” என்ற செய்தி யவன நாட்டுத் தூதுவனின் குறிப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கி.பி. 9 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் ‘பிளைனி’ என்ற மேனாட்டான் தமிழகத்தைக் காண வந்தான்.அவனது பயண நூலில் பாண்டிய அரசி பற்றி “இந்தியாவின் தெற்கில் ‘பண்டோ’ என்ற ஒரு சாதி மக்கள் இருந்தனர்.பெண் அரசு புரியும் நிலை உண்டு.கொக்கிளிசுக்கு ஒரு பெண் பிறந்தாள்.அவளுக்கு அன்போடு பெரிய நாட்டை ஆளும் உரிமை கொடுத்தான்.முந்நூறு ஊர்கள் அவளது ஆட்சியில் இருந்தது.பெருஞ்சேனை வைத்திருந்தாள்.அவளது மரபினர் தொடர்ந்து ஆண்டனர்.என குறித்துள்ளார் பிளைனி.
சங்க காலப் பதிவுகள் :
பாண்டியர்கள் சந்திர வம்சத்தைச் சார்ந்தவர்கள் எனவும்.வேப்பம் பூ மாலை அணிந்தவர்கள் எனவும் மீன்கொடியினை உடையவர்கள் எனவும் பாண்டியன் தென்னவன்,மீனவன்,மாறன்,கடலன் வழுதி,பரதவன் மற்றும் முத்தரையன் போன்ற பல பெயர்களால் அழைக்கப்பட்டான் எனவும் சங்க கால நூற்குறிப்புகள், கல்வெட்டுக்கள், சாசனங்கள் மற்றும் மெய்க்கீர்த்திகளும் வரலாற்று மூலங்களாக உள்ளன.
இமயம்வரை பாண்டியரின் ஆட்சி :
மலையத்துவசப் பாண்டியன் மகள் மீனாட்சி,இவளது திருமணம் மதுரையில் சிவனுடன் நடந்தது. சோமசுந்தரப் பெருமானாக மதுரை தமிழ்ச் சங்கத்தில் இருந்து தமிழ் வளர்த்தார் இவர்.மதுரை மீனாட்சி பெரும்படையோடு இமயம்வரை படையெடுத்து சென்றாள்.இவளது வழிமுறையினரே மௌரியர்கள்.அந்த வழியில் சித்திராங்கதன் வந்தான் என்பதும் அவன் மகளே சித்திராங்கதை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாண்டிய நாட்டுக் குறுநில மன்னர்கள் :
மானாபரணன்,வீரகேரள பாண்டியன்,சுந்தர பாண்டியன்,விக்கிரம பாண்டியன்,வீரபாண்டியன் ஆகிய ஜந்து மன்னர்களும் பாண்டிய நாட்டில் சோழராட்சி இருந்த சமயம் சோழ மன்னன் இராசாதிராசனால் அடக்கி வைக்கப்பட்டனர். மானாபரணன் மற்றும் வீரகேரளன் ஆகியோர் இராசராசனிடம் போரிட்டுத் தோற்று இறந்தனர். சுந்தர பாண்டியன் போரில் தோற்று முல்லையூரில் ஒளிந்துகொண்டான். விக்கிரம பாண்டியன் ஈழ நாட்டிற்குத் தப்பி ஓடினான். வீரபாண்டியன் கி.பி. 1048 ஆம் ஆண்டளவில் கொல்லப்பட்டான். கோலார் மிண்டிக்கல் கல்வெட்டு மற்றும் இராசாதிராசன் திருக்களச் செப்பேடு போன்றனவற்றில் இத்தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாண்டியர் ஆட்சி இயல் :
நாட்டியல் :
தமிழகத்தின் தென்பகுதியில் பாண்டிய நாடு அமைந்திருந்தது.மேற்கே சேர நாடும்,மலை நாடும்;கிழக்கே கடல்,வடக்கே சோழ நாடும் ,கொங்கு நாடும்;தெற்கே கடலும் குமரிமுனை இதன் எல்லையாகவும் இருந்தன.இன்றைய மதுரை,திருநெல்வேலி,இராமநாதபுரம்,கன்னியாகுமரி,புதுக்கோட்டை வெள்ளாற்றுக்குத் தெற்குப் பகுதியில் அமையப்பெற்றிருந்தது எனலாம்.சங்க காலத்தில் ஊர்,கூற்றம்,மண்டலம்,நாடு என்ற பிரிவில் அமைந்திருந்தன.
“
“முந்நூறூர்த்தே தண்பறம்பு நன்னாடு” —(புறம்-110)
“வல்வேல் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே” —(புறம்-242)
”
என்ற புறப் பாடல்கள் ஊரும்,நாடும் எனக் கூறும். இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் என்ற தொடர்மொழி அமைப்புச் சான்றாக விளங்குகின்றது. ஊர்கள்,கூற்றங்கள்,வளநாடுகள்,மண்டலம் என்ற அமைப்பில் பிரிக்கப்பட்டிருந்தது.
குடும்ப இயல் :
அரசன்,அரசி,இளவரசன்,பட்டத்தரசி என்ற முறையில் குடும்பம் அமைந்தது.பட்டத்தரசி பாண்டிமாதேவி எனப்பட்டாள்.பட்டத்தரசியை அன்றி பிற பெண்களையும் மணந்திருந்தனர் சில பாண்டிய அரசர்கள்.பெண்களும் முடிசூடி ஆட்சி நடத்தியதோடு போரும் செய்திருக்கின்றனர்.அரசனின் மூத்த மகனே பட்டம் பெற முடியும்.இளவரசு பட்டம் பெற இயலும்.மாற்றாந்தாய் மக்களுடன் பகைமை வருதலும் உண்டு.உதாரணமாக வீரபாண்டியன்,சுந்தர பாண்டியன் போன்றவர்களின் வரலாறுகள் இதற்குச் சான்றாகும்.
கொற்கை பாண்டியரது துறைமுகம்.ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் ஊழ்வினையால்,கண்ணகி நீதி கேட்டதால் இறந்தான்.அச்சமயம் இளவரசனாக கொற்கையில் இருந்த வெற்றுவேற்செழியன் மதுரைக்கு வந்து முடிசூடினான்.ஜந்து பேர் ஒரே சமயத்தில் பாண்டிய நாட்டை ஆண்ட நிலையும் இருந்தது.ஆட்சியின் காரணமாக அண்ணன் தம்பி,தந்தை மகன் சண்டைகள் வந்தன மேலும் ஆட்சிக்காக தந்தையை மகன் கொன்ற சம்பவங்களும் பாண்டியரின் குடும்பவியலில் இருந்தன குறிப்பிடத்தக்கது.
அரசியல் ஆட்சி இயல் :
பாண்டியரின் ஆட்சிக்கு உற்ற துணையாக இருந்தவர்கள் அமைச்சர்கள்.அடுத்த நிலையில் அரசியல் அதிகாரிகள்,படைத் தலைவர்கள் இருந்தனர்.அரையர்,நாடுவகை செய்வோர்.வரியிலார்,புரவுவரித் திணைக்களத்தார்,திருமுகம் எழுதுவோர் ஆகியவர்களும் அரசனுக்கு ஆட்சியில் துணை செய்தவர்கள் ஆவார்கள்.
1-அரையர் உள்நாட்டுப் பணி புரியும் நாட்டதிகாரிகள் ஆவார்கள்.இவர்கள்,நாட்டைச் சிற்றி வந்து,குடிமக்கள் குறை கேட்டு நீதி வழங்குவர்.
2-நாடுவகை செய்வோர் ஊரில் உள்ள நிலங்களில் அளந்து பணி செய்வர்.
3- வரியிலார் அனைத்து வகையிலும் ஊர் மக்கள் அரசுக்கு வரி செலுத்துவதை கணக்கு வைப்பார்கள்.
4-புரவு வரித்திணைக் களத்தார் வட்டாட்சியர்போல் செயல்படுபவர்கள்.
அரசின் வரி :
பாண்டியர் காலத்தில் வரியை இறை என்றழைத்தனர்.இறை பெறுதல்முறை என்பது வழக்கத்திலிருந்துவந்தது.குடிகள் அரசனுக்கு நிலவரி கொடுத்தனர்.விளைநெல்,காசு,பொன் வரியாகக் கொடுத்தனர்.ஊர்த் தலைவர்கள் மக்களிடம் பெற்று அரசிடம் அளித்தனர்.தளியிறை,செக்கிறை,தட்டார்ப் பட்டம்,இடைவரி சான்று வரி,பாடிகாவல்,மனையிறை,உல்கு முதலான வரி முறைகள் இருந்தன.இறை,பாட்டம் என்பன வரியினை உணர்த்தும் சொற்களாகத் திகழ்ந்தன.தட்டார்ப் பாட்டம் கம்மாளரின் வரியாகும்.நாடு காவலையே பாடி காவல் என்றழைக்கப்பெற்றது.ஊர்க்காவலிற்கு வாங்கிய வரியே இப்பெயர்பெற்றது.பாண்டிய அரசர்களுள் சில அரசர்களும் ஊர்க்காவலிற்குச் சென்றனர்.பொற்கைப்பாண்டியன் இதற்குச் சான்றாக விளங்குகின்றான்.வீட்டு வரியினை மனை இறை என்றழைத்தனர்.கலத்தினும்,காலினும் வரும் பொருள்களுக்கு வாங்கும் வரியே சுங்க வரி எனப்படும்.உல்குவின் பொருள் இதுவேயாகும்.
நில அளவியல் :
ஊர்தோறும் உள்ள நிலங்களை அளந்து வரி விதிக்கப்பட்டது.பாண்டிய நாடு முழுவதும் அளக்கப்பட்டது.நாடு வகை செய்வோர் அளந்தனர்.நிலத்தினை அளக்கும் கோல் ‘சுந்தர பாண்டியன் கோல்’ என்ற பெயரைக் கொண்டிருந்தது. 24 அடி கொண்ட தடியாகும் இக்கோல்.குடிதாங்கிக் கோலும் அளவு கோலாக புழக்கத்தில் இருந்தது.நிலங்களை குழி,மா,வேலி என்று பெயரிட்டு அளந்தனர்.அளந்த நிலத்திற்கு எல்லைக் கல் நாட்டனர்.இக்கற்களே புள்ளடிக் கற்களாகும்.சிவன் கோயில்களிற்கு இடப்பட்ட நிலத்திற்கு திரிசூலக்கல் நடப்பட்டது.திருமால் கோயிலுக்கு இடப்பட்ட நிலத்திற்கு திருவாழிக்கல் நடப்பட்டது.நீர் நிலம் நன்செய் எனவும் மேட்டு நிலம் புன்செய் என அழைக்கப்பட்டது.நத்தம்,தோட்டம் என்ற வழக்கும் புழக்கத்தில் இருந்தது.
இறையிலி :
இறைவன் கோயிலுக்கு அளிக்கப்படும் கொடை இறையிலி என அழைக்கப்பட்டது.சிவன் கோயிலுக்கு அளிக்கப்பட்ட இறையிலி தேவதானம் என அழைக்கப்பெற்று திருமால் கோயிலுக்கு அளிக்கப்பட்ட இறையிலிக்கு திருவிடையாட்டம் என்று பெயர்.சைன,பௌத்த கோயில்களுக்கு அளிக்கப்பட்ட கொடை பள்ளிச்சந்தம் என அழைக்கப்பட்டது.அந்தணர்களுக்கு வழங்கப்பட்டது பிரமதேயம்;பட்டவிருத்தி எனவும்,மடங்களுக்கு வழங்கப்பட்டது மடப்புறம் எனவும் புலவர்களுக்கு முற்றூட்டும்,சோதிடர்களுக்கு கணிமுற்றூட்டும் எனவும் கொடைகள் அழைக்கப்பட்டன.
அளவை இயல் :
எண்ணல்,எடுத்தல்,முகத்தல்,நீட்டல் ஆகிய நான்கு அளவைகள் பாண்டியர் ஆட்சியிக் காலங்களில் புழக்கத்தில் இருந்து வந்திருக்கின்றன.எடுத்தல் என்பது நிறுத்தல் ஆகும்.பொன்,வெள்ளி,கழஞ்சு,காணம் ஆகிய நிறை கற்களால் நிறுத்தனர்,சர்க்கரை,காய்கறிகள்,புளி ஆகியவற்றை துலாம்,பலம் என்பவற்றால் நிறுத்தனர்.சேர் ,மற்றும் மணங்காலும் நிறுக்கப்பட்டன.நெல்,அரிசி,உப்பு,நெய்,பால்,தயிர்,மிளகு,சீரகம்,கடுகு ஆகியன செவிடு,ஆழாக்கு,உழக்கு, உரி,நாழி, குறுணி போன்ற முகக்கும் கருவிகளால் அளக்கப்பட்டன்.
நாணய இயல் :
பாண்டிய மன்னர்களின் ஆட்சியில் மன்னர்களின் பெயராலும்,சிறப்புப் பெயராலும் நாணயங்கள் வெளியிடப்பட்டன. பொன்,செம்பால் செய்யபட்ட காசுகள் புழக்கத்தில் இருந்தன.மீன் சின்னம் பொருத்தப் பட்டதாக வெளியிடப்பட்டது பாண்டியர் ஆட்சிக் கால நாணயங்கள்.
சீமாறன் சீவல்லபவன் – அவனிப சேகரன் கோளலிக என்ற பெயரில் நாணயம் வெளியிட்டான்.இதற்குச் சான்றாக சிற்றண்ண வாசல் கல்வெட்டு விளங்குகின்றது.முதல் மாறவர்மன் சுந்தர பாண்டியன் சோணாடு கொண்டான் நாணயம் வெளியிட்டான் சீவல்லபன் “அவனிப சேகரன் கோளகை” என்ற பெயரில் வெளியிட்டான்.1253 ஆம் ஆண்டில் வீரபாண்டியன் “வாளால் வழி திறந்தான் குளிகை” என்ற பெயரில் நாணயத்தினை வெளியிட்டான்.காசு என்பது ஒரு கழஞ்சு எடை உடையது 10 பொன் கொண்டது ஒரு காசு 10 காணம் – 1 கழஞ்சு ஒரு காணம் 4 குன்றி ‘காசும் பொன்னும் கலந்து தூவியும்’ என்ற தொடர் இதனை உணர்த்துகின்றது.காணம்,கழஞ்சு,காசு,பொன் புறத்திலே வந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
படை இயல் :
யானைப்படை,குதிரைப்படை,காலாட்படை,தேர்ப்படை போன்ற நால்வகைப் படைகளினையும் வைத்திருந்தனர் பாண்டியர்.கொற்கை,தொண்டி துறைமுகங்களில் வெளிநாட்டுக் குதிரைகள் ஆண்டுதோறும் வந்திறங்கியது.ஆண்டுக்கு பதினாராயிரம் குதிரைகள் வந்தன என ‘வாசப்’ கூறியுள்ளான்,மார்க்கோபோலோ “குதிரைகள் வாங்க மிகுதியான பொருளைச் செலவிடுகின்றனர்” என்று பாண்டியர்களைப் பற்றிக் குறித்துள்ளார்.வாட்போர்வல்ல பெரிய காலாட்படை இருந்தது பாண்டியர் ஆட்சிக்காலத்தில்.”பெரும் படையோம்”எனக் கையெழுத்திடும் குழு பாண்டி நாட்டில் இருந்தது.’முனையெதிர் மோகர்’ ‘தென்னவன் ஆபத்துதவிகள்’ போன்ற படைகளும் இருந்தன என கல்வெட்டுக்களில் குறிப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
“கடி மதில் வாயிற் காவலிற் சிறந்த அடல்வாள் யவணர்”
சிலப்பதிகாரத்தில் வரும் இப்பாடல் வரியிலிருந்து உரோமாபுரிப் போர்ப் படை வீரர்கள் மதுரைக் கோட்டையைக் காத்திருந்தனர் என்று கூறுவதற்கிணைய அத்தகு வலிமையுடன் சிறப்புற்றிருந்தது பாண்டியர் படை என்பது குறிப்பிடத்தக்கது.
வணிகவியலும் தொழிலியலும் :
* பாண்டிய நாட்டில் கடைச்சங்க நாளிலேயே வணிகமும் தொழிலும் மிகச்சிறப்பாக இருந்தன.மதுரை,கொற்கை முதலான நகரங்களில் கிடைத்துள்ள உரோமாபுரி நாணயங்களே இதற்குச் சான்றாகும்.
* வெளிநாட்டு வணிகங்கள் சிறப்புற்றும் உள்நாட்டில் பண்டங்களை எடுத்துச் செல்வதற்கேற்ற பெருவழித் தடங்களும் இருந்தன.நாடு முழுதும் இச்சாலைகள் அமைந்திருந்தன.
* வணிகர்கள் கோவேறு கழுதை,மாட்டு வண்டிகளில் பண்டங்களை ஏற்றிச் சென்றனர்.வழியில் களவு போகாமல் இருக்க காவற்படைகள் இருந்தன.வணிகர்கள் கூட்டமாகச் செல்வதனை வணிகச்சாத்து என அழைத்தனர்.வணிகரில் சிறந்தோர் ‘எட்டி’ என்றழைக்கப்பட்டனர்.
* பாண்டி நாட்டு கொற்கைப் பெருந்துறையில் முத்துக்களும்,சங்குகளும் பெருவாரியாகக் கிடைத்தன.கொற்கை முத்து உலகெங்கும் சென்றதும் குறிப்பிடத்தக்கது.இதற்குச் சான்றாக
“
“மறப்போர் பாண்டியர் அறத்திற் காக்கும்
கொற்கையம் பெருந்துறை முத்து” —(அகம்-27)
“பாண்டியன் – புகழ்மலி சிறப்பில் கொற்கை முன்துறை
அவர்கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து” —(அகம்-201)
இவ்விரு அகநானூற்றுப் பாடல்களும் கொற்கை முத்து பற்றிக் கூறுகின்றன.மேலும் மதுரைக்காஞ்சி,சிறுபாணாற்றுப்படை,சிலப்பதிகாரம் ஆகிய நூல்களிலும் இவ்வகைச்செய்திகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பல்வகைத் தொழில்கள் :
பாண்டிய நாட்டில் முத்துக் குளித்தல்,சங்கறுத்தல்,வளையல் செய்தல்,உப்பு விளைவித்தல்,நூல் நூற்றல்,ஆடை நெய்தல்,வேளாண்மை செய்தல்,ஆடு,மாடு மேய்த்தல் போன்ற பல தொழில்களும் செய்து வந்தனர்.மதுரையில் நுண்ணிய பருத்தி நூலினாலும்,எலி மயிரினாலும்,பட்டு நூலினாலும் ஆடைகள் நெய்யப்பட்டன எனச் சிலப்பதிகாரப் பாடல்வரிகளான இவ்வரி விளக்கும்.
“
“நூலினும்,மயிரினும்,நுழைநூற் பட்டினும்
பால்வகை தெரியாப் பன்னூல் அடுக்கத்து
நறும்படி செறிந்த அறுவை வீதியும்” —(சிலப்பதிகாரம் -ஊர்-205,207)
”
முத்து,பவளம்,மிளகு,பலவகை பட்டாடைகள் மேனாடுகளுக்கு அனுப்பப்பட்டன.மேனாடுகளிருந்து குதிரைகளும்,மது வகைகளும்,கண்ணாடிப் பொருள்களும் கொற்கைத் துறைமுகத்திற்கு வந்திறங்கின.சுங்க வரியினால் ஆண்டுதோறும் அரசுக்கு அதிக வருவாய் கிடைத்தது.கப்பல்கள் திசைமாறாமல் இருக்க துறைமுகத்தில் கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டிருந்தது.வெளிநாட்டு வணிகர்களும் யவனர்களும் (கிரேக்கர்களும்,உரோமர்களும்),சோனகரும் (அரேபியர்கள்),பாண்டிய நாட்டு மக்களுன் அன்புடன் பழகினர் என்பது குறிப்பிடத்தக்கது.வணிகத்திலும்,கைத்தொழிலிலும் சிறந்து விளங்கிற்று பாண்டிய நாடு.பண்டைக் காலத்தில் தமிழகத்தின் பாண்டி நாட்டில் தான் வணிகமும்,வெளிநாட்டார் தொடர்பும் சிறப்புற்று இருந்தது.
