கள்ளர் சரித்திரம் – 2

இரண்டாம் அதிகாரம் :

நாக பல்லவ சோழரும், கள்ளரும் :

இனி, கள்ளர் குலத்தவர் முற்கூறிப் போந்த மக்களுள் எவ்வினத்தைச் சேர்ந்தவர் என்றும், இன்னவர் நிலைமை எத்தன்மைய தென்றும் பார்ப்போம், சங்கநாளிலே திருவேங்கடத்தை ஆண்ட புல்லி என்னும் அரசன் கள்வர் கோமான் என்று கூறப் படுகின்றான். அவன் வீரத்தினூம், வள்ளன்மையினும் மிக மேம் பட்டவனென்று தெரிகிறது. பொய்யடிமையில்லாத புலவராகிய சங்கத்துச் சான்றேருள், கபில பரண நக்கிர ரோ ஒப்பப் பெருமை வாய்ந்த கல்லாடனாரும் , மாமூலனாரும் பல பாட்டுக்களால் அவனைப் பாடியிருப்ப தொன்றே அவனது பெருமையை நன்கு புலப்படுத்தா நிற்கும்.

அகநானூற்றில்,

கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான்’
மழபுலம் வணக்கிய மாவண் புல்லி
விழவுடை வழுச்சீர வேங்கடம்’
‘புடையலங் கழற்காற் புல்லி குன்றத்து’
‘புல்லி நன்னாட் டும்பர்’
‘பொய்யா நல்லிசை மாவண் புல்லி’
‘நெடுமொழிப் புல்லி’

என மாமூலருமம்,

‘புல்லி-வியன்றலை நன்னாட்டு வேங்கடம்’
‘மாஅல்யானை மறப்போர்ப் புல்லி
காம்புடை நெடுவரை வேங்கடம்’

எனக் கல்லாடனாரும் பாடியிருக்கின்றனர்.

நற்றிணையில்,

‘கடூமான் புல்லிய காடிறந்தோரே’

என்றார் மாமூலனார் . அதனுரை,

‘கடிய குதிரையையுடைய கள்வர் கோமான் புல்லியென்பவனுடைய வேங்கட மலையிலுள்ள காட்டின் கண்ணே சென்ற நமது காதலர்’ — என்பது.

புறநானூற்றிலே, கல்லாடனார், அம்பர்கிழான் அருவந்தையை வாழ்த்துமிடத்தும்,

‘காவிரி கனையுந் தாழ்நீர்ப் படப்பை
நெல்விழளை கழனி யம்பர் கிழவோன்
நல்லருவந்தை வாழியர் புல்லிய
வேங்கட விறல்வரைப் பட்ட
ஓங்கல் வானத் துறையினும் பலவே’

எனப் புல்லியது வேங்கடத்தைச் சிறப்பித்தலினாலே அவர் தம் உள்ளத்தை அத்தோன்றலுக்கே ஒப்பித்துவிட்டடனரென விளங்குகிறது.

அகநானூற்றிலே,

‘கள்வர் பெருமகன் — தென்னன்’

என, மதுரைக் கணக்காயனார் ஒரு பாண்டியனைக் குறித்துள்ளார்.

இவ்வாற்றால், சங்கநாளிலே அதாவது ஏறக்குறைய ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளின் முன்பு ‘கள்வர்’ என்ற பெயர் வழக்கு இருந்ததென்பதும், கள்வர் குலத்தவர் அரசராயிருந்தனரென்பதும் வெளியாகின்றன.

அகநானூற்றில்’

‘வினைநவில் யானை விறற்போர்த் தொண்டையர்
இனமழை தவழு மேற்றரு நெடுங்கோட்
டோங்கு வெள்ளருவி வேங்கடத் தும்பர்’
நாக பல்லவ சோழரும், கள்ளரும்

என்று வெங்கட மலையானது தொண்டையருடையதாகக் கூறப் படுதலின், தொண்டையர், கள்வர் என்ற பெயர்கள் ஒரு வகுப்பினர்க்கு உரியன என்பதும். பண்டை நாளிலே வேங்கடமும், அதைச் சார்ந்த நாடும் அன்னவரது ஆட்சியிலிருந்தன வென்பதும் போதரும். இப்பொழுதும் தொண்டைமான் என்ற பெயர் கள்ளர்க்கே வழங்குவதும், தொண்டைமான் என்னும் பட்ட முடைய மாட்சிமிக்க புதுக்கோட்டை அரசர் கள்ளர் வகுப்பினராயிருப்பதும் இங்கு அறியற்பாலன. வேங்கடமலையிலிருந்து ஆதனுங்கன் என்ற வள்ளலும் இவ் வகுப்பினனேயாவன். இவனைக் கள்ளில் ஆத்திரையனார் என்னும் புலவர் பாடிய பாட்டுக்கள் புறநானூற்றில் உள்ளன. அவர் பாடிய,

‘எந்தை வாழி யாதனுங்க
என்னெஞ்சந் திறப்போர் நிற்காணகுவரே
நின்னியான் மறப்பின் மறக்குங் காலை
என்னுயிர் யாக்கையிற்பிரியும் பொழுதும்
எனியான் மறப்பின் மறக்கவென்’

என்னும் அருமைப்பாட்டை நோக்குங்கால் யாவர் நெஞ்சுதான் உருகாதிருக்கும்? சங்கநாளில் விளங்கிய அரசருள்ளும் வள்ளியோருளும் பலர் இவ் வகுப்பினரர்கல் வேண்டும் எனினும் இவர்கட்குச் சிறப்பானுரிய பெயரானும் இடத்தானம் வெளிப்படத் தோன்றினோரையே இங்கே குறிப்பிடலாயிற்று. புல்லியைப்பற்றி எடுத்துக்காட்டிய ஒன்பது மேற்கோள்களில் ஒன்றிலெ தான் ‘கள்வர் கோமான்’ என்ற பெயர்வந்துளது. அஃது இல்லையேல் அவனை இவ்வகுப்பினன் என அறிந்துகொள்வது எங்ஙனம்? இவ்வாற்றால் அறிந்துகொள்ளலாகாத பலர் இருந்திலர் என்று எங்ஙனம் கூறமுடியும்?

இனி, இவர்களில் ‘முத்தரையர்’ என்னும் பெயருடையராய் வள்ளன்மை மிக்க ஓர் குழுவனர் பழைய நாளில் இருந்திருக்கின்றனர். நாலடியாரில் இவர்களைப் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. அவை,

‘பெருமுத்தரையர் பெரிதுவந்தீயும்
கருனைச் சோறார்வர்’ (200)
‘நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத்தரையரே
செரவரைச் சென்றிரவாதார்’ (296)

என்பன இவற்றிலிருந்து, இவர்கள் யாவர்க்கும் நறிய உணவளித்துப் போற்றி வந்தவரென்பதும், எல்லையிகந்த செல்வமுடையா ரென்பதும் விளங்கா நிற்கும், விஜயாலயன் என்னும் சோழமன்னன் கி.பி. 849ல் தஞ்சையைப் பிடித்துச் சோழராட்சியை நிலை நிறுத்துமுன், தஞ்சையில் மன்னரா யிருந்தோர் முத்தரையரே என்பர் சரித்திரக்காரர். இப்பொழுது ‘முத்திரியர்’ என வழங்கும் வேறு வகுப்பினர் இருப்பினும், முன் குறிக்கப்பட்டவர் கள்ளர் வகுப்பினரே என்பதற்கு ஆதரவுகள் உள்ளன. செந்தலைக் கல்வெட்டில் இவர்களில் ஒருவனைக் குறித்து,

‘வல்லக்கோன், தஞ்சைக்கோன், கள்வர் கள்வன், பெரும்பிடுகு முத்தரையன்’ என்று கூறியிருக்கிறது. இக்கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்ட தூண்கள், முற்குறித்த பட்டங்களையுடைய இரண்டாவது பெரும்பிடுகு முத்தரையனால் திருக்காட்டுப்பள்ளியின் மேல் புறமுள்ள நியமம் என்னும் ஊரிலே கட்டப்பட்ட பிடாரி கோயிலிலிருந்து இடித்துக் கொண்டு வரப்பெற்றவை. கல்வெட்டில் குறித்திருப்பதற்கேற்ப, வல்லத்தரசர், தஞ்சைராயர், செம்பிய முத்தரையர் என்னும் பட்டமுள்ள கள்ளர் குலத்தவர் தஞ்சையிலும், தஞ்சையைச் சூழ்ந்த இடங்களிலும் இப்பொழுதும் இருக்கின்றனர். கல்வெட்டுத் தோன்றி நியமம் என்னும் ஊரிலும், அதனைச் சூழ்ந்த ஊர்களிலும் இருப்போரும் கள்ளர் வகுப்பினரே. அன்றியும் கல்வெட்டுல், ‘கள்வர்’ என்ற பெயர் வெளிபடக் கூறியிருப்பதே சான்றாகும். திருவாளர் மு. இராகவையங்கார் அவர்கள் முத்தரையரைப் பற்றிக் கூறியிருப்பதும் இங்கு அறியற் பாலது. அது,

‘ நாலடியாரில் முத்தரையரைப் பற்றி இரண்டிடங்களில் குறிப்பிக்கப்ட்டுள்ளது. இன்னோர், தென்னாட்டில் 7,8-ம் நூற்றாண்டுகளில் பிரபலம் பெற்ற கள்வர் மரபினராவர். இவ்வமிசத்தவர் சங்க காலத்திலேயே சிற்றரசராக விளங்கியவரென்பது, கள்வர் கோமான் புல்லி, கள்வர் கோமான் தென்னவர் என்னும் பெயர்கள் அகநானூற்றுப் பயில்வதனால் அறியப்படும்’ என்பது. (செந்தமிழ் தொகுதி 13, பக்கம் – 273)

இம் முத்தரையரைக் குறித்துப் பின்னரும் சிறிது ஆராயப்படும்.

