இத்தலத்தின் சிறப்புகள் பற்றி உத்தமசோழபுரம் கரபுரநாதர் புராணம் என்னும் தல புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
அந்த புராணத்தில், “இங்கு சூரியன், சந்திரன், தேவர், ¬முனிவர் ஆகியோர் நாளும் வணங்கி மகிழ்வர். வரங்களையெல்லாம் கொடுக்கும் தெய்வம் எதிரில் தோன்ற, அதை வணங்காமல் வேறு தலத்தில் சென்று அடையக்கூடிய நற்பயன்களையெல்லாம் இத்தலத்திலேயே பெற்று, இம்மையிலும் மறுமையிலும் பயன் பெறலாம்,’ என்று கூறப்பட்டுள்ளது.
உத்தமசோழபுரம் கரபுரநாதர் இலக்கியங்களிலும் இடம் பெற்றுள்ளார். திருஞானசம்பந்தர் இயற்றிய தேவாரம், திருமூலர் எழுதிய திருமந்திரம், அருணகிரி நாதர் பாடிய திருப்புகழ் போன்றவற்றிலும் கரபுநாதர் பற்றிய செய்யுள் இடம் பெற்றுள்ளது.
சிறப்பு :
தொடர்ந்து தமிழக அரசால் ராஜகோபுரம் கட்டப்பட்டு கடந்த “92ம் ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இந்த கோயில் முகப்பு வாயிலில் சேர, சோழ, பாண்டிய மன்னர் சிலை வைக்கப்பட்டுள்ளது. கோயில் அருகே ஒளவை சிலை நிறுவப்பட்டுள்ளது. இது தமிழகத்திலேயே பெரிய ஒளவையார் சிலை ஆகும். இந்த கோயிலின் பழமையும், வரலாற்று சிறப்பும், இலக்கியங்களில் பெற்ற இடம் பெருமைக்கு பெருமை சேர்ப்பதாய் அமைந்துள்ளன.
கொல்லிமலையை ஆண்ட பாரி மன்னனின் மக்கள் அங்கவை, சங்கவை ஆகிய இருவரையும் ஒளவையார் கரபுரநாதர் கோயிலுக்கு அழைத்து வந்து, பகையாளியாய் இருக்கும் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் பகையை நீக்கி, பாரியின் மக்களுக்கு திருமணம் நடத்தி வைத்ததாக ஐதீகம் உண்டு.
எனவே தான் சேர, சோழ, பாண்டியனுக்கு கோயிலின் அர்த்த மண்டப கல்தூணில் வில், புலி, மீன் கொடி பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த ஈஸ்வரன் தலத்திற்கு அருகிலேயே ஓடும் திருமணிமுத்தாற்றில் பாண்டிய மன்னன் முத்துக்கள் எடுத்து சென்று, மதுரை மீனாட்சிக்கு மாலையாக போட்டதாகவும், அந்த முத்துமாலை இன்னும் மீனாட்சி கழுத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
குணசீலன் என்ற சிறுவன் கரபுரநாதர் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தான். லிங்கம் உயரமாக இருந்ததால் சிறுவனால் மாலை போட முடியவில்லை. இதனால் சிறுவன் கதறி அழுது இறைவனை வேண்டுகிறான். அப்போது கரபுரநாதர் எழுந்தருளி, சிறுவன் உயரத்திற்கேற்றவாறு லிங்கத்தை சாய்த்து கொடுத்தார்.
அதனால் தான் இன்றும் இந்த கோயிலில் உள்ள லிங்கம் ஒரு புறம் சாய்ந்தவாறு உள்ளது.
முகவரி : அருள்மிகு கரபுரநாதர் திருக்கோயில், உத்தமசோழபுரம் – சேலம் மாவட்டம்.