கல்வி இயல் :
பாண்டிய நாடு சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமையைப் பெற்றிருந்தது.புலமை நலம் சான்ற முடிமன்னர்களும் இருந்தனர்.ஆண்,பெண் இருபாலரும் கல்வி கற்றனர்.கல்வியின் சிறப்பை நெடுஞ்செழியன் போல் யாரும் பாண்டியராட்சியில் கூறியதில்லை எனலாம் அதற்கு எடுத்துக்காட்டாக
“
“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே!
ஒரு குடிப்பிறந்த பல்லோருள்ளும்
மூத்தோன்வருக என்னாது அவருள்
அறிவுடையோன் ஆறுஅரசும் செல்லும்!” —(புறநானூறு)
என்று புறநானூற்றில் கூறப்பட்டுள்ளது.
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்,
“
“பலர் புகழ்சிறப்பின் புலவர் பாடாது வளர்க என் நிலவரை”
என்று புறப்பாட்டில் பாடியுள்ளார்.
“கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத்தக!”
என்றும்,
“கண்ணெனப் படுவது வாழும் உயிர்க்கு கல்வியே!”
என்றும் வள்ளுவர் கூறினார்.இவை அரங்கேற்றமானது பாண்டியரின் தமிழ்ச்சங்கத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.உடன்கட்டை ஏறிய பாண்டிமாதேவி புறம்பாடிவளாவாள்.செல்வமும் ஒருங்கே பெற்ற இவள் பூத பாண்டியன் மனைவி பெருங்கோப் பெண்டு ஆவாள்.பல்சான்றீரே என்ற புறப்பாடல் (246) அவள் புலமை காட்டும்.
“
“நகுதக்கனரே நாடுமீக் கூறுநர்” —(புறம்-72)
”
என்று பாடிய நெடுஞ்செழியன் கல்வியில் வல்லமை பெற்று விளங்கியிருந்தான்.அகநானூறு தொகுப்பித்த உக்கிரப்பெருவழுதி குறிஞ்சி,வருதம் பாடுவதில் வல்லவனாக விளங்கினான்.சங்க காலப் புலவர்களிலும் மேலாக கவிதை பாடிய பாண்டிய மன்னர்களும் ஆட்சி புரிந்தவர்கள் என்பதனை இவர்கள் மூலம் அறியலாம்.பாண்டியர்களும் மதுரைத் தமிழ்ச் சங்கமும் தலைச்சங்கம் தொடங்கி கடைச்சங்கம்வரை தமிழ் எழுச்சியும்,வளர்ச்சியும் பெற்றது.இன்றைய மதுரையில் பாண்டியர் கடைச்சங்கம் வைத்து தமிழை வளர்த்தனர்.
“
“கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோடமர்ந்து
பண்ணுறத் தெரிந்து ஆய்ந்த இப் பசுந்தமிழ்”
”
என்னும் பாடல் சான்றாகும். சிவனே பாண்டிய மன்னந்தான்,மீனாட்சியும் பாண்டியன் மகள் தான். “பாண்டிய நின் நாட்டுடைத்து நல்லதமிழ்” என்று அவ்வையார் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. “வியாத தமிழுடையான் பல்வேல் கடல்தானைப் பாண்டியன்” என யாப்பருங்கல விருத்தி (229) கூறுகின்றது.
நல்லூர் நத்ததனார்,
“
“தமிழ்நிலை பெற்ற தாங்கருமரபின்
மகிழ்நனை மறுகின் மதுரை” —(சிறுபா-66-67)
”
என்று பாடியுள்ளார்.
“தமிழ் வையத் தண்ணம் புனல்” —(பரிபாடல் – 6 – வரி – 60)
”
என்று பரிபாடல் (பாடல்-6-வரி-60) கூறுகின்றது. செந்தமிழ்நாடு என்று பாண்டிய நாட்டை மட்டுமே இளங்கோவடிகள்,சேக்கிழார்,கம்பர் ஆகியோர் கூறியுள்ளனர்.தொல்காப்பியம்,திருக்குறள் அரங்கேற்றப்பட்டது இங்கென்பது குறிப்பிடத்தக்கது.தமிழ்த்தொண்டெனில் அது பாண்டி மண்டலந்தானாகவிருந்தது.பாலாசிருயர்,கணக்காயர் தமிழ் கற்பித்தனர்.ஆசிரியர் புலவராகவும் இருந்தனர்.குருவே தெய்வம் என்றனர்.பாண்டிய நாட்டில் குலவேறுபாடு இன்றி கல்வி கற்றனர்.கற்றவர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது பாண்டிய நாட்டில் நிலவியது.
ஆன்மீக இயல் :
உமையாள் மதுரை மீனாட்சியாக வந்து பாண்டியன் மகளாகப் பிறந்தாள் என்றும் பின்னர் சோமசுந்தரப் பெருமானை மணந்தாள் என்றும் பாண்டி நாட்டை சோமசுந்தரர் ஆண்டார் என்று புராணங்கள் கூறும்.பாண்டிய வரலாற்றினைக் கூறும் இலக்கிய நூற்களிலும் இவ்வாறு ஆட்சி செய்தார்கள் எனச் சான்றுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.பாண்டியர் ஆட்சியில் சைவ சமயமே தழைத்தோங்கியிருந்தது. ஆனாலும் வைணவம்,சமணம்,புத்த மதம் போன்ற பிற மதங்களும் இருந்தன.சிவன் கோயிலில் விண்ணகரங்கள்,அருகன் கோட்டங்கள்,புத்த பள்ளிகள் போன்றனவையும் அடங்கியிருந்தன.அனைத்து மதத்திற்கும் மதிப்பளிக்கப்பட்டிருந்தன. கோயில்களுக்கு நிபந்தங்கள்,இறையிலிகள் விடப்பட்டன.பாண்டிய அரசர்கள்,அமைச்சர்கள்,அதிகாரிகள், மேற்பார்வையில் கோயில்கள் கட்டப்பெற்றன.சங்க காலத்தில் சமயப் பூசல்கள் தோற்றம் பெறவில்லை.17 ஆம் நூற்றாண்டு கால கட்டத்தில் சமயப் பூசல்கள் தோற்றம் பெற்றன.மன்னர்களும்,அமைச்சர் மற்றும் அதிகாரிகளும் பிறந்த நாளில் கோயில்களில் விழா எடுத்து மகிழ்ந்தனர்.அதற்கென நிலம் அளிக்கப்பட்டன.தேவாரம்,திருவாய் மொழிகள் போன்றன ஓதப்பட்டன.இயல்,இசை, நடனம்,கூத்து முதலியன நடைபெற்றன.செங்கற் கோயில்கள்,கற்றளிகள்,செப்புத் திருமேனிகள் கல்படிமங்கள்,அமைக்கப்பட்டு அணிகலன்களினை வழிபாடு செய்யத் தானம் செய்தனர்.கோயில் வழிபாட்டுத் தலமாக அன்றி பொருள்,பணம் சேர்த்து வைக்கும் இடமாகவும் விளங்கியது.கோயிலின் பொதுப்பணம் மக்களுக்குக் கடனாகக் கொடுக்கப்பட்டது.தினமும் கோயில்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.புத்தகசாலைகள் கோயில்களில் அமைக்கப்பெற்றிருந்தன.கோயில் காரியங்களை ஊர் அவையோரும் அதிகாரிகளும் செய்தனர்.கோயில் மற்றும் அறநிலையங்கள் திட்டப்படி நடக்கின்றனவா என கவனிக்கப்பட்டன.தவறுகள் இழைப்போர் தண்டனையும் பெற்றனர்.கோயிலில் அமைந்த கல்வெட்டுக்கள் வரலாற்று ஏடுகளாக அமைந்திருந்தன.கோயில் புதுப்பிக்கும் சமயம் படியெடுத்துவைத்துப் புதுப்பித்தனர்.மீண்டும் அவை பொறிக்கப்பட்டன.
பாண்டியர் பழக்க வழக்கங்கள் :
மன்னன் மகன்,பெயரன் என்ற முறையில் முடிசூடினர்.சிங்காதனங்களுக்கு மழவராயன் காலிங்கராயன் முனையதரையன்,தமிழ்ப் பல்லவராயன் என்று பெயரிடப்பட்டனர்.அரசன் பிறப்பிக்கும் ஆணை திருமுகம்,ஓலை மூலம் மக்களுக்கு அனுப்பப்படும்.அரசர்கள் பிறந்த நாள் விழா நடத்தினர்.போரில் இறந்த வீரர்களின் குடும்பத்திற்கு உதிரப்பட்டி என்ற இறையிலி நிலம் அளிக்கப்பட்டது.உடன்கட்டை ஏறும் வழக்கமும் இருந்துவந்தது.பாடிய புலவர்களுக்குப் பொன்னும்,பொருளும் பரிசாக அளிக்கப்பட்டன.நீதி தவறாது செங்கோல் முறை கோடாது வழங்கப்பட்டன.நீதியை நிலைநாட்ட கை குறைத்தும்,உயிர் கொடுத்தும் காத்தனர் சில பாண்டியர்கள்.நீதி காக்க பாண்டியன் நெடுஞ்செழியன் உயிர் கொடுத்தான்.பொற்கைப் பாண்டியன் நீதிக்குத் தன் கையை வெட்டிக் கொண்டான்.தினமும் மக்கள் குறைகேட்கும் வழக்கம் இருந்தது.போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும்,பாராட்டும் செய்யப்பட்டன்.காசுகள் வெளியிடப்பட்டன.பிறவிப் பெருங்கடல் நீந்த நாளும் இறைவனை வழிபட்டனர்.அறம் ஈகையாக,நீதியாகக் காக்கப்பட்டது.”மழை வளம் சிறக்க!மண்ணுயிர் வாழ்க! மன்னனும் வாழ்க!” என்று வாழ்த்தும் வழக்கமும் இருந்து வந்தது.இடுவதும்,சுடுவதும் இறந்தோர்க்கு உண்டு!முன்னோடு வழிபடும் வடிக்கமும் இருந்திருந்தன. பாண்டியர் பண்பாட்டில்
“
“பன்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல்”
”
என்று இலக்கணத்தினைக் கூறும் கலித்தொகை. பாண்டிய மன்னர்கள் பண்புடையவர்களாகவிருந்தனர் இதனை விளக்கும் சான்றாக
“
“பண்பட்டமென்மொழிப் பைந்தொடி மகளிர்”
”
எனச் சுந்தரபாண்டியனின் மெய்க்கீர்த்தியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
“
“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்”
”
எனப் பாண்டிய மன்னன் ஒருவன் கூறுகின்றான்.இப்பாடல் வரிகளானது உதவி செய்தல் ஈதல் அறஞ்செய்தல் எல்லாம் பண்பாட்டின் கூறுகள் என விளக்குகின்றது.
“
“அவரவர் வேண்டிய அவரவர்க்கு அருளியவன்”
”
பராக்கிரம பாண்டியன் என அவன் மெய்க்கீர்த்திகள் கூறும் அளவிற்குப் பண்புடையவனாக இருந்தான்.இவ்வாறான பல நல்ல பண்புகளையுடைவர்களாக பல பாண்டிய மன்னர்கள் திகழ்ந்திருந்தனர்.
..
One Response to பாண்டியர்கள் வரலாறு – முழு தொகுப்பு