இனி, பழைய தமிழர் முதலானோரில் கள்ளர் குலத்தவர் எவ் வகுப்பி லடங்குவர் என்பது பற்றி வேறுபட்ட கொள்கைகள் உண்டு. இவர்களை நாகர் வகுப்பின ரெனச் சிலரும், சோழர் வகுப்பினரெனச் சிலரும், பல்லவர் வகுப்பின ரெனச் சிலரும் கூறுவர். கனகசபைப் பிள்ளை அவர்கள் நாகர் வகுப்பினரெனக் கூறகின்றனர். இராமநாதப்புரத்தரசர், மாட்சிமிக்க பா. இராஜராஜேசவர சேதுபதி அவர்கள் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் ஐந்தாவது ஆண்டு விழாவில் தலைவர்களாக எழுந்தருளிக் கூறிய விரிவுரையில் பின்வருமாறு காட்டியுள்ளார்கள்;

‘ சோழர்கட்கு முன் இப்போதுள்ள மறவர், கள்ளர் இச்சாதியாரின் முன்னோர்கள் நாகர் என்ற பெயரோடு இச்சோழ ராச்சியத்தை ஆட்சி புரிந்ததாகவும், அவர்களின் தலை நகராகத் தஞ்சை, திருக்குடந்தை, காவிரிப்பூம்பட்டடினம் இவ்விடங்களிருந்தனவாகவும் சரித்திர வாயிலாக வெளியாகிறது.

மேன்மை பொருந்திய வா. கோபாலசாமி ரகுநாத இராசாளியார் அவர்கள் இந்திர குலாதிபர் சங்கத்தின் நான்காவது அண்டு விழாவில் தலைவராக அமர்ந்து செய்த விரிவுரையில் பின்வருமாறு கூறியுள்ளனர்:

‘இந்நாட்டை யாண்ட அரசர் பெருமக்களுள் சோழரைக் கள்வர் எனவே டாக்டர் பர்னலும், வெங்காசாமி ராவ் அவர்களும் குறிப்பிட்டுள்ளாரகள்.

திருவாளர்கள் ம. சீனிவாசையங்கார் அவர்கள், ‘சோழர் சாதியிற் கள்ளரென்றும், பாண்டியர் சாதியில் மறவரென்றும் ஒரு சாரார் கொள்கை’ என்பர்.

(செந்தமிழ், தொகுதி -2 , பக்கம்–175)

வின்சன் ஏ. ஸ்மித் என்னும் சரித்திர அறிஞர் ‘புராதன இந்திய சரித்திரம்’’ என்னும் தமது நூலில் பல்லவர் வரலாறு கூறுமிடத்தே கள்ளர் வகுப்பினரையும் இயைந்து கூறுகின்றனர். அவருரைப்பது,

“பல்லவர் யாவர்? எங்கிருந்து வந்தனர்? தென்னாட்டு மன்னர்களில் எங்ஙனம் தலைமை யெய்தினர்? என்ற கேள்விகளுக்கு இப்பொடுது தக்க விடை யளித்தல் இயலாது. ‘பல்லவர்’ என்ற பெயர் ‘பகல்வா’ என்னும் பெயருடன் பெரும்பாலும் ஒத்திருப்பதால், பல்லவர் என்பதும் பகல்வா என்பதும் ஒரே பொருளன என்றும், ஆகவே, தென்டனாட்டில் காஞ்சியிலாண்ட அரசர் குடி பெருசியா நாட்டில் தோன்றியதாக வேண்டும் என்றும் டாக்டர் பிளீட்டும், ஏனைய ஆசிரியர்களும் நினைக்கின்றனர்.

இந்த நூலின் முதற் பதிப்பிலும் இக்கொள்கை சரியானதா யிருக்கலாமென எழுத நேர்ந்தது. ஆனால் இப்பொழுதைய ஆராய்ச்சி இக்கொள்கை அவ்வளவு சரியானதன் றென்று காட்டி விட்டது. சென்னை மாகாணத்தின் வடபாகத்தில் கிருட்டிணா, கோதாவரி யாறு கட்கு இடையேயிருந்த வெங்கி நாட்டில் வசித்த ஒருவகுப்பினரெனச் சொல்வதே ஏறக்குறையச் சரியான கொள்கை யெனலாம். தமிழ் மன்னர்களுக்கும் பல்லவருக்கும் இடைவிடாப் பகைமை யேற்பட்டிருந்ததும், பல்லவரது ஆட்சிக்குட்பட்ட நிலம் இன்னதென இன்று வரை உறுதிப்படுத்த முடியாதிருப்பதும் பல்லவர் தமிழரல்லர் என்பதனைக் காட்டி நிற்கின்றன. ஆகவே, பல்லவர் தென்னாட்டு மன்னரை வென்றே தமது ஆட்சியைத் தமிழ் நாட்டில் நிலை நிறுத்தி யிருத்தல் வேண்டும், மகாராட்டியரைப் போன்றே பல்லவரும் ஒரு கொள்ளைக் கூட்டத்தார், அல்லது வகுப்பினர் என்றும், அவர்களைப் போன்றே தங்களது வலிமையால் சோணாடு முதலிய நாடுகளைத் தமது ஆட்சிக் குட்படுத்தினரென்றும் கொள்வோமாயின் இதுவரையிற் கிடைத்துள்ள ஆதாரங்கள் அதனை உறுதிப்படுத்து மென்றே நினைக்கின்றேன்.

கள்ளர்களின் தலைவராகிய புதுக்கோட்டை மன்னர் தம்மை ராஜபல்லவ ரென்றும், பழைய அரச வமிசத்தின ரென்றும் சொல்லிக் கொள்கின்றனர். சர் வால்டர் எலியட் என்பார் கள்ளர்கள் கலகக்கூட்டத்தாரில் ஒரு வகுப்பின ரென்றும, ஆண்மையும், அஞ்சாமையும், வீரமும் உள்ளவர்களென்றும் கூறுகின்றார். சரித்திர்ப்படி பல்லவர்களும் அவர்களை யொத்தவர்கள்தான். கள்ளர்கள் இன்று வரையிலும் கருநாடக பூமியிலுள்ள குடிமக்களை அடக்கியாண்டு, அவர்களிடமிருந்து. மகாராட்டியர் செளத் என்ற வரிவாங்கி வந்ததுபோல் ஒருவரியும்வாங்கி வந்திருக்கின்றனர்.

பல்லவரும் எதிரிகளாகிய தமிழ் மன்னர்களின் வலிமைக்கேற்பத் தமது ஆட்சியை நிலைநிறுத்தி வந்திருக்கின்றனர் என்று நம்பவேண்டியிருக்கிறது. கள்ளர், மறவர் இவர்களுடன் பள்ளி வகுப்பாரும், உழுது பயிரிடும் வேளாளரிற் சிலரும் தாங்கள் பல்லவரைச் சேர்ந்தவர்களென்று சொல்லிக் கொள்கின்றனர். பல்லவரோடு கொள்ளைக் கூட்டத்தின ரென்று கூறப்படும் இவர்களும் தமிழருக்கு முன்பே இந்நாட்டில் வசித்து வந்த ஒரு வகுப்பாரைச் சேரந்தவர்களாயிருக்கலாம்”

இனி, மேல் எடுத்துக்காட்டிய கொள்கை ஒவ்வொன்றிலும் எத்துணை உண்மை யிருக்கின்ற தென்பது பின் ஆராய்ச்சியால் அறிந்து கொள்ளலாகும். கள்ளர் நாகரினத்தவர் என்னுங் கொள்கையை முதற்கண் ஆராய்வோம், நாகரின் வரலாறும், பெருமையும் முன்னரே கூறியுள்ளோம். அவர்கள் கைத்தொழில் முதலியவற்றில் எவ்வளவு மேன்மை யடைந்திருந்தன ரென்பது பின்வரும் கனகசபை பிள்ளையவர்கள் கூற்றால் நன்கு விளங்கும்:

” நாகர்கள் பல நுட்பத் தொழில்களில் தெளிவடைந் திருந்ததோடு, நெய்தற் தொழிலில் மிக்க திறமையடைந்திருந்தனர் கலிங்க நாட்டிலிருந்து நாகர் இத்தொழிலில் அடைந்திருந்த புகழ் பற்றிக் கலிங்கம் என்ற சொல்லே தமிழில் துணியை உணர்த்துவதாயிற்று. பாண்டி நாட்டின் கீழைக் கரையிலிருந்த நாகர் இத்தொழிலில் மிக மேம்பாடெய்தி, துணியும், மசிலினும் பெருக ஏற்றுமதி செய்தனர். இவர்கள் நெய்த நுட்ப இழைகளாலான ஆடைகள் தமிழர்களால் மிக மதிக்கபட்டும், பிற நாடுகளில் நம்பத் தகாதவிலைக்கு விறகப்பட்டும் வந்தன . நாகரிடமிருந்த தான் ஆரியர் எழுதும் வித்தையைக் கற்றுக் கொண்டனர் அது பற்றி இற்றைக்கும் வடமொழியெழுத்திற்குத் தேவநாகரி என்ற பெயர் வழங்குகிறது.”

நாகர் குலத்து மகளில் பேரழகு வாய்ந்தோரென மணிமேகலை யாலும், பிற நூல்களர்லும் அறியப்படுகின்றது. அவர்கள் சிவபக்தியிலும் மேம்பட்டவரென்பது நாககன்னியர் சிவபெருமானைப் பூசித்து வரம் பெற்றனரென்று உறையூர்ப் புரர்ணம் , பழைய திருவானைக்காப்ப புராணம் , செவ்வந்திப் புராணம் முதலியன கூறுதல் கொண்டு அறியலாகும்.

நாகர் வீரத்திலும் மேம்பட்டவரென்பது, சோழ நாகர் என்பார் உறையூரிலிருந்து அரசுபுரிந்த சோழர்களை அப்பதியினின்றும் போக்கிச் சோழ ராட்சியைக் கைப்பற்றிக்கொண்டனரென்று பழைய ஐரோப்பிய ஆசிரியரான தாலமி என்பவர் கூறுவதால் அறியலாகும். சோழ நாகரென்பார் சோழரும், நாகரும் வரைவாற் கலந்ததிற் பிறந்த வழிபோலும் என்று கனகசபைப் பிள்ளை யவர்கள் கருது கின்றனர். பழைய நாளில் சோழர்கள் நாகர் குலத்தில் கல்யாணஞ்செய்து கொணடிருக்கின்றனர் என்பது தேற்றம். நெடு முடிக்கிள்ளியென்ற சோழவேந்தன் நாக நாட்டரசனாகிய வளைவணன் என்பானது மகள் பீலிவளையை மணம்புரிந்த செய்தி மணிமேகலையிற் கூறப்பட்டிருக்கறிது. தொண்டைமான் இளந்திரையனைப் படிய பெரும்பாணாற்றுப்படையுள் கீழ்வரும்பகுதி அவனது பிறப்பு வரலாற்றை யுணர்த்துகின்றது.

