திருமங்கை மன்னன் நீலன்


STORY
“”! உமது மகள் குமுதவல்லி பற்றி நகர் முழுவதும் பிரமித்துப்போய் பேசுவது பற்றிக் கேள்விப்பட்டேன். இன்று நான் நேரிலேயே அவளது அழகைக் கண்டு மயங்கிப் போனேன். சுற்றி வளைத்துப் பேச விரும்ப வில்லை. அவளை நான் மணக்க விரும்புகிறேன்.”

வெள்ளைக் குதிரைமீது மன்மதன்போல உலா வந்து நின்ற திருமங்கை மன்னன் நீலன் அவ்வாறு கேட்டதும், குமுதவல்லியின் பெற்றோர் அப்படியே திகைத்துப் போய் நின்றுவிட்டனர். இந்தத் தேனினும் இனிய வார்த்தைகளுக் காகத்தானே அந்தத் தம்பதியர் இதுகாறும் தவமிருந்தனர். சோழ வேந்தனுக்குப் பல போர்க்களங்களில் மாபெரும் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தவன் இந்த நீலன். வீரத்தால் வேந்தனின் நன் மதிப்பைப் பெற்ற நீலன், தமது கல்வி ஆற்றலால் அரசனின் நெஞ்சில் நிலை யான இடத்தையும் பெற்றான்.
நீலனைப் பெருமைப்படுத்தும் பொருட்டு சோழ வேந்தன் அவனைத் திருவாலிநாட்டிற்க்கு மன்னனாக்கி திருமங்கை என்னும் ஊரை தலைநகராக தந்தான். படைக்குத் தளபதியாக இருந்து பகைவர்க்குக் காலனாக விளங்கிய நீலனுக்கு “பரகாலன்’ எனும் வீரப்பட்டத் தையும் அளித்தான்.

இதுநாள் வரை பக்தியில் திளைத்துப் பரமனை மனதில் நினைத்துக் கொண்டிருந்த நீலன், மன்னன் என்ற பதவியைப் பெற்ற பின்பு பரமனை மறந்து, பொன்னாசையும் பெண்ணாசையும் மண்ணாசையும் கொண்டான். ஆலயம் சென்று மாதவனைத் தொழும் எண்ணம் போய் அந்தப்புரமே கதியென்று கிடந்தான்.

ஊர்வசியோ மேனகையோ என்று ஊரார் வாயூறச் சொல்லிக் கொண்டிருந்த வர்ணனை, திருமங்கை மன்னனை சில நாட்களாகவே துயில விடாமல் செய்து, அவனைப் புரவிமீது ஏறி இன்று குமுதவல்லியின் வீட்டுக்கே கொண்டு வந்துவிட்டது.

“நாங்கள் மிகவும் கொடுத்து வைத்திருக்கிறோம். பூர்வ புண்ணியம் செய்ததாலேயே இத்தகைய பேறு எங்களுக்கு வாய்த்தது!” என்று கூறியபடியே குமுதவல்லியின் பெற்றோர் மகளை அழைத்து வந்தனர்.

“”தந்தையே! நான் திருநாங்கூர் பெருமானின் திருவடிகளைத் தஞ்சம் என்று பற்றியுள்ளேன். ஒரு வைணவ அடியாரை மணக்க வேண்டும் என்று மனதிற்குள் முடிவு செய்துள்ளேன். ஆகையால் என்னை மணக்க விரும்பும் இவரை திருமங்கை மன்னனாகப் பார்ப்பதைவிட ஒரு திருமால் அடிய வராகப் பார்ப்பதிலேதான் பேரின்பம் கொள்வேன்.”

குமுதவல்லி என்ன கூற விரும்புகிறாள் என்று குழம்பிய விழிகளுடன் அப்போது அனைவரும் ஏறிட்டுப் பார்த்தனர்.

“”ஆம் தந்தையே! திருமங்கை மன்னர் முதலில் போர் வெறியை மறக்க வேண்டும். அடுத்தபடியாக வேற்றுப் பெண்ணை மனதிலும் நினையாது, பரமனின் சேவடி மறவா சிந்தனையுடைய திருத் தொண்டராக மாறினால் இவரை நான் மணக்கச் சம்மதிக்கிறேன்” என்று கூறினாள் குமுதவல்லி.

அவளுடைய நிபந்தனை மனதை உறுத்திய போதிலும், அவளது ரூபலாவண்யத்தில் லயித்துப் போயிருந்த திருமங்கை மன்னன் அவளது விருப்பத்துக்கு மறுப்பு கூறவில்லை. அவளது நிபந்தனைக்குக் கட்டுப்பட்டான்.

அப்போதே மன்னன் அங்கிருந்து விடை பெற்று திருநறையூர் வந்தான். அங்கு கோவில் கொண்டுள்ள நம்பியை நாவால் துதித்து மேனியால் தண்டம் சமர்ப்பித்துப் பணிந்து போற்றினான்.

நம்பியின் திருவருளால் திருமங்கை மன்னன் பரம வைணவரானார். “”அன்பரே! திருமங்கை மன்னர் என்று புகழப்படும் நீ, இனிமேல் திருமங்கை ஆழ்வார் என்று அழைக்கப்படுவாய். எமது திருப்பதிகள் தோறும் சென்று பாடி எம்மை மகிழ்விப்பீராக” என்று எம்பெருமான் சங்கு சக்கரதாரியாகக் காட்சி தந்து அருள்பாலித்து மறைந்தார்.

திருமங்கை ஆழ்வாராகத் திருமேனியில் திருமண் பிரகாசிக்க, துளசிமணி மாலைகளும் தாம்பிரமணி மாலைகளும் அணிந்து பரம ஸ்ரீவைணவ புருஷராக மாறிய மன்னர், அக்கணமே அமைச்சர் புடைசூழ மீண்டும் குமுதவல்லியின் இல்லம் நோக்கிப் புறப்பட்டார்.

குமுதவல்லியின் இல்லத்தை அவர்கள் அடைந்தபோது, திருமங்கை மன்னரின் தோற்றம் கண்டு பக்திப் பரவசம் கொண்டு, அனைவரும் அவரது பாதங்களைத் தொழுது பணிந் தனர்.

அப்போது குமுதவல்லி மிகுந்த பணிவுடன் மன்னர் முன்பு போய் நின்றாள்.

“”சுவாமி! இந்த அடியாளைத் தாங்கள் பொறுத்தருள வேண்டும். நான் கேட்டுக் கொண்டதற்கிணங்கி தாங்கள் வைணவப் பெரியாராக மாறியது கண்டு பரமானந்தம் அடைந்தேன். அடியவளுக்கு மற்றுமொரு விண்ணப்பம் உள்ளது.

தாங்கள் ஓராண்டு காலம் நாள்தோறும் ஆயிரத்தெட்டு ஸ்ரீவைணவ அடியார்களுக்கு அமுது செய்வித்து, அவர்களுடைய ஸ்ரீபாத தீர்த்தமும் தளிகைப் பிரசாதமும் அங்கீகரித்து நிறைவேற்ற வேண்டும். எனது இந்த நோன்பிற்கு இணங்குகிறேன் என்று பிரதிக்ஞை செய்து கொடுத்தால், தங்களை விவாகம் செய்து கொள்ள இக்கணமே ஒப்புதல் அளிக்கிறேன்” என்றாள் குமுதவல்லி.

குமுதவல்லி அவ்வாறு கூறியபோது திருமங்கை ஆழ்வார் யாதொரு மறுப்பும் கூறாது ஏற்றுக் கொண்டார். தாம் அவளது விருப்பம்போலவே திருத்தொண்டர்களுக்குத் தினமும் அமுது படைப் பேன் என்று சபதம் எடுத்துக் கொண்டார். குமுத வல்லியும் ஆழ்வாரை மணக்கச் சம்மதித்தாள்.

சோழ சாம்ராஜ்யத்திலுள்ள அனைத்து சிற்றரசர் களுக்கும் மண ஓலை அனுப்பப்பட்டது. மாமுனிவர் களுக்கும் மகான்களுக்கும் அழைப்புகள் அனுப்பப் பட்டன.

திருமங்கை ஆழ்வார் குமுதவல்லியின் கரம் பற்றியதும், ஆயிரத்தெட்டு அடியார்களுக்கு அனுதினமும் சமாராதனை ஆரம்பமானது.

அவருடைய அரண்மனையில் பெரும் பந்தல் போட்டு, மடப்பள்ளி தனியாகக் கட்டி, நூற்றுக் கணக்கான பரிசாரகர்கள் இதற்காகவே அமர்த்தப் பட்டனர்.

திருமங்கை ஆழ்வாரின் அரண்மனையில் பரம திருப்தியுடன் போஜனம் முடித்துச் செல்லும் அன்பர்கள், மன்னனையும் மகாராணியையும் வாழ்த்திவிட்டுச் சென்றனர்.

அடியவர்களின் வாழ்த்தொலியானது திருமங்கை ஆழ்வாரின் மனதில் இனம் புரியாத ஒரு மலர்ச்சி யினை ஏற்படுத்தியது. அந்த உணர்வானது பரந்தாம னின் திருவடிகளிலே ஒரு நிலையான பக்திப் பேரலையை உருவாக்கியது.

பெண்ணாசையில் மயங்கித் திரிந்த காலத்தில் குமுதவல்லியின் பேரழகைப் பற்றி நாட்டு மக்கள் அனைவரும் சொல்லக்கேட்டு, அவளை எப்படியும் மணந்து இரவுகள் பாராது சுகானுபவத்தில் திளைக்க வேண்டும் என்று நினைத்திருந்த திருமங்கை மன்னன் திருமங்கை ஆழ்வாரானபின்- அவளை மணந்தபின் முழுக்க முழுக்க அடியவர் சேவையில் மூழ்கி தேக சுகம் பற்றிய சிந்தனை ஏதுமின்றிப் போனார்.

அவருக்குள் முன்பிருந்த சிற்றின்ப உணர்வு அவரைவிட்டு விலகி, அவரது மனம் முழுவதும் பேரின்பம் பலமாகப் பற்றிக் கொண்டது.

அதுபோலவே எப்போதும் போர்க்களம் என்று போரில் தினமும் ஆயிரம் வீரர்களைக் கொன்று குவித்துக் கொண்டிருந்த திருமங்கை மன்னர், இப்போது தினமும் ஆயிரம் அடியார்கள் அன்ன தானப் பந்தியில் இருக்க, அவர்களுக்குச் சேவை புரிவதிலேயே சிந்தனையைச் செலவழித்துக் கொண்டிருந்தார்.

அரண்மனை கஜானாவிலிருந்த பணமனைத்தும் அன்னதானத்துக்குச் செலவாயிற்று. சோழவேந்த னுக்கு கப்பம்கூடக் கட்ட முடியாமல் போயிற்று. சோழ மன்னனோ கப்பம் வராத கோபத்தில் திருமங்கை ஆழ்வார்மீது பெருஞ்சினம் கொண்டான்.

அமைச்சர்களை அனுப்பி வசூல் செய்துவர சோழ மன்னன் உத்தரவிட, அவர்கள் திருமங்கை ஆழ்வார் நாட்டிற்கு வந்தனர்.

“திருமங்கை மன்னன் குமுதவல்லி எனும் ஒரு பெண்ணுக்காக அரண்மனைப் பணம் முழுவதையும் செலவழித்து, தினமும் 1008 அடியார்களுக்கு அன்னதானம் செய்து வருகிறான்’ என்று கூறக் கேட்டு அவர்கள் வெறுப்படைந்தனர்.

ஊரார் சொல்லியதைப்போலவே, பக்தர்கள் மார்பில் சந்தனமும் கையில் விசிறியும் கொண்டு ஆயிரக்கணக்கில் அன்னதானம் உண்டு செல்வதைக் கண்ட அமைச்சர்கள், மன்னரிடம் சென்று கப்பப் பணம் பற்றிக் கேட்டனர். மன்னர் அப்பணத்தை விரைவில் செலுத்திவிடுவதாகக் கூறி அனுப்பி வைத்தார். அந்த அமைச்சர்களும் சோழ மன்னனிடம் சென்று திருமங்கையாழ்வாரைச் சந்தித்த விவரத்தைத் தெரிவித்தனர்.

ஆனால் திருமங்கை ஆழ்வார் சொன்னபடி கப்பப் பணத்தைப் பலமுறை கேட்டும் செலுத்த வில்லை. அவரது எண்ணமெல்லாம் அடியார்க்கு அமுது படைப்பதிலேயே இருந்து வந்தது.

பொய்யான தவணைக்கு எத்தனை முறைதான் பொறுப்பான் சோழ மன்னன்? திருமங்கை மன்னனைக் குறி வைத்து ஒரு கோபப் புயல் புறப்பட்டு வந்தது…பொய்யாகத் தவணை சொல்லி அனுப்பி வைத்த திருமங்கை ஆழ்வார் மீது கோபம் கொண்ட சோழ மன்னன், “”இனியும் பொறுக்க முடியாது. அந்தத் திருமங்கை மன்னனை இப்போதே சென்று சங்கிலியால் கட்டி இழுத்து வந்து என் முன்னால் நிறுத்துங்கள்!” என்று ஆணை எழுதி அனுப்பினான்
சோழ மன்னன் அவ்வாறு கட்டளையிட்ட பின் அமைச்சர்கள் என்ன செய்ய முடியும்! காவலர் புடைசூழ திருமங்கை மன்னர் முன் போய் நின்றனர்.

அவர்கள் நீட்டிய சோழ மன்னனின் ஆணையை வாசித்துப் பார்த்த திருமங்கை மன்னர் அதை வீசியெறிந்தார்.

“”எத்தனை ஆணவம் இருந்தால் உங்கள் சோழ மன்னர் களம் பல கண்ட என்னை சிறைப் பிடித்து வரச் சொல்லுவார்? அடியவருக்கு அடிபணியும் இந்த திருமங்கை மன்னன் ஒரு போதும் அரசருக்குமுன் முடி பணிய மாட்டான். போரில் சந்திப்போம்” என்று கர்ஜித்துச் சொல்லி அமைச்சர்களை அனுப்பினார்.

திருமங்கை மன்னனின் சினம் கொண்ட வார்த்தைகளையும் எச்சரிக்கையையும் கேட்டு வெகுண்டெழுந்தான் சோழன்.

உடனே போருக்கான ஆயத்தங்களை முடுக்கி விட்டான். உறையூரில் இருந்து சதுரங்க சேனைகள் புறப்பட்டன. சோழ மன்னனும் படையோடு புறப்பட்டுச் சென்றான்.

திருமங்கை மன்னரும் போர்க்கோலம் பூண்டு தன்னுடைய ஆடன்மா குதிரை மீதமர்ந்து வீரர்கள் புடைசூழ போர்க்களம் புகுந்தார்.

அத்தனை மூர்க்கமான போரை எதிர் பார்க்காமல் சோழ மன்னனும் திணறிப் போனான். அப்போது திருமங்கை மன்னர் சோழ மன்னன் முன்பாகப் போய் நின்று, “”சோழ மன்னா! கப்பம் கேட்டு என்னைச் சிறை செய்து இழுத்து வர ஆணையிட்டாயே… இப்போது சிறையிழுத் துச் செல்லப்பட வேண்டியவன் நீயா? நானா?” என்று கோபம் கொண்டு கேட்டார்
“”திருமங்கை மன்னனே! நான்தான் உன்னை திருமங்கை நாட்டுக்கு மன்னனாக்கினேன். அந்த நன்றியை மறந்து ராஜ துரோகியாக என் முன்னே நிற்கிறாய். நான் உனக்கு மன்னர் பதவியை அன்று கொடுக்காதிருந்தால், நீ அன்னக்காவடியாகத் திரிந்து கொண்டிருப்பாய். அதனை நினைவில் வைத்துக்கொள். நன்றி மறந்தவனே, செய்நன்றி கொன்றவனே! நீ ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்து ஒன்றும் ஆகப் போவதில்லை!” என்று சோழ மன்னன் கூறினான்.

அதனைக் கேட்ட திருமங்கை மன்னரின் மனம் சலனப்பட்டது. செய்நன்றி என்ற வார்த்தை அவரது மனதுக்குள் கூர்வாளாய்க் குத்தியது.

திருமங்கையாழ்வார் சோழ மன்னனிடம், “”அரசே! இந்த நீலன் நன்றி கொன்றவர் மரபில் பிறந்தவன் அல்லன். என் வாளை உறையில் போட்டுவிட்டேன். உங்கள் எண்ணப்படி என்னைச் சிறை எடுத்துக் கொள்ளுங்கள்” என்றார்.

அப்போது ஆழ்வாரின் மனதை அரசனின் வார்த்தைகள் எப்படிச் சலனப்படுத்தியதோ, அதேபோல் திருமங்கை மன்னரின் சொற்கள் சோழ மன்னனுக்குள்ளும் ஒரு பெருமாற்றத்தை ஏற்படுத்தியது.

“”திருமங்கை மன்னா! உமது வீரத்துக்கு யாம் தலைவணங்குகிறோம். கப்பப் பணத்தை எப்படியும் மூன்று நாட்களுக்குள் கட்டிவிட வேண்டும். அதுவரை சோழ நாட்டுத் தேவாலயம் ஒன்றில் உம்மைச் சிறை வைப்போம்” என்று சோழ மன்னன் கூறினான்.

அதற்கு திருமங்கையாழ்வார் மறுப்பேதும் கூறவில்லை. அவரை ஒரு பெருமாள் கோவிலுக் குள் தங்க வைத்து வெளியே காவல் இட்டனர். ஆழ்வார் பெருமாளைப் போற்றிப் பணிந்தார்.

“அடியவர்களுக்கு அமுது படைப்பதற்குத் தானே என் செல்வம் அத்தனையும் செலவழித் தேன். அது குற்றமா? அப்படியென்றால் எனக்கு நேர்ந்துள்ள பழி நீங்கும்வரை நான் அமுது செய்ய மாட்டேன்’ என்று பெருமாளிடம் புலம்பியபடி தியானத்தில் லயித்து விட்டார்.

மூன்றாவது நாளன்று ஆழ்வாரின் கனவில் சங்கு சக்கரதாரியாக வரதராஜப் பெருமாள் காட்சியளிக்க, திருமங்கையாழ்வார் நெடுஞ்சாண் கிடையாகச் சேவித்தார்.

“”அன்பரே! கவலை வேண்டாம். நீர் காஞ்சியம்பதிக்கு வருவீராக. திரைப்பணம் யாவும் தந்து உம் குறை போக்குவோம்” என்று திருவாய் மலர்ந்து மறைந்தார்.

திருமங்கை ஆழ்வாரின் கனவில் பெருமாள் காட்சி தந்து மறைந்ததும், அவர்மீது மெய்யுருக பைந்தமிழ்ப் பாசுரம் பாடி போற்றிப் பணிந்தார்.

விடிந்ததும் சோழ மன்னரின் அமைச்சர்களை அழைத்து, “”அமைச்சர்களே! தாங்கள் அனைவ ரும் என்னுடன் காஞ்சியம்பதிக்கு வாருங்கள். நான் செலுத்த வேண்டிய திரைப்பணத்தை அங்கே செலுத்துகிறேன்” என்றார்.

அதன்படியே ஆழ்வாருக்குப் பின்னால் அந்த அமைச்சர்கள் காஞ்சியம்பதி சென்றனர். காஞ்சியம்பதி சென்ற திருமங்கை ஆழ்வார் நேராக வரதராஜப் பெருமாள் சந்நிதிக்குச் சென்றார்.
“”காஞ்சி வரதராஜப் பெருமாளே! என் கனவில் வந்து திரைப்பணம் தருவதாகச் சொல்லி என்னை இங்கு வர வழைத்தாயே… பொன்னிருக்கும் இடத்தைக் காட்டி என்னைக் காத்திடுவாய்…” என்று பாமாலை பாடிப் புலம்பினார் திருமங்கை ஆழ்வார்.

ஆழ்வாரின் பாசுரம் கேட்டு பெருமாள், “”அன்பரே! கவலை வேண்டாம். அடுத்துள்ள வேதவதி தீரத்தில் பொற்குவியல் இருக்கும் இடத்தை உமது ஞானதிருஷ்டியில் காண்பீராக” என்று திருவாய் மலர்ந்தருளி மறைந்தார்.

வரதராஜப் பெருமாளை வண்ணத் தமிழால் வாயார வாழ்த்திப் பாடியபடி, பரவசம் கொண்டவராய் அமைச்சர்களை அழைத்துக் கொண்டு வேதவதி நதி தீரம் சென்றார் திருமங்கையாழ்வார்.

தமது ஞானதிருஷ்டியால் பொன்னிருக்கும் இடத்தைக் கண்டறிந்தார். அந்த தெய்வீக அற்புதம் கண்ட மாத்திரத்தில் அனைவரும் அதிசயித்து நின்றனர்.

அமைச்சர்களும் மற்றவர்களும் திருமங்கை ஆழ்வாரின் பாதார விந்தங்களில் பணிந்து பிழை பொறுக்க வேண்டினர்.

பெருமாளின் பேரருள் பெற்ற திருமங்கை ஆழ்வாரை வரவேற்க சோழ மன்னன் உறையூர் எல்லையிலேயே நின்று வரவேற்று நமஸ்கரித்து, அரண்மனைக்கு அழைத்துச் சென்று உயர்ந்த ஆசனத்தில் எழுந்தருளச் செய்தான்.

சோழ மன்னனிடம் திரைப்பணத்தை திருமங்கையாழ்வார் கொடுத்தபோது, அதனை அவரிடமே திரும்பக் கொடுத்து, “”சுவாமி, தங்கள் பெருமையை உணராமல் தங்களை மிகுந்த சிரமத்துக்குள்ளாக்கிவிட்டேன். அடியார்க்கு அமுது அளிக்கும் பெரும் பாக்கியத்தைச் செய்து கொண்டிருந்த தங்கள்மீது போர் தொடுத்துப் பெரும் பாதகம் செய்துவிட்டேன். என்னைத் தயவு செய்து பொறுத்தருளுங்கள். இனி தாங்கள் எனக்குத் திரை செலுத்த வேண்டியதில்லை. இப்பணத்தை அடியார்க்கு அமுது படைக்க எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினான்.

மன்னவன் கொடுத்த காணிக்கையை ஏற்றுக்கொண்ட ஆழ்வாரைத் தக்க மரியாதை களுடன் அவரது நாட்டிற்கு அனுப்பி வைத்தான் சோழ மன்னன்.

நாடு திரும்பிய ஆழ்வாரை அன்புடன் எதிர்கொண்ட மனைவி குமுதவல்லி, வரதராஜப் பெருமாளின் பேரருள் கிடைத்த செய்தியினைக் கேட்டு பேரானந்தம் கொண் டாள்.

அதன்பின்பு எப்போதும் போல் திருமங்கையாழ்வார் அடியார்க்கு அமுது செய்துவரும் பணியினைச் செய்து வந்தார். தொடர்ந்து செய்து வரும் காலத்தில் மீண்டும் தடை ஏற்பட்டது. ஆழ்வார் தமக்குச் சொந்தமான அணி ஆபரணம் யாவும் விற்று அமுது செய்து வந்தும் பணம் போதவில்லை.

கஜானாவும் காலியாகி விட்டது. பொருள் பற்றாக்குறை பற்றிய கவலை ஆழ்வாரை வாட்டி யது. யாருக்கும் தெரியாமல் செல்வந்தர்களிடம் திருடுவது என்ற முடிவுக்கு வந்தார்.
திருமண் துலங்கும் அடியார்களை மட்டும் தொடாமல் திருடுவது என்று திட்டமிட்டார். காடுகளிலும் குகைகளிலும் மறைந்து கொண்டு திருத்தொண்டு நடத்துவதற்குத் திருடும் தொழிலை திருமங்கையாழ்வார் செய்து வந்தார்.

அன்று…

ஸ்ரீமந்நாராயணனும் நாச்சியாரும் ஸ்ரீவைண வத் தம்பதியர்களாகத் திருக்கோலம் பூண்டு, சுமக்க முடியாத அளவுக்கு அணிமணி ஆபரணங்களையும் நவரத்தின மணிமாலை களையும் அணிந்துகொண்டு, திருமணக்கோலம் பூண்டவர்களாகப் பல்லக்கில் அமர்ந்து தேவர்கள் புடைசூழ, ஆழ்வார் பதுங்கியிருந்த குகை வழியே வந்து கொண்டிருந்தனர்.

குகையில் இருந்தபடியே யாவற்றையும் நோட்டம் பார்த்த திருமங்கையாழ்வார், திருமணக் கோஷ்டி வருவது கண்டு மனம் மிகவும் குதூகலித்தவராய், தமது அந்தரங்க வீரர்களுடன் கையில் வாளும் வேலும் ஏந்தி பின்னால் வந்து, “”அப்படியே நில்லுங்கள்” என்று குரல் கொடுத்தார்.

அந்த மிரட்டும் குரல் கேட்டுப் பல்லக்கு இறக்கப்பட்டு தரையில் வைக்கப்பட்டது. அப்போது ஆழ்வார் பல்லக்கின் அருகே வந்து, “”திருமணத் தம்பதியர்களே! உங்கள் வாழ்வு வளம்பெற வேண்டுமானால் பல்லக்கில் குண்டுமணி நகைகூட இல்லாமல் அத்தனை யையும் கழற்றிக் கொடுத்துவிடுங்கள். வீண் குழப்பம் செய்தால் உங்கள் திருமண வாழ்க்கை சுவர்க்கத்தில்தான் நடக்கும்” என்று மிரட்டினார்.

ஸ்ரீமந்நாராயணன் தன் நெஞ்சைக் கொள்ளை கொண்ட திருமங்கை ஆழ்வாரைப் பார்த்துப் புன்னகைத்து, “”நீ வைணவ பக்தனான கொள்ளைக்காரன் போலத் தெரிகிறது. எங்களை ஒன்றும் செய்துவிடாதே. அணிமணி ஆபரணங்களை அப்படியே கழற்றித் தந்து விடுகிறோம்” என்றார்.

அதன்படியே அத்தனை அணி ஆபரணங் களையும் எல்லாரும் கழற்றி ஆழ்வாரிடம் சேர்ப்பித்தனர். ஸ்ரீமந்நாராயணனும் எல்லா வற்றையும் கழற்றிக் கொடுத்துவிட்ட போதிலும், அவரது கால் விரலில் பத்திரமாக இருக்கும் கணையாழியைப் பார்த்து விட்டார் திருமங்கை ஆழ்வார்.

“”அந்தக் கணையாழியையும் கழற்றிக் கொடு” என்று கர்ஜித்தார்.

“”அதனாலென்ன, நம் கலியனுக்காக நாம் எல்லாவற்றையும் கழற்றித் தருவோம்” என்று பெருமாள் கூறியதைக் கேட்டு ஆழ்வாருக்குள் ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது.

இந்த மணமகனுக்கு எப்படி நம்மை அடை யாளம் தெரிந்தது என்று ஆழ்வார் யோசித்துக் கொண்டிருந்தபோது, “”அன்பரே! இதை மட்டும் என்னால் கழற்ற முடியவில்லை. விரலோடு இறுகி விட்டது. வேண்டுமானால் நீயே கழற்றிக் கொள்” என்றார் பெருமாள்.

உடனே திருமங்கையாழ்வார் பரமனின் கால் விரலிலிருந்த கணையாழியைப் பற்களால் கடித்துக் கழற்றினார். பக்தனின் இச்செயல் பரமனுக்குப் பரமானந்தமாக இருந்தது.

ஸ்ரீமந்நாராயணனின் திருமேனியில் அலங்கரிக்கப்பட்ட வஸ்திரத்தை எடுத்து, அதில் கொள்ளையடித்த அணி ஆபரணங்களை எல்லாம் வைத்துக் கட்டி, தமது படைவீரர்க ளிடம் அவற்றைத் தூக்கிக் கொண்டு வரும்படி ஆழ்வார் கட்டளையிட்டார்.

படைவீரன் ஒருவன் அலட்சியமாக அந்தப் பொன்மூட்டையைத் தூக்க முயன்றபோது அதை அவனால் அசைக்கக்கூட முடியவில்லை.

பெரும் மலைபோல கனம் உணர்ந்து மற்றவர் களையும் அழைக்க, பலரும் ஒன்று சேர்ந்து முயன்றும் அந்த மூட்டையை யாராலும் அசைக்க முடியவில்லை. திருமங்கையாழ்வார் அதைப் பார்த்து அதிசயித்துத் தாமும் போய்த் தூக்க முயன்றார்; முடியவில்லை.
உடனே கோபத்துடன் மணமகனாகப் பல்லக்கில் உட்கார்ந்திருக்கும் நாராயணனைப் பார்த்து, “”நீ பெரிய சித்து விளையாட்டு எல்லாம் கற்று வைத்திருப்பவன் போல் தெரிகிறது. நீ ஏதோ மந்திரம் போட்டு நான் கட்டிய மூட்டை யைக் கட்டுப்படுத்தியிருக்கிறாய். ஒழுங்காக அந்த மந்திரத்தை விலக்கி நாங்கள் இந்த மூட்டையைத் தூக்கிச் செல்லும்படி செய். இல்லையேல் உனக்கு இங்கு வழி பிறக்காது” என்று அதட்டினார் திருமங்கையாழ்வார்.

“”கலியா! ஏன் கோபப்படுகிறாய். உனக்குத் தெரியாத மந்திரமா? அல்லது மந்திரத்தை மறந்து போனாயா? சரி; வா. நான் உன் செவிகளில் மீண்டும் ஓதுகிறேன்” என்று நாராயணன் கூறினார்.

திருமங்கையாழ்வார் நாராயணனின் பவள இதழ்களுக்கு அருகே தன்னுடைய செவியைக் கொண்டு போனார்.

“ஓம் நமோ நாராயணா’ எனும் அஷ்டாக்ஷர நாமத்தை அவனது செவிகளில் ஓதினார் நாராயணன். திருமங்கை ஆழ்வாரின் செவியில் அமிழ்தம் பாய்ந்தாற்போல அந்தத் திருமந்திரம் நாராயணன் நாவிலிருந்து வெளிப்பட்டுப் பாய்ந்ததும் அவரது ஞானக்கண்கள் திறந்தன.

கைகளிலிருந்த வாளும் வில்லும் தானாக நழுவின.

“”பெற்ற தாயினும் ஆறுதலினைச் செய்யும் நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்” என்று வாயாரப் புகழ்ந்து போற்றினார் திருமங்கை ஆழ்வார். நெடுஞ்சாண்கிடையாக நிலம் கிடந்து சேவித்துத் தொழுது எழுந்தபோது அங்கே பல்லக்கு இல்லை. மணமக்கள் இல்லை. உற்றார் உறவினர் எவருமில்லை. பொன் மூட்டையுமில்லை. ஆனால் அந்த இடத்திலே ஒரு திவ்யப் பேரொளி ஆழ்வார் கண்களுக்கு மட்டும் தெரிந்தது!
thanks to http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=485

HISTORY

கள்ளர் குலத்தில், பிறந்தவர் , 12 ஆழ்வார்களில் ஒருவர் , முனையஅரையர்  பட்ட பெயர்
திருமங்கையாழ்வார் கள்ளர் மரபைச் சேர்ந்தவர்.

திருமங்கை மன்னரின்இயற்பெயர் நீலன். சோழ மன்னனின் சேனைத் தலைவர் ஆலிநாடன் என்பவர்க்கும் மனைவிவல்லித்திருவுக்கும் நள ஆண்டில் கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரத்தில் பௌர்ணமி திதியில் வியாழக்கிழமை அன்று திருமங்கை மன்னன்திருமங்கையாழ்வார் என அழைக்கப்பட்ட நீலன்பிறந்தார். நீலன் கல்வி கற்க்கும்போதே இலகணப்பிழையின்றி கருத்துச் செறிவுள்ள பாக்களை இயற்றும் ஆற்றலைப்பெற்றிருந்தார். ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்னும் நால்வகைக் கவிகளில் வல்லவராக விளங்கி நாற்கவி வல்லான் என்ற சிறப்பு பெயரையும் பெற்றார்.

வாள், வில், வேல், ஈட்டி ஆகியபடைக்கலப் பயிற்சியிலும் வல்லவனானார். தேர், யானை, குதிரை, காலால் ஆகிய நால்வகைப் படைகளையும் தலைமை யேற்று பகைவர்களை வென்று சோழ மன்னருக்குபெரும் வெற்றிகளை தேடித்தந்தார். சோழ மன்னர் அகமகிழ்ந்து நீலனை திருவாலிநாட்டிற்க்கு மன்னனாக்கி திருமங்கை என்னும் ஊரை தலைநகராக தந்தான்.

நீலன்குமுதவல்லியார் என்பவரை மணந்து தன் வாழக்கைப் பயணத்தை தொடங்கினார். தன் கையில்கிடைத்த செல்வத்தை எல்லாம் பாகவதர்கட்கு அமுது படைப்பதிலேயே செலவழித்தார். அரசனுக்கு சேரவேண்டிய வரிப்பணத்தையும் இதற்கே செலவழித்தமமையால் அரசு காவலில் சிறைவைக்கப்பட்டு பின்னர் காஞ்சிப் பேரருளான்வரதராசப்பெருமாள் திருவருளாள் பெரும் பொருள் பெற்று அரசுக்குரிய கப்பத்தை செலுத்தியும் சிறை மீண்டார்.திருவரங்கப் பெருமாள் நீலனின் வலது காதில் ஓம் நமோ நாராயணா என்னும் திருமந்திரத்தை உபதேசித்து அவரின்ஞானக்கண்ணைத் திறந்து திருவருள் காட்டினார்.இதன் பின் திருமங்கையாழ்வார் 108 திவ்விய தேசங்களில் 86 திவ்விய தேசங்களை மங்களாசாசனம் செய்தார்.

திருமங்கையாழ்வார்பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிரியதிருமடல், பெரியதிருமடல் என்கிற ஆறுபிரபந்தங்களையும் அருளிச்செய்துள்ளார்.திருமங்கையாழ்வார் தம் இறுதிக்காலத்தை தம் மணைவியுடன் திருக்குறுங்குடியில் கழித்தார்.
நன்றி http://kallarperavai.webs.com/apps/blog/entries/show/1999492-thirumangai-ஆல்ல்வர்

நன்றி:
மாய தேவர்

This entry was posted in சோழன் and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *