தருமபுரி கலவரம் தொடர்பில் பல கட்டுக்கதைகள் உலவுகின்றன.
1. வன்னியர்களே கலவரம் செய்தனர், 2. பாமகவினர் மட்டுமே கலவரம் செய்தனர், 3. காதல் திருமணம் ஒரு சட்டப்படியான திருமணம்தான், 4. தற்கொலை செய்துகொண்ட நாகராஜன் ஒரு குடிகாரர், அவர் கொலை செய்யப்பட்டார், – இப்படி பலக் கட்டுக்கதைகள் உலவுகின்றன. அவை உண்மையாகவும் காட்டப்படுகின்றன. இதற்கெல்லாம் பதில் சொல்லப்பட வேண்டும்.
கட்டுக்கதை: 1. வன்னியர்களே கலவரம் செய்தனர். வன்னியர்களுக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் இடையே மோதல். உண்மை: தருமபுரி கலவரத்தில் தொடர்புடையவர்கள் எனக் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நாயடுக்கள் (13 பேர்), செட்டியார்கள் (7 பேர்), . மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இசைவேளாளர் (5 பேர்), பழங்குடியினத்தைச் சேர்ந்த குறும்பர்கள் (3 பேர்)ஆகியோரும் உள்ளனர். பல்வேறு சாதியினரும் கலவரத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டும், கைதுகளும் நடைபெற்றுள்ள நிலையில் இதனை “வன்னியர்களுக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் இடையே மோதல்” என்று வருணிப்பது வன்னியர்கள் மீதான காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடன்றி வேறில்லை.
கட்டுக்கதை: 2. பாமகவினர் மட்டுமே கலவரம் செய்தனர். உண்மை: பாமகவினர் மட்டுமே கலவரத்தில் ஈடுபட்டனர் என்பது அயோக்கியத் தனமான் குற்றச்சாட்டு. தற்கொலைச் செய்துகொண்ட நாகராஜன், நடிகர் விஜயகாந்தின் தே.மு.தி.க கட்சியைச் சேர்ந்தவர். இக்கலவரத்தில் தொடர்புடையவர்கள் என்று கைது செய்யப்பட்டவர்களில் அதிமுகவின் பஞ்சாயத்து தலைவர், ஒன்றியக் குழு உறுப்பினர், திமுகவின் முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் எனப் பல கட்சியினரும் உள்ளனர். கைதானவர்களில் அதிக அளவில் 17 பேர் அதிமுகவினர். கைதானவர்களில் அதிமுக மட்டுமில்லாமல் தி.மு.க (16 பேர்), ம.தி.மு.க (5 பேர்), தமிழக விவசாயிகள் சங்கம் (12 பேர்), பா.ம.க (10 பேர்), தே.மு.தி.க (7 பேர்), கம்யூனிஸ்ட் என அனைத்துக் கட்சியினரும் உள்ளனர். எனவே இதனை பா.ம.க நடத்திய தாக்குதல் எனக் கூறுவது சிலருடைய குறுகிய அரசியல் நோக்கமே. குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில் மிகக் குறைவானவர்கள் மட்டுமே பாமகவினர். அப்படியிருக்கும் போது – ஏதோ பாமகதான் வன்முறைக்கு காரணம் என்று கூறுபது ஏன்? பாமக மட்டுமே வன்னியர்களுக்காகப் பேசுகிறது. அந்த ஒருகுரலையும் நசுக்கிவிட வேண்டும் என்கிற சதிதான் இதன் பின்னணி என்பதைத் தவிர இதில் வேறேதும் இல்லை.
கட்டுக்கதை: 3. நடந்த காதல் திருமணம் ஒரு சட்டப்படியான திருமணம்தான் உண்மை: இது ஒரு அப்பட்டமான பொய். நடந்திருப்பது சட்டவிரோதமான ஒரு குழந்தைத் திருமணம். ஏனெனில், திருமணம் செய்துகொண்ட இளவரசன் இன்னமும் சட்டபூர்வமான திருமண வயதான 21 ஐ எட்டவில்லை. அவருக்கு இப்போது 19 வயதுதான் ஆகிறது. இளவரசனின் பிறந்த தேதி 3.3.1993. அப்படியிருக்கும் போது, அவர் கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக சிலரும், பதிவுத் திருமணம் செய்துக் கொண்டதாக உண்மை அறியும் குழுக்களும் கூறுகின்றன. ஒருவேளை அவர் பதிவுத் திருமணம் செய்து கொண்டிருந்தால் அது சட்டத்தை ஏமாற்றிய நிகழ்வாகும். இளவரசனின் மாற்றுச் சான்றிதழ் – பிறந்த தேதி: 3.3.1993 (வயது 19) இப்படி சட்டப்படி திருமண வயதை எட்டாத ஒருவருக்கு திருமணம் செய்வதை காவல்துறையினர் எப்படி அனுமதித்தனர்? இதற்கான பஞ்சாயத்துகளை அவர்கள் எப்படி முன்னின்று நடத்தினர்? என்பது வியப்பளிக்கிறது. இளவரசனின் திருமணம் சட்ட விரோதமானது என்பதால், கலவரம் நியாயமானது என்று ஆகிவிடாது. சட்டவிரோதமான இந்தத் திருமணம் தடுக்கப்பட்டிருந்தால் இந்த கலவரம் நேர்ந்திருக்க வாய்ப்பில்லையே என்பதுதான் நமது கருத்து.
கட்டுக்கதை: 4. தற்கொலை செய்துகொண்ட நாகராஜன் கொலை செய்யப்பட்டிருக்கலாம். உண்மை: இது ஒரு கடைந்தெடுத்த அயோக்கியத் தனமானக் குற்றச்சாட்டு. தேமுதிகவில் உறுப்பினராக இருந்த நாகராஜன் ஒரு கவுரவமான குடிமகனாகவே இருந்திருக்கிறார். அவர் காவல் நிலையைத்தில் ஒரு காவல்துறை உதவி ஆய்வாளரால் தாறுமாறாக அவமானப் படுத்தப்பட்டதாலேயே தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன. அதனை அவரது மனைவியும் உறுதி செய்கிறார். இது தொடர்பான வழக்கில் அவரது தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது வழக்குத் தொடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. கலவரத்திற்கு உண்மைக் காரணம் என்ன?
தருமபுரி கலவரம் என்பது இரு சாதிகளுக்கு இடையேயான கலவரமோ, இரு கட்சிகளுக்கு இடையேயான கலவரமோ அல்ல. தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் தாழ்த்தப்பட்டவர் அல்லாத மக்களுக்கும் இடையே பகை உணர்ச்சி அங்கு வளர்ந்து வந்துள்ளது. அதற்கு பலக்காரணங்கள் இருக்கலாம். குறிப்பாக “கட்டாயக் காதல் – கலப்பு – நாடகத் திருமணங்கள்” நடத்தப்படுவதாக, தமிழ்நாட்டில் பல சமூகத்தவரிடையே மனக்கசப்பு உருவாகியுள்ளது. இதுவே, பல இடங்களில் சமுதாய மோதல்களுக்கு வழிவகுக்கிறது. காதல் திருமணங்கள் தவறு என்று கூற முடியாது. ஆனால், சாதி ஒழிப்பு என்பதை ஒரு நோக்கமாக வைத்து கட்டாய காதல் திருமணங்கள் திட்டமிட்டு அரங்கேற்றப்படுமானால் – அவையும் மனித உரிமைகளுக்கு எதிரான நிகழ்வுகளே ஆகும் .