வீராயி என்பவள் பாண்டிய நாட்டுப் பெண். அதனால், அவள் பாண்டிய வீராயி என்னும் பெயர் பெற்றாள். அவள் பாண்டிய நாட்டு வீரர் குடியில் பிறந்தவள். அவளுடைய தந்தை ஒரு பெரிய வீரன். அம்மாவீரனுக்கு, வீராயி என்னும் அம்மகளும், வீரப்பன் என்னும் மகனும் இருந்தனர். அவன் தன் மகளையும், மகனையும் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தான்; இருவரையும் நன்கு படிப்பித்தான்.
வீரப்பன், பாண்டியர் படையில் வீரனாகச் சேர்ந்தான். வீராயி படிப்பு முடிந்த பின்னர், வீரண்ணன் என்பவனை மணம் புரிந்து கொண்டாள். வீரண்ணனும், ஒரு சிறந்த வீரன்.
அந்நாளில் ஒரு சமயம் சேர மன்னன், பாண்டிய நாட்டைத் தாக்கினான். அப்போது ஒரு பெரும்போர் நடைபெற்றது. அப்போரில், வீராயியின் தந்தை போரிட்டான்; பகை வீரர்களில் பலரைக் கொன்று, தன் வீரத்தை விளக்கமாகக் காட்டினான்.
பாண்டிய மன்னனின் பாராட்டையும் பெற்றான். ஆனால், போரின் முடிவில், பகைவன் வாளுக்கு இரையாகி மடிந்து விட்டான்.
மற்றொரு சமயம் சோழ மன்னன், பாண்டியனைத் தாக்கினான். அப்போது கடும் போர் நடந்தது. பாண்டிய வீரர்கள் பகைவரைக் கடுமையாகத் தாக்கினர். அவ்வாறு தாக்கிய வீரர்களுள், வீராயியின் அண்ணனாகிய வீரப்பனும் ஒருவன்.
வீரப்பன் சிறந்த வில் வீரன்; விஷம் தோய்த்த அம்புகளை ஏவிப் பலரைக் கொன்றான். பாண்டிய மன்னன் அவனுடைய வீரத்தைக் கண்டு வியந்து பாராட்டினான். ஆனால், பாவம்! வீரப்பன் நெடுநேரம் போரிட்டுக் களைத்தான். அப்போது பகைவர் விட்ட அம்புகள், அவனது உடம்பைத் துளைத்தன. அவன் களத்தில் சாய்ந்தான்; சாய்ந்து மாண்டான்.
அதன் பின்னர் ஒரு முறை, சிற்றரசர் சிலர் சேர்ந்து பாண்டியனை எதிர்த்தனர். அப்போதும் கடும் போர் நடைபெற்றது. பாண்டிய வீரர்கள் பகைவரைக் கடுமையாகத் தாக்கினர். அப்பாண்டிய வீரர்களுள், வீரண்ணனும் ஒருவன். வீரண்ணன் கடுமையாகப் போர் புரிந்து, கடைசியில் உயிர் துறந்தான்.
வீராயி தன் கணவனது வீரத்தைப் பாராட்டி மகிழ்ந்தாள்.
சில ஆண்டுகள் சென்றன.
சேர மன்னன் மீண்டும் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தான். பாண்டியப் படை வீரர்கள் கொதித்தெழுந்தனர். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒரு மகன் போருக்குப் புறப்பட்டான். எல்லாரும், “”சேரனை முறியடிப்போம்!” என்று வீரமுழக்கம் செய்தனர். படைவீரர்கள் தெருத் தெருவாக ஊர்வலம் வந்தனர்; வீர முழக்கம் செய்தனர்.
வீராயியின் வீட்டில் போர் புரியத்தக்க இளைஞர் இல்லை. வீட்டில் அவளும், அவளது சிறுமகனுமே இருந்தனர். அச்சிறுவனே அவளுக்கு ஓர் ஆதரவாக இருந்தான். அவ்வாறு இருந்தும், அவள் அச்சிறு மகனைப் போருக்கு அனுப்பத் துணிந்தாள். மகனை அழைத்தாள்; அவனது தலையில் எண்ணெய் தடவிச் சீவினாள். அவன் கையில் வேலைக் கொடுத்தாள். அவனைப் பார்த்து,
“”மகனே! நீ எனக்கு ஒரே பிள்ளை! நமது நாட்டைப் பகைவன் தாக்குகின்றான்.
இந்த நேரத்தில் நீ இங்கு இருப்பதைவிடப் போர்க்களம் செல்வதே சிறந்தது. இந்த வேலைக் கொண்டு உன்னால் முடிந்த அளவு போர் புரிவாயாக!” என்று சொல்லி, அவனை வாழ்த்தி வழியனுப்பினாள்.
அச்சிறுவன் வீரர் பரம்பரையில் வந்தவன் அல்லவா? அவன் துள்ளிக் குதித்து ஓடினான்; தன்னால் முடிந்தவரையில் போரிட்டான். முடிவில் மார்பில் காயம்பட்டு மடிந்தான். அவனது வீரத்தைக் கேட்ட வீராயி, மகிழ்ச்சிக் கண்ணீர் விட்டாள். இது அந்த காலத்தில் நாட்டுப் பற்றுடன் வாழ்ந்த ஒரு வீரப் பரம்பரையினரின் கதை.
***
thanks :
…
One Response to ஒரு வீரப் பரம்பரையினரின் கதை !