தேவரின் நாடாளுமன்ற முழக்கம்

1957ல் நடந்த ஸ்ரீவில்லிபுத்தூர் நாடாளுமன்றத் தேர்தலில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வெற்றி. அதன்பின் முதுகுளத்தூர் சட்டப்பேரவை இடைத் தேர்தல். இமானுவேல் கொலை. கீழத்தூவல் படுகொலை. 1957 ஜனவரி 28 நள்ளிரவு கைது. தொடர் சிறை வாழ்க்கை. 1959 ஜனவரி 7ல் விடுதலை. அதன்பின் தமிழகம் முழுவதும் தொடர் முழக்கம். அதனால் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டும் இரண்டாண்டு கழித்துத்தான் நாடாளுமன்றத்தில் பசும்பொன் தேவரின் முழக்கம் ஒலித்தது.

1959 பிப்ரவரி 13.

இன்றுதான் பசும்பொன் முத்துராமலிங் தேவர் நாடாளுமன்றத்தில் முழங்க நேரம் ஒதுக்கப்பட்டது. பின் 16 ஆம் தேதியாக அது மாற்றப்பட்டது. இறுதியில் 17ஆம் தேதியின் அந்த வாய்ப்பு பசும்பொன் தேவருக்கு கிடைத்தது. அதுவும் மாலை 4.45க்கு. மாலை 5 மணிக்கு நாடாளுமன்றம் முடிந்துவிடும். இந்த இடைப்பட்ட கால் மணி நேரத்தில் தமது கருத்து முழுவதையும் பசும்பொன் தேவர் வெளியிட வேண்டும். எழுந்தார் பசும்பொன் தேவர். ஆங்கிலத்தில் தொடர்ந்தார் முழக்கத்தை. அதுவரை கேட்டறியாத பசும்பொன் தேவரின் ஆங்கில முழக்கத்தை கேட்டு வடமாநிலத் தலைவர்கள் விழிகள் மூட மறந்தன.
மறுநாள் வெளிவந்த இந்தியன் எக்ஸ்பிரஸின் டெல்லிப் பதிப்பு.

Mr. Muthuramalinga Thevar the last speaker of the day, held the attention of the house with his fiery oratory”

என்று தேவரின் நாடாளுமன்ற முழக்கம் பற்றி குறிப்பிட்டது. இனி, நாடாளுமன்றத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் முழக்கம். தமிழில் தந்திருப்பது ஏ.ஆர். பெருமாள்.
ஐயா,
ஜனாதிபதியவர்களின் தலைமையுரை மீது பேச வேண்டிய இவ்வேளையில், நமது வெளிநாட்டுக் கொள்கை, காமன்வெல்த் தொடர்பு முதலியவை பற்றி இடையே கொஞ்சம் விவரிக்க விரும்புகிறேன் – விவரிக்க வேண்டியது அவசியமும் கூட.
காமன்வெல்த் என்பதன் பெயரால் நாம் ஒரு கூட்டுறவில் பிணைக்கப்பட்டிருக்கிறோம். ஆனால், நாம் பிணைக்கப்பட்டுள்ள காமன்வெல்த் என்ற கூட்டுறவின் பங்காளிகள், நமது நாட்டையும், செல்வத்தையும் சேர்த்துப் பங்குரிமை கொள்ள ஆசைப்படுகிறார்கள். பொதுச் சொத்து என்றும் கருதுகிறார்கள். ஆனால் நமது சுயாதிக்கத்தை அவர்கள் மதிப்பதே இல்லை. நமது நாட்டையும் செல்வத்தையும் அவர்கள் நேசிக்கிற அளவுக்கு நமது சுயாட்சியை நேசிக்கவில்லை என்பதால் இது ஓர் அபாயகரமான கூட்டுறவு என்றே குறிப்பிடலாம்.

மேலும், நாம் சாதிக்கும் ஒவ்வொரு சாதனையையும் அஹிம்சாமுறையில் சாதித்துவிட்டதாக ஒரு அபிப்பிராயத்தை உலகெங்கும் உண்டாக்கி விட்டிருக்கிறோம். ஆனால் அகிம்சை என்ற தத்துவம் சிந்திப்பதிலும், பேசுவதிலும் உள்ள எளிமை, அதை நடைமுறைப்படுத்துவதில் இல்லை என்பது அநேகமாக நம் எல்லோருக்கும் தெரியும்.அகிம்சை என்பது அரசியல் ரீதியான செல்பாடுகளுக்கு ஒத்தியங்க அல்லது உடன்படுத்தி இயக்க இயலாத ஒரு தத்துவம்! அதைப் பேசலாம் – எழுதலாம், ஆனால் அரசியலில் அதைச் செய்ய முடியாது என்பது கண்கூடு.

எல்லா நாடுகளிலும் – எல