இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் கி.பி. 140 முதல் 150 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். நக்கீரர் இம்மன்னனைப் புகழ்ந்து
“நாஞ்சில் நாடான், அன்னக் கொடியோன், சோழன், சேரன் ஆகிய நால்வர்க்கும் கூற்றுவன் நீ! இகழுநரை அடுவதால் முருகனை ஒத்தாய்! நினக்கு ஒப்பார் இல்லை! இரவலர்க்கு அருங்கலம் அருகாது ஈவாய்! யவனர் நன்கலம் தந்த தண்கமல்தேறல் நாளும் ஒண்தொடி மகளிர் மடுப்பர்.ஒங்குவாள் மாறனே! வெங்கதிர்ச் செல்வன் போலவும், தண்கதிர் மதியம் போலவும் நின்று நிலைப்பாய் உலகமோடு!” எனப் புறம்-56 இல் பாடியுள்ளார் நக்கீரர்.
மதுரை மருதன் இளநாகனார் இம்மன்னனைப் புகழ்ந்து
“நெடுந்தகை! நீ நீடுவாழிய! ஞாயிறு அன்ன வெந்திறல் ஆண்லையும்,திங்கள் அன்ன தண் பெருஞ்சாயலும்,வானத்தன்ன வண்மையும் உடையவனாக உள்ளாய்! கறை மிடற்று அண்ணல் பிறைநுதல் பெருமான் போல வேந்து மேம்பட்ட பூந்தார் மாறனே! கொல்களிறும்,கவிமாவும்,கொடித்தேரும்,புகல் மறவரும் என நான்குடன் மாண்ட சிறப்புடையோய்! அறநெறிமுதற்றே அரசின் கொற்றம்” என புறம்-55 இல் பாடியுள்ளார் மருதன் இளநாகனார்.