இராசேந்திர சோழனின் கடார(மலேசியா)ப் படையெடுப்பைப் பற்றிய கல்வெட்டு

இராசேந்திர சோழனின் அயல்நாட்டுப் படையெடுப்பு பற்றிய அரிய செய்திகளைத் தாங்கியுள்ள கல்வெட்டு அவனின் 19 ஆம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டு,தஞ்சாவூர் இராசகோபுரத்துக் கர்ப்பகிருகத்தில் தென்புறத்திலுள்ள முதற்படை,இரண்டாம் படைகளில் உள்ளது. தமிழும், கிரந்தமும் கலந்து அமைந்த கல்வெட்டாக இது உள்ளது.

கல்வெட்டால் அறியப்படும் போர்ச்செயல்கள்

கடாரத்தரசனாகிய சங்கிராம விசயோத்துங்கனைத் தோற்கடித்தான்; அவனுடைய செல்வத்தையும் அவன் தலைநகரின் வாசலில் கட்டியிருந்த விச்சாதிரத் தோரணத்தையும், மணிகள் பதிப்பிக்கப்பட்ட இரட்டைக் கதவுகளையும் தன் வசமாக்கிக்கொண்டான்; சுமித்ராத் தீவிலுள்ள விசயம்,பண்ணை,மலையூர் என்னும் ஊர்களை வென்றான். பின் மலேயாத் தீபகற்பத்திலுள்ள மாயிருடிங்கம்,இலங்கா சோகம்,மாபப்பாளம், இலிம்பிங்கம், வளைப்பந்தூறு, தக்கோலம்,மதமாலிங்கம் என்னும் ஊர்களை வென்றான்.பிறகும் சுமித்ராவிலுள்ள இலாமுரிதேசத்தைக் கைக்கொண்டான்; நக்கவாரத் தீவுகளை வென்றான்.மலேயாத் தீபகற்பத்தின் மேலைக் கரையிலுள்ள கடாரத்தை வென்றான்.

உரைநடைப்பகுதியால் அறியப்படும் செய்திகள்

இராசேந்திர சோழன் தஞ்சை இராச ராசேச்சரத்தில் இருந்த தன் குருவாகிய சர்வசிவ பண்டிதர்க்கும்,அவரது சிஷ்யர்களாய் ஆர்யதேசம்,மத்யதேசம், கௌடதேசம் ஆகிய இவ்விடங்களில் இருந்தவர்களுக்கும் சந்திர சூரியர் உள்ளவரை ஆண்டுதோறும் நிறைந்த அளவாக ஆடவல்லான் என்னும் மரக்காலால் இரண்டாயிரம் கல நெல்லை ஆசாரிய போகமாகக் கொடுக்க ஏற்பாடு செய்திருந்தான்.

கல்வெட்டு மூலம்

1.ஸ்வஸ்திஸ்ரீ திருமன்னி வளர இரு நில மடந்தை(யு)ம் பொற்சயப் பாவையும் சிர்த்தநி (ச் செ)சல்வியும் (த)ன் பெருந்தெவியராகி இன்புற நெடுதியல் ஊழியுள் இடைதுறை நாடும் துடர்வன வெலிப்படர்வன வாசியும் கள்ளி சூழ் மதிள்-

2.கொள்ளிப் பாக்கையும் நண்ணற்கரு (மு)ரண் மண்ணைக் கடக்கமும் பொருகடலீழத் தரைசர்த முடியும் ஆ(ங்)கவர் தெவியர் ஓங்கெழில் முடியும் முன்னவர் பக்கல் தென்னவர் வைத்த சுந்தரமுடியும் இந்திர(னா)ரமும் தெண்டிரை ஈழமண்ட-

3.லமுழுவதும் எறிபடைக் கொளன் முறை¬(ம) யிற் சூடுங்குலதனமாகிய பலர் புகழ் முடியும்(ª)சங்கதிர் மாலையும் சங்கதிர் வெலைத்தொல் பெருங்காவற் பல பழந்திவும் செருவிற்சினவி இருபத்தொரு காலரசு களைகட்ட பரசுராமன் –

