சித்தன்னவாசலுக்குச் சென்றிருந்த பொழுது அங்கிருந்த தொல்பொருள்துறை ஊழியர் சொல்லித்தான் குடுமியான்மலை பற்றித் தெரிந்துகொண்டோம். நானும் ஓட்டுநர் நண்பரும் குடுமியான்மலைக்குச் சென்று பார்த்த பின் பார்க்காமல் வந்திருந்தால் மிகச்சிறந்த கோயில் ஒன்றை பார்க்காமல் விட்டிருப்போம் என்றுதான் நினைத்தேன்.(சித்தன்னவாசல் பற்றி இன்னொரு தரம் எழுதுறேன்.)
கி.பி 10ம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்களில் இவ்வூர் திருநலக்குன்றம் என்றும் 14ம் நூற்றாண்டு கல்வெட்டில் சிகாநல்லூர் என்றும் கடவுளின் பெயர் குடுமியார் என்றும் 17 – 18ம் நூற்றாண்டு கல்வெட்டில் குடுமியான்மலை என்றும் குறிப்பிடப்படுகிறது. திருநலக்குன்றம் என்றால் புனிதமான மங்களமான மலை என்றும் பொருள். நல என்னும் தமிழ்ச் சொல்லுக்கு ‘நள’ என சமஸ்கிருத வடிவம் கொடுக்கப்பட்டு இக்கோயிலை புராண கதாநாயகன் நளனுடன் தொடர்புபடித்திக் கூறும் ஒரு கர்ண பரம்பரைக் கதையும் உண்டு. 14ம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்கள், கோயில் மூலவரை “தென்கோநாட்டு சிகாநல்லூர் குடுமியார்” எனக் குறிப்பிடுகின்றன. சில கல்வெட்டுக்களில் குடுமிநாதர் என்றும் குறிப்பிடப்படுகிறது. ஆனால் சிகாநல்லூர் என்பது “சிகரநல்லூர்” என்றே இருந்திருக்க வேண்டும். சிகரம் என்பது சிகரமுயர்ந்த மலை எனவாகும். நெடிதுயர்ந்த குன்று – மலை – ஒன்று இங்குள்ளதை நாம் இன்றும் காணமுடியும். ஆகவே குடுமியார் என்பதற்கு சிகரமுயர்ந்த நெடிய எனப் பொருள் கொள்ளலாம். குடுமி என்றால் தலைமுடிக் கற்றை என்று மட்டும் பொருளல்ல மலையுச்சி, உயர்ந்தவர் என்றெல்லாம் பொருள்படும். உதாரணத்திற்கு பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி கண்ணப்ப நாயனார் காளஹஸ்தியில் வழிபட்ட இறைவனின் பெயர் குடுமித்தேவர்.
குடுமியார் என்னும் தமிழ்ச்சொல் காலப்போக்கில் சிகாநாதசாமி என சமஸ்கிருத சொல்லாக மருவிவிட்டது. அதற்கேற்ப கி.பி. 17 – 18ம் நூற்றாண்டில் மேலே சொன்ன புராணக்கதையும் எழுந்திருக்க வேண்டும். தற்போது இவ்வூர் பெயர் குடுமியான் மலை என்றே நின்று நிலவ இறைவன் பெயர் மட்டும் சிகாநாதா என வழங்கப்படுகிறது. இதே போன்றே மயிலாடுதுறை, மாயூரம் எனவும், குரங்காடுதுறை கபிஸ்தலம் எனவும், திருமறைக்காடு வேதாரண்யம் எனவும், சிற்றம்பலம் சிதம்பரம் எனவும் சமஸ்கிருத வடிவம் பெற்று மருவி வழங்குதல் காண்க.
அக்காலத்தில் திருநலக்குன்றம் என்னும் இவ்வூர் குன்றைச் சுற்றிலும் வீடுகள் அமைந்திருந்தன. குன்றின் மீது ஏறிச் செல்லும் போது ஒரு இயற்கைக் குகையினைக் காண்கிறோம். இது கற்கால மனிதர்களின் இருப்பிடமாக இருந்திருக்கலாம். குன்றின் உச்சியில் குன்றுதோரோடும் குமரன்கோயில் உள்ளது. குன்றின் கிழக்குச் சரிவில் சிகாநாதசாமி கோயில் உள்ளது.
புதுக்கோட்டைப் பகுதியின் வரலாற்று நிகழ்ச்சிகள் குறித்த பல அறிய செய்திகளை குடுமியான்மலையிலுள்ள கல்வெட்டுகளின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இங்குள்ள மேலக்கோயில் என்னும் குகைக்கோயிலும் அதன் அருகிலுள்ள கர்நாடக சங்கீதம் பற்றிய கல்வெட்டும் பல்லவ மகேந்திரவர்ம பல்லவன் காலத்தைச் சேர்ந்தது எனக் கூறப்பட்டு வந்தது. ஆனால் சமீபகால ஆய்வுகளின்படி இவை மகேந்திரவர்ம பல்லவனுடன் தொடர்புடையவை அல்ல என்று தெரியவந்துள்ளது. சிகாநாதசாமியின் கருவறை கி.பி. 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கொள்ளலாம். அதன்பின் இப்பகுதியை ஆண்டுவந்த பல்லவராயர்கள் இக்கோயிலின் பராமரிப்பிற்கு கொடைகள் அளித்த செய்தியை இங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. பல்லவராயர்களைத் தொடர்ந்து தொண்டைமான்களின் ஆட்சியில் இக்கோயில் சிறப்புடன் விளங்கியது. காலத்தால் முற்பட்ட தொண்டைமான் மன்னர்கள் இந்தக் கோயிலிலேயே முடிசூட்டிக் கொண்டார்கள். ரகுநாதராயத் தொண்டைமான்(1686 – 1730) குகைக் கோயிலின் முன் உள்ள மண்டபத்தைக் கட்டியிருக்கிறார். 1730ல் ராஜா விஜயரகுநாத ராயத் தொண்டைமான் இக்கோயிலிலேயே முடிசூட்டிக் கொண்டார். அம்மன் கோயிலிலுள்ள 1872ம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டொன்று ராமச்சந்திர தொண்டைமான் காலத்தில் இக்கோயிலின் திருக்குடமுழுக்குத் திருவிழா நடைபெற்ற செய்தியைத் தெரிவிக்கிறது.
குன்றின் கிழக்குச் சரிவில் மேலக்கோயில் என்னும் குகைக்கோயில் குடைவிக்கப்பட்டுள்ளது. குன்றில் குடையப்பட்ட கருவறையும் அதற்கு முன்பு உள்ள தாழ்வாரப் பகுதியும் மலையிலேயே குடையப்பட்டதாகும் இதைத் தொடர்ந்துள்ள மண்டபம் 18ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும் குகையில் வாயிலில் இரண்டு துவாரபாலகர்கள் – வாயிற்காப்போர் – சிற்பங்கள் உள்ளன.
கம்பீரமான தோற்றத்துடன் காட்சியளிக்கும் இந்தச் சிற்பங்கள் கலையழகு மிக்கவை. கருவறையில் லிங்கம் ஒன்று காணப்படுகிறது. குகையின் தென்பகுதியில் மலையிலேயே செதுக்கப்பட்ட வலம்புரி விநாயகர் ஒன்று உள்ளது.
குகைக்கோயிலின் தென்பகுதியில் குன்றின் கிழக்குச் சரிவில் 13’x14′ அளவில் கர்நாடக சங்கீத விதிகள் குறித்த புகழ் வாய்த்த கல்வெட்டு உள்ளது. இதுபோன்ற கல்வெட்டு இந்தியாவில் இது ஒன்றேயாகும். மேலும் கி.பி. 4ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாரதரின் நாட்டிய சாஸ்திரம் என்ற நூலுக்கும் சாரங்கதேவரின் சங்கீதரத்னகாரா என்னும் நூலுக்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட சங்கீதம் பற்றிய குறிப்பு இதுவேயாகும். ருத்ராச்சார்யா என்பவரது சீடனாக விளங்கிய மன்னன் ஒருவனால் இக்கல்வெட்டு எடுக்கப்பட்டது என இக்கல்வெட்டே தெரிவிக்கிறது. ஆனால் இவர்கள் யாரென்று அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை இருப்பினும் எழுத்தமைதியைக் கொண்டு இது மகேந்திர பல்லவனது காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என டாக்டர் சி.மீனாட்சி போன்ற ஆய்வாளர்கள் கருதினர். ஆனால் இக்கருத்து சரியானதல்ல என்று தற்போது நிறுவப்பட்டுள்ளது.
‘சித்தம் நமஹ சிவாய’ என்று தொடங்கும் சங்கீதம் பற்றிய இந்தக் கல்வெட்டு ஏழு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. சங்கீர்த்தனஜதி என்னும் ராகம் பற்றிய விதிகளை இக்கல்வெட்டு விளக்குகிறது. இறுதியில் ருத்ராச்சார்யாரின் சீடனான பரம மகேஸ்வரன் என்னும் மன்னன் இந்த ராகங்களை பாடி வைத்தானென்றும் கண்டுள்ளது. மேலும் இக்கல்வெட்டிற்குப் பக்கத்திலேயே ‘பரிவாதினி’ என்று ஒரு கல்வெட்டு வாசகம் உள்ளது. இது ஒரு யாழ் வகையாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது கல்வெட்டில் காணப்படும் ராகங்கள் 7ம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவாரப் பண்களிலும் காணப்படுகிறது தற்காலத்தில் வழங்கிவரும் ராகங்களிலும் இதன் கூறுகளைக் காணமுடிகிறது. முதல் பகுதியில் – மத்யம் – சொல்லப்படும் ராகம் ஹரிகாம்போஜிக்கும், இரண்டாவது – சட்ஜக்ரம – கரஹரப்பிரியாவுக்கும், மூன்றாவது – ஷடப – நடனமாக்ரிய ராகத்திற்கும், நான்காவது – சதாரி – பந்துவாரளி ராகத்திற்கும், ஐந்தாவது – பஞ்சமம் – அஹிரி ராகத்திற்கும் ஆறாவது சங்கராபரண ராகத்திற்கும், ஏழாவது மெச்ச கல்யாணி ராகத்திற்கும் உரிய விதிகளைத் தெரிவிக்கின்றன. இதில் சொல்லப்பட்டிருக்கும் ராகங்கள் ‘பரிவாதினி’ என்னும் யாழில் வாசிக்க ஏற்றதாகும் எனவும் கருதப்படுகிறது. ஆகவே தான் பரிவாதினி என்னும் பெயர் இந்தக் கல்வெட்டிற்கு அருகில் காணப்படுவதாகவும் கருதப்படுகிறது.
மேலும் பரிவாதினி என்னும் வாசகம் திருமயம், திருக்கோகர்ணம், மலையக்கோயில் ஆகிய இடங்களில் உள்ள கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. திருமயம் விஷ்ணு குகைக் கோயிலின் பின்புறத்தில் உள்ள சிற்பத் தொகுதியிலும் கிள்ளுக்கோட்டை மகிஷாசுரமர்த்தினி கோயிலிலும் காணப்படும் வகை பரிவாதினியாக இருக்கலாம். “சுருதியும், சுவரங்களும் இணைந்த புதிய ராகங்கள் பிற்காலத்தில் அமைக்கப்பட்டதற்கும், யாழ் மறைந்து வீணை கண்டுபிடிக்கப்பட்டு, புதிய ராகங்கள் அதில் வாசிக்கலானதும் இந்தக் கல்வெட்டு, சங்கீத உலகத்திற்கு அளித்த பரிசுகளாகும். (டாக்டர் வி.பிரேமலதா – குடுமியான் மலை, சங்கீதக் கல்வெட்டு – கல்வெட்டுக் கருத்தரங்கு சென்னை 1966).
குகைக்கோயிலுக்கு மேலே உள்ள பாறையின் உச்சிப் பகுதியில் கிழக்கு நோக்கி அறுபத்து மூன்று நாயன்மார்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது பாராட்டத்தக்கதாகும்.
சிகாநாதர் – அகிலாண்டேஸ்வரி கோயில், சமஸ்தான காலத்தில் சீரும் சிறப்புடன் விளங்கியது. கிழக்கு நோக்கியிருக்கும் கோயிலில் கோபுரவாயிலைக் கடந்து உள்ளே சென்றதும் இருமருங்கிலும் ஆயிரங்கால் மண்டபத்தைக் காணலாம்.
இம்மண்டபத்தின் முகப்புத் தூண்களில் அனுமன், வாலி, சுக்ரீவன் போன்ற சிற்பங்கள் உள்ளன.
இதன் இருமருங்கிலும் பெரிய மண்டபங்கள் உள்ளன. இதையடுத்த ஆனைவெட்டு மண்டபத்தில் நுழைந்ததும் தமிழகத்து சிற்பக்கூடம் ஒன்றினுள் நுழைந்துவிட்ட உணர்வு நமக்கு ஏற்படும். இம்மண்டபத்தின் தூண்களில் கலையழகு மிக்கப்பல சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.
இச்சிற்பங்கள் காலத்தால் பிற்பட்டவை என்றாலும் (கி.பி. 16 – 17ம் நூற்றாண்டு) இக்காலச் சிற்பக் கலைத்திறனுக்கு எடுத்துக்காட்டாத் திகழ்பவையாகும். தன்னை அழிக்க முடியாத வரம் பெற்ற ஹிரண்யகசிபு, ஆணவம் தலைக்கேறி, சொல்லடா ஹரி என்ற கடவுள் எங்கே, என்று பிரகலாதனை துன்புறுத்த, நாராயணன் தூணிலும் உள்ளான் துரும்பிலும் உள்ளான் என பிரகலாதன் விடை பகர, அருகிலிருந்த தூணை எட்டி உதைத்தான் ஹிரண்யகசிபு. தூண் கொண்ட பயங்கர உருவம் தோன்றியது. ஹிரண்யனைப் பற்றிப் பிடித்து தனது கால்களுக்குக் குறுக்கே கிடத்தி ஆவனது உடலை இரு கூறாக பிளந்து அவனது குடலை மாலையாக அணிந்து கொண்டது. ஆணவம் வீழ்ந்தது! இதுவே நரசிம்ம அவதாரம். இக்கதையைச் சித்தரிக்கும் உயிரோட்டமுள்ள நரசிம்ம அவதாரக் காட்சியினை நரசிம்மரின் சிற்பத்தை ஒரு தூணில் காண்கிறோம்.
காதலுக்குக் கரும்பைத் தூதுவிட்டு விளையாடும் மன்மதன், அதற்கு மறுமொழியாக தனது வேல் விழியினை கனவுலகிற்கு அழைத்துச் செல்கின்றன. உலகத்து அழகையெல்லாம் தன்வயப்படுத்திக் கொண்டு காட்சியளிக்கும் மோகினி(மோகினி உருவில் விஷ்ணு).
வினை தீர்க்கும் விநாயகர், பக்தர்களைக் காக்க அண்டத்தையும் ஆட்டிப்படைக்கும் பலம் பெற்ற பத்துத் தலையுடன் கூடிய இராவணன்.
தீய சக்திகளை தூளாக்குவேன் என உணர்த்திக் கொண்டிருக்கும் அகோர வீரபத்திரர் – இன்னும் இதுபோன்ற பல சிற்பங்கள் நம்மை வியப்பிலாழ்த்துகின்றன. குதிரைப்படை வீரர்களும் காலாட்படை வீரர்களும் உபயோகீத்த ஆயுதங்களையும் குதிரைப்படை தாக்குதல்களைக் காலாட்படையினர் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதையும் இங்குள்ளச் சித்திரங்களில் காணலாம்.
இந்த மண்டபத்திலிருந்து கோயிலினுள் செல்லும் வாயில் பகுதிக்கு கங்கையரையன் குறடு(கங்கையரைய குறுநில மன்னர்களால் எடுக்கப்பட்டது) என்று பெயர். இதையடுத்து பாண்டியர் கால கலைப்பாணியில் எடுப்பிக்கப்பட்ட மண்டபம் உள்ளது. அடுத்துள்ளது மகா மண்டபம் கோயிலின் கருவறையும் விமானமும் முகமண்டபமும் முற்கால சோழர் காலத்தில் கட்டப்பட்டு, பின்பு பாண்டியர் காலத்திலும் விஜயநகர மன்னர்களின் காலத்திலும் புதுப்பிக்கப்பட்டு, தனது பழமையை இழந்துவிட்டது. குகைக்கோயிலில் காணப்படும் 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கல்வெட்டு திருமூலத்தானம் திருமேற்றளி என இரண்டு கோயில்களைக் குறிப்பிடுகின்றது. திருமூலத்தானம் என்பது இந்தச் சிவன் கோயிலையே குறிப்பதாக இருக்க வேண்டும். ஆகவே இக்கோயில் 8ம் நூற்றாண்டில் எடுப்பிக்கப்பட்டு பிற்காலத்தில் பலமுறை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டுமெனத் தெரிய வருகிறது. தற்போது நாம் காண்பது பிற்காலப் பாண்டியர் காலத்து கட்டுமானமாகும். கி.பி. 1215லிருந்து 1265 வரை பழைய மண்டபங்கள் புதுப்பிக்கப்பட்டன. புதிய மண்டபங்கள் கட்டும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. கோனாட்டில் இருந்த நாடு, நகரம், படைப்பற்று தனி நபர்கள் அனைவரும் இதற்காகக் கொடையளித்துள்ளனர். விமானம் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. கருவறையைச் சுற்றியுள்ள மண்டபங்களில் சப்த கன்னியர், லிங்கோத்பவர், ஜேஷ்டாதேவி, சுப்ரமணியர் போன்ற சிற்பங்கள் பலவற்றைக் காணலாம். நாயக்கர் மண்டபத்தில் காணப்படும் வியாகரபாதர்(மனித உருவம் புலியின் கால்கள்) பதஞ்சலி(மனித உடலும் பாம்பு கால்கள் போன்றும்) சிற்பங்கள் காணத்தக்கவையாகும்.
அம்மன் அகிலாண்டேஸ்வரி ஆகும், அம்மன் கோயில் பிற்கால பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டதாகும் கருவறைக்கு முன்னால் உள்ள மண்டபத்தின் தரையில் 12’x18′ அளவுள்ள(அறுபட்டை வடிவாக அமைந்த) கருங்கல் பலகை ஒன்று உள்ளது. இக் கற்பலகையில் அமர்ந்தே இப்பகுதியை ஆண்டுவந்த பல்லவராயர்களும் அவர்களைத் தொடர்ந்து வந்த புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்களும் முடிசூட்டிக் கொண்டனர். உமையாள்நாச்சி என்னும் தேவதாசி குகைக்கோயிலுக்கு அருகிலுள்ள அம்மன் கோயிலைக் கட்டுவித்து அங்கு மலையமங்கை அல்ல சௌந்திரநாயகி அம்மனை பிரதிஷ்டை செய்தாள். இப்பெண்மணி குடுமியான்மலைக் கோயிலுக்கு மேலும் பல கொடைகள் அளித்துள்ளாள்.
குடுமியான்மலை, குகைக்கோயிலும் அதன் அருகிலுள்ள சங்கீத கல்வெட்டும் மகேந்திரவர்ம பல்லவன் காலத்தைச் சேர்ந்தவை எனக் கூறப்பட்டு வந்தது. ஆனால் வரலாற்றுச் சான்றுகளின்படி இது சரியல்ல என்று தற்போதைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
1. பல்லவ மகேந்திரனின் ஆட்சிப் பகுதி காவிரிக்குத் தெற்கே பரவி இருந்ததற்கான சான்றுகள் இல்லை.
2. குடுமியான்மலைக்குக் கோயிலில் இப்பகுதியை ஆண்ட மன்னர் பரம்பரையின் 120க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன.
இவற்றுள் ஒன்றுகூட பல்லவர் பரம்பரையைச் சேர்ந்தது அல்ல. திருமேற்றளி, மேலக்கோயில் என்னும் குடவரைக்கோயிலில் காணப்படும் காலத்தால் முந்தியக் கல்வெட்டு பாண்டிய மன்னர் பரம்பரையைச் சேர்ந்ததாகும். இவை முறையே மாறவர்மன் ராஜசிம்மன் என்னும் முதலாம் சடையன் மாறன் கிபி 730 – 765 காலத்தையும் இரண்டாவது ஜடிலபராந்தக வரகுணன் மாறன் சடையன் கி.பி 765 – 815 காலத்தையும் சேர்ந்ததாகும்.
3. குகையின் தூண்களும் மகேந்திரவர்மன் கால தூண்களின் அமைப்பிலிருந்து வேறுபடுகின்றன.
4. நரசிம்ம பல்லவன் கி.பி 630 – 668 மற்றும் இரண்டாம் நரசிம்மவர்மன் ராஜசிம்மன் கி.பி 680 – 720 ஆகியோரது காலத்து குகை கோயில்களில் காணப்படுவதுபோல கருவறையின் பின் சுவற்றில் சோமாஸ்கந்தர் சிற்பத்தொகுதி இல்லை.
5. குகையினுள் உள்ள லிங்கம், பல்லவ ராஜசிம்மன் காலத்து லிங்க அமைப்பிலிருந்து வேறுபடுகிறது. குகையில் காணப்படும் கி.பி 8ம் நூற்றாண்டு கல்வெட்டைக் கொண்டு மேற்றளி என்னும் மேலைக்கோயில் இக்காலத்தில் எடுப்பிக்கப்பட்டுள்ளதாகக் கொள்ள வேண்டியுள்ளது.
6. குகைக் கோயிலின் காலம் கி.பி 8ம் நூற்றாண்டு என வரையறுக்கும் போது, அருகிலுள்ள சங்கீத கல்வெட்டின் காலமும் இதே காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்ற முடிவுக்கே நாம் வரவேண்டியுள்ளது. கல்வெட்டின் எழுத்தமைதியைக் கொண்டு மகேந்திரவர்ம பல்லவன் காலத்தது எனச் சொல்லப்பட்டு வந்தது. ஆனால் இங்கு காணப்படும் கிரந்த எழுத்துக்களைப் போன்ற எழுத்துகள் முற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்த வேள்விக்குடி மற்றும் சென்னை அருங்காட்சியக செப்பேடுகளிலும் காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
7. குணசேனா என்கிற புனைப்பெயரைக் கொண்டும் இக்கல்வெட்டு மகேந்திரபல்லவன் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று அறிஞர் சிலர் கூறுகின்றனர். குணசேனா என்பது குணபாரா என்னும் மகேந்திரபல்லவனின் புனைப் பெயரின் திரிபே என்று அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். ஆனால் குணசேனா என்னும் பெயர் குடுமியான்மலைக் கல்வெட்டில் காணப்படவில்லை. திருமயம் மற்றும் மலையடிப்பட்டி கல்வெட்டுகளிலேயே காணப்படுகிறது.
8. சங்கீத கல்வெட்டின் இறுதியில் காணப்படும் பரம மகேஸ்வரா என்னும் சொல் மகேந்திரவர்மனை குறிப்பதாகச் சொல்லப்பட்டு வந்தது. ஆனால் மகேந்திரவர்ம பல்லவனுக்கு இருந்த அனேக புனைப் பெயர்களில் மகேஸ்வரன் என்னும் பெயர் இல்லை. மேலும் மகேஸ்வரர் என்று தங்களை அழைத்துக் கொண்ட காளமுக, பசுபத சைவர்களை மகேந்திரவர்மன் தனது மத்தவிலாச பிரஹசனம் என்னும் நூலில் கேலி செய்கிறான். ஆகவே கேலிக்குரிய பெயராக அவன் கருதியதையே அவன் தன் புனைப் பெயராகக் கொண்டிருக்க வேண்டியதில்லை.
கொடும்பாளூர் ஒரு காலத்தில் கோனாட்டின் தலைநகராக விளங்கியது கொடும்பாளூரில் காளமுக சைவப்பிரிவினர் வாழ்ந்து வந்த செய்தியையும் அவர்களுக்கு கொடும்பாளூர் வேளிர் மன்னன் மடங்கள் கட்டி நிவந்தங்கள் அளித்த செய்தியின் படி குடுமியான்மலையும் இக்காலத்தில் கொடும்பாளூரின் ஆட்சிக்குட்பட்டதாக இருந்தது. கொடும்பாளூர் வேளிர் மன்னன் ஒருவன் தன்னை மகேஸ்வரன் என்று அழைத்துக் கொண்டிருப்பானோ எனக் கொள்ளலாம்.
ஆகவே குடுமியான்மலை குகைகோயிலும் அதன் அருகிலுள்ள சங்கீதக் கல்வெட்டும் மகேந்திர பல்லவன் காலத்தைச் சேர்ந்தது அல்ல என்னும் முடிவுக்கு வரலாம்.
இங்கு மொத்தம் 120 கல்வெட்டுகள் உள்ளன, இவை இப்பகுதியின் அரசியல் பொருளாதார வரலாற்றினையும் இக்கோயிலுக்கு கொடையளிக்கப்பட்ட விபரங்களையும் தெரிவிக்கின்றன. இக்கோயிலுக்கு உரிய நிலங்கள் கோனாட்டில் பல இடங்களில் இருந்தன. பிற்கால பாண்டியர் காலத்தில் இப்பகுதியை கங்கையரையர், வாணாதரையர் ஆகியோர் ஆண்டு வந்தனர். விஜயநகர மன்னர்கள் வீரகம்பண்ண உடையார், கோப திம்மா ஆகியோரது பெயர்கள் இக்கால கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. மதுரை நாயக்கர்கள் காலத்தில் இப்பகுதி மருங்காபுரி சிற்றரசர்களின் கீழ் இருந்தது. பின்பு வைத்தூர் பல்லவராயர்கள் இப்பகுதியைக் கைப்பற்றிக் கொண்டனர் சிவத்தெழுந்த பல்லவராயர் இக்கோயிலுக்கு சில மண்டபங்களும் கட்டியுள்ளார். மேலும் நந்தவனம் தோட்டங்கள் தேர் ஆகியவற்றின் பராமரிப்பிற்கும் கொடையளித்துள்ளனர். ரகுநாதராயத் தொண்டைமான் குகைக்கோயிலுக்கு முன்னால் ஒரு மண்டபத்தைக் கட்ட உயரமான இந்த மண்டபத்திற்கு விஜரகுநாதராய தொண்டைமான் 1730 – 1769 படிக்கட்டுகள் அமைத்தார் இக்கோயிலுக்கான கொடைகள் பற்றிய செய்திகள் இன்னும் ஏராளமாக உள்ளன.