மேற்கே மலைப்பகுதிகளில் இடையறாது அடைமழை பெய்ததால் நீர்ப்பெருக்கு அதிகமாகி சிக்க தேவராயன் காவிரியின் குறுக்கே எடுத்திருந்த அணை தானே நலிந்து நகர்ந்து போய்விட்டது. அப்போதிருந்த பயங்கரமான வெள்ளப் பெருக்கில் சிக்க தேவராயன் மறுபடி காவிரியை வழிமறித்து நிறுத்தலாம் என்று நினைக்கக்கூட முடியவில்லை. காவிரி மீண்டும் தன் இஷ்டப்படி ஓடினாள்.
திரிசிரபுரம் தஞ்சைப் பகுதிகளில் காவிரியில் வெள்ளம் இருகரையும் நிமிர ஓடியது. வறட்சி தவிர்ந்தது. உழவர்களின் துயரம் ஒழிந்தது. இதனால் மைசூரின் மேல் படை எடுப்பது என்ற திட்டம் கைவிடப்பட்டது. ஆனாலும் காவிரி நீர்ப் பிரச்சினை காரணமாகத் திரிசிரபுரத்துக்கும், தஞ்சைக்கும் ஏற்பட்ட ஒற்றுமை மட்டும் தொடர்ந்து நீடித்தது. அந்த நட்பு வேறொரு படையெடுப்புக்குப் பயன்பட்டது. வேறொரு படையெடுப்புக்கு அவசியமும் ஏற்பட்டது.
இங்கே ராணி மங்கம்மாள் திரிசிரபுரத்திலிருந்து கொண்டு தஞ்சையிலும், மைசூரிலும் கவனம் செலுத்தி வந்த சமயத்தில் கிழவன் சேதுபதி பெரும்படையோடு படையெடுத்துச் சென்று மதுரையையும் சுற்றுப்புற நகரங்களையும் கைப்பற்றிக் கொண்டிருந்தார். இப்படி நடக்கும் என்று ராணி மங்கம்மாள் முற்றிலும் எதிர் பார்த்திருக்கவில்லை. சேதுபதி தந்திரமாக மதுரையைக் கைப்பற்றியிருந்தார்.
ஏற்கெனவே மதுரைப் பெருநாட்டுக்குப் பணிந்து திறை செலுத்த மறுத்ததோடு மேலே எதுவும் செய்யாமல் இருந்து விடுவார் என்றுதான் சேதுபதியைப் பற்றி ராணி மங்கம்மாள் நினைத்திருந்தாள். புதிதாக விரோதங்கள் எதையும் வளர்க்கமாட்டார் என்று அவள் எண்ணியிருந்ததற்கு மாறாக அவர் மதுரை நகரையும், சுற்றுப்புறங்களையும் மறவர் படையோடு வந்து ஆக்கிரமித்தது அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருந்தது.
காவிரி நீர்ப்பிரச்சினையை ஒட்டி நட்பு ஏற்படுவதற்கு முன்னர் சேதுபதியே ஒருமுறை மங்கம்மாளுக்கு எதிரணியில் தஞ்சை மன்னர் ஷாஜியோடு இணைந்து மங்கம்மாளுக்குத் தொல்லை கொடுத்திருக்கிறார். இப்போது அதே சேதுபதியை எதிர்த்து ஷாஜியைத் தன் அணியில் திரட்ட வேண்டிய கட்டாயமும் நிர்ப்பந்தமும் மங்கம்மாளுக்கு ஏற்பட்டன.
இதற்கு முன்னால் ஒருமுறை சேதுபதி மதுரை நகரைக் கைப்பற்றி ஆள முயன்ற போது ஷாஜியின் துணையின்றியே தளவாய் நரசப்பய்யா மதுரைக்குப் படை எடுத்துச் சென்று தனியே வென்றிருக்கிறார். இப்போது தஞ்சைப் படைகளும் உதவிக்குக் கிடைக்கிற காரணத்தால் தளவாய் நரசப்பய்யா சேதுபதியை ஓட ஓட விரட்டிவிடலாம் என்றே எண்ணினார்.
முன்பு தன் மகன் ரங்ககிருஷ்ணன் சேதுபதியை அடக்கி வெற்றி கொள்ள முடியாமல் திரும்பியதிலிருந்து தொடர்ந்து அவர் அடங்க மறுத்து வந்திருக்கிறார் என்பதை நினைவு கூர்ந்த ராணி மங்கம்மாள் மதுரையைக் கைப்பற்றிய நிகழ்ச்சியை அவரது அடங்காமையின் அதிக எல்லையாகக் கருதினாள். திமிர் நிறைந்த காரியமாக எண்ணினாள்.
பேரன் விஜயரங்கன் வளர்ந்து பெரியவனாகிப் பொறுப்பை ஏற்கும் நாள்வரை நாட்டின் எல்லைகள் பறிபோகாமல் கட்டிக் காக்க வேண்டிய அவசியம் அவளுக்கு இருந்தது. விஜயரங்கன் அவனுடைய தந்தை ரங்ககிருஷ்ணனைப் போல் இளம் பருவத்திலேயே அரசியல் பொறுப்புகளை ஏற்கக்கூடிய பக்குவமுள்ளவனாக இல்லை. சின்னஞ்சிறு வயதில் அவனை நம்பி முடிசூட்டுவது அவனையும் நாட்டையும் அபாயத்தில் கொண்டு போய் விட்டுவிடக்கூடும் என்பது ராணி மங்கம்மாளுக்கே தெளிவாகப் புரிந்திருந்தது. விளையாட்டுப் பிள்ளையாகவும் விடலையாகவும் அவன் இருந்தான்.
அதனால் அரசியல் காரியங்களில் விஜயரங்கனை அவள் சம்பந்தப்படுத்தவேயில்லை. சேதுபதி மதுரை நகரையும் சுற்றுப் புறங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டு ஆளும் தகவல் தெரிந்ததும் இராயசம் முதலியவர்களோடு மந்திராலோசனை செய்தபின் தளவாய் நரசப்பய்யாவிடம் தான் அவள் மனம் திறந்து பேசினாள்.
“உங்களுக்கு இது பெரிய காரியமில்லை! இதே கிழவன் சேதுபதியை முன்பு மதுரையிலிருந்து மானாமதுரை வரை ஓட ஓட விரட்டியிருக்கிறீர்கள் நீங்கள். அந்த நம்பிக்கையில் இந்தப் பொறுப்பை இப்போது உங்களிடம் மீண்டும் ஒப்படைக்கிறேன்…”
“ஒருமுறை நம்மிடம் தோற்றிருப்பதால் சேதுபதியும் இப்போது அத்தனை அலட்சியமாக இருக்க மாட்டார் முன்னை விட படைபலத்தைப் பெருக்கியிருப்பார்! ஆனாலும் கவலை வேண்டாம் மகாராணீ! மதுரையை சேதுபதியிடமிருந்து மீட்டுவிட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது!.”
“இந்தச் சமயத்தில் சேதுபதியை அடக்க வேண்டிய அரசியல் அவசியம் உண்டு! போனால் போகிறதென்று விட்டால் அவர் இதோடு நிற்க மாட்டார். நமது ஆட்சிக்கு உட்பட்ட வேறு பிரதேசங்களையும் கைப்பற்றத் துணிவார். பிறருடைய செருக்கைவிடத் தமது செருக்கு ஒருபடி அதிகம் என்று நிரூபிப்பதில் எப்போதுமே அவருக்கு ஆவல் உண்டு. ‘இராமபிரானுக்கு உதவிய குகனின் வம்சத்தினர் நாங்கள்! பிறரைச் சென்று தரிசிப்பவர்களில்லை. பிறரால் தரிசித்து வணங்கப்பட வேண்டியவர்கள்’ என்று என்னைச் சந்திக்கும் போதெல்லாம் குத்தலாகவும் ஆணவத்தோடும் என்னிடம் அவர் சொல்லியிருக்கிறார். இப்போது அவருக்கு நாம் பாடம் புகட்ட வேண்டிய காலம் வந்துவிட்டது.”
“உங்கள் விருப்பத்தைக் கட்டாயமாக நிறைவேற்ற முயல்வேன் மகாராணீ!” என்ற மங்கம்மாளிடம் உறுதியளித்து விட்டு காவிரி நீர்ப் பிரச்சினைக்காக உதவிபுரிய வந்திருந்த தஞ்சைப் படைவீரர்களையும் சேர்த்துக் கொண்டு படையெடுப்பைத் தொடங்கினார் தளவாய் நரசப்பய்யா. பெரும்படை மதுரையை நோக்கி விரைந்தது. கிழவன் சேதுபதி இந்தப் படையெடுப்பை எதிர்பார்த்து ஆயத்தமாக இருந்தார். இவருடைய மறவர் சீமைப் படைகள் முன்னேற்பாட்டுடனும், கட்டுப்பாடாகவும் இருந்தன. விரைந்து சென்று குறிப்பிட்ட குறுகிய காலத்தில் கொள்ளையடித்து முடித்துக் கொண்டு திரும்பிவிடுகிறாற் போன்ற ஒரு சுறுசுறுப்பு மறவர் சீமைப் படைகளிடம் இருந்தன. முன்னைவிட எண்ணிக்கையில் அதிகமான மறவர் சீமைப் படையை ஆயத்தமாக வைத்திருந்தார் அவர்.
“ஒருவேளை திரிசிரபுரத்திலிருந்த ராணி மங்கம்மாளின் படை மதுரையை நோக்கி வருமானால்” என்று அதை முன் ஏற்பாடாக எதிர்பார்த்து வருகிற படையை எங்கெங்கே எதிர்கொண்டு எப்படி எப்படித் தாக்குவது என்றெல்லாம் தீர்மானமாகத் திட்டமிட்டு வைத்திருந்தார் சேதுபதி. இராஜதந்திரத்திலும் உபாயங்களிலும் எதிரிகளை எப்படி எப்படி எல்லாம் மடக்கி அழிக்கலாம் என்ற சாதுரியத்திலும் தேர்ந்தவரான கிழவன் சேதுபதி தீர்க்க தரிசனத்தோடு எல்லாத் தற்காப்பு ஏற்பாடுகளையும் செய்து வைத்துக் கொண்டிருப்பதை நரசப்பய்யா எதிர்பார்க்கவில்லை.
தான் முன்பு ஒருமுறை வென்றது போல் இம்முறையும் கிழவன் சேதுபதியைச் சுலபமாக வென்று வெற்றிவாகை சூடிவிடலாம் என்ற நம்பிக்கையோடு திரிசிரபுரத்திலிருந்து மிகவும் அலட்சியமான எண்ணத்தோடு படைகளோடு புறப்பட்டிருந்தார் நரசப்பய்யா.
சேதுபதியின் திட்டமும் ஏற்பாடுகளும் வேறுவிதமாக இருந்தன. நரசப்பய்யாவின் படைகள் மதுரையை அடைவதற்கு முன்பே களைத்து சோர்ந்து போய் விடும்படி நடுவழிகளிலேயே அவர்களை மறித்துத் தாக்குவதற்கான மறவர் சீமைப் படைகளை எதிர்பார்க்கவோ அனுமானிக்கவோ இயலாத நரசப்பய்யா படைகளோடு முன்னேறிக் கொண்டிருந்தார். நரசப்பய்யாவின் அலட்சியப் போக்கு ஆபத்தாக முடியுமென்று யாருக்குமே முதலில் தெரிந்திருக்கவில்லை.
பேரன் விஜயரங்கனுக்கு ஒரு குறையுமில்லாத முழுப்பேரரசை அப்படியே கட்டிக்காத்து அளித்து முடிசூட்ட வேண்டுமென்ற ஆசையில் ராணி மங்கம்மாளுக்கு தளவாய் நரசப்பய்யாவைப் படைகளுடன் மதுரைக்கு அனுப்பிவிட்டுக் காத்திருந்தாள்.
படைகள் மதுரை எல்லையை அடையுமுன்னே குழப்பமான செய்திகள் ஒவ்வொன்றாக வந்தன. ராணி மங்கம்மாளின் நம்பிக்கை தளர்ந்தது. மறவர் சீமையைக் கடந்து மதுரைப் பகுதிக்குள் நுழைவதற்கு முன்னதாகவே மங்கம்மாளின் படைத்தலைவர் நரசப்பய்யா கொலையுண்டு இறந்து போனார்.
தளபதியை இழந்த படைகள் அதிர்ச்சியில் சிதறிப் பிரிந்தன. படைகளைப் பகுதி பகுதியாகப் பிரித்துத் திடீர் திடீரென்று மறைந்திருந்து தாக்கினர் மறவர் சீமை வீரர்கள். படைகள் புறமுதுகிட்டன. சேதுபதியை அழிக்க முடியவில்லை. தஞ்சைப் படைகளும் அறந்தாங்கி வழியாகத் திரும்பி ஓட்டமெடுத்தன.
கிழவன் சேதுபதியிடம் தோற்ற இந்தத் தோல்வி ராணி மங்கம்மாளுக்குப் பேரிடி ஆயிற்று. பல ஆண்டுகள் மதுரைச் சீமையைப் பற்றி நினைப்பதுகூடக் கெட்டகனவாக இருந்தது. கிழவன் சேதுபதி என்ற பெயரே சிம்மசொப்பனமாகிவிட்டது. அவரை அவளால் அசைக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்றும் சேதுபதி மடங்காமல் நிமிர்ந்து நின்று தன்னிச்சையாக ஆட்சிநடத்த முற்பட்டுவிட்டார்.
சில ஆண்டுகளில் மறவர் சீமைப் பகுதிகளிலும், இராமநாதபுரத்திலும் ஒரு கடும் வறட்சியும் பஞ்சமும் ஏற்பட்டன. அதே நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு ராணி மங்கம்மாளின் ஒத்துழைப்போடு தஞ்சை மன்னன் ஷாஜி மறவர் சீமையின் மேல் படையெடுத்தான்.
ராணி மங்கம்மாள் தான் நேரடியாக ஈடுபடாவிட்டாலும் ஷாஜியைக் கொண்டு சேதுபதியை இம்முறை ஒடுக்கிவிடும் நோக்குடன் அவனுக்கு எல்லா உதவிகளையும் மறைவாகச் செய்திருந்தாள்.
ஷாஜியின் படையெடுப்பு மார்க்கம் இம்முறை மாற்றப்பட்டிருந்தது. தஞ்சையிலிருந்து படைகள் அறந்தாங்கி வழியாக நாட்டிற்குள் நுழைந்தன.
சோற்றுப் பஞ்சமும் தண்ணீர்ப் பஞ்சமும் மறவர் சீமை வீரர்களை நலியச் செய்திருக்கும் என்று ஷாஜியும் மங்கம்மாளும் போட்டிருந்த கணக்குத் தப்பாகிவிட்டது.
கடுமையான பஞ்சத்தினால் பீடிக்கப்பட்டிருந்த போதிலும் மறவர் சீமை வீரர்கள் அடிபட்ட புலிபோல் சீறியெழுந்தனர். வயிற்றுப் பசியை விட நாட்டைக் காக்கும் தன்மானம் பெரிதெனப் போரில் இறங்கினர் மறவர்கள். அந்தச் சிரமதசையிலும் சேதுபதியின் கட்டளையைத் தெய்வ வாக்காக மதித்து அதற்குக் கீழ்ப்பணிந்து போரிட்டனர். பஞ்சமும், பசியும் அவர்களது வீரத்தையும் விசுவாசத்தையும் ஒரு சிறிதும் பாதிக்கவில்லை. பசியைவிட நாட்டைக் காக்கும் உணர்வு அவர்களிடம் பெரிதாக இருந்தது. அதன் விளைவாகத் தஞ்சை அரசன் ஷாஜியின் முயற்சி பலிக்கவில்லை. தஞ்சைப் படைகளையும், ஷாஜியையும் ஓட ஓட விரட்டினார்கள் மறவர் சீமை வீரர்கள். தஞ்சைப் படைகளும் ஷாஜியும் அறந்தாங்கி வரை பின்வாங்கி ஓட நேரிட்டது. சேதுபதி அறந்தாங்கியை வென்று அறந்தாங்கிக் கோட்டையைக் கைப்பற்றிக் கொண்டு விட்டார்.
தனக்கு ஓயாத தொல்லை கொடுத்து வந்த பல எதிரிகளை வெல்ல முடிந்தாலும் கிழவன் சேதுபதி என்ற மூத்த சிங்கத்திடம் மட்டும் ராணி மங்கம்மாளின் முயற்சிகள் பலிக்கவில்லை. சேதுபதி அஜாதசத்ருவாக இருந்தார். ராஜ தந்திரத்திலும் சரி, வீரத்திலும் சரி, போர் முறைகளிலும் சரி, அவரை வெல்வது மிகவும் அரிதாக இருந்தது.
அவருடைய சுட்டுவிரல் எந்தத் திசையில் எப்படி அசைகிறதோ அப்படி நடந்து கொள்ள மறவர் நாடு முழுதும் ஆயத்தமாக இருந்தது. மறவர் நாட்டிலிருந்த இந்தக் கட்டுப்பாடும் விசுவாசமும் சேதுபதியின் வலிமைகளாக அமைந்திருந்தன. அவரை யாரும் எதுவும் செய்து வீழ்த்த முடியாத மூலபலம் மறவர் சீமையில் அவருக்கிருந்த செல்வாக்கில் குவிந்திருந்தது.
கிழவன் சேதுபதி விஷயத்தில், இனி எதுவும் நம்மால் முடியாது என்ற முடிவுக்கு வந்தாள் ராணி மங்கம்மாள். தோல்வியை அவள் ஒப்புக் கொள்ள வேண்டியதாயிற்று. கிழவன் சேதுபதியை தானோ மற்றவர்களோ வெல்ல முடியாது என்பதற்காகக் கவலைப்பட்டதைவிட வேறொன்றிற்காக அவள் அதிகம் கவலைப்பட வேண்டியிருந்தது. சாம்ராஜ்யத்தை விஸ்தரிக்க முடியவில்லையே என்று கவலைப்படாவிட்டாலும் இருப்பதைப் படிப்படியாக இழந்துவிடக் கூடாதே என்ற கவலை முதன்முதலாக அவள் மனத்தில் இப்பொழுது மேலெழுந்து வாட்டத் தொடங்கியது.
பேரன் விஜயரங்கனின் வளர்ச்சியில் எந்தத் தனித் திறமையையும் காணமுடியாமல் இருந்தது வேறு அவள் மனவாட்டத்துக்குக் காரணமாயிற்று.
இராயசம் அச்சையாவே தளவாயானார். மறவர் நாடு தனி நாடாகச் சுயாதீனம் பெற்று நிமிர்ந்து நிற்பதை அவர்கள் சிரமத்தோடு ஜீரணித்துக் கொண்டு வாளா இருக்க வேண்டியதாயிற்று.
வயதாக வயதாகக் கிழவன் சேதுபதியின் வீரமும் பிடிவாதமும் அதிகமாயிற்றேயன்றிக் குறையவில்லை. நினைத்ததை முடிக்க முயலும்போது சேதுபதியின் விழிகளில் வீரக்கனல் தெறித்தது.
இந்தச் சமயத்தில் கிழவன் சேதுபதியின் பங்காளி ஒருவரைப் பிரிட்டோ பாதிரியார் மதம் மாற்றிக் கிறிஸ்துவராக்கியதால் மறவர் சீமையில் பெரும் புயல் வீசியது. சேதுபதி சீறி எழுந்தார். அதன் விளைவுகள் மிகவும் பயங்கரமாக இருந்தன.
……