‘இருநிலங் கடந்த திருமறு மார்பின்
முந்நீர் வண்ணன் புறங்கடை யந்நீர்த்
திரைதரு மரபி னுரவோ னும்பல்
மலர்தலை யுலகத்து மன்னுயிர் காக்கும்
முரச முழுங்குதானை மூவ ருள்ளும்
இலங்குநீர்ப் பரப்பின வளைமீக் கூறும்
வலம்புரி யன்ன வசைநீங்கு சிறப்பின்
அல்லது கடிந்த அறம்புரி செங்கோற்
பல்வேற் றிரையன்”.

நச்சினார்கினியர் இதிலுள்ள சொற்களைக் கொண்டு கூட்டி “மூவேந்தருள்ளும் தலைமை வாய்ந்தோனும், திரூமாலின் பின் வந்தோனுமாகிய சோழன் குடியிற் பிறந்தோன். கடலின் திரை கொண்டு வந்தமையால் திரையன் என்னும் பெயரை யுடையவன்’ என்று பொருள் கூறி, ‘ என்றதனால் நாகப்பட்டினத்துச் சோழன் பிலத்துவாரத்தால் நாகலோகத்தே சென்று நாககன்னியைப் புணர்ந்த காலத்து, அவள், யான் பெற்ற புதல்வனை என்செய்வேனெற்பொழுது, தொண்டையை அடையாளமாகக் கட்டிக் கடலிலே விட அவன் வந்து கரையேறின் அவற்கு யான் அரசவுரிமையை எய்துவித்து நாடாட்சி கொடுப்பலென்று வென் கூற, அவளும் புதல்வனை அங்ஙனம் வர விடத் திரைதருதலின் திரைய னென்று பெயர் பெற்ற கதை கூறினார்.’ என ஓர் வரலாறும் குறித்துள்ளார்.

நெடுமுடிக்கிள்ளிக்கு நாகர் மகளான பீலிவளை வயிறறுப் பிறந்தோனே இவ்விளந்திரையன் என்றும் சிலர் கூறுவர். அவர் நச்சினார்கினியர் எழுதியதை உறுதியாக மேற்கொண்டே அங்ஙனம் கூறுவர். நச்சினார்க்கினியரும், மணிமேகலையில் ‘ புதல்வன் வரூஉ மல்லது பூங்கொடி வாராள்’ என்று சாரணர் சோழனுக்குக் கூறிய தாகவுள்ள தொடரை யுட்கொண்டோ, அதுபற்றி வழங்கி வந்ததொரு கதையை மேற்கொண்டோ, அங்ஙனம் எழுதினாராகல் வேண்டும். அவர்,’தொண்டையை அடையாளமாகக் கட்டிவிட’ என்றமையின், தொண்டைமான் என்ற பெயரின் காரணமும் அதுவென நினைந்தாராகல் வேண்டும்.

இனி, பெரும்பாணாற்றுப் படையடிகட்கு அவர் கூறியவுரை பொருந்தா தென்பது காட்டுதும். ‘முந்நீர் வண்ணன் புறங்கடையந்நீர்த்–திரைதரு மரபி னுரவோனும்பல் ‘ என்பதற்கு, ‘கடல் வண்ணனாகிய திருமாலின் பின்வந்தோனும், கடல் நீர்த் திரையால் தரப்பட்ட மரபினையுடைய உரவோனும் ஆகிய சோழனது வழித் தோன்றல்’ என்பதே நேரிய பொருளாகும். நச்சினார்க்கினியர், இளந்திரையன் திரையால் தரப்பட்டவனாதல் வேண்டு மென்னுங் கொள்கையுடையராய், அதற்கேற்பச் சொற்களை மாற்றி நலிந்து பொருள் கூறினர். திரையன் என்பது சோழனுக்குரியதோர் பெயரெனக் கொள்ள வேண்டும் கனகசபைப்பிள்ளை யவர்களும் , திரையர் என்னும் பெயரை சோழருக்கே உரியதாக்குகின்றனர் .

தொண்டைமான் என்னும் பெயரும் தொண்டையை அடையாளமாகக் கட்டி விட்டமையால் இளந்திரையனுக்கு வந்த தென்பது பொருந்தாது, அகநானுற்றில் ‘வினைநவில் யானை விறற்போர்த் தொண்டைர்–வேங்கடம்’ என வந்திருப்பது முன்னரே காட்டியுள்ளோம், பெரும்பாணாற்றிலேயே இளந்திரையன் ‘ தொண்டையோர் மருகன்’ என்று கூறப்படுகின்றான். இஃதொன்றுமே இளந்தரையனுக்கு முன்பே தொண்டையர்என்னும்வழக்குண்மை நிறுத்தப் போதியதாகும்.. இவ்வாற்றால் தொண்டையர் என்னும் பெயர் காஞ்சி, திருவேங்கடம் முதலியவற்றைத் தன்னகத்தே யுடையதொரு நாட்டிலே தொன்று தொட்டு ஆட்சி புரிந்த ஓர் வகுப்பினரைக் குறிப்பதென்பதே தேற்றம் . இளந்திரையானவன், சோழனொருவன் தொண்டையர் மகளை மணந்து பெற்ற புதல்வன் என்றும், அவனே தாய்வழி யுரிமையால் தொண்டை நாட்டுக்கு அரசனாயினான் எனறும் தாய்வழியாற் தொண்டைமான் என்னும் பெயரும், தந்தை வழியால் திரையன் என்னும் பெயரும் அவனுக்கு எய்தின என்றும் கோடல் வேண்டும்..

இனி, இத்தொண்டையரும் காஞ்சியிலிருந்து அரசு புரிந்திருக்கின்றனர். பல்லவரும் காஞ்சியிலிருந்து ஆட்சி நடத்தியுளர். ஆகலின் இவ்விருவரும் வெவ்வேறு வகுப்பினரா? ஒரே வகுப்பினரா? என ஆராய வேண்டியிருக்கிறது. பல்லவர் வடக்கே பெருசியாவிலிருந்து வந்தவரென சரித்திரக்காரர்கள் சொல்லி வந்திருக்கின்றனர் இப்பொழுது சிலர் அக்கொள்கையை மாற்றியும் வருகின்றனர் இவர்கள் பல்லவர் தொன்றுதொட்டு இந்நாட்டவரேனெத் துணிந்துரையாவிடினும், இந்நாட்டினராக யிருக்கலாம் என கருதுகின்றனர் .

தொண்டைமான் என்னும் பெயர் கொடிபற்றி வந்ததென்று கூறப்படுதலாயினும் .பல்லவம் என்பதற்குத் தளிரென்பது பொருளாகலானும் இவ்விரு பெயரும் ஒருவரைக் குறிக்கும் ஒரு பொருளுள்ளனவே எனச் சிலர் கருதுகின்றனர். பல்லவர்க்கு வழங்கும் போத்தரசர் என்னும் பெயரும் இப்பொருளதே யென்கினறனர். காஞ்சியிலாண்ட தொண்டைமான் இளந்திரையனையும் சோழன் கரிகாலனையும் உருத்திரங்கண்ணனார் என்னனும்புலவர் பாடியிருத்தலால் இளந்திரையன் கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியில் இருந்தோன் எனத் தெரிதலானும், அதற்கு முன்பு பல்லவர் செய்தி யொன்றும்கேட்க்கப்படாமையானும் இளந்திரையனது வழியில் வந்தோரே பல்லவர் என்றும் சிலர் கருதுகின்றனர். இவர்கள், பல்லவராயினார் சோழர்க்கும் தமக்கும் ஏற்பட்ட பகைமை பற்றியே தம்மை வேறு பிரித்துக்கொள்ள நினைந்து, தமக்குப் பாரத்துவாச கோத்திரத்தைக் கற்பித்துக் கொண்டனர் என்பர். பல்லவர் பெருசியாவிலிருந்து வந்தோரென கூறுபவருக்கு ஆதாரமாக வுள்ளது சில வடமொழிப் புராணவிதிகாசங்களில் காணம்படும் பகல்வா என்னும் பதமாம். அச்சொல்லே பல்லவர் எனத் திரிதுதிருக்கும் என்பது அவர்கள் கருத்து.

பல்லவர் இன்னகாலத்தில் இன்னவிடத்திருந்து இவ்வழியாக இவ்விடத்தை யடைந்தனரென்பது வேறுபல மேற்கோள்களால் உறுதிப் படுத்தப்பெற்ற பின்பற்றி தெற்கே காஞ்சியைத் தலைநகராகக் கெண்டு ஆண்ட வகுப்பினர் பெயராய பல்லவர் என்பது பகல்வா என்பதன் திரிபு என்று கொள்ளல் சிறிதும் பொருந்தாது.

வின்சன் ஏ. ஸ்மித் என்பாரும், வால்டர் எலியட் என்பாரும் பல்லவர் கோதாவரி யாறுகட்கு இடையிலுள்ளதான வெங்கி நாட்டில் இருந்தோராகலாம் எனக் கருதுகின்றனர்

பல்லவரைப்பற்றித் தனிநூல் எழுதியியுள்ள புதுச்சேரியிலிருக்கும் புரொபசர் ஜி.ஜே. துப்ரீல் என்பாரும், பல்லவர் ஆந்திர நாட்டிலிருந்தோராகலாமென்றும், பல்லவர் இருகூறாய்ப் பிரிந்து ஆந்திரநாட்டிலும், தமிழ் நாட்டிலும் அரசு புரிந்தனரென்பதும் பொருந்தும் என்றும் இங்ஙனம் கருதுகின்றனரே யன்றிப் பெருசியா முதலிய இடங்களிலிருந்து வந்தொரெனக் கூறவில்லை. பல்லவரது முதன்மைப் பட்டணம் காஞ்சி என்பதும், அவர்கள் ஆந்திர நாட்டுடன் தொண்டைமண்டலத்தையம் ஒரே காலத்தில் ஆண்டிருக்கினறன ரென்பதும் சரித்திரத்தில் நன்கு விளக்கமாம்.

