இராஜராஜ சோழனும் கடல்வழித் திறமையும்


இராஜராஜனின் ஒரு மெய்க்கீர்த்தி இவ்வாறு கூறுகிறது:

ஸ்வஸ்திஸ்ரீ திருமகள் போல பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக் களமறூத்தருளி வேங்கை நாடும் கங்கைபாடியும் நுளம்பபாடியும் தடிகை பாடியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் திண்டிறல் வென்றி தண்டால் கொண்டதன் பொழில் வளர் ஊழியுள் எல்லா யாண்டிலும் தொழுதகை விளங்கும் யாண்டே செழிஞரை தேசுகொள் ஸ்ரீ்கோவிராஜராஜகேசரி பந்மரான ஸ்ரீராஜராஜ தேவர்

இதன் மூலம் இராஜராஜனின் போர்த்திறன் வெளிப்படுகிறது. காந்தளூர் என்னும் துறைமுகத்தில் சேரர்களின் (பாஸ்கர் ரவி வர்மன் திருவடி) கப்பல்களை அழித்ததாகக் குறிப்பிடும் இவ்வரிகளிலிருந்து, சோழ கப்பற்படை நன்கே இருந்தது எனக் கொள்ள்லாம்.

அதே போல ஸ்ரீலங்காவின் மீது 993(கி.பி)-ஆம் ஆண்டில் படையெடுத்து அதன் வடபுறத்தினைக் கைப்பற்றி அந்த இடத்திற்கு ‘மும்முடி சோழ மண்டலம்’ எனப் பெயரிட்டதும், இராஜராஜனின் கடற்படைத் திறனைக் காட்டுகிறது. தனது ஆட்சிக் காலத்திலேயே ஸ்ரீலங்கவை முழுவதுமாக வென்று, பின்னர் வெங்கி நாட்டையும் தனதாக்கிக் கொண்டு அதைச் சக்திவர்மனுக்கு ஆட்சி புரிய அளித்தான். கடற்படையில் சிறந்திருந்த போதும், இராஜராஜன், அப்படையை எந்நாட்டையும் அழிக்கப் பயன்படுத்தவில்லை.
சைலேந்திரர்களுடன் அவனது உறவு குறிப்பிடப்படவேண்டியது. ஏனெனில் சரித்திரரீதியாக நாம் அறிந்து கொள்வதெல்லாம் சைலேந்திரர்கள் குறிப்புகள் மூலமே! சுமத்ராவிலும் இன்றைய மலேசியாவிலுமிருந்து தான் நமக்கு அதிகமான சான்றுகள் கிடைக்கின்றன. அவற்றிலிருந்தே, அதாவது, அவை அங்கு கிடைப்பதிலிருந்தே, இராஜராஜனின் பெருமை அறியப்படலாம்.

அங்கு கிடைக்கும் பல சான்றுகளினின்றும் சைலேந்திர நாட்டு சூளாமணிவர்மன் அவனது மகனான விஜயோத்துங்கவர்மன் (1003-1005) ஆட்சியிலும் இராஜராஜனின் உறவு அந்நாட்டினுடன் மிக நன்றாகவே இருந்திருக்கிற தென்பதைத் தெரிந்து கொள்கிறோம்.

ராஜேந்திரன் காலத்தில் தான் கடற்படை ஆக்ரமிப்புக்குப் பயன் படுத்தப்பட்டது. இராஜராஜனின் கப்பல்கள் மாலத்தீவுக்குச் சென்று அங்கு 10,000 தீவுகளைக் கைப்பற்றியதாகவும் தெரிகிறது.
அதே போல சீன நாட்டிலிருந்தும் பல சான்றுகள் நமக்குக் கிடைத்துள்ளன.
இப்போது அதற்கான சான்றுகள் ஒன்றும் இல்லையெனினும், நாகபட்டினம்தான் சோழர்களின் முக்கியமான துறைமுகமாக இருந்தது. அப்போதைய சோழ நாட்டு மாலுமிகள் கடல்வழிப் பயணத்தை நன்கே அறிந்து வைத்திருந்தனர். ஆருத்ரா தரிசனம் முடிந்தவுடன்தான் அவர்களது கடல்வழிப் பயணம் ஆரம்பமாகும்.

தை மாத ஆரம்பத்தில் வடக்கிலிருந்து வங்காள விரிகுடாவில் கடல் நீரில் தெற்கு நோக்கி ஓட்டம் இருக்கும் அதைப் பயன்படுத்திக் கொண்டு, (அந்த நீரோட்டத்திற்கு வடக்கன் என்று பெயர்) கப்பல்கள் வெகு சுலபமாகத் தெற்கு நோக்கிப் பயணிக்கும். (ஆகையால் தான் ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற பழமொழி உண்டானதாக நான் நம்புகிறேன்.)

அப்படிச் செல்லும் கப்பல்கள் ஸ்ரீலங்காவின் கிழக்குக் கரையிலுள்ள அக்கரைபட்டினம் என்ற ஊரை அடையும். அப்போது காற்று கிழக்கு நோக்கி வீசும். அதைப் பயன்படுத்திக் கொண்டு கப்பல்கள் கிழக்குத் தீவுகளை அடையும். இதை நன்கு அறிந்திருந்தவர்கள் இராஜராஜ சோழன் காலத்து மாலுமிகள். இராஜேந்திரன் இந்தத் திறமையை சீர் செய்து இன்னும் கப்பல்கள் செல்வதைப் பெருக்கினான்.

ஆனால் அவ்வழிகளை அமைத்துக் கொடுத்தது இராஜராஜன்தான். அதற்கு முன்னர் கலிங்கர்களும், குஜராத்தியர்களும் அறிந்திருந்தனர்! இருந்தாலும் அதை முறையாகப் பயன்படுத்தியது இராஜராஜன்தான் என்றால் மிகையாகாது!
தவிரவும் இராஜராஜன் காலத்தில்தான், வணிகக் குழுக்கள் கீழை நாடுகளுக்குச் சென்று தமது வணிகக் கூடங்களை நிறுவியது. அப்போது தான், பல நாடுகளினின்று வந்த வணிகர்களும்கூடி வணிகத்தை முழுமையாக பன்னாட்டு நிறுவனமாக மாற்றினர். ஆகையால், வணிகத்தை நாடு கடந்து சிறப்பாக நடப்பதற்கு வழிவகுத்துக் கொடுத்ததில் இராஜராஜனின் பங்கு அதிகம் இருந்தது எனக் கொள்ளலாம்.
முக்கியமாக, நாடு கடந்து அச்சமின்றி வெளிநாடுகளுக்குச் சென்று அங்கு நம் வணிகர்கள் தமது வணிகத்தை நிலைநிறுத்தினது மட்டுமன்றி, அரசு மாறினாலும் அதனால் அவர்களுக்கு ஒருவிதக் குறையுமின்றி வணிகம் நடத்துவதற்கு உண்டான உபாயங்களையும் செய்து கொடுத்த மன்னன் இராஜராஜன் என்று கூறலாம்!

நன்றி :மாய தேவர் …

This entry was posted in சோழன் and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *