மைசூர் மன்னர் மதுரை மீது சில நூற்றாண்டுகளுக்கு முன் படையெடுத்தார். தல்லாகுளம் பகுதியில் போர் நடந்தது. இதில் மைசூர் மன்னரின் படைவீரர்கள் பலர் பலியாகி தோற்றனர். எஞ்சிய மைசூர் நாட்டு சிப்பாய்களின் மூக்குகள் அறுக்கப்பட்டன. இதனால் அது மூக்கறுப்பு போர் என்றழைக்கப்பட்டது. இதன் வெற்றியை கொண்டாடும் வகையில் தற்போதுள்ள தமுக்கம் அருகே மண்டபம் ஒன்று கட்டப்பட்டது.
இதற்கு முந்தைய பெயர் “மைசூர் மண்டபம்’. வைகையாற்றில் இறங்கி விட்டு கோயிலுக்கு திரும்பும் அழகரை இந்த மண்டபத்தில் அலங்கரித்து, பூப்பல்லக்கில் எழுந்தருளச் செய்து வீதி உலா நடத்தப் பட்டது. காலங்கள் உருண்டன. ராமநாதபுரம் சேதுபதி மன்னர், அழகருக்கு செய்யும் சேவையில் தனது பங்கும் இருக்க வேண்டும் என்று விரும்பினார். இதற்காக கட்டளை மண்டகபப்படி ஒன்றை மைசூர் மண்டபத்தில் அமைத்தார். தற்போது மன்னர் சேதுபதி மண்டபம் என்று அழைக்கப்படும் இந்த மண்டபத்தில் பூப்பல்லக்கு நடக்கிறது. காலப்போக்கில் ராமநாதபுரம் சேதுபதி மண்டபம் என்று மக்களால் அழைக்கப்பட்டது இன்றும் தொடர்கிறது.
…