கொல்லங்கொண்டான் பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த மன்னனாவான். சேர நாட்டின் மீது படையெடுத்துச் சென்று கொல்லத்தினையும் சுற்றுப்புறப் பகுதிகளினையும் கைப்பற்றியதனால் ‘கொல்லங்கொண்ட பாண்டியன்’ என அழைக்கப்பட்டான் என திநெல்வேலி சேர மாதேவி கல்வெட்டு குறிப்பிடுகிறது. மேலும் இம்மன்னன் மலை நாடு, சோழ நாடு, இரு கொங்கு நாடுகள், ஈழ நாடு, தொண்டை நாடு போன்றனவற்றினையும் வென்றான் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளன. சோழ நாடு, நடு நாடு, தொண்டை நாடு ஆகிய நாடுகளில் இவனைப்பற்றிய கல்வெட்டுக்களைக் காணலாம். முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனைப் போல இம்மன்னனும் “எம்மண்டலமும் கொண்டருளிய ஸ்ரீகுலசேகர பாண்டியன்” என சிறப்பிக்கப்பட்டான். தனது ஆட்சியில் நாடெங்கு அமைதி நிலவ வேண்டும் என்ற காரணம் கருதி தனது தம்பிமார்களை அரசப் பிரதிநிதிகளாக்கினான். போரில் வெற்றி பெற்ற நாடுகளிலிருந்து கைப்பற்றிய பொருள்களைக் கொண்டு நெல்லைக் கோயில் திருச்சுற்று மாளிகையினை கட்டுவித்தான். நெல்லையப்பரிடம் பேரன்பு கொண்ட கொல்லங்கொண்டான் ஆட்சிக் காலத்தில் நான்கு அரசப் பிரதிநிதிகள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.