காலத்தின் எத்தனையோ மாற்றங்களை மீறி இளம் சந்தனக் கலரில் வரலாற்றுத் தடயமாக சில நூற்றாண்டுகளுக்கு முந்திய ஒரு காலத்தை நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது சிவகங்கை அரண்மணை.
மூன்று ஏக்கர் பரப்பளவில் விரிந்திருக்கிற அரண்மனையில் உள்ளே கோவில், பெரிய மண்டபம், அந்தப்புர மாடம், சின்ன நீச்சல்குளம் எல்லாம் காலத்தின் சிதைவுடனிருக்கின்றன. சுற்றியுள்ள 18 அடி உயரச் சுற்றுச்சுவரும் விரிசலடைந்து உருமாறியிருக்கிறது.
சிவகங்கை சமஸ்தானத்தின் தலைமையிடமான இந்த அரண்மனையும் ராஜ்யமும் ஒரு திருமணத்திற்குச் சீதனமாக வழங்கப்பட்ட சொத்து என்று சொன்னால் ஆச்சர்யமாக இருக்கும். ராமநாதபுர மன்னரான கிழவன் சேதுபதியின் சகோதரி மகளை சசிவர்ண பெரிய உடையத் தேவர் திருமணம் செய்துகொண்டதும், அதற்காகக் கொடுக்கப்பட்ட சீதனம் இந்த ஜமீன்.
எவ்வளவு கனமான சீதனம்?
சிவகங்கை அரண்மனையின் முகப்பில் வாளேந்திய கையுடன் வேலு நாச்சியாரின் சிலை. ஜான்சி ராணிக்கு முன்பே வெள்ளையரை எதிர்த்துப் போரிட்ட முதல் இந்தியப் பெண்மணியாக இவரைச் சொல்கின்றன வரலாற்றுக் குறிப்புகள். இராமநாதபுர மன்னரான செல்லமுத்துவுக்கு ஆண் வாரிசில்லை. அவருடைய மகள் வேலுநாச்சியார், ஆங்கிலம், உருது உட்பட ஆறு மொழிகளில் பயிற்சி பெற்ற இவருக்கு வாள் வீச்சு, சிலம்பம், இலக்கியம் என்று பலவற்றில் நல்ல தேர்ச்சி.
செம்பி நாட்டு மறவர் சமூகத்தைச் சேர்ந்த இவருக்கும் சிவகங்கை மன்னரான முத்து வடுகநாதத் தேவருக்கும் திருமணம் நடந்தபோது இவருக்கு வயது பதினாறு.
முத்து வடுகநாதர் ஆங்கிலேயர்களுக்கு நெருக்கமான இருந்த ஆற்காடு நவாபுக்குக் கப்பம் கட்ட மறுத்ததால் உருவானது சிக்கல். 1772 ஜூன் 25ஆம் தேதி இவரின் இன்னொரு மனைவியான கௌரி நாச்சியாருடன் காளையார் கோவிலில் இருந்தபோது ஆங்கிலேயப் படை சூழ்ந்துகொண்டு தாக்கியதில் இவர்கள் இருவருமே மரணமடைந்து போனார்கள். சிவகங்கை சமஸ்தானம் நவாபின் ஆளுகைக்குக் கீழ் வந்தது.
இதையடுத்து குறி வைக்கப்பட்ட வேலுநாச்சியார் மருது சகோதரர்களின் துணையுடன் திண்டுக்கல்லுக்குத் தப்பிச் சென்றார். திண்டுக்கல் பகுதி அப்போது வெள்ளையரை எதிர்த்துவந்த மைசூர் மன்னர் ஹைதர் ஆலி வசமிருந்தது. உருது மொழி தெரிந்ததால் அவருடன் சுலபமாக உரையாட முடிந்தது வேலுநாச்சியாரால். வெவ்வேறு முகாம்களில் மாறி மாறித் தங்கி சிவகங்கையை மீட்கும் சந்தர்ப்பத்திற்காக எட்டு ஆண்டுகள் காத்திருந்தார். காத்திருப்பு வீண்போகவில்லை. திண்டுக்கல்லிலிருந்து குதிரைப் படைகளின் உதவி கிடைத்ததும் சிவகங்கையின் மீது படையெடுப்பு நடந்தது. மூன்று பிரிவுகளாகப் பிரிந்து நடத்திய தாக்குதலில் வேலுநாச்சியாருக்கு வெற்றி.
1780இல் சிவகங்கை சமஸ்தான ஆட்சிப் பொறுப்பைப் பெற்றார் வேலு நாச்சியார். பெரிய மருது படைத்தளபதியானார். சின்ன மருது பிரதானியானார்.
1780 ஜூலையில் வேலுநாச்சியார் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பத்து வருடங்கள் வரை நீடித்த அவருடைய ஆட்சியைப் பற்றி வரலாற்றாசிரியர்கள் மத்தியில் சற்றுக் குழப்பமான, மங்கலான, புகை மண்டிய குறிப்புகள் நீடிக்கின்றன.
பதவியேற்ற சில மாதங்களிலேயே மருதுபாண்டியரை மறுமணம் புரிந்ததாக வேலுநாச்சியார் அறிவிவிப்பு கொடுத்ததாகத் தெரிவிக்கிறது. ஒரு வரலாற்றுக் குறிப்பு. (ஆதாரம்: மருது பாண்டிய மன்னர்கள், மீ. மனோகரன், பக்கம் 121) அன்றைய காலகட்டத்தில் மன்னர் இறந்தால் அவரை மணந்தவர்கள் உடன்கட்டை ஏறும் வழக்கமிருந்த காலத்தில், கணவர் மறைந்த பிறகு வீரத்துடன் போராடிய வேலுநாச்சியாரின் இயல்பு அபூர்வமானது.
ஆனால் பத்தாண்டுகளுக்குள் பலவிதமான எதிர்ப்புகளைச் சந்தித்த இவருக்கும், மருது சகோதரர்களுக்கும் இதைத் தொடர்ந்து இவருடைய மகள் வெள்ளச்சியின் கணவரான சக்கந்தி வெங்கன் பெரிய உடையத் தேவருக்குமிடையிலும் பிரச்சினை உருவாகி மோதலும் நடந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து மன்னரானார் வேலு நாச்சியாரின் மருமகன்.
தன்னுடைய மகளின் மரணத்திற்குப் பிறகு அதிகாரமிழந்த நிலையில் சிவகங்கையில் தங்கியிருந்த வேலுநாச்சியார் 1796இல் இறந்தபோது அவருக்கு 66 வயது.
ஏறத்தாழ 210 வருடங்குளுக்கு முன்பு மறைந்த வேலுநாச்சியார் அடக்கம் செய்யப்பட்ட இடம் இப்போது சரியான கவனிப்பாரில்லாமல் இங்குள்ள தெப்பக்குளத்தின் கரையிலிருக்கிறது.
முப்பத்தெட்டு வயதில் கணவரைப் போரில் இழந்த பிறகும் அதற்குப் பிறகு வீரத்துடன் இன்னொரு வாழ்க்கையைத் துவக்கிய வேலுநாச்சியாரின் வரலாறு, பெண் விடுதலையின் சத்தான ஒரு அத்தியாயம்.
…
2 Responses to சிவகங்கை அரண்மணை