இனி, இவர்களைக் குறித்து எமது ஆராய்ச்சியிற் புலப்பட்ட வற்றை இங்கே காட்டுதும். காஞ்சி முதலிய இடங்களுள்ள பகுதி முன்பு அருவா நாடு எனவும் வழங்கப்பட்டது. அங்கிருந்தோர் அருவாளர் எனப்பட்டனர். அந்நாடு தமிழகத்தின் பகுதியே யாகலின் அருவாளரும் தமிழரே யென்பது கூறாதே அமையும். அருவாளரை நாகரென்பார் கொள்கையும் முன்னரே காட்டப்பட்டது இவருடன், ஆந்திரரும், கருநாடரும் தமிழ் மூவேந்தர்க்குப் பகையாயிருந்தமையாலே’ வடுகரருவாளர் வான் கருநாடர் …..குறுகாரறிவுடையார்’ என்று இழித்திடப் பட்டனர். சோழன் கரிகாலன் அருவாளரை வென்றதும் தெரிந்ததே. அருவா நாடு தொண்டை நாட்டின் கண்ணதாகலின் அந்நாட்டினை முன்பு ஆண்டோர் எனப் பட்ட தொண்டையர் என்பாரும் அருவாளரும் ஓரினத்தவரென்று கருதலாகும். பழைய நாளில் இவர்கள் ‘ மன்பெறு மரபின்ஏனோர்’ எனவும், ‘குறுநில மன்னர் எனவும் கூறப்பட்டு வந்தனர்.

‘வில்லும் வேலுங் கழலுங் கண்ணியுந்
தாரு மாரமுந் தேரும் வாளும்
மன்பெறு மரபின் ஏனோர்க்கு முரிய’
என்னும் மரபியற் சூத்திரமும்,

‘மன்பெறு மரபின் ஏனோரெனப்படுவார் அரசு பெறுமரபிற் குறுநில மன்னர் எனக் கொள்க. அவை பெரும்பாணாற்றுள்ளும் காணப்படும்’ என்னும் அதனுரையும் இவ்வுண்மை தெரிப்பனவாகும். கி.பி. முதல் நூற்றாண்டின் முன்பு தொண்டை நாட்டின் ஆட்சியும், நிலைமையும் எப்படி யிருந்தனவென்று விளக்கமாக அறிதற்கு இடமில்லை. கரிகாற் பெருவளவன் காலத்திலிருந்து அது நல்ல நிலமை யடைந்து விட்டதென்று கொள்ளலாகும் . கரிகாலன் காஞ்சிப் பதியை விரிவுபட வகுத்தமைத்தனன் என்பது.

நாக பல்லவ சோழரும், கள்ளரும்

‘என்று முள்ளவிந் நகர்கலி யுகத்தி
லிலங்கு வேற்கரி காற்பெரு வளத்தோன்
வன்றி றற்புலி யிமையாமல் வரைமேல்
வைக்க வேகுவோன் றனக்கிதன் வளமை
சென்று வேடன்முன் கண்டுரை செய்யத்
திருந்து காதநான் குட்பட வகுத்துக்
குன்று போலுமா மதில்புடை போக்கிக்
குடியி ருத்தின கொள்கையின் விளங்கும்’

என்று பெரிய புராணம் கூறுதலால் வெளியாகின்றது. கரிகாலனை யடுத்துத் தொண்டைமான் இளந்திரையன் காஞ்சியிலிருந்து ஆட்சி புரிந்தோனாவன். அவனட்சியின் பெருமையை,

‘கைப்பொருள்வெளவுங் களவோர் வாழ்க்கைக்
கொடியோ ரின்றவன் கடியுடை வியன்புலம்
உருமு முரறா தரவுந் தப்பா
காட்டு மாவு முறுகண் செய்யா’

என்றும்,

‘முறைவேண் டுநர்க்குங் குறைவேண் டுநர்க்கும்
வேண்டுப வேண்டுப வேண்டினர்க் கருளி
யிடைத்தெரிந் துணரு மிருடீர் காட்சிக்
கொடைக்கட னிறுத்த கூம்பா வுள்ளத்
துருப்பில் சுற்றமோ டிருந்தோன்’

என்றும், பிறவாறும் பெரும்பாணாற்றுப்படை கூறுதல் கொண்டு அறியலாகும். இளந்திரையனுக்குச் சில தலைமுளை பின் வந்தோரே சிலர் ஆந்திர நாட்டிலும், சிலர் காஞ்சியிலுமாக இருந்து பல்லவர் என்னும் பெயருடன்ஆட்சி புரிந்தோராதல் வேண்டும், தொண்டை நாட்டுக்குப் பல்லவ என்பது ஒரு பெயர், அதுபற்றியே தொண்டையர், பல்லவ ரெனப்பட்டனர். இப்பெயரக்ளும், பல்லவர்க்கு வழங்கும் காடவர், காடுவெட்டி யென்னம் பெயர்களும், அந்நாடு முன்பு காடடர்ந்ததாய் இருந்திருக்கவேண்டு மென்று கருதச் செய்கின்றன. தொண்டையர் அல்லது தொண்டைமான் என்னும் பெரும், பல்லவர் என்னும் பெயரும், ஒருவகுப்பினரையே குறிப்பன என்பதில் எத்துணையும் ஐயமில்லை.

திருமங்கையாழ்வார் பல பாட்டுக்களில் பல்லவரைக் குறித்திருக்கின்றனர்

அவற்றுள் அட்டபுயகரப் பதிகத்தில்,

‘மன்னவன் றொண்டையர் கோன் வணங்கு
நீண்முடி மாலை வைரமேகன்
தன்வலி தன்புகழ் சூழ்ந்த கச்சி
யட்ட புயகரத் தாதிதன்னை’

என்றும்,

திருவரங்கப்பதிக்கத்தில்,

‘துளங்கு நீண்முடி யரசர்தங் குரிசில்
தொண்டைமன்னவன்

என்றும் ஓர் பல்லவனைத் தொண்டை மன்னன் எனப் பாடியிருக்கின்றனர்.

வண்டை நகரதிபனும், முதற் குலோத்துங்கச் சோழனுடைய மந்திரத்தலைவனும ஆகிய கருணாகரத் தொண்டைமானை,

‘பல்லவர்கோன் வண்டைவேந்தன்’

என்று செயங்கொண்டார் பரணியிற், கூறுகின்றனர், பல்லவர் தொண்டையர் என்னும் பெயர்கள் ஒரே மரபினரைக் குறிப்பன என்பதற்கு இவற்றினும் வேறென்ன சான்று வேண்டும்.

கல் வெட்டுக்களிலும் பல்லவரைத் தொண்டையர் என்று குறித்திருக்கிறது. தளவானூர்க் கல்வெட்டில் ஒரு பல்லவன் ‘தொண்டையர் தார்வேந்தன்’ என்று கூறப்படுகின்றான்.

‘மறைமொழிந்தபடி மரபின் வந்த குலதிலகன் வண்டை நகரரசனே’ என்று பரணி கூறுவது பல்லவர் அல்லது தொண்டையர் பின்பு அரச வகுப்பினராகக் கொள்ளப் பட்டு வந்தமைக்குச் சான்றாகும்.

கி.பி.4-ம் நூற்றாண்டு முதல் 9-ம் நூற்றாண்டின் இடைக் காலம் வரையில் பல்லவராட்சி மிக மேன்மையடைந்திருந்தது. அக் காலததில் சோழர்கள் பல்லவர்க்குக் கீழே சிற்றரசராயிருந்தனர். பல்லவரில் புகழ் பெற்ற மன்னர் பலரிருந்தனர். பல்லவர் காலத்தில் சிற்பம் உர்ந்த நிலையில் இருந்ததுபோல் வேறு காலத்தில் இருந்ததில்லை அவர்களிற் சிலர் சிறிது காலம் சமண, பெளத்த மதங்களைத் தழுவியிருப்பினும், பெரும்பாலோர் சைவராகவோ வைணவராகவோ இருந்து வந்தனர். அவர்கள் கட்டிய கோயில்களும் பல. பெரிய புராணத்திற் கூறப்பட்ட திருத்தொண்டர்களில் பல்லவர் பலரிருக்கின்றனர். சைவசமய குரவர்களும், ஆழ்வர்களும் அக்காலத்தில்தான் தோன்றி விளங்கினர். சமயக் குரவரும், ஆழ்வாரும் புகழந்து பாடும் பெருமையும் பல்லவர் பெற்றிருந்தனர். இத்தகையாரையோ ஒரு கொள்ளைக் கூட்டத்தார் எனச் சிலர் கருதுவது ! இது காறும் கூறியவற்றிலிருந்து பல்லவ ரென்பார் தொன்று தொட்டுத் தொண்டை நாட்டி லிருந்துவந்த தொண்டையரே! என்பது விளக்கமாம். அவர் வடக்கிலிருந்து வந்தோ ரென்பதற்குச் சிலர் கூறும் வேறு காரணறங்கள்:

பல்லவர்க்கள் முதலில் அளித்த செப்புப் பட்டயங்கள் பிராகிருதத்திலும், வடமொழியிலும் இருப்பதும், அவர்கள் பாரத்துவாச கோத்திரத்தைச் சேர்ந்தவரென்றும், வேள்விகள் புரிந்தனரென்றும் கூறப்படுதலும் ஆம்.

