மூவேந்தர் கூட்டணி—–மௌரியர் படையெடுப்பு

கரிகாலனின் சிறப்பை நாம் முழுமையாக அறிவதற்குக் கலிங்கத்தை ஆண்ட காரவேலனின் கல்வெட்டு நமக்கு உதவுகிறது.காரவேலன்(கி.மு 176-163) என்பவன் கலிங்கத்தை 13 ஆண்டுகள் ஆண்டவன்.அவன் 11 ஆம் ஆட்சியாண்டில்(அதாவது கி.மு.165 இல்) தமிழகத்தை வென்றுள்ளான்.

மூவேந்தர் கூட்டணி

அவனின் அத்திகும்பா கல்வெட்டில்” இன்றைக்கு 113 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியத் “திரமிள சங்காத்தம்”(தமிழர் கூட்டணியை) உடைத்தேன் என்று குறிப்பு உள்ளது.இதனைப் பொருநராற்றுப்படையாலும் உணரலாம்.

முடத்தாமக்கண்ணியார் பாடிய பொருநராற்றுப்படையில்

“முரசுமுழங்கு தானை மூவரும் கூடி
அரசவை இருந்த தோற்றம் போல”

என மூவேந்தரும் கூடியிருந்த காட்சி பேசப்படுகிறது.எனவே கரிகாலன் அவையில் இக்கூட்டணி உருவானது என்று உணரலாம்.

கலிங்கநாட்டிற்கு மேற்கே வடுகர் நாட்டைத் தமிழர்கள் ஆண்டுள்ளனர்.113 ஆண்டுகள் கூட்டணியாக இருந்து தமிழர்கள் வடபுலம்வரை ஆண்டதால் கலிங்கர்களால் தமிழர்களை வெல்லமுடியவில்லை.பின்னாளில் இந்தப் பகுதியை இரேணாட்டுச் சோழர்கள் ஆண்டனர்.

மௌரியர் படையெடுப்பு
கி.மு.278 இல் வடக்கிலிருந்து ஒரு படையெடுப்புத் தமிழகத்தின் மேல் நடக்கிறது(கி.மு.300 இல் மௌரியர் படையெடுப்பு நடந்துள்ளதையும் இங்குக் கவனிக்க வேண்டும். சந்திரகுப்த மௌரியன் எடுத்த மோவூர் படையெடுப்பு இதுவாகும்)கி.மு.278 இல் சந்திரகுப்த மௌரியரின் மகன் பிந்துசாரன் என்பவன் படையெடுத்தபொழுது தமிழர்கள் ஒன்றுகூடி எதிர்த்தனர்.வடக்கே 16 அரசர்களை எதிர்த்து, பாடலிபுத்திரம் திரும்பினான்.சந்திரகுப்தன் படையெடுப்பு வடுகர் நாட்டின் வழியாக நடந்தபொழுது வடுகர்களும் படையுடன் சேர்ந்து தமிழகம் வந்தனர். இவர்களுக்குப் பாடம் கற்பிக்க வடுகர்நாட்டை வென்று 113 ஆண்டுகள் தமிழர் கூட்டணி ஆண்டது.இவ்வாறு தமிழர் கூட்டணியான திரமிள சங்கார்த்தம் உருவாக அடிப்படைக் காரணமாக விளங்கியவன் கரிகாலனே ஆவான்(கி.மு.278).இவன்தான் கூட்டணிக்கு முதன்மை தந்திருக்க வேண்டும்.ஏனெனில் வடநாட்டுப் படையெடுப்பால் முதலில் பாதிக்கப்படுவது சோழநாடே ஆகும்.எனவே சோழ அரசன் கரிகாலன் தலைமையில் படை அமைக்கப்பட்டிருக் கலாம்.

நன்றி :http://muelangovan.blogspot.com/2010/04/blog-post_14.html

குறிப்பிட்ட அண்மையாய்வாளர் Shashi Kant என்பார், ஜெய்சுவால் – பானர்சியில் இருந்து முற்றிலும் வேறுபட்டு, இக்கல்வெட்டின் உள்வரும் காலக் குறிப்புகள் எல்லாம் மகாவீரரின் இறப்பின் பின்வந்த முற்றாண்டுகளையே குறிக்கின்றன என்று நிறுவி, ”திராமிர சங்காத்தம்” என்பது ம.பி. [மகாவீரருக்குப் பின்] 113 ஆம் ஆண்டில் ஏற்பட்டது என்று வரையறுப்பார். அதாவது திராமிர சங்காத்தம் ஏற்பட்டது (கி.மு.527-113=) கி.மு.414 என்பார் .

தமிழகத்தை அடுத்திருந்த மொழிபெயர்தேயம் மூவேந்தர் காவலுக்குட்பட்டதாக மாமூலனாரின் அகநானூறு 31-ஆம் பாட்டில் வரும் ”தமிழ்கெழுமூவர் காக்கும் மொழிபெயர்த் தேஎத்த பல்மலை” என்ற சொற்றொடரால் உணருகிறோம். மாமூலனார் காலம் மோரியருக்குச் சற்று பின்பட்டது. மாமூலனார் சொல்வது போல், [வடபுலத்தார் படை தென்புலத்துள் நுழையா வண்ணமும், தென்புலத்துச் சாத்துக்கள் தயக்கமின்றி தக்கணப்பாதையின் வழியாக மகதம் வரை போய்வரும் வண்ணமும்,] ஓர் ஒன்றிணைந்த காவலைத் தமிழ்மூவேந்தர் மொழிபெயர் தேயத்தில் ஏற்படுத்தியிருப்பார்களேயானால், மூவேந்தரிடையே ஏதோவோர் அரசியல் உடன்பாடும் புரிதலும் இருந்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.

இந்தத் ”திராமிர சங்காத்தத்தின்” கூறுகளாய் மூன்று கருத்துக்களை நாம் உன்னித்துக் கருதலாம்.

1. மூவேந்தரும் தம்முள் எவ்வேளிரையும், அடக்கலாம்; ஆனால் அவரிடம் இறைபெற்ற பின், தனியாட்சிக்கு விட்டுவிடவேண்டும். அவர் கொடிவழியை அழிக்கக் கூடாது. [வேளிருக்கும் வேந்தருக்கும் இடையே கொள்வினை, கொடுப்பினைகள் காலகாலமாய் உண்டு.]
2. தமிழகத்திற்கு வெளியிருந்து மூவேந்தர் / வேளிர் மேல் யாரேனும் படையெடுத்தால், தமிழகம் காக்க மூவரும், தங்களுக்குள் என்ன மாறுபட்டாலும், அதைப் பொருட்படுத்தாது, ஒருவருக்கொருவர் உதவ வேண்டும்;
3. தமிழகத்தில் இருந்து தக்கணப்பாதைவழி வடக்கே போய்வரும் சாத்துக்களைக் காப்பாற்றும் வகையில், மொழிபெயர் தேயத்தில் மூவேந்தர் நிலைப்படைகள் (standing armies) நிறுத்திச் செயற்பட வேண்டும். [நிலைப்படையை மாமூலனார் பாடல்கள் குறிப்பாக சொல்லுகின்றன.]

இந்தத் ”திராமிர சங்காத்தத்தின்” கூறுகளாய் மூன்று கருத்துக்களை நாம் உன்னித்துக் கருதலாம்.

நன்றி: http://valavu.blogspot.com/2010/05/6_14.html

….

This entry was posted in மூவேந்தர் and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *