திருவாரூர் தியாகராஜ சுவாமிகோயிலில் உள்ள கல் தேரில் சிதிலமடைந்துள்ள மனுநீதிச்சோழன் சிலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் தியாகராஜர் கோயிலின் மூன்றாம் பிரகாரத்தின் வெளிப்புற திருவீதியில் வரலாற்றுச் சிறப்புமிக்க கல்தேர் உள்ளது. இந்தத் தேர் மனுநீதிச்சோழனின் வரலாற்றைக் கூறும் சிற்பங்கள் அடங்கிய ஒரு கலைக்கூடமாக திகழ்கிறது. தேர் நான்கு சக்கரங்களும், குதிரைகளும் பூட்டிய நிலையில் மண்டபத்தின் உபபீடம் அழகிய சிற்பங்களால் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது குதிரைகள் சுதை சிற்பங்களாக உள்ளன. மனுநீதிச்சோழனின் மகன் வீதிவிடங்கன் (ப்ரியவிருத்தன்),தேர் சக்கரத்தில் சிக்கிக் கிடப்பது போல் கல் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.
கல்தேருக்கு சற்று அருகில் ஒரு சிறிய மண்டபம் போன்று நான்கு தூண்கள் நிறுத்தப்பட்டு அதற்குள் ஒரு மணியும் கீழே சோகமான நிலையில் பசுவும், இறந்த கன்றும் சிற்பமாக காட்சியளிக்கின்றன. அக்கன்றின் வயிற்றில் தேர்ச்சக்கரம் ஏறிய சுவடு உள்ளது போன்று தத்ரூபமாக சிலை வடிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிற்பங்கள் மட்டுமன்றி, கல்தேரில் நடுவில் உள்ள மண்டபத்தின் உள்புறத்தில் மூன்று துண்டுக் கற்களில் இறைவன் காட்சிக்கொடுப்பதும், மனுநீதிச்சோழன், மகன் வீதிவிடங்கன் நிற்பது போன்றும், கன்று தாய்ப்பசுவுடன் நிற்பது போன்றும் அழகிய சிற்பங்கள் சுவரில் பதிக்கப்பட்டுள்ளன.
அழகு மிகுந்த இக்கல்தேரும் மற்றைய சிற்பங்களும் விக்கிரமசோழன் காலத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கல்தேர் மண்டபத்தில் சிமென்ட் கலவையால் ஆன மனுநீதிச்சோழன் சிலை உள்ளது.
இந்தச் சிலையின் இடது கை மற்றும் சிம்மாசனம் போல் அமைக்கப்பட்டுள்ள பகுதியும் சேதமடைந்து சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுந்துள்ளன. சிலையில் பூசப்பட்ட வண்ணங்களும் பெயர்ந்த நிலையில் இருக்கிறது. கல்தேர் இருக்கும் வளாகம் முழுவதும் புற்கள் மண்டிக்கிடக்கிறது. நுழைவு வாயில் அருகில் நிற்கும் கோணத்தில் உள்ள பசுவின் கற்சிற்பம் யார் பார்வையிலும்படாத வகையில் செடிகொடிகளால் சூழப்பட்டுள்ளது.
மனு நீதி சோழன் சிலை ஓவியம் வரையப்பட்டுள்ள சுவர் சேதமடைந்துள்ளது. மேற்கூரையோ மாட்டுக் கொட்டகை போன்று சிமென்ட் அட்டை போடப்பட்டு குண்டு பல்பு மட்டும் (தற்போது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது) போடப்பட்டுள்ளது.
மனுநீதிச் சோழனின் சிலையை சீரமைத்து கல்தேர் வளாகத்தையும் தூய்மைப்படுத்தி மின்விளக்குகள் அமைத்து பழைமை மாறாமல் தமிழக அரசும், இந்து அறநிலையத்துறையும் அவ்விடத்தை பராமரித்து நமது பாரம்பரியத்தை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது, மனித உயிர்கள் மட்டுமின்றி மற்ற உயிர்களுக்கும் நியாயம் கிடைக்க வேண்டுமென்ற தொலைநோக்குப் பார்வையில் நீதி வழங்கிய மனு நீதிச் சோழனுக்கு அளிக்கும் உண்மையான மரியாதையாக இருக்கும்.
நன்றி : தினமணி