பட்டயங்கள் எங்கோ சில சிற்றூர்களிலும், காடுகளிலும், நிலத்தின் கீழும் இருந்து இங்ஙனம் அகப்பட்டவை. அவைமுற்றிலும் கிடைத்து வட்டன என்று எங்ஙனம் கூறமுடியும்? அன்றியும் தமிழ் வழங்காத தெலுங்கு நாட்டை அவர்கள் கைப்பற்றி ஆண்டபொழுது அங்கே அளித்த பட்டயங்கள் தமிழில் எப்படி இருக்கக்கூடும்? தமிழராயிருந்தோர் பிராகிருதத்தில் சாசனம் அளித்திருக்க முடியா தென்றால், பிராகிருதம் அல்லது வடமொழியே பயினறவர் பின்பு எங்ஙனம் தமிழராகித் தமிழிலே சாசனம் அளித்திருத்தல் கூடும்? இதனாலே அக்காரணம் அத்துணை உறுதியிடைத்தன் என்பது தோன்றும்

அவர் பாரத்துவாச கோத்திரத்தைச் சேர்ந்தவ ரென்றும் சொல்வது காரணம் ஆகலாம், எனின், தமிழ் வேந்தர்கள் சூரியன் மரபினரென்றும், சந்திரன் மரபினரென்றும் கூறப்படுவதற்கு யாது சொல்வது? சோழர்களோடு மாறுபட்டிருந் தோரும், ஆந்திர நாட்டையும் கைப்பற்றி ஆண்டோரும, எண்ணிறந்த பிராணர்களைத தமிழகத்திற் குடியேற்றிஅவர்கட்கு எண்ணிறைந்த தானங்களை அளித்தோரும் ஆகிய பல்லவர், தம்மை அசுவத்தாமன் வழியில் வந்தோர் என்றும் பாரத்துவாசர் கோத்திரத்தினர் என்றும் கூறிக்கொள்வதில் வியப்பென்னை? பல்லவரது மரபின் வரலாறு நாளடைவில் விரிந்து வந்திருப்பதை சாசனங்கள் விளக்குமன்றோ?

அவர்கள் வேல்வி புறிந்ததுதான் எங்ஙனம் காரணமாகும்? தமிழ் மூவேந்தரும் எண்ணிறந்த வேள்விகள் செய்திருத்தலை சங்கநூல்களால் அறியலாகும். பண்டியன் பல்யாக சாலை முதுக்குடுமி பெருவழுதி என்னும் பெயரே அதனை விளக்கும் அவனைப் பாடிய நெட்டிமையார் என்ற புலவரும் ‘நின்னுடன் எதிர்த்து தோற்றொழிந்த பகைவர் பலரோ, நீ வேள்வி புறிந்த களம் பலவோ’ என்று கூறுகின்றார் இவ்வாற்றால் பல்லவர் வடக்கிலிருந்து வந்தோர் என்பார் அதற்குக் கூறும் காரணம் ஒன்றேனும் திட்ப்ப முடைதன் றென்பது விளங்கா நிற்கும். பல்லவரது ஆதி ஊறைவிடம் தொண்டை நாடே என்பதனை மறுக்கக் தகுந்த வேறு ஆதரவுகள் கிடைக்கு மேல் அவர் மணிமேகலையில் கூறப்பட்டதும் தமிழ் நாட்டை யடுத்து தெற்கிலுள்ளதுமாகிய மணிபல்லவம் என்னும் தீவினின்று வந்தோர் எனக் கருதல் பொருத்தமுடைத்தாகும்.

இனி கள்ளர் வகுப்பினரை பல்லவர் வழியினர் என்பதற்கு பல பொருத்தங்களுள்ளன. அவற்றினை இங்கே காட்டுதும். பல்லவர் தொண்டையர் என்னம் பெயர்கள் ஒரே வகுப்பினரை குறிப்பன வென்று முன் விளக்கப்பட்டதும். காடவர், சேதிபர், காடுவெட்டி என்னும் பெயர்களும் பல்லவருக்கு உரியவை. திருத்தொண்டர்களில் ஒருவாராகிய ஐயடிகள் காடவர்கோன் நாயநாரை

‘பத்திக்கடல் ஐயடிகளாகின்ற நம்பல்லவே’
என்று திருத்தொண்டர் திருவந்தாதியும் ;
‘வைய நிகழ் பல்லவர் தங் குலமரபின் வழித்தோன்றி’

எனவும்,

‘கன்னிமதில் சூழ்காஞ்சி காடவ ரையடிகளார்’
எனவும் பெரியபுராணமும் கூறுகின்றன
சுழற்சிங்க நாயனாரை,
‘கடல் சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான்
காடவர்கோன் கழற் சிங்கன்’

என்று திருத்தொண்டத் தொகையும்;

‘பல்லவகுலத்த வந்தார்’

என்று பெரியபுராணமும் கூறுகின்றன.

திருமுனைப்பாடி நாட்டுக்கச் சேதி நாடு என்பதும் ஒரு பெயர். மெய்ப்பொருணாயனார் புராணத்தில் ,

‘சேதிநன்னாட்டு நீடு திருக்கோவலூர்’

என்று கூறப்பட்டுள்ளது. சேதிநாடு ஆண்டமைபற்றிப் பல்லவர் சேதிபர்கோன்எனவும் படுவர்.

காடுவெட்டி என்பதும் பல்லவரது பெயராகச் சாசனங்களில் வருகிறது. ‘காடு வெட்டித் தமிழ் பேரரையன்’ என்று கல்வெட்டிற் காணப்படுவதிலிருந்து இப்பெயர்அரசரக்குரியதென்பது விளங்கும்.

பழைய திருவிளையாடற் புராணத்திலிருந்து கீழே காட்டியள்ள ஒரு சரித்திரத்தாலும் இது விளங்கம்.

‘சிவபக்தியில் மேம்பட்டவனும் மிக்க புகழ்வாய்ந்தோனும் ஆகிய காடு வெட்டி யென்னும் ஓர் தலைவன் மதுரையிற்சொக்கலிங்கப் பெருமானைப் பணிதற்குச் சென்று வையையாற்றின் வடகரையை அடைந்தான். அப்பொழுது பாண்டியன் நாற் புரத்த மதிற் கதவையும், சாத்தித்தன் முத்திரையிட்டு, அவனுடன் படையெடுக்க முயன்றான். வையையும் பெருகிவிட்டது. இந்நிலைமையில் சிவபிரானானவர் காடு வெட்டியின் அன்புக்கு இரங்கி, நள்ளிரவில் வடக்கு மதில் வாயிலை முரித்து வந்து, ஓர் இயந்திரத்தால் அவனையாற்றின்தென்கரையில் ஏற்று வித்து, மதில் இடித்த வழியாகக் கொண்டு சென்று, இருளை வெளிதாக்கி, அவனுக்குச் சோதி விமானத்தையும், தாம் தமது ஒப்பற்ற திருவுருவத்தையும் காட்டியருள, அவனம் கண்டுபோற்றி மனமுருகி நின்றான். நின்றவன் பின் பெருமானது கட்டளையால் விடியமுன்னே மதுரையை விட்டுப்போய் விட, ஆலவாயடிகளாரும் மதிலை புதுப்பித்துத் தமது இடபவிலச்சினையிட்டுப் பாண்டியனுக்குக் கனவிலே அறிவித்தருளினார்’ என்பது கதைச் சுருக்கம்.

இதில் சுட்டியுள்ள தோன்றலை ஓர் சோழன் என்று கடம்பவனபுராணம் முதலியன கூறுகின்றன. பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற்புராணம் இவனைச் சோழன் என்று கூறினும் கச்சியில் இருந்தவனாகத் தெரிவிக்கின்றது. வரலாற்றுண்மை அறிய வழியில்லாத நிலைமையில் புராண ஆசிரியர்கள் இவனைச் சோழனென்று கருதினர் போலும்? மேலெ குறிப்பிட்ட பெயர்கள் (தொண்டைமான், பல்லவராயர், பாடவராயர், சேதிராயர், காடு வெட்டி) எல்லாம் கள்ளர் வகுப்பினரக்குள் வழங்கும் கிளைப்பெயர் அல்லது பட்டங்களாக உள்ளன. வாண்டையார் (வண்டையார்) என்னம் பட்டமும் வண்டை வேந்தனாகிய கருணாகரத் தொண்டைமான் வழியினர்என்பதைக் காட்டும். இவர்களுக்குள்வழங்கும் பட்டப் பெயர்களேல்லாம் இந்நூலிறுதியில் தொகுத்துக் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு பெயரினையு முடையார் பற்பலவூர்களில் இருந்தலால் அவ்வூர்களை அங்கே குறிப்பது மிகையாகும்.

இனி, முத்தரையர் என்பார் கள்ளர் வகுப்பினரென முன்போ காட்டப்பட்டது. முத்தரையர் என்னும் பெயர் முதலில் பல்லவர்க்கு உரியதாய்ப் பின்ப அவர் கீழ் ஆண்ட சிற்றரசர்க்கு வந்ததெனச் சிலர் கருதியுள்ளனர். முதல் மகேந்திரவர்மன், முதற் பரமேச்சுரவர்மன் என்ற பல்லவ வேந்தர்கட்கு முறையே பகாப்பிடுகு. பெரும் பிடுகு (பிடுகு = இடி) என்ற பட்டங்கள்உள்ளன. முத்தரையர்க்கும் இப்பெயர் வழக்குண்டு என்பதனைப் பெரும்பிடுகு முத்தரையன் என்னும் பெயர் காட்டும். புதுக்கோட்டை நாட்டிலுள்ள திருமெய்யத்தில் ‘விடேல்விடுகு’ என்னும் பெயருள்ள முத்தரையன் ஏரிகள் வெட்டு வித்திருக்கின்றனன். நந்திக் கலம்பகத்தில் நந்திவர்ம பல்லவன் ‘விடேல் விடுகு’ என்று கூறப்படுகின்றனன்.

.இங்ஙனம் பல பெயர்கள் ஒத்திருப்பது முத்தரையரும் பால்லவ வகுப்பினரே யென்று காட்டும். காஞ்சியிலிருந்து ஆண்ட பேரரசர்களாய பல்லவர்கள் தம் இனத்தவரையே தஞ்சை முதலிய இடங்களில் அரசாளும்படி செய்திருந்தனரென்பது பொருத்தமாம். இது காறும் கூறியவற்றிலிருந்து கள்ளர்கள் பல்லவ வகப்பினர் அதாவது பல்லவரின் ஒரு கிளை என்பது பெறப்படும். பெயர்கள் ஒத்திருப்பது கொண்டு இவர்கள் பல்லவ வகுப்பினரெனல் பொருந்தாது எனின், பெயர்களே யன்றி வரலாறுகளும் ஒத்திருத்தல் இதில் பலவிடத்தும் காணப்படும். பல்லவரல்லர் என்பதற்கோ யாது காரணமும் இல்லையென்க.

கள்ளர் வகுப்பினராகிய புதுக்கோட்டை அரச பரம்பரையினர் தொண்டைமண்டலத்திலிருந்து வந்த பல்லவர் எனவே புதுக்கோட்டைச் சரிதம் கூறுகின்றது. வின்சன் எ. ஸ்மித் முதலியோரும் அங்ஙனமே கருதியுள்ளாரென்பது முன்பு காட்டப் பட்டது. திருவாளர் பி.டி. சீனிவாசையங்கார் அவர்கள் தாம் எழுதியுள்ள பல்லவர் சரிதத்தில், ( நாம் முன்பு மறுத்துள்ள) சில காரணங்களையெடுத்துக் காட்டிப் பல்லவர் கள்ளரினத்தினினின்றும் உதித்தவராகாதர் எனக் கூறினரேனும், பின் பல்லவர் தமிழராகிவிட்டாரென்று கூறி வந்து, தமது நூலை முடிக்குமிடத்தில் ‘ஒரு தெலுங்கு பல்லவக் கிளையார் 17-ம் நூற்றாண்டில் தொண்டைமான் என்றும் பல்லவ ராஜா என்றும் பட்டத்துடன் புதுக்கோட்டை அரசரானார். இப்போது புதுக்கோட்டை அரசரே பல்லவகுல மன்னருடைய புகழை நிலை நிறுத்தி ஆள்கிறார்’ என்று குறித்திருக்கின்றனர். இங்ஙனம் பலர் கருத்தும் இக்கொள்கையை ஆதரிப்பனவாகவேயுள்ளன.

இனி, புதுக்கோட்டை மகராஜா காலேஜில் தலைவராக இருந்த திருவாளர் வெ. இராதாகிருட்டினையர் அவர்கள் எழுதிய புதுக்கோட்டைச் சரிதத்திலிருந்தும், கல்வெட்டு முதலியவற்றிலிருந்தும் கள்ளர்களைப் பற்றி அறியப்படுகின்ற பல அறிய செய்திகளை இங்கே தொகுத்துக் காட்டுவோம்.

“பாண்டி நாட்டிற்கும், சோழ நாட்டிற்கும் இடையிலுள்ள பகுதி பன்றி நாடு எனப்பட்டது. இந்நாட்டில் முதலில் இருந்தவர் வேடுவர். பின் குறும்பர் வந்தனர். அவர்க்குப்பின் வெள்ளாளர் வந்தனர். பன்றி நாட்டின் ஒரு பகுதி பாண்டியர் ஆட்சியின் கீழும், மற்றெரு பகுதி சோழர் ஆட்சியின் கீழும் இருந்தன. காராள வெள்ளாளர் கி.பி. முதல் நூற்றாண்டின் முன்பே சோழ தேயத்திற்கு குடியேறி விட்டனர். அவர்கள் தங்கள் உழவு தொழிலால் ஏற்பாரது வறுமையைப் போக்கி, அரசற்குப் பொருள் பெருக்கினார்கள். மூவேந்தருக்குட்பட்டுச் செல்வர்களாய் இருந்திருக்கின்றனர்.

சேர சோழ பாண்டியர்கள் வெள்ளாள குலத்தவரென்று கானகசபைப்பிள்ளை யவர்கள் கூறுவது தவறு. ஆதொண்டைச் சக்கரவர்த்தி காஞ்சியிலிருந்து வெள்ளாளர்களைச் சோணாட்டல் குடியேற்றினர் என்றும், பாண்டியன் உக்கிரப்பெருவழுதி கீழ்க் காஞ்சியிலிருந்து நாற்பத்தொண்ணாயிரம் வேளாண்குடிகளைப் பாண்டி நாட்டிற் குடியேற்றினர் என்றும் தெக்கத்தூர், சுப்பிரமணியவேளார் என்பாரிடம் உள்ள ஒரு ஒலைச்சுவடியில் குறித்திருக்தகிறது. குறும்பரைத் துரத்தியடித்து வெள்ளாளர் தங்களை நிலத்தலைவராகச் செய்துகொண்டிருக்க வெண்டும். வெள்ளாளரைப் பற்றிய சாசனங்களெல்லாம் அவர்களை ‘நிலத்தரசு’ என்றே குறிப்பிடுகின்றன. சோழ பாண்டியரைப்போல் முடியரசாக இல்லாமை பற்றியே நிலத்தரசு என்று குறிப்பிட்டடிருக்கவேண்டும். நெடுங்காலம் வெள்ளாளர் நலத்திலும் பலத்திலும் மிக்கு வாழந்தனர். அதன் பின், கோனாடானது சம்மதிராயர் கடம்பராயர், மாளுவராயர், கொங்குராயர், கலிங்கராயர், அச்சுதராயர், குமதராயர் என்ற தலைவர்களிடம் கீழ்ப்பட்டிருந்தது.

கானாட்டுவெள்ளாளர்க்கும் கோனாட்டு ஒளியூர் வெள்ளாளர்க்கும் பகை யுண்டாகி அவர்கள் தங்கள் தங்கட்குத் துணையாக இராசேந்திர மங்கல நாட்டிலிருந்து நூற்றுக்கணக்கான குடிகளடங்கிய மறவர்களைக் கொண்டு வந்தனர் என ஒரு ஓலைச் சுவடியில் காணப்படுகிறது.

நெட்டிராச பாண்டியன் இருநூறு மறவர் குடிகளைக் கொண்டு போய்த் தன் பகைவனை வென்று, பின் அவர்கட்கு நிலங்கள் அளித்து ‘மறவர் மதுரை’ என்னும் கோட்டையும் கட்டிக் கொடுத்தான். இவன் ஒரு மறவர் மகளைக் கல்யாணஞ் செய்து கொண்டு, இவர்க்குப்பிறந்த கிள்ளைக்கு ஏழு கிராமங்கள் கொடுத்தனன். வெள்ளாளர் தங்கள் உரிமைகளை மதுரைத் தேவனுக்கு விட்டு விட்டனர்.

கள்ளர்களைத் குறித்து அகநானூற்றுச் செய்யுட்கள் விரிவாகக் கூறுகின்றன. திருவேங்கட மலையில் வசித்தோரும்., அஞ்சா நெஞ்சு படைத்தவருமாகிய இவர்கள் ‘கள்வர் பெருமகன் தென்னன்’ என்ற பாண்டியனால் தென்னாட்டிற்கு அழைக்கப்பட்டனர் எனத் தோன்றுகிறது. புதுக்கோட்டைக்கு வடகீழ்பாலுள்ள வீசங்கி (மீசெங்கள) நாட்டில் இவர்கள் தலைமை வகித்திருந்தனர். இவர்களில் பலர் அரசர்களோடு சம்பந்தப் பட்டிருக்கின்றனர். நாராயணப் பேரரசு மக்கள் என்றும், படைத்தலைவர் என்றும், தந்திரிமார் என்றும், கர்த்தர் என்றும் கள்ளர்கள் அழைக்கப் பட்டனர்.

கள்ளர் வகுப்பினர் மேன்மேல் ஆதிக்கம் பெற்றனர். அவர்களிடம் நிலங்கள் ஒப்பவிக்கப்பட்டன. கோயிற் சொத்துக்களைக் காப்பாற்றுமாறு வேண்டிக் கொள்ளப்பட்டனர். கோனாட்டு வெள்ளாளர்க்கும் கானாட்டு வெள்ளாளருக்கும் ஏற்பட்ட சண்டைகளில் கள்ளர்கள் இருதிறத்தார்க்கும் உதவி புரிந்தனர். வாணாதி ராயர்க்கும் மற்றைக் கார்காத்த வெள்ளாளர்க்கும் உண்டாகிய சண்டையில் வீசங்கி நாட்டுக் கள்ளர்கள் வெள்ளாளர்களைச் சூரைக்குடி வரையில் ஓட்டு வித்து, ஏழுபிரபுக்களைச் சிறைப்பிடித்து வாணாதிராயர் முன் கொண்டுவந்து விட்டனர். பின்பு இவர்களைச் சிவந்தெழுந்த பல்லவராயரிடம் கொண்டு போயினர். பல்லவராயர் கோனாட்டுப் பிரபுக்களைக் கூப்பிட்டு, இனி நீங்கள் கள்ளர்களோடு மாமனும் மருமகனும் போல வாழவேண்டுமென்ற கூறி, கள்ளர்களுக்கு 530 கலம் நெல்லும், 550 பொன்னும் வெள்ளாளர் கொடுக்கும்படி தீர்ப்பு அளித்தார்.

வெள்ளாற்றின் வழக்கிலுள்ள கோனாடானது உறையூர்க் கூற்றம், ஒளியூர்க்கூற்றம் , உறத்தூர் கூற்றம் என மூன்று கூற்றங்களாகவும் வெள்ளாற்றின் தெற்கிலுள்ள கானாடானது மிழலைக் கூற்றம், அதழிக் கூற்றம் என இரண்டு கூற்றங்களாகவும் பிரிக்கப் பட்டிருந்தன. இக்கூற்றங்களை 10,11-வது நூற்றாண்டுகளில் அரையர் அல்லது நாடாள்வார் என்னும் தலைவர்கள் ஆண்டு வந்தனரென்று கல்வெட்டுகளிலிருந்து தெரிகிறது. கோபிநாதராவ் அவர்கள் சொல்லுகிறபடி இப்பொழுதும் இவ்வகையினர் சிற்சில் இடங்களில் இருத்தல் அறியலாம்.

அரையர்களில் அவர்கள் இருந்த இடம் பற்றி, சுருக்காக் குறிச்சிராயர் வாணாதிராயர் (வாணாதிராயன் கோட்டை), கடம்பராயர் (புலவயல் அரசர்), ஆலங்குடி நாட்டு இரண்டுவகை அரையர், அம்புகோயில் ஐந்து வீட்டரையர், இரும்பாலி யரையராகிய கடாரத் தரையர், குலோத்துங்கசோழதரையர், (குன்றையூர் அரசர்) எனப் பல பிரிவுகள் இருந்தன. சோழ, பாண்டியர்களின் அதிகாரம் இவ்விடங்களில் மிகுதியும் பரவவில்லையெனத் தெரிகிறது. அக்காலத்தில் வலிமிக்கவன் செய்வன வெல்லாம் சரியானவையே ஒரு தலைவன் பலமுள்ளவனாயின் தனது அதிகாரத்தைச் செலுத்திக் கொண்டேயிருக்கலாம். ஒரு கல்வெட்டில் ஐந்து கிராமக் குடிகள் ஒன்று கூடிக் காங்கெயன் என்ற ஒரு தவைனை மீட்டும் தவைனாகக் கொண்டு வந்த செய்தி சொல்லப் பட்டிருக்கிறது. சிலர் வாணதிராயரென்றும், மகாபலி கோத்திரத்தைச் சேர்ந்தவர்களென்றும் சொல்லியிருக்கிறது.

கி.பி.14-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மலிக்காபர் (மாலிக்கபூர்) முதலிய மகம்மதியர் தென்னாட்டின் மேற் படையெடுத்துக் கோயில்களை இடித்துப் பல கொடுமை விளைத்தனர். அப்பொழுது மக்களெல்லாரும் அரையர்களைச் சரண் புகுந்து ஊர்க்காவலை அவர்களிடம் ஒப்புவிக்கவே அவர்கள் அனைவரையும் பாதுகாத்தனர் என்று கல் வெட்டுக்களால் தெரிகிறது. குடிகளுக்குள் உண்டாகும் வழக்குகளையும் அரையர்களே விசாரித்துத் தீர்ப்பளித்து வந்தனர். அதற்காக அரசு சுந்தரம் என்ற ஒரு வரி அவர்களால் வாங்கப்பட்டு வந்தது. அரசு சுந்தரம் என்பது விளையும் பொருள்கள் எல்லாற்றிலும் ஒருபங்கை அரையருக்குக் கொடுப்பது. இவர்களில் சூரைக்குடி அரையர்கள் 300வருடங்கள் வரையில் ஆண்டு கொண்டிருந்தனரென்று தெரிகிறது. அரையர்களுக்கு அரசு என்றும், நாடாள்வார் என்றும் பட்டமுண்டு. அரையர்களிற் பலர் தேவர் என்ற பட்டமும் தரித்திருந்தனர்.

அறந்தாங்கியில் அரசு செலுத்திய தொண்டைமான்களுக்கும், 17ம் நூற்றாண்டில் புதுக்கோட்டையில் இருந்த தொண்டைமான்களுக்கும் தொடர்பு புலப்படவில்லை. அறந்தாங்கி தொண்டைமான்களைப்பற்றி கி.பி.1426ல் தான் முதலில் தெரிகிறது. பொன்னம்பல நாத தொண்டைமான் (கி.பி.1514—1567) மிகவும் வலியும். செல்வாக்கும் முள்ளவனென்று தெரிகிறது. இவன் இலங்கையை ஏழுநாளில் வென்றதாகச் சொல்லப்படுகிறது. பாளையக்காரர் என்போர் வேறு வேறு தகுதியுடைய படைத்தலைவராவர். இவர்களிற் சிலர் பழைய அரசர்களின் வழியினர் அல்லது அமைச்சர் முதலானோரின் வழியினர் என்று சொல்கின்றனர். இவர்களின் முன்னோர் அரசர்களிடமிருந்து, அவர்களது மதிப்பைக் காப்பாற்றியதற்கோ, தாம் புரிந்த நன்றிக்கு மாறாகவோ, பட்டாளத்தை வைத்துக்கொள்ளவோ பெரு நிலங்களை இனாமாகப் பெற்றிருக்கின்றனர். பாளையக்காரரும் நிலவரி வாங்கியும் கிராமங்களைப் பாதுகாத்தும் வந்தனர்.

கி.பி.1378-ம் ஆண்டுக்குப் பின இவ்விடங்களில் பல்லவராயகர்கள் அரையர் என்னும் பெயருடன் இருந்தனர். இவர்கள் பன்னாள் வரை குளத்தூர்த் தாலுகாவிலுள்ள வழுத்தூரிலும், பெருங்களூரிலும் தலைவர்களாக இருந்தனர். தொண்டை மண்டலத்தைச் சோழர்கள் வென்றுவிட்ட பின்பு பல்லவராட்சி முடிவுக்கு வந்தமையின் பல்லவரின் கிளைகள் சோழரிடம் படைத்தலைவராகவும், அமைச்சராகவும் இங்ஙனம் அமைந்தனர். கலிங்கத்துப் பரணியிற் சொல்லப்பட்ட கருணாகரத் தொண்டைமான் அவர்களில் ஒருவன். கல்வெட்டக்களை ஆராயும் இந்திய அதிகாரியான வெங்கையா அவர்கள் சொல்லுகிறபடி வழுத்தூரிலிருந்து பல்லவராயர்கள் பல்லவர் குடும்பத்திற்கு எட்டிய உறவாயிருக்காலம். தஞ்சாவூருக்குக் கிழக்கே எட்டு நாழிகை வழியிலுள்ள வழுத்தூரிலிருந்து பல்லவராயர்கள் தெற்கே புற்பட்டதாக ஒரு வரலாறு உண்டு. சிவந்தெழுந்த திருமலைராய பல்லவராயரென்பர் பாண்டியர்களைப் பாதுகாத்தவரென்று திருநாரண குளத்திலுள்ள 1539-ம் ஆண்டுக் கல்வெட்டில் சொல்லியிருக்கிறது. மூன்று அல்லது நான்க பால்லவராய அரசர்கள் கார்காத்த வெள்ளாளர் காலத்தில் இருந்தனராக ஆதரவுகள் கூறுகின்றன.

வளரும்……….(1)

பாண்டி நாட்டரசனான உக்கிரவீர பாண்டிய மன்னன் ஏழு ஆண்டுகள் தொண்டை மண்டலத்தில் வேங்கடாசலப் பல்லவராயரைஅழைத்து வருதற்பொருட்டுக் காத்திருந்ததாகவும், பின் அவருதவியைக் கொண்டு சேதுபதி நந்தி மறவனைவென்றதாகவும், அதன் பொருட்டுப் பாண்டியன் பொன்னமராவதிப் பக்கத்தில் அவர்க்கு நிலங்கள் கொடுத்ததன்றி,’ அரசனின் மருமகன்’ என்ற பட்டமும், ஒரு அரண்மனையும் தந்ததாகவம் செப்புப் பட்டயத்தில் சொல்லியிருக்கிறது. தொண்டைமான் சக்கரவர்த்தி யென்று பட்டம் பெற்ற தொண்டைமான் பல்லவராயருடன் வந்தெனனெனவும் , அவனுக்கு அப்பகோவிலில் நிலங்கள் அளிக்கப்பட்டன எனவும் சொல்லப்படுகிறது.

கி.பி.1387-ல் வழுத்தூர்ப் பல்லவராயர்கள் திருக்கோகரணம் என்னமிடத்தில் தருமம் செய்திருப்பது தெரிகிறது. கல் வெட்டில் ‘இராஜ்யம் பண்ணியருளகையில்,

என்று வருவதால் இவர்கள் அரசரென்றே சொல்லப்பட்டனரென்பது விளங்கும். கி.பி.1312-ல் ஒரு பல்லவராயன் ஆரணிப்பட்டியிலுள்ள கடவுளுக்கு நிலங்கள விட்டமை புலனாகின்றது. வழுத்தூர்ப் பல்லவராயர்கள் தங்கள் அடையாளமாக ‘பல்லவன் குளம்’ என்ற வாவியும், பல்லவன் படி என்ற அளவுகருவியும் உண்டாக்கியிருக்கின்றனர். இப்பொழுது தசரா விழாவில் அரிசி அளப்பதற்கு இப் படி கருவியாக விருக்கின்றது. பல்லவன் குளம் என ஒன்று புதுக்கோட்டைக்கு நான்கு நாழிகை வழியிலுள்ள பெரியூர் என்னமிடத்தில் இருக்கிறது. வழுத்தூரில் அழிந்துபோன கோட்டைகள் உள்ளன.

பல்லவராயர்களில் , கோனேரிப் பல்லவராயர், மாஞ்சோலைப் பல்லவராயர், அச்சுதப்பப் பல்லவராயர், இளையபெருமாள் பல்லவராயர், ஆவுடைய பல்லவராயர், கந்தப்ப பல்லவராயர், மல்லப்ப பல்லவராயர், சிவந்தெழுந்த பல்லவராயர் என்ற பெயர்கள் காணப்படுகின்றன.

புலிக் கொடியும், மீன் கொடியம், வெண்குடையும், ஆறுகாற்சிங்காதனமும், ஆத்தி மாலையும் பல்லவராயர்கள் உடையராயிருந்தனர். புலிக்கொடி காஞ்சிப்பல்லவரது தொடர்பைக் காட்டுகிறது. மீன் கொடி பாண்டியர்களைத் தோல்வியிலிந்து காப்பாற்றியபின் தரித்திருக்கலாம். சோழருக்குரிய ஆத்திமாலை சூடியிருப்பது இவர்கள் சோழர்களின் சார்பு பெற்றிருக்கலாம் என்பதனைக் காட்டுகிறது.

புதுக்கோட்டை, கண்டர்கோட்டை, கல்லாக்கோட்டை முதலிய வற்றின் தலைவர்கள் உதிரத்தாலும், கல்யாணங்களினாலும் சம்பந்தமுடையராவர். இவர்கள் படைவீரராகவும், தலைவர்களாகவும் இருந்தனர். தனித்தனியாகத் தங்களுக்குள் இராச்சியமும் ஏற்படுத்திக்கொண்டனர்.

திருச்சிராப்பள்ளியை மகம்மதியர் முற்றுகை யிட்டபொழுது கள்ளர்கள் வந்து தாக்கி மகம்மதியரை அஞ்சச் செய்தனர். கள்ளர்கள் இந்நாட்டிற்கு அரசராயிருந்தனர். இவர்கள் மதுரை அரசனுக்குத் தீவையாவது கப்பமாவது கொடுக்கவில்லை. அரசன் இவர்களை யடக்குவது கூடாமையாருந்தது பின்பு மங்கம்மாளின் மந்திரி படைகளைக் கொண்டுபோய்ச் சிலரை மடித்து, அங்கே காட்டின் நடுவில் ஒரு கோட்டையைக் கட்டிச் சில பட்டாளங்களையும் வைத்தனன். ஆனால் அவர்கள் கடையாள ரெல்லோரையுங் கொன்று, கோட்டையையும் தவிடு பொடியாக்கிவிட்டனர். இங்கே சொன்வை புதுக்கோட்டைப் பக்கத்தில் நிகழவில்லை. அதற்குக் காரணம் பால்லவராயர் அல்லது தொண்டைமான்கள் இதை ஆண்டுவந்தமையே.

