கோச்செங்கணான் யார் ?
இரா. கலைக்கோவன்
அத்தியாயம் 5
கோச்செங்கணான் சிவத்தொண்டரா வைணவ அடியாரா ?
‘செங்கட் பெயர் கொண்டவன் செம்பியர்கோன்
அங்கட்கரு ணைபெரி தாயவனே
வெங்கண்விடை யாயெம் வெணாவலுளாய்
அங்கத்தயர் வாயினள் ஆயிழையே’ (64)
என்ற சம்பந்தரின் வரிகள் திருஆனைக்கா கோயிலை எடுப்பித்தவன் சோழன் கோச்செங்கணானே என்பதை எடுத்துரைக்கின்றன.
‘கோடுயர் வெங்களிற்றுத் திகழ் கோச்செங்க ணான்செய்கோயில்
நாடிய நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனை’ (65)
என்ற சுந்தரர் பாடல் மூலம் நன்னிலத்துப் பெருங்கோயிலை எழுப்பியதும் கோச்செங்கணானே என்றறிகிறோம்.
அப்பர், சுந்தரர், சம்பந்தரால் பாடப்பெறும் மாடக்கோயில்கள் அல்லது பெருந்திருக்கோயில்கள் பலவாகும். எழுபத்தெட்டு பெருந்திருக் கோயில்கள் இருந்ததாகப் பாடும் அப்பர் அடிகள் அவற்றைக் கட்டியவர் யாரென்று குறித்தாரில்லை. எத்தனையோ திருப்பதிகளைப் பாடிப்பரவிய சம்பந்தரும் திருஅம்பர்ப் பெருந்திருக்கோயில், திருவைகன்மாடக்கோயில், திருவானைக்கோயில் போன்ற மிகச்சில கோயில்களையே கோச்செங்கணான் எடுப்பித்தவையாகக் குறிப்பிடுகின்றார். சுந்தரரோ நன்னிலத்துப் பெருங்கோயிலைப் பாடும்போது மட்டுமே, அக்கோயிலை எடுப்பித்ததாகக் கோச்செங்கணானைக் குறிப்பிடுகிறார். இவற்றையெல்லாம் நோக்க, கோச்செங்கணான் கோயில்கள் எடுப்பித்தது உண்மையென்றும், அவை அதுவரை நடைமுறையில் இல்லாத புதியதோர் அமைப்பில் அமைக்கப் பட்டமையின், ‘மாடக்கோயில்கள்’ என்று வழங்கப்பட்டன என்பதும், அக்கோயில்கள் திருமாலுக்கும் சிவனுக்குமாய் எழுப்பப்பட்டன என்பதும் பெறப்படும்.
கோச்செங்கட்சோழன் வாழ்ந்த காலம் சமணமும் பௌத்தமும் தமிழகத்தில் வலியோங்கிய காலமாகும். தமிழர் சமயங்களான சைவத்தையும் வைணவத்தையும் காக்கவேண்டிய பொறுப்பில் சோழமன்னன் இருந்தமையால், சோழர் தொல்குடிக்கே உரிய கலையார்வமும், பேராற்றலும், பெருமிதப்போக்கும் அப்பெருமானைத் திருமாலுக்கும் சிவனுக்குமாய் மாடக்கோயில்களை எழுப்பவைத்தன எனலாம். திருநறையூர் மாடக்கோயில், திருநாங்கூர் மாடக்கோயில், அழகிய மணவாளப்பெருமாள் கோயில் முதலிய பெருமாள் ஆலயங்கள் கோச்செங்கணானால் கட்டப்பட்டவையே.
சங்ககாலத்துக் கோயில்களின் அமைப்பு முறையிலிருந்து கோச்செங்கணான் கோயில் அமைப்பு முறைகள் மாறுபட்டன. இப்புதுமையான அமைப்புமுறையில் செய்யப்பட்ட கோயில்கள் மாடக்கோயில்கள் எனப்பட்டன. கருவறை கீழ்த்தளத்தில் இல்லாமல் மேல்தளத்தில் அமைக்கப்பட்டது. (66) படிக்கட்டுகள் அமைத்துச் செய்குன்றுபோல் கட்டப்பட்டதால், இவை யானை ஏற முடியாத நிலையில் அமைக்கப்பட்டன என்ற கதை தோன்ற வாய்ப்பானது. மாடக்கோயில் என்பது கோயில் கட்டடக்கலை வளர்ச்சியில் ஒரு படி. ஆனால் பின்வந்தோர் அதற்கும் ஒரு சிலந்திக் கதையைச் சிறப்பாகவே செய்து வைத்தனர். செங்கணான் சிலந்திச் சோழன் என்றும் அழைக்கப்பட்டான். அப்பர் அடிகளும் திருஞானசம்பந்தரும் தங்கள் பதிகங்களில் பல இடங்களில் இச்சிலந்திக் கதையைக் குறிப்பிடுகிறார்கள். ஏனைய புராணக் கதைகளைப் போலவே இக்கதையும் வரலாற்று அடிப்படைகள் இல்லாத கதையாகும்.
இனி, கோச்செங்கணான் சிவனடியாரா அல்லது திருமால் அடியாரா என்பது பற்றிக் காண்போம்.
கோச்செங்கணானைச் சிவனடியாராக்கிய பெருமைக்குரியவர் சுந்தரமூர்த்தி சுவாமிகள். அப்பெருமான் தம்முடைய திருத்தொண்டத்தொகையில்,
‘தென்னவனாய் உலகாண்ட செங்கணாற் கடியேன்’ (67)
என்று அடியார்களுள் ஒருவராகச் செங்கணானை வைத்துப் போற்றுகிறார். இத் திருத்தொண்டத்தொகையைப் பின்பற்றி எழுந்த திருத்தொண்டர் திருவந்தாதியில்,
‘மைவைத்த கண்டன் நெறியின்றி
மற்றோர் நெறி கருதாத்
தெய்வக் குடிச் சோழன்’ (68)
என்று நம்பியாண்டார் நம்பி இன்னும் ஒருபடி மேலே போய், கோச்செங்கணானைச் சைவம் தவிர வேறு சமயநெறி கருதாத் தொண்டனாக வரைந்து காட்டுகிறார்.
இவ்விரண்டு நூல்களையும் அடியொற்றி எழுந்த திருத்தொண்டர் புராணத்தில் சேக்கிழார் பெருமான் கோச்செங்கணானின் சிலந்திக்கதையோடு, அம்மன்னன் பிறந்த கதை, அவன் பெற்றோர் பெயர்கள் முதலியவையும் கூறுகின்றார். கோச்செங்கணானின் தந்தையைச் சுபதேவர் என்றும் தாயார் கமலவதி என்றும், அப்பெருமாட்டி, த்ன் குழந்தை சிறிது நேரம் கழித்துப் பிறந்தால் உலகாளும் என்று சோதிடர்கள் கூறியதால் தன்னைத் தலைகீழாகக் கட்டித் தொங்கவிடச்செய்து, பிள்ளைப்பிறப்பைத் தள்ளிப்போட்டதாகவும், காலங்கடந்து பிறந்தமையால் கண்கள் சிவந்திருக்கக் கண்ட தாய், ‘என் கோச்செங்கண்ணனோ’ என்று கேட்டதாகவும் சோழரின் பிறப்புக்கதை கூறப்படுகின்றது.
‘… … பொருந்தும் பெருந்தண் சிவாலயங்கள்
காதலோடும் பலவெடுக்கும் தொண்டு புரியும் கடம் பூண்டார்’ (69)
‘ஆனைக் காவிற் றாமுன்னம் அருள்பெற் றதனை யறிந்தங்கு
மானைத் தரித்த திருக்கரத்தார் மகிழும் கோயில் செய்கின்றார்’ (70)
‘அந்தமில்சீர்ச் சோணாட்டில் அகனாடு தொறுமணியார்
சந்திரசே கரனமருந்தானங்கள் பலசமைத்தார்’ (71)
என்ற சேக்கிழாரின் வரிகள், கோச்செங்கட் சோழன் திருவானைக்கா கோயிலை எடுப்பித்த செய்தியையும், சிவபெருமானுக்காகப் பல கோயில்கள் எடுப்பித்தமையையும் தெரிவிக்கின்றன.
இக் கோச்செங்கட்சோழ நாயனார் புராணத்திலிருந்து மூன்று முதன்மையான செய்திகள் பெறப்படுகின்றன. அவர் சுபதேவச் சோழருக்கும் கமலவதி தாயாருக்கும் பிறந்தவரென்பது ஒன்று. அவரது முற்பிறப்புச் சிலந்திக்கதை மற்றொன்று. அவர் திருவானைக்கா கோயிலையும் மற்றும் பல ஆலயங்களையும் எழுப்பியது மூன்றாவது செய்தி. இவற்றை ஒவ்வொன்றாகக் காண்போம்.
கோச்செங்கணானின் காலம் ஏறத்தாழ கி.பி. 400-600. சேக்கிழார் பெருமானின் காலம் கி.பி. 12ஆம் நூற்றாண்டு. ஏறத்தாழ ஏழு நூற்றாண்டுகளுக்குப் பிறகு செய்யப்பட்ட திருத்தொண்டர் புராணத்தில்தான் கோச்செங்கணானின் பிறப்புக்கதை முதன்முதலாகச் சொல்லப்படுகிறது. ஏழு, எட்டாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்து, இச்சோழவேந்தனைப் பாடிய சம்பந்தர், அப்பர், திருமங்கையாழ்வார், ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்து இவ்வேந்தனைப் பாடிய சுந்தரர், அவருக்குப் பின் வந்த நம்பியாண்டார் நம்பி என்போர் கூறாத இப்பிறப்புக் கதை சேக்கிழார் பெருமானுக்கு எங்கிருந்து கிடைத்திருக்க முடியும்? கல்வெட்டுச் செய்திகளில் கூட கோச்செங்கணானைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளைக் காணமுடியவில்லை. முன்னோர்களில் ஒருவனாக அப்பெருமான் அன்பில் செப்பேடுகளில் குறிக்கப்படுவதோடு சரி. கோச்செங்கணான் காலத்தில் கோயில்கள் மரத்தாலும் செங்கல்லாலும் கட்டப்பட்டமையால், அவன் காலத்துச் செய்திகள் கோயில்களில் அதிக அளவில் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை. வேறெந்த அகச்சான்றும் புறச்சான்றும் இல்லாத நிலையில் புதிதாக ஒரு பிறப்புக்கதை கற்பனையிலன்றி வேறு எங்கிருந்து தோன்றியிருக்க இயலும்!
ஒரு வாதத்திற்கு இக்கதை உண்மையென்றே கொள்வோமாயின், கோச்செங்கணான் சங்ககாலத்திற்குப் பிற்பட்டு வாழ்ந்தவன் என்பதற்கு இக்கதையே தக்க சான்றாகிவிடும். சுபதேவர், கமலவதி என்ற பெயர்கள் முழுமையும் வடமொழிப் பெயர்களாக இருக்கின்றன. சங்கச் சோழர்களின் பெயர்களோ, தூய தமிழ்ப் பெயர்கள். கிள்ளி, வளவன், சென்னி என்று அழகிய தமிழ்ப்பெயர்களுடன் வாழ்ந்த தமிழ் மன்னர்களிடையே சுபதேவன் திடீரென்று தோன்றியிருக்க முடியாது. வடமொழியாளர் கலப்பு மிகுதியும் தமிழகத்தில் தோன்றிய காலம் கி.பி. 300க்குப் பிறகே என்று வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள். ஏறத்தாழ கி.பி. 400-600 க்குள் வாழ்ந்த காரைக்கால் அம்மையார் பெயர் புனிதவதி என்பது இங்கு நினைக்கத்தக்கது. இப்படி வடமொழிப் பெயர்கள் சூட்டிக்கொள்வது பிற்காலத்துப் பழக்கமாய் மலர்ந்ததே தவிர, சங்க காலத்தில் இப்படி இருந்தமைக்குச் சங்க இலக்கியங்களில் போதிய சான்றுகள் இல்லை. (72) எனவே இக்கதையை உண்மையென்று ஏற்பின் அதுவும் கோச்செங்கணான் காலம் கி.பி 400-600க்கு இடைப்பட்டதென்பதை உறுதி செய்யும்.
அத்தியாயம் 6
இரு கண்கள்
இரண்டாவது, சோழனின் முற்பிறப்புச் சிலந்திக் கதை அப்பரும் சம்பந்தரும் பாடிய கதையைச் சேக்கிழார் பெருமானும் தொடர்ந்து பாடியிருக்கிறார். இதன் உண்மை பற்றி ஆய்வது தேவையற்றது. ஏனெனில், இதுபோன்ற புராணக் கதைகள் நம் நாட்டில் பல்லாற்றானும் பெருகியுள்ளன. இவை புலவர்களின் கற்பனையில் எழுந்தவை என்பதினும் வேறு சொல்வதற்கில்லை.
அப்படியே இந்தக் கதை நடந்ததாகக் கொண்டாலும், அது பொருந்துவதாக இல்லை. சிவபெருமானின் திருமுடிமீது அங்குள்ள கானல் மரங்களின் சருகுகள் உதிராமல் காக்கத் தன் வாய் நூலால் வலை பின்னிய சிவஞானச் சிலந்தி, சோழனாய்ப் பிறந்ததும் திருமாலுக்குக் கோயில்கள் எடுப்பித்தது எங்கனம்? ‘சிவபெருமானுக்கு எழுபது கோயில்கள் எடுத்ததாகத் திருமங்கையாழ்வாரே பாடியுள்ளார்’ என்கிறார்களே, அத்திருமங்கையாழ்வார் ஏனிந்த மன்னனின் சிலந்திக் கதையைச் சொல்லாம விட்டார்? சிவனுக்குக் கோயில்கள் எடுத்ததைப் பெருந்தன்மையுடன் சொன்னதாகச் சொல்லப்படும் ஆழ்வார் பெருமான் சிலந்திக் கதையை அது நடந்ததாக நினைத்திருப்பின் கூறாது விடார். சிவனைப் பழிக்கும் இடங்களில் கூட, சிவபெருமான் தொடர்பான புராணக் கதைகளை ஆழ்வார் குறிப்பிடுவது இங்கு எண்ணத்தக்கது. சிலந்திக்கதை உண்மையாக இருந்திருப்பின் தற்போது சில இடங்களில் சிலருக்கு முற்பிறப்பு நினைவு வந்ததாகச் செய்தியிதழ்களில் படிப்பதுபோல், கோச்செங்கணானுக்கும் முற்பிறப்புச் சிலந்தி வாழ்வு நினைவு வந்தது உண்மையாய் இருந்திருப்பின் அதைத் திருமங்கையாழ்வாரும் கூறியிருப்பார். ஏனென்றால், கோச்செங்கட்சோழனைப் பற்றிய பல வரலாற்று உண்மைகளைத் தரும் ஒரே புலவர் அவர்தாம். கோச்செங்கட்சோழன் வெற்றியைப் பாடிய களவழிகூட தராத செய்திகள் பலவற்றைப் பெரிய திருமொழியின் திருநறையூர்ப் பதிகம் தருகின்றது. இவற்றையெல்லாம் நோக்க, கோச்செங்கணானின் சிலந்திக்கதை, அப்பர் அடிகள், சம்பந்தர் காலத்தில் நாட்டில் வழங்கி வந்திருக்க வேண்டும்; அதை அடியவர்கள் வாயிலாகக் கேள்வியுற்ற அப்பெருமக்கள் தத்தம் பதிகங்களில் இணைத்திருக்க வேண்டும் என்று கொள்வதே பொருந்தும். திருமங்கையாழ்வார் கோச்செங்கணானைத் திருமால் அடியவனாகக் கண்டமையால் அவர் அக்கதையை ஏற்றாரில்லை.
சோழன் கோச்செங்கணான், திருவானைக்கோயில் முதலிய பல சிவாலயங்களை எழுப்பியது திருத்தொண்டர் புராணத்தால் அறியப்படும் மூன்றாவது செய்தி. கோச்செங்கணான் கோயில்கள் எழுப்பியதை முதன் முதல் தெரிவிக்கும் பெருமான் திருமங்கையாழ்வார்தாம். அப்பர் தம் அடைவுத் திருத்தாண்டகத்தில் சிவபெருமானுக்கென்று பெருந்திருக்கோயில்கள் எழுபத்தெட்டு இருந்ததாகக் குறிப்பினும் அவை யாரால் கட்டப்பட்டன என்று குறித்தாரில்லை. அதே காலத்தில் வாழ்ந்து கோச்செங்கணானைப் பாடிய சம்பந்தர், திருவைகல், திருவானைக்கா, திருஅம்பர், திருமுக்கீச்சரம் முதலிய கோயில்களைப் பாடும்போது அக்கோயில்களைச் செய்வித்தவன் கோச்செங்கணானே என்று பாடுகின்றாரே தவிர, கோச்செங்கணான் எழுபது மாடக்கோயில்கள் எடுப்பித்த பெருமிதச் செய்தியைக் குறிப்பாகவேனும் ஓரிடத்திலேனும் உணர்த்தினாரில்லை. திருநறையூர் மாடக்கோயிலைப் பாடிய திருமங்கையாழ்வாரோ இதற்கு மாறாக கோச்செங்கணானுக்கென்றே பத்துப் பாசுரங்கள், மொத்தம் நாற்பது வரிகள் பாடியுள்ளார். கோச்செங்கணான் சிவபக்தியுடைய அடியாராய் இருந்திருப்பானேயானால் அவனைத் திருமங்கையாழ்வார் இவ்வளவு கொண்டாடிப் பாடியிரார். பரமேச்சுர விண்ணகரத்தைப் பாடுகையில், பரம பாகவதனான பல்லவனைக் குறிக்கும்போதுகூட, பல வரலாற்றுச் செய்திகளை வரையாது வழங்கும் திருமங்கையாழ்வார், இவ்வளவு பெருமையுடன் போற்றவில்லை.
‘படைத்திறல் பல்லவர் கோன் பணிந்த
பரமேச்சுரவிண்ணகரம் அதுவே’ (73)
என்றுதான் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் குறிக்கின்றார். ஆனால் கோச்செங்கணானைப் பாடும்போது,
‘செம்பியன் கோச்செங்கணான் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே’ (74)
என்று கோச்செங்கணான் சேர்ந்த கோயிலுக்கு அனைவரும் வந்து சேருங்கள் என்று பெருவிருப்போடு அழைக்கின்றார். இதை நோக்கும்போது, இப்பாசுரத்திற்குப் பெரியவாச்சான் பிள்ளையவர்கள் செய்துள்ள விளக்கம் குறித்துப் பேராசிரியர் மு. இராகவையங்கார் அவர்கள் தம் ‘ஆழ்வார்கள் காலநிலை’ நூலில் குறிப்பிட்டிருப்பது எண்ணத்தகுந்தது. ‘சிவத்தொண்டினைச் சிறப்பப் புரிந்த இச்சோழன் முடிவில் திருநறையூர்த் திருமாலுக்கு அடியவனாய்ச் சிறப்புற்றான் என்று திருமங்கை மன்னன் பாசுரப் போக்குக்கு ஏற்பக் கருத்துரைப்பர் முன்னோர்’ (ஸ்ர் பெரியவாச்சான் பிள்ளை முதலியோர் வியாக்கியானம் காண்க. (75)
ஓர் கோயிலை எழுப்புவதென்பதே மிகக் கடினமான அதே சமயம், பெருமைக்குரிய செயலாகும். இராசராசன், இராசேந்திரன் போன்ற சோழமன்னர்கள் தாங்கள் எழுப்பிய ஒரே கோயிலால், தமிழகத்துக் கலைவரலாற்றில் அழியாத இடம் பெற்றார்கள். அப்படியிருக்க, எழுபது கோயில்களைக் காவிரியின் இருமருங்கிலும் ஒரு மன்னன் கட்டினான் என்றால் அது எத்தனை பெரிய செயல்! அத்தனை கோயில்களையும் அப்பெருவேந்தன் சிவபெருமானுக்கே எழுப்பி, அவனும் சைவநெறி ஒழுகியவனாக இருந்திருப்பின், சம்பந்தரும், அப்பரும், சுந்தரரும் அதனைக் கொண்டாடியன்றோ பாடியிருப்பர்? கோச்செங்கணான் தில்லையில் சமயத் தொண்டு செய்தவன் என்று சேக்கிழார் கூறுகிறார். ஆனால் இதைப்பற்றி அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோருள் எவரும் தில்லையைப் பற்றிப் பாடும் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. இதைப்பற்றி முதன்முதல் குறிப்பு காட்டுபவர் நம்பியாண்டார் நம்பியே.
‘வம்பு மலர்த் தில்லை ஈசனைச்
சூழ மறைவளர்த்தான்’ (75)
இதையேதான் சேக்கிழார் பெருமானும்,
‘திருவார்ந்த செம்பொன்னின் அம்பலத்தே நடஞ்செய்யும்
பெருமானை அடிவணங்கிப் பேரன்பு தலைசிறப்ப
உருகாநின் றுளம்களிப்பத் தொழுதேத்தி உறையுநாள்
வருவாய்மை மறையவர்க்கு மாளிகைகள் பலசமைத்தார்’ (76)
என்று கூறுகிறார்.
முதலில் சமணர்களாய் இருந்து பிறகு சைவர்களான மகேந்திரவர்மப் பல்லவன், பாண்டியன் நெடுமாறன் போல் இக்கோச்செங்கட்சோழனும் முதலில் சைவனாய் இருந்து பிறகு திருமால் அடியவனாக மாறியிருக்கலாம் என்று பெரியவாச்சான் பிள்ளையவர்களின் வியாக்கியானத்தை அடியொட்டி வாதிடலாம். என்றாலும், கோச்செங்கட்சோழன் சமயப் பொறையுடைய மன்னனாக இருந்தான் என்பதே பொருந்தும். சைவமும் வைணவமும் தன் இரு கண்களாய்க் கொண்டிருந்தமையால்தான் அப்பெருமானைச் சைவர்களும் போற்றினர். வைணவர்களும் வாழ்த்தினர். சமயப் பொறையுடன், நடுவுநிலைமை தவறாது, எல்லாச் சமயத்தினர்க்கும் உரியவனாய் நல்லாட்சி செய்து வாழ்ந்த இப்பெருமானை, ஒரு சமயத்துக்கு உரியவனாக்கி, ‘நாயன்மார்’களுள் ஒருவனாகச் செய்தமை, கோச்செங்கட்சோழன் மீது சைவர்களுக்கிருந்த அளவற்ற ஈடுபாட்டையும் அன்பையும் காட்டுவதே தவிர வேறில்லை. அவனைத் திருமால் அடியவனாக வைணவர்கள் பாராட்டுவதும் அதனாலேதான். இரு சமயத்தார்க்கும் இன்பமூட்டியவனாய் இரு கடவுளர்களையும் வணங்கி, ‘அரியும் சிவனும் ஒன்று’ என்ற உயரிய கொள்கைக்கு நிலைக்களனாய் வாழ்ந்தவன் கோச்செங்கணான்.
முடிவுரை
கோச்செங்கட்சோழன் தொடர்பான அனைத்து இலக்கியக் கல்வெட்டுச் செய்திகளை ஆராயுமிடத்து, கோச்செங்கட்சோழன் கி.பி. 400இல் இருந்து 600க்குள்ளாக இடைப்பட்டதொரு காலத்தில் வாழ்ந்திருக்க வேண்டுமென்பதும், அப்பெருமான் அழுந்தை, வெண்ணி, கழுமலம் முதலிய இடங்களில் போரிட்டுப் பகையரசர்களை வென்றவன் என்பதும் அவனுடன் கழுமலத்தில் போரிட்ட சேரவேந்தன் போர்க்களத்தில் மடிந்துபட்டான் என்பதும், அக்கழுமல வெற்றியைக் குறித்துப் பாடப்பட்டதே பொய்கையாரின் களவழி நாற்பது என்பதும், செங்கணான் மாடக்கோயில்களைச் சிவபெருமானுக்கும் திருமாலுக்குமாய் எழுப்பி இரு சமயத்தையும் தன்னிரு கண்களெனப் போற்றி வாழ்ந்த பெருமன்னன் என்பதும் தெளிவாகக் காணக்கிடக்கின்றன.
(முற்றும்)
அடிக்குறிப்புக்கள் :
64. இரண்டாம் திருமுறை – தருமபுர ஆதீனப் பதிப்பு, திருவானைக்கா பதிகம், பக். 104
65. ஏழாம் திருமுறை – தருமபுர ஆதீனப் பதிப்பு, திருநன்னிலத்துப் பெருங்கோயில் பதிகம், பக். 798
66. தமிழகக் கோயிற் கலைகள் – டாக்டர். இரா. நாகசாமி, பக். 30
67. திருத்தொண்டத்தொகை (ஏழாம் திருமுறை), பக். 313
68. திருத்தொண்டர் திருவந்தாதி, குமரகுருபரன் சங்கப் பதிப்பு, பக். 362, செய்யுள் எண் 81
69. திருத்தொண்டர் புராணம் – திரு. C.K.சுப்பிரமணியனார் உரை, பக். 550
70. திருத்தொண்டர் புராணம் – திரு. C.K.சுப்பிரமணியனார் உரை, பக். 550
71. திருத்தொண்டர் புராணம் – திரு. C.K.சுப்பிரமணியனார் உரை, பக். 552
73. பெரிய திருமொழி – பரமேச்சுர விண்ணகரம், பக். 50, செய்யுள் எண் 8
74. பெரிய திருமொழி – திருநறையூர்ப் பதிகம்-3, பக்.144, செய்யுள் எண் 1
75. ஆழ்வார்கள் காலநிலை – மு.இராகவையங்கார், பக். 127
76. திருத்தொண்டர் திருவந்தாதி – நம்பியாண்டார் நம்பி, பக். 362, செய்யுள் எண் 82
77. திருத்தொண்டர் புராணம் – கோச்செங்கட்சோழ நாயனார் புராணம், செய்யுள். 4212.