4.மெவருஞ் சாந்திமத் தீவர(ண்) கருதி இருத்(தியசெ)ம் பொற்றிருத்தகு முடியும் ப(ய)ங்கொடு பழி மிக மு(யங்கி)யில் முதுகிட்டொளித்த சயசிங்கன் அளப்பரும் புகழொடும் பி(டி)யல் இரட்டபாடி எழரை இலக்கமும் நவநெதிக்குலப் பெருமலைக –

5.ளும் விக்கிரம வீரர் சக்கரக்கொட்டமும் முதிர்பட வல்லை மதுர மண்டலமும் காமிடை வளநாம்மணை(க்)கொணையும் வெஞ்சின வீரர் பஞ்சப் பள்ளியும் பாசடைப் பழ(ன) மாசுணி தேசமும் அயர்வில் வண்கீர்த்தி ஆதிநகரவையில்

6.சந்திரன் றொல்குலத் திந்திரதனை விளை அமர்களத்துக் கிளையடும் பிடித்துப் பல(தன)த்தொடு நிறைகு(ல) தனக் குவையும் கிட்டருஞ் செறிமி(ளை) ஒட்ட விஷையமும் பூசுரர் செர்நற் கோசலை நாடும் தந்மபால (னை) வெம்மு(னை) யழித்து வண்டுறை சொலைத்த(ண்)ட –

7.புத்தியும் இரணசூரனை முரணுகத் தாக்கி(த்) திக்கணை கீர்த்தி தக்கண(லாடமும் கோவிந்த சத்தன் மாவிழிந் தொட(த்) தங்காத சாரல் வங்காளத் தேசமும் தொடு கழற் சங்கு வொட்ட(ல்) மயிபாலனை வெஞ்சமர் விளாகத் தஞ்சுவித்தரு(ளி) யண்டிறல் யானையும் ª(ப)ண்டி

இரண்டாம் அடுக்கு

8.ர் பண்டாரமும் (நித்தில நெடுங்கடலுடுத்திர)லாடமும் வெறிமலர்த்(தீ)ர்த்தத்தெ (றிபு)னல் கங்கையும் அலைகடல் நடுவுட் பலகலஞ் செலுத்திச் சங்கிராம விசை யத்துங்க வந்மனாகிய கடாரத்தரசனை வாகயம் பொரு

9.கடல் கும்பக் கரியடு மகப்படுத் துரிமையில் பிறக்கிய பெருனெதிப் பெருக்கமும் ஆர்த்தவனகனகர் (ª)பார்த்தொழில் வாசலில் விச்சாதித் தொரணமும் மொய்த்தொளிர் புனைமணிப்புதவமும் கனமணிக் கதவமும் நிறைசீர் விசையமும துறை –

10.நிர்ப் பண்ணையும் வன்மலையூரெயிற் றொன் மலையூரும் ஆழ்கடலகழ்சூழ் மாயிருடிங்கமும் கலங்காவல் (வி)னை இலங்கா சொகமும் காப்புறு நிறைபுனல் மாப்பப் பாளமும் காவலம் புரிசை மெவிலிம் பங்கமும் விளைப் பந்தூ றுடை வளைப்ப –

11.ந்நூ(று)ம் கலைத்தக் கொர்புகழ் தலைத்தக் கொலமும் திதாமால்வினை மதமாலிங்கமும் கலாமுதிர்க் கடுந்திறல் இலாமுரி தேசமும் தெனக்க வார்பொழில் மானக்கவாரமும் தொடுகடல் காவல் கடுமுரட் கடாரமும்(ம)£-

12.(ப்பொ)ரு தண்டாற்கொண்ட கொப்பாகெஸரி வந்மரான உடையார் ஸ்ரீ ராஜேந்திர சொழதெவர்க்கு யாண்டு யக(19) ஆவது நாள் இருநூற்று நாற்பத்திரண்டினால் உடையார் ஸ்ரீ ராஜேந்திரசொழ தேவர் கங்கைகொண்ட சோழபுர-

13.(த்துக்) கோயிலினுள்ளால் முடிகொண்ட சோழன் திருமாளிகையில் வடபக்கத்து தேவாரத்துச் சுற்றுக் கல்லூரியில் தாநஞ்செய் தருள இருந்து உடையார் ஸ்ரீராஜ ராஜ ஈஸ்வரமுடையார் கோயிலில் ஆசர்ய போகம் நம் உடையார்

14.சர்வ சிவபண்டித (சைய்)வ்வாசார்யாருக்கும் இவ்வுடையார் சிஷ்யரும் பிற சிஷ்யரும் ஆய் ஆர்யதேசத்தும் மத்ய தேசத்துத்தான் ஹெளட தேசத்துத்தான் உள்ளாராய் யோக்யராயிருப்பார்க்கெ ஆட்டாண்டு தொறும் இத்தேவர் கோயிலில் ஆடவல்லா(னெ)-

15.(ன்னு)ம் மரக்காலால் உள்ளூர்ப் பண்டாரத்தே நிறைச் சளவாக இரண்டாயிரக் கலநெல்லு ஆட்டாண்டுதொறும் சந்திராத்தித்தவல் பெறத் திருவாய் மொழிந்தருளத் திருமந்திர ஓலை செம்பியன் விழுப்பரையன் எழுத்தினா-

16.(ல்) த் திருவாய் கேழ்விப்படி கல்லில் வெட்டித்து.இது இவ்வம்சத்துள்ள சைய்வ்வ ஆசாரியர்களே இத்தன்மம் (ர)க்ஷிக்க.

கல்வெட்டின் அரிய சொற்களுக்கு விளக்கம்

அலைகடல் நடுவுள் பல கலஞ்செலுத்தி- சோழர்கள் கப்பல் படைகளை வைத்திருந்தனர் என்பதை உறுதிப்படுத்தும் தொடர்.

சங்கிராமம்-போர்

விசயோத்துங்கன்-(விசய+ உத்துங்கன்) வெற்றியில் மிக மேம்பபட்டவன்

கடாரம்- இது மலேசியாத் தீபகற்பத்திலுள்ள மேல் கரையில் உள்ள ஊர்.இதுபொழுது “கெடா” என வழங்கப்படுகின்றது.பட்டினப்பாலையில் “காழகத்து ஆக்கம்” காழகம் எனப்படுகின்றது. பெரிய லெய்டன் செப்பேட்டில் கடாகம் எனப்படுகின்றது.

புதவமும் கதவமும்- இரட்டைக் கதவுகளையும்(புதவக் கதவம் புடைத்தனன் ஓருநாள் என்பது சிலப்பதிகாரம்)

விசையம்-சுமத்திராத் தீவிலுள்ள பாலம்பாங் என்று வழங்கப்பெறும் தேயம்

பண்ணை- சுமத்திராத் தீவில் கீழ்க்கரையில் உள்ள ஊர்

மாயிருடிங்கம்-மலேயாவில் நடுப்பகுதியில் உள்ளது.சீனதேசத்து நூல்களில் இது ஜிலோடிங் எனப்படுகின்றது.

இலங்காசோகம்-மலேசியாத் தீபகற்பத்திலுள்ள கெடாவிற்குத் தெற்கில் உள்ள ஊர்.

பப்பாளம்- இது கிரா பூசந்திக்குத் தெற்கே மலேசியாவின் மேற்குப்புறத்தே உள்ளது.

தக்கோலம்-இது கிரா பூசந்திக்குத் தெற்கே மலேசியாத் தீபாகற்பத்திற்கு மேற்கே உள்ளது.கிரேக்க ஆசிரியர் தாலமி இதனைத் தகோலா என்று குறிப்பிடுவார்.

மதமாலிங்கம்- மலேசியாத் தீபகற்பத்தின் கீழ்க்கரையில் குவாண்டன் நதியின் முகத்துவாரத்தில் உள்ள தெமிலிங் என்னும் இடமாகும்.சீன நூல்களில் இது தன்மாலிங் எனப்படுகின்றது.

இலமுரிதேசம்-சுமத்திரா தீவில் வடபகுதியில் உள்ளது.மார்க்கபோலா இதை லன்பரி என்பர் சீனர்கள் லான்வூலி என்பர்

நக்கவாரம்-நிக்கோபார்த் தீவுகள்.மணிமேகலை குறிப்பிடும் நாகநாடு இதுவாகும்.

நன்றி
நூல்: முப்பது கல்வெட்டுகள்
நூலாசிரியர்: வித்துவான் வை.சுந்தரேச வாண்டையார்.
முனைவர் மு.இளங்கோவன்..

….

This entry was posted in சோழன் and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *