கொடும்பாளூர் வேளிர் சாத்தன் மறவன்

திருசோற்றுத்துரைக் கோயிலில் உத்தமதானி என்னும் விளக்கு எரிப்பதற்கு இத்தலைவன் பொன் தானமளித்த செய்தி கூறபெருகிறது இத்தலைவனுடைய ஆட்சி காலத்தில் அமைக்கப்பெற்ற கீரனூர்
கோயில் உத்தமதானிசுவரம் என்று அழைக்கப்படுகிறது ,திருச்சி மாவட்டம் மேலைபழுவூரில் உள்ள முதலாம் பராந்தக சோழனுடைய 25ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு உத்தமதானிச் சத்ர்வேதி
மங்கல்த்தினை குறிபிடுகிறது .மேல குறிக்கபெற்ற உத்தமதானி சதுர்வேதி மங்கலம் முதலான பெயர் இளங்கோவேளின் பட்டபெயரான உத்தமதானி என்பதுடன் தொடர்புடையதாகும் ,தென்னவன் இளங்கோவேள் என்னும் பெயர் கொடும்பாளுர்த் தலைவன் பூதவிக்ரம் கேசரியின் விருது பெயரை
நமக்கு நினைவுட்டுகிறது.

இத்தலைவன் கொடும்பாளூர் வேளிர் சாத்தன் மறவனுக்குப் பூதி
அரிந்தகைக்கும்
பிறந்தவனாக தெரிகிறது .கீரனூர் கீழ்தானியம் ஆகிய ஊர்களில் உத்தம தானிசுவரர் கோயில் இத்தலைவனால் அமைக்கப்பெற்றதாகும் .
நிலம்-பாகுபாடு, பெயர்கள், சீர்மை
விளைத்திறனுக்கும் நீர்வளத்துக்கும் ஏற்ப நிலங்கள்
நன்செய், மென்செய், புன்செய், நீரநிலம், வயக்கல், மயக்கல், விளாகம் எனப் பலவாறாக பாகுபடுத்தப்பட்டிருந்தன. இவற்றுள் நன்செய், மென்செய் ஆகிய சொற்கள் ஒருபொருட் பன்மொழிகளாக அமைந்துள்ளன. அதுபோலவே மயக்கல், வயக்கல், விளாகம் எனும் சொற்களும் ஒரு பொருட் பன்மொழிகளாக விளங்குகின்றன. நன்செயும் மென்செயும் இடையீடற்ற நீர்வரத்துள்ள நிலங்களைக் குறிக்க, புன்செய் நீர்வளம் குறைந்த நிலப்பகுதிகளைச் சுட்டியது. நீர்நிலம், நிரந்தரமான நீர்நிலை பெற்ற நிலப்பகுதியைக் குறித்ததாகக் கொள்ளலாம்.


களராகவும், திடலாகவும், பாழாகவும் இருந்த நிலப்பகுதிகள் பண்படுத்தப்பட்டு விளைச்சலுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவை மயக்கல், வயக்கல், விளாகம் எனும் சொற்களால் குறிக்கப்பட்டன. சண்டேசுவர விளாகம், மின்னாமழை வயக்கல், திருமாலிருஞ்சோலை
வயக்கல் என்பன அவற்றுள் சில.

நிலங்கள் அவற்றின் உரிமையாளர் பெயராலும் விளைந்த பயிர்களின் பெயராலும் கூட அழைக்கப்பட்டுள்ளன. திருச்செந்துறையில் வேதம்
படித்துக் கொண்டிருந்த பிராமணர்களின் நிலம் சட்டப்பெருமக்கள் நிலமாகப்
பெயரிடப்பட்டிருந்தது. சேந்தன் பிராமணி நிலம், நக்கன் காடன் நிலம், ஆவணிச்செட்டி நிலம், மாறன் சாத்தன் நிலம், நக்கன் கற்குடி நிலம் என்பன தனியார் பெயரேற்றிருந்த நிலத்துண்டுகளுள் சிலவாம். வீடுகட்ட ஒதுக்கப்பட்டிருந்த நிலப்பகுதி மனை நிலம் என்ற பெயரிலும், சில பருவங்களில் மட்டும் விளைந்த நிலத்துண்டுகள் அவ்வப் பருவங்கள்
பெயராலும் (கார் நிலம்) அழைக்கப்பட்டன. பனஞ்செய், மூங்கில்செய் எனும் நிலப் பெயர்கள் விளைபொருள்களால் ஏற்பட்டவை. இவை தவிர கொகிளங்காற்செய், திருமாலிருஞ்சோலை விளாகம், அவற்றூடவை எனப் பலவிதமான பெயர்களைப் பெற்றிருந்த நிலத்துண்டுகளும் திருச்செந்துறையில் இருந்தன.

ஸ்ர்தனம் – நில உரிமை
திருமணத்தின்போது பெண்களுக்கு வழங்கப்பட்ட நிலம் ஸ்ர்தனமாகக்
கொள்ளப்பட்டது. பெண்களுக்கு உரிமையிடையனவாய் விளங்கிய இந்நிலத்துண்டுகள் காலப்போக்கில் அவர்தம் குடும்பத்து ஆடவர்கள் பெயருக்கும் மாற்றீத்தரப்பட்டன. குடும்பஞ்சார்ந்த நிலப்பகுதி அக்குடும்பத்து உறுப்பினர்கள் அனைவருக்கும் உரிமையுடயதாய் விளங்கியது. இந்நிலப்பகுதிகள் விற்பனைக்கு வந்தபோது, குடும்பஞ்சார்ந்த அனைத்து உறுப்பினர்களும் விற்பனை ஆவணத்தில் கையெழுத்திட்டிருப்பதைக் காணமுடிகிறது. சில ஆவணங்களில் குடும்பத்து மூத்தவர்கள்
மட்டும் குடும்பஞ்சார்ந்த அனைவருக்குமாய் அவர்தம் பெயர்களைச் சுட்டிக்
கையெழுத்திட்டுள்ளனர். இப்பொதுச் சொத்துமுறை, நிலம் துண்டாடப்படுவதைத் தவிர்த்ததுடன், நிலஞ்சார்ந்த உழைப்பை ஒருமுகப்படுத்தவும் குடும்பத்துள்ளார் அனைவரும் அவ்வுழைப்பைப் பகிர்ந்துகொள்ளவும் உதவியதுடன், குடும்பத்தில் கூட்டுறவு
மனப்பான்மையை வளர்க்கவும் வழிவகுத்தது.

விளைநில விரிவாக்கம்
தேவைக்கேற்ப விளைநிலங்களின் பரப்பளவு விரிவாக்கப்பட்டது.
இவ்விரிவாக்கத்திற்காகத் தரிசு நிலம் பயன்படுத்தப்பட்டு விளைச்சலுக்குக்
கொணரப்பட்டது. கோயிலுக்கு நிலக்கொடையளிக்க விரும்பியவர்கள் இத்தகு நிலப்பகுதிகளை சபையாரிடமோ, தனியாரிடமோ விலைக்குப் பெற்று நிலத்திற்கு நீர்வளமூட்டி, உழைப்பத் தந்து அல்லது விலைக்கு உழைப்பைப் பெற்று அதன்வழி நிலத்தைப் பயன்படுத்தி
விளைச்சலுக்குக் கொனர்ந்து நன்கு விளைதிறன் பெற்றநிலையில் அந்நிலப்பகுதியைக் கோயிலுக்குக் கொடையளித்தமையைப் பல கல்வெட்டுகள் விளக்குகின்றன. திருச்செந்துறைத்
திருக்கோயிலைக் கற்றளியாக்கிய கொடும்பாளூர்க் கோமகன் ஆதித்தபிடாரி, பருடையாரிடமிருந்து சில நிலத்துண்டுகளை விலைக்கு வாங்கி, நூறு கழஞ்சு பொன்செலவழித்து அந்நிலத்திற்கு நீர்வரத்தும் உழைப்பும் பெற்று அதை விளைநிலமாக்கி மின்னாமழை வயக்கல் என்ற பெயருடன் கோயிலுக்களித்தார்.

நிலவிலை
நிலம் பொன்னுக்கு விற்கப்பட்டது.நானூற்று எழுபத்து மூன்றே கால் பாத்தி அளவு நிலம் அதற்கு நீரளித்த குளத்துடன் இருபத்தெட்டரை கழஞ்சுப் பொன்னுக்கு விற்கப்பட்டது. கால் செய் அளவுள்ள
நிலத்துண்டொன்று முப்பத்து நான்கரைக் கழஞ்சுப் பொன்னுக்கு விற்கப்பட்டது. ஐந்நூறு சின்னம் பாத்தியளவு நிலம் முப்பது கழஞ்சுப் பொன்னுக்கு தரப்பட்டது. இரண்டு மாச்செய் நிலம் பத்துக் கழஞ்சுப் பொன்னுக்கு விற்கப்பட்டது. இந்நான்கு விற்பனைகளுமே
முற்சோழர் காலத்தில் நிகழ்ந்துள்ளன. பாத்தி, செய் எனும் கல்வெட்டுக் கால
அளவுகளுக்கு நேரான தற்கால அளவுகளை அறியக்கூடாமையின் நில அளவுகளையும் அவற்றின் விலைகளையும் இன்றைய சூழலுக்கேற்பக்
காணக்கிடக்கூடவில்லை.

நீர்ப்பாசனம்
காவிரியாற்றின் கரையிலமைந்த ஊரென்பதால், இவ்வூர் வயல்களுக்கு ஆற்றுநீர்ப்பாசனம் தலையாயதாய் அமைந்தது.
காவிரியிலிருந்து பெருவாய்க்கால்கள் வெட்டப்பட்டு, திருச்செந்துறைக்கும்
பக்கதிலிருந்த ஊர்களுக்கும் நீரேற்றப் பயன்படுத்தப்பட்டன. பிரமதேய வாய்க்கால் ஈசானமங்கலத்து நிலங்களுக்கும், அல்லூர் வாய்க்கால் பக்கத்திலிருந்த அல்லூர் நிலங்களுக்கும் நீரெடுத்துச் சென்றன. உலகு வாய்க்கால், திடக்கி வாய்க்கால் என்பதிருச்செந்துறை நிலத்துண்டுகளுக்கு நீரளிக்கப் பயன்பட்டன. ஆதித்யதேவ வதி எனும்
பெயரிலமைந்த சிறுகால் ஒன்றும் சில நிலத்துண்டுகளுக்கு நீரூட்டியது.

நீர்ப்போக்கைக் கட்டுப்படுத்த உதவிய மதகுகள்
பெயரிடப்பட்டிருந்தன. மறவன் வாய், கண்டன் வாய், வடவாய், கீழ்வாஅய் என்பன அவற்றுள் சில. மறவன் வாயிலிருந்து நீரெடுத்துச் சென்ற வாய்க்கால் மறவன் வாய்க்காலென்று
பெயரிடப்பட்டிருந்தது. ஊரின் மேற்கிலும் தெற்கிலும் உள்ள நிலத்துண்டுகளுக்கு நீரளித்த உள்வாய்க்கால்கள், திசைப்பெயர்களிலேயே சுட்டப்பட்டன. வேளான் பெருமக்களின்
நிலத்தேவைக்கேற்ப நீர்ப்பாய்ச்சல் அமைந்தது
.

பயிர்கள்
நெல் முதன்மைப் பயிராக அமைந்தது. பயறுகளும் விளைவிக்கப்பட்டன. வாழைமரங்கள் செழித்திருந்தன. பலவகைக் காய்கறிகள்
பயிராயின. பாக்குமரத் தோப்புகளும், தென்னந்தோப்புகளும் விளங்கின. வெற்றிலைக் கொடிக்கால்கள் இருந்தன. பல்வகைப் பூக்கள் பயிரிடப்பட்ட நந்தவனங்களும் கோயில்சூழ அமைக்கப்பெறிருந்தன.

மகளிர்
சமுதாயத்தின் அனைத்துத் தளங்களைச் சார்ந்த மகளிரும் கொடையாளிகளாகக் காட்சியளிக்கின்றனர். கொடும்பாளூர்க் கோமகளான பூதி ஆதித்தபிடாரி பதின்மூன்று கல்வெட்டுகள் வழி இக்கோயிலுக்கும் கோயில் சார்ந்த பணியாளர்களுக்கும் பல நன்மைகளைச் செய்துள்ளார். தென்னவன் இளங்கோவேளின் தேவியான விக்கிரமகேசரியும், தஞ்சாவூர் அரண்மனைப் பணிப்பெண்ணான சோழப் பெருந்தேவியும்
இக்கோயிலுக்குக் கொடையளித்துள்ளனர். முன்னவர் பொன் தந்து விளக்கேற்ற, பின்னவர் நிலம் தந்து, தம் தாய் வெடேல்விடுகு மங்கலத்தில் எழுப்பிய அம்பலம் புரக்கச் செய்தார். பெண்களுக்கு அவர்தம் பெயரிலேயே நிலமிருந்தமையும், அந்நிலத்துண்டுகளை விழைவு போல் விற்கவும் பயன்படுத்தவும் அவர்கள் உரிமை பெற்றிருந்தமையையும்
அறியமுடிகிறது.

பழக்க வழக்கங்கள்
குடும்பத்தில் அமையும் சிறப்பான நிகழ்வுகளின்போது இறைக் கோயிலுக்குத் தட்சிணையாக அறக்கட்டளை அமைக்கும் வழக்கம்
அந்நாளில் இருந்தது. ஆதித்தன் திருவொற்றியூர் அடிகள் தம் திருமணத்தின்போது விவாக தட்சிணையாகக் கோயிலில் பன்னிரெண்டு நந்தாவிளக்குகள் ஏறுவதற்காகப் பவருத்ர பட்டர் என்பாரிடம் நிலத்துண்டொன்றைக் கொடையாகத் தந்திருந்தார். ஆதித்தம் பூதி தம் மகனுக்கு முதல் சோறு ஊட்டியபோது திருச்செந்துறைக் கோயில் இறைவனுக்கு வழிபாடும் படையலும் அமையுமாறு கொடையளித்தார்.

உணவு
அரிசிச்சோறு முதன்மை உணவாக அமைந்தது. நெய், தயிர், காய்கறிகள், பழங்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டன. காய்கள் பொரித்தும் அவித்தும் உண்ணப்பட்டதால் வறுத்த உணவுகளும் பயன்பாட்டில் இருந்தன. புளி,
உப்பு, மிளகு மூன்றும் சமைத்தலில் பயன்பட்டன. பெருங்காயம் பயன்பாட்டில் இருந்ததோ எனக் கருதுமாறு ஒரு கல்வெட்டு அமைந்துள்லது. பயற்றுப் போனகம் எனும் சத்துணவு காலை
நேஎரத்து உணவாக இருந்தது. சரியான விகதங்களில் புரதம், மாவுச்சத்து, கொழுப்பு, வைட்டமின்கள் ஆகியவை சேர்ந்த உணவாக இது அமைந்திருந்தமையை, இதைச் செய்ய மக்கள் பயன்படுத்திய பொருட்கள் கொண்டு தீர்மானிக்கமுடிகிறது. வெற்றிலையும் பாக்கும்
உணவுக்குப் பிறகு பரவலாகப் பயன்படுத்தப்பட்டன.

அளவுகள்
வேலி, காணி, மா, முந்திரிகை, சின்னம், பாத்தி என்பன நில அளவுகளாக இருந்தன. நிறுத்தல், முகத்தல் அளவைகளும் பயன்பாட்டில் இருந்தன. பதக்கும், தூணி, குறுணி, உழக்கு, மரக்கால், கலம், உரி, நாழி என்பன முகத்தல் அளவைகளாக அமைய, கழஞ்சு பொன்னையளக்கும்
நிறுத்தலளவையாக இருந்தது. குடிஞைக்கல்லும் விடேல்விடுகு கல்லும் அளவு நிர்னயம் செய்யப்பட்ட பொன்னளவைகளாக வழக்கில் இருந்தன. துளைப்பொன், திப்பொக்குச் செம்பொன் என்பன உயர்தரப் பொன்வகைகளாகக் கருதப்பட்டன. கோயிலுக்கு அளக்கப்பட்ட நெல்லையளக்க சூலக்கால் எனும் அளவு நிர்னயம் செய்யப்பட்ட சிறப்பு முகத்தலளவை பயன்படுத்தப்பட்டது. அதுபோலவே சூலநாழி, திருச்செந்துறையுடையான் எனும் முகத்தலளவைகளும் இவ்வூர்ப்
பகுதிகளில் அளவு நிர்ணயம் செய்யப்பட்ட முகத்தலளவைகளாகப்
பயன்படுத்தப்பட்டன.

நாணயம்
வணிகத்தின் முதுகெலும்பாக விளங்கிய நாணயம், ‘அன்றாடு நற்காசு’ எனும் பெயரில் இப்பகுதியில் வழக்கிலிருந்தது. குற்றமற்ற
நற்காசு எனும் நானயம், அன்றாடு நற்காசின் புழக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்களைத் தவிர்க்க உற்பத்தி செய்யப்பட்ட புதிய நாணயமாகலாம். இக்காசுகள் செம்பு, பொன் ஆகிய உலோகங்களால் செய்யப்பட்டிருந்தன.

கடன்களின் மீதும், வைப்புநிதிகளின் மீதும் வட்டி பெறப்பட்டது. பலிசை எனும் சொல் இவ்வட்டியைக் குறித்தது. கி.பி. பதினோராம்
நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் ஒரு காசுக்கு ஒரு திரமம் வட்டியாகப்
பெறப்பட்டது.

ஊரமைப்பு
திருச்செந்துறையில் பல தெருக்கள் இருந்தன.
சில பெருந்தெருக்களாகவும் சில குறுகலான தெருக்களாகவும் இருந்தன. பிராற்றுப் பெருந்தெரு, தெற்குப் போன பெருந்தெரு என்பன பெருந்தெருக்களுள் சிலவாம். அம்பலத்திற்குப் போன தெரு அம்பலத்தெரு என்றும், காவிரியின் ஈசானத்துறைக்குச் சென்ற தெரு ஈசானத்துறைத் தெரு என்றும் பெயரிடப்பட்டிருந்தன. கோயில் நில ஊழியர்களுக்கான
வீடுகள் ஊரின் ஒருபுறமிருக்க, கோயில் பணியாளர்களின் வீடுகள் கோயிலைச் சூழவிருந்தன.

முடிவுரை
சோழர் காலச் சமுதாயத்தின் ஒரு சிறு துளியே திருச்செந்துறை. இதுபோல் பலதுளிகள் சேர்த்துக் காவிரியாய்ப் பெருக்கெடுக்கும்
சமுதாயப் புலத்தைக் காட்டத் தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் தவித்துக்கொண்டுதான் இருக்கின்றன. அவற்றின் தவிப்படக்கி, வரலாற்றின் நெடுங்கதவுகளைத் திறந்து தமிழ்ச் சீர்மை பேச, விளக்க, புலப்படுத்த அரசுகளும் தயாரில்லை; இந்த மண்ணின் மைந்தர்களும்
தயாரில்லை. மேடைப் பேச்சுகளிலும் பக்தி பூகம்பத்திலும் அடையாளமிழந்து போய் நிற்கும் இந்தச் செழித்த சமுதாயத்தின் தலைப்பெழுதுக்கள் குடமுழுக்குக் கோலாகலங்களில் கரந்து
கொண்டிருப்பதைக் காலம் கண்ணீரோடு பார்த்துக் கொண்டிருக்கிறது. கண்ணுறங்கிப் போன தமிழர்கள் என்றைக்கு விழிப்பது?

This entry was posted in மறவர் and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *