சமீபத்தில் படிக்க நேர்ந்த ஒரு விஷயம், சிந்தனையில் இருந்து விலக மறுத்தது. கட்டபொம்மன் என்று சொல்லும் பொழுதே நினைவுக்கு வருவது சிவாஜி கணேசன் நடித்த அந்த படமும் அதன் வசனங்களும், ஆனால் சினிமாவில் வருவதெல்லாம் நிஜம் என்று நம்பும் பழக்கம் விட்டு பல ஆண்டுகள் ஆகிறது.
ஒரு சினிமாவால் வரலாற்றை எப்படியெல்லாம் திசைதிருப்ப முடியும் என்பது வியப்பளிக்கிறது. கல்கியின் பொன்னியின் செல்வன் போல், சோழகுலத்தின் வரலாற்றை தப்பும் தவறுமாக, திரித்ததைப்போல். சினிமாக்காரர்களால் திரிக்கப்பட்ட கதைகளே அதிகம், பாரதி படம் பார்த்து வருத்தப்பட்ட உண்மையான் பாரதி விசுவாசிகளை பார்த்துள்ளேன். அது போல்தான் இதுவும்.
ஆனால் பாரதியையும், கட்டபொம்மனையும், தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார்களேத்தவிர வேறு எதையும் செய்துவிடவில்லை இவர்கள். கல்கி சோழர்களை தமிழ் கூறும் நல்லுலகுக்கு அறிமுகம் செய்து வைத்ததைப் போல். நான் படித்த அந்த கட்டுரை உங்கள் பார்வைக்கு,
நன்றி, ஜே ராஜா முகம்மது, அவருடைய புதுக்கோட்டை மாவட்ட வரலாறு.
————————-
கப்பத்தொகை 16 ஆயிரத்து 550, மே 31, 1798 வரை பாக்கி இருப்பதாகவும், அத்தொகையை உடனடியாக கட்டும்படியும் மதுரை கலெக்டராக இருந்த ஜாக்ஸன், கட்டபொம்மனுக்கு எச்சரிக்கைக் கடிதம் அனுப்பி வைத்தார்.
ஆனால், குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் பாக்கியை செலுத்தவில்லை கட்டபொம்மன். இதனால், பாஞ்சாலக்குறிச்சியின் மீது படையெடுக்க விரும்பினார் ஜாக்ஸன். அப்போது, ஆங்கிலேயே படை, திப்பு சுல்தானுடன் போரில் ஈடுபட்டிருந்ததால், இதற்கு உடன்படவில்லை. மாறாக கட்டப்பொம்மனை, ராமநாதபுரத்துக்கு அழைத்துப் பேசுமாறு பணித்தது.
இதன்படி தன்னை ராமநாதபுரத்தில் ஆக.18,1798ல் சந்திக்கும்படி கட்டபொம்மனுக்கு கடிதம் எழுதினார் ஜாக்சன். இந்தக் கட்டளையை அனுப்பிவிட்டு, திருநெல்வேலி பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள, ராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்டார் ஜாக்சன்.
கட்டபொம்மன் தனது பரிவாரங்களுடன், ஜாக்ஸனை சந்திக்கச் சென்றார். ஆக.27, 1798ல் குற்றாலத்தை ஜாக்சன் அடைந்தபோது, கட்டப் பொம்மனும் அவரது பரிவாரங்களும் ஜாக்சனுக்காக காத்திருந்தனர். கட்டபொம்மனை அங்கு சந்திக்க மறுத்துவிட்டார் ஜாக்சன்.
பின், சொக்கம்பட்டி, சிவகிரி, ஸ்ரீவில்லிபுத்துõர் போன்ற இடங்களிலும் சந்திக்க முயன்று, தோற்று, பயணம் தொடங்கி 23 நாள் கழித்து, 400 மைல் அலைந்து, செப்.19, 1798ல் ராமநாதபுரத்தில் ஜாக்சனை சந்தித்தார் கட்டபொம்மன்.
கிஸ்தி கணக்கை சரி பார்த்தபோது, ரூ.5,000 (1080 பசோடா)மட்டுமே பாக்கி இருப்பதை கண்டுகொண்டார் ஜாக்ஸன். ஆகவே, மே 31,1798க்கும் செப். 31, 1798க்கும் இடைபட்ட மூன்று மாத காலத்தில் கட்டபொம்மன் ரூ.11 ஆயிரம் கிஸ்தி பண பாக்கியை கட்டிவிட்டதாக அறிகிறோம்.
அகந்தை கொண்ட ஜாக்ஸன், மேற்படி சந்திப்பின் போது கட்டபொம்மனையும், அவரது அமைச்சர்களையும் மூன்று மணிநேரம் நிற்கவைத்தே விசாரணை செய்தார். சந்திப்பின் இறுதியில் ராமநாதபுரம் கோட்டையிலேயே அவர்கள் தங்கியிருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து ஏற்பட்ட கைகலப்பில் கட்டபொம்மன் தப்பிக்கும் முயற்சியில், லெப்டினன்ட் கிளார்க் என்பவர் கொல்லப்பட்டார். கட்டபொம்மனின் அமைச்சர் சிவசுப்ரமணிய பிள்ளை கைது செய்யப்படார். கட்டபொம்மன் தப்பித்துக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின் கட்டபொம்மன் சென்னை கவர்னருக்கு மேல் முறையீட்டுக் கடிதம் ஒன்று அனுப்பினார்.
கவர்னருக்கு அனுப்பிய கடிதத்தில், தான் கலெக்டரின் கட்டளைக்கு மதிப்பளித்து அவரைச் சந்திக்க, பாக்கி இருந்த முழு கிஸ்தி பணத்தையும், ராமநாதபுரத்துக்கு எடுத்துச் சென்றதாகவும், அங்கு ஏற்பட்ட கை கலப்பிற்கு ஜாக்சனின் நடவடிக்கைகளே காரணம் எனவும் குறிப்பிட்டிருந்தார். (கட்டபொம்மன் படத்தில் சிவாஜி பேசும் வசனங்கள் எல்லாம் “டுபாக்கூர்’தானா?)
கடிதத்தைக் கண்ட கவர்னர் கிளைவ், தற்காலிகமாக ஜாக்ஸனை பதவி நீக்கம் செய்தும், சிவசுப்ரமணியப் பிள்ளையை விடுதலை செய்தும் ஆணை பிறப்பித்தார். அத்துடன், ராமநாதபுரம் நிகழ்ச்சிகளை குறித்து விசாரணை நடத்த வில்லியம் பிரவுன், வில்லியம் ஆரம், ஜான் காசா மேஜர் ஆகியோர் அடங்கிய ஒரு குழுவையும் நியமித்தார்.
இக்குழுவின் விசாரணையில் (டிச.15, 1798) ராமநாதபுரத்தில், கட்டபொம்மனை, ஜாக்சன் நடத்திய விதம் ஏளனத்திற்குரியது என்று தெரியவந்தது.
விசாரணைக் குழுவின் முடிவு ஏற்கப்பட்டு, பதவியில் இருந்து ஜாக்ஸன் நீக்கப்பட்டார். அவரது இடத்தில் லுசிங்டன் கலெக்டராக நியமிக்கப்பட்டார்.
thanks :மோகன்
…..
One Response to கட்டபொம்முவும் உண்மையும்