கி.பி.1116-ல் இராசேந்திர சோழன் ஆட்சியின் 5-வது ஆண்டில் நார்த்தாமலையிற் குறித்துள்ள கல்வெட்டில் தொண்டைமான் என்ற பெயர் குறிப்பிட்டிருக்கிறது. இப்பொழுதிருக்கிற தொண்டைமான் மரபினர் தொண்டை மண்டலத்திலுள்ள திருப்பதியைச் சார்ந்த தொண்டைமான் கோட்டையிலிருந்து தொண்டைமான் புதுக்கோட்டைக்கு வந்ததாகச் சொல்வது வழக்கம்.. தொண்டைமான் தொண்டைமண்டலத்திலிருந்து வந்தவரென்று ‘இராஜ தொண்டைமான் அநுராக மாலை’ என்ற சுவடியிற் சொல்லியிருக்கிறது.

தொண்டைமான் வமிசாவளி’ என்ற தெலுங்குச் சவடியில் (வெங்கண்ணாவால் 1750-ல் எழுதப்பட்டது) தேவேந்திரன் ஒரு நாள் பூமியில் சுற்றி வந்தனனென்றும், அப்பொழுது ஒரு கன்னிகையை மணந்தானென்றும், அவள் பெற்ற பிள்ளைகள் பலரில் ஒருவன் அரசனாயினானென்றும், சொல்லப்பட்டிருக்கிறது. இதன்படி தொண்டைமான் இந்திர வமிசம் என்று கொள்ளப்படும்.

தொண்டைமான் அம்புகோவிலில் குடியேறுதற்கு முன்பு அன்பில் என்ற இடத்தில் தங்கியிருந்தனனெறும், தங்சைக்கத் தெற்கில் உள்ள அம்புகோவில் நாடானது பன்னிரண்டு தன்னரச நாடாக ஏற்பட்டதென்றும் வெளியாகின்றது. வெங்கட்டராவ் புதுக்கோட்டை மானுவலில், தொண்டைமான்களோடு ஒன்பு குடிகள் அம்பு நாட்டில் குடியேறினரென்று கூறி, அவர்கள் பெயரும் குறிப்பிடுகின்றார்.

பெயர்கள்

(வடக்குத் தெருவார்கள்)

1.மாணிக்காரன்
2.பன்றிகொன்றான்
3.பின்பன்றி கொன்றான்
4.காடுவெட்டி
5.மேனத்தரையன்
தெற்குத் தெருவார்கள்
6.பல்லவராயன்
7.தொண்டைமான்
8.ராங்கியன்
9.போர்ப்பன்றி கொண்டான்
10.கலியிரான்

‘இவர்கள் பத்து வீட்டினரும் அரசு என்றும் சொல்லப்படுகின்றனர். இவர்கள், தங்களது புது நாட்டிற்குக் குருக்கள், பிச்சர், மாலைகோப்பார், மேளகாரன், வண்ணான், பரிகாரி என்னும் இவர்களைக் கொண்டு வந்தனர், இன்னவர் அம்பு நாட்டிற் குடியேறிய பின்பு ஆதிய வலங்கன், காளிங்கராயன் என்ற இரண்டு குடும்பங்களும் இவர்களுடன் சேர்ந்து கொண்டன வென்றும், இவர்கள் எல்லோரும் சேர்ந்து நாலா பக்கங்களிலும் சென்று, பிலாவிடுதி, கரம்பக்குடி, வடக்கலூர், நெய்வேலி, கல்லாக்கோட்டை, நரங்கியன்பட்டி, அம்மணிப்பட்டி, பந்துவாக்கோட்டை, மங்கல வெள்ளாளவிடுதி என்னும் ஒன்பது இடங்களில் குடியேறின ரென்றும் அறிகின்றோம்.

தொண்டைமானால் குறிக்கப்ட்டுள்ள பல தாம்பிர சிலாசாசனங்களில், அவர்கள் தற்காலூரில் (அம்புநாட்டில்) நிலங்களை யுடைய இந்திரகுல அரையர் என்று குறிப்பிட்டிருக்கிறது. சிவன், பிள்ளையார், மாரியம்மன், வீரமாகாளி என்ற தெய்வங்களைப் பூசிப்போர் இவர்கள்.

ஸ்ரீரங்கராயலு என்ற விஜயநகர அரசன் இப்பக்கமாக இராமேச்சுரத்திற்கு யாத்திரை சென்ற பொழுது அவ்வரசனுடைய யானை மதங்கொண்டு பல சேதங்களை யுண்டுபண்ண, அதனை யறிந்த ஆவடைரகுநாத தொண்டைமான் அந்த யானையைப் பிடித்து அடக்கி ராயலுவிடம் கொண்டு வந்தனன் என்றும், அப்பொழுது தொண்டைமானுக்கு ‘ராயராகுத்த ராயவஜ்ரீடு ராயமன்னீடு ராய’ என்னம் பட்டமும், பல நிலங்களும், யானையும் சிங்கமுகப் பல்லக்கும், பிறவும் வரிசையாக அளிக்கப்பட்டன என்றும். அதிலிருந்து ‘தொண்டைராய தொண்டைமான’ என அவன் வழங்கப்பட்டனன் என்றும் அறியப்படுகிறது. இந்த மூன்றாவது ஸ்ரீரங்கராயலு என்ற அரசன்றான் சென்னையை ஆங்கிலேயருக்குக் கொடுத்தவன் இதிலிருந்தே (கி.பி.1639) புதுக்கோட்டை தொண்டைமானால் ஆளப்பட்டு வருகிறது.”

இதுகாறும் காட்டியவற்றி லிருந்து, கள்ளர்கள் தொண்டை நாட்டினின்றும் சோழ, பாண்டி நாடுகளிற் குடியேறி, அரையர், என்னும் பெயருடன் தன்னரசாக ஆட்சிபுரிந்து வந்தனர் என்னும் உண்மை நன்கு புலப்படுதல் காணலாம். பல்லவராயர் , தொண்டைமான், கள்ளர் என்னும் பெயர்கள் ஒரே வகுப்பினர்க் குரியனவென்று துணிந்து கூறமாட்டாது சரித்திர ஆசிரியர் சிறிது இடர்ப்படினும், அவர் கூறிய வரலாறெல்லாம் ஒரு வகுப்பின ராகவே வலியுறுத்தி நிற்றல் காண்க.

யாம் முன்பு கூறியவைகளை இவற்றுடன் சேர்த்துப் பார்க்குமிடத்து நடுவு நிலையுடைய அறிஞர் எவரும் கள்ளர் பல்லவ வகுப்பினரே யென்னும் முடிவினை மேற்கொள்வரென்று துணிகின்றனம். ஒரு காலத்தில் தொண்டை மண்டலத்தோடு, சோழ மண்டலத்தையும் அடிப்படுத்து ஆட்சி புரிந்து வந்த பல்லவ சக்கரவர்த்திகள் பின்பு தம் பேரரசாட்சியை இழந்து, பிற விடங்களிற் குடியேறிச் சிற்றரசர்களாயும், சோழர்களிடத்தில் அமைச்சர், தண்டத் தலைவர் முதலானோராயும் இருந்து வந்தனரென்பது மறுக்க வொண்ணாத சரித்திர வுண்மையாம். இவர்கள் தம் பெரும்பதவிகளை யிழந்து சிறுமையுற்ற விடத்தும் இவர்களடன் பிறந்த அஞ்சாமையும், வீரமும் ஒழிந்து விடவில்லை யென்பது மேலே காட்டிய வரலாற்றுக் குறிப்புகளாற் புலபடும். கருணாகரத் தொண்டைமானது வரலாறும் இதனை வலியுறுத்தா நிற்கம்.

தென்னிந்திய சாசன புத்தகம் இரண்டாவது தொகுதி, முதற் பகுதி 22-வது சாசனத்தில்,

” பாண்டி குலபதி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூரில் தொண்டைமானார் தம் பேரால் வைத்த அகரம் சாமந்த நாராயணச்சதுர்வேதி மங்கலம்” என்று வருகிறது. இதுற்கு விளக்கம் எழுதியிருப்பது,

“தொண்டைமானார் என்பவர் இந்நிலங்களை வாங்கித் தந்தவர். சாமந்த நாராயணன் என்பதே இவர் பெயராகவும் வழங்கி வந்திருக்கவேண்டும். இவர் ஒரு சிற்றரசராகவோ அன்றி ஒரு பெரிய பதவியினராகவோ இருந்திருக்க வேண்டும். இப்பொழுது புதுக்கோட்டை அரசர் தொண்டைமான் என்னும் பட்டம் புனைந்தவர், இவருடைய முன்னோர் 1680 ல் பல்லவராய தொண்டைமானைத் தள்ளிவிட்டுப் பட்டத்திற்கு வந்தவர். இவர் ஒருகால் சாமந்த நாராயண தொண்டைமான், கருணாகரத் தொண்டைமான் இவர்கள் வழியினராக இருத்தல் வேண்டும். கலிங்கத்துப் பரணியின்படி கருணகரத் தொண்டைமான் வண்டை நகரில் வசித்த பல்லவ அரசன்: குலோத்துங்கனடைய முதன் மந்திரி. தொண்டைமான் என்னும் பட்டத்திற்குப் பொருள் தொண்டை நாட்டரசக் என்பதாம். தொண்டை மண்டலம் என்பது பல்லவர் நாட்டின் தமிழ்ப் பெயராகும். காஞ்சிபுரம் அதன் தலைநகரம். இந்நகரில் அகப்பட்ட எண்ணிறநத சாசனங்கள் பல்லவராச்சியம் சோழ மன்னருக்கு இரையானமையைத் தெரிவிக்கின்றன” என்பது. இத்தகைய ஆதவுகள் எண்ணிறந்தனவுள்ளன.


….

This entry was posted in ந.மு. வேங்கடசாமி நாட்டார் and tagged . Bookmark the permalink.

Comments are closed.