அரிகேசரி கி.பி. 640 முதல் 670 வரை ஆட்சி செய்த பாண்டிய மன்னன் ஆவான்.பாண்டிய மன்னன் செழியன் சேந்தனின் மகனான இவன் தந்தையின் இறப்பிற்குப் பின்னர் முடிசூடிக் கொண்டான்.கி.பி.640 ஆம் ஆண்டளவில் மாறவர்மன் என்ற பட்டத்தினைப் பெற்றான்.திருவிளையாடல் புராணத்தில் இவனைச் சுந்தர பாண்டியன்,கூன் பாண்டியன் போன்ற பெயர்களினால் அழைத்தனர் எனவும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அரிகேசரி ஆற்றிய போர்கள் :
அரிகேசரி என்னும் இவன் பெயர் இவன் மேற்கொண்ட போர்களின் வெற்றியினைப் பறை சாட்டும் விதமாக அளிக்கப்பெற்ற பட்டம் ஆகும்.சோழ நாட்டின் மீது படையெடுத்து உறையூரை முற்றுகையிட்டு அங்கு ஆட்சி செய்து வந்த மணிமுடிச் சோழனை போரில் வெற்றி பெற்றான்.வெற்றிப்பரிசாக மணிமுடிச் சோழனது மகள் மங்கையர்க்கரசியினை மனைவியாகப் பெற்றான் அரிகேசரி.மங்கையர்க்கரசி பாண்டிய நாட்டின் அரசியாக முடிசூடிக்கொண்டாள்.தனைத்தொடர்ந்து அரிகேசரி படையெடுத்து சேர மன்னனொருவனோடு போர் செய்து வெற்றியும் பெற்றான்.பரவரை புடைத்தான்;பாழி,செந்நிலம் குறுநில மன்னர்களை வென்றான்.திருநெல்வேலியையும் வென்றான் என இவனை ஆற்றிய போர்களைப் பற்றி வேள்விக்குடிச் செப்பேடு கூறுவது குறிப்பிடத்தக்கது.
அரிகேசரியின் சமயப் பணிகள் :
அரிகேசரி ஆரம்ப காலத்தில் சமணத்தினைப் பின்பற்றி பின் சைவ சமயத்தின் வழியில் நடந்தவனாவான்.இவன் மனைவி மங்கையர்க்கரசி மற்றும் இவனது அமைச்சர் குலச்சிறையார் சைவ சமயத்தைப் பின்பற்றியவர்கள் திருஞான சம்பந்தருடன் நட்புற்றிருந்தனர்.இம்மூவருமே அரிகேசரியைச் சைவ சமயத்திற்கு மதமாற்றம் செய்து வைத்தனர்,அரிகேசரியும் சிவனின்றி கதியில்லை என்று சைவ சமயத்திற்குப் பணி செய்ய முனைந்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமண முனிவர் எண்ணாயிரவர்க்கும்,திருஞான சம்பந்தர்க்கும் சிவன் முன்னிலையில் அனல் வாதமும்,புனல் வாதமும் நடைபெற்றது எனவும் சிவபெருமானிடம் பேரன்பு கொண்ட அரிகேசரி,மங்கையர்க்கரசி,குலச்சிறையார் மூவரும் பெரிய புராணத்தில் இடம் பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சுந்தரர் இவரைத் திருத்தொண்டத் தொகையில்
“ | “நிறை கொண்ட சிந்தையான் நெல்வேலிவென்ற
நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்!” |
” |
என்ற பாடல் வரியின் மூலம் நெல்வேலிப் போரில் இம்மன்னன் வென்றவனெனவும்,சேரனும்,பிற குறு நில மன்னர்களும் இவனுக்குத் திரைசெலுத்தியதாகவும் மன்னர் மன்னனாய் வாழ்ந்தான் எனவும் சம்பந்தர் தெரிவிக்கின்றார்.அரிகேசரி துலாபாரமும்,இரணிய கர்ப்பதானமும் செய்தான் என்று வேள்விக்குடிச் செப்பேடு தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது. சீனப் பயணியான ‘யுவான்சுவாங்’ அரிகேசரியின் தந்தை காலத்தில் வரமுடியாமல் இவன் ஆட்சிக் காலத்தில் பாண்டிய நாட்டிற்கு வருகை புரிந்தான் மேலும் அவனது நாட் குறிப்பில் அவன் கூறுவதாவது: “பாண்டிய நாட்டில் உப்பும் முத்தும் மிகுதி!அருகிலிருந்த தீவுகளில் இருந்து முத்துக்கள் கொண்டு வரப்படுகின்றன.இங்கு வேறு விளை பொருள் இல்லை! வெப்பம் மிக்க நாடு இது.இந்நாட்டு மக்கள் கருத்தமேனி உடையவர்கள்;உறுதியும் போர் வலிமையும் உடையவர்கள்; பாண்டி நாடு வணிகத்தில் வளம் பெறுகிறது.செல்வத்தால் சிறந்துள்ளது” எனப் பாண்டிய நாட்டினைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.