கரூர் அருகே, சோழர் கால வட்டெழுத்து கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் கழக உறுப்பினர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது:உத்தம சோழன் ஆட்சி, 975 யுவ ஆண்டு, 31ம் தேதி எழுதப்பட்ட வட்டெழுந்து கல்வெட்டு, கரூர் அருகே சணப்பிரட்டியில் கண்டெடுக்கப்பட்டது.
கல்வெட்டில், “ஸ்வஸ்திக் மகாகன தங்கள் நிலவலகன் ஈழ நக்கருழ் நக்கன் வி(ஜ)ய மண்டுகன் நக்கனை விட நன்றாழுனவன்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. கொங்கு நாட்டை உத்தம சோழன் ஆண்டபோது, காரி நக்கன் பெருந்தரவு சிற்றரசனாக இப்பகுதியில் ஆண்டார். இவரது ஆட்சி காலத்தில், தந்தையை விட மகன் விஜயமண்டுகன், சிறந்த போர் வீரனாக இருந்தார். இலங்கையில் நடந்த போருக்கு கொங்கு படைக்கு தலைமையேற்று சென்று, விஜயமண்டுகன் வீர மரணம் அடைந்தார்.
அதன் நினைவாக விஜய மண்டுகனுக்கு நடுகல் வைக்கப்பட்டுள்ளது.மூன்று வரிகளில் எழுதப்பட்ட வட்டெழுத்து கல்வெட்டு, அதன் கீழே அஷ்ட மங்கல சின்னங்களாக கொடுவாள், அரிவாள், கோடாரி, உடுக்கை, அங்குசம், கவரி, வில் அம்பு, குறுவாள், சூரியன், நங்கூரம் போன்ற சின்னங்களும் செதுக்கப்பட்டுள்ளன.தற்போது இந்த நடுகல்லை அப்பகுதி மக்கள், “கொடுவாகால் சாமி’ என்று வழிபடுகின்றனர். ஆடு, கோழி பலி கொடுத்தல், அமாவாசை தோறும் விளக்கேற்றல், என வழிபாடு நடக்கிறது.
….