DHENUPUREESWARAR TEMPLE AT MADAMBAKKAM
BUILT BY SUNDARA CHOLAN
இடைக்காலச் சோழர்களில் பலம் வாய்ந்த அரசர்களில் ஒருவனாக விளங்கியவன் சுந்தர சோழன். இவன் கி.பி 957 முதல் 973 வரை 16 ஆண்டுகள் சோழ நாட்டை ஆண்டான். இவன் முதலாம் பராந்தகச் சோழனின் பேரனும், அரிஞ்சய சோழனின் புதல்வனும்
ஆவான். தனது முன்னோர்
காலத்தில் இழந்த நிலப்பகுதிகளை மீட்டுச் சோழ நாட்டை வலிமையுள்ள நாடாக மாற்றியவன் இவன். தெற்கே திறை செலுத்த மறுத்துவந்த பாண்டிநாட்டின் மீது படை நடத்தி வெற்றிகண்டான். வடக்கிலும் இராஷ்டிரகூடர்களிடம் இழந்த பகுதிகளைக் கைப்பற்றும் பொருட்டு அவர்களுடன் போரிட்டு அவற்றை மீண்டும் சோழ நாட்டின் ஆளுகைக்கு உட்படுத்தினான்.
கி.பி 969 ஆம் ஆண்டில் சுந்தர சோழனின் மூத்த மகனும் வீரனுமான, இரண்டாம் ஆதித்தன் சந்தேகத்துக்கு உரிய முறையில் எதிர்பாராத சூழ்நிலையில் கொல்லப்பட்டான். இதனால் துயருற்ற மன்னன் நோயுற்று கி.பி 973 ல் காலமானான்.
சுந்தரசோழனுக்குப் பின் கண்டராதித்த சோழனின் மகனான உத்தம சோழன் சோழ நாட்டுக்கு அரசனானான்.
காஞ்சிபுரத்தில் பொன்னாலான தன்னுடைய மாளிகையில் சுந்தரசோழன் இறந்தான். அதனால் அதன் பிறகு, ‘பொன் மாளிகைத் துஞ்சின தேவன்’ என்றே அழைக்கப்பட்டான். இதன் காரணமாக இம்மன்னன் வடபகுதியில் தங்கி, தன் நாட்டின் நிலவரங்களை அயராது கவனித்தான் என்றும் அனுமானிக்கலாம். மலையமான்களின் வமிசத்து ‘வானவன் மாதேவி’ என்ற இவன் மனைவி, கணவன் இறந்ததும் உடன்கட்டை ஏறினாள். இம்மன்னனுடைய சிலை ஒன்று இவள் மகள் ‘குந்தவையால்’ தஞ்சைக்கோயிலில் வைக்கப்பட்டது.
தலைசிறந்த தமிழ் புதினங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் இவருடைய ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை தழுவியே எழுதப்பட்டுள்ளது.
சுந்தர சோழனின் மகன் அருள்மொழி வர்மன் பின்னாளில் ராஜராஜ சோழன் என்ற பெயரில் அரசபட்டம் ஏற்று மகத்தான மாமன்னனாகத் திகழ்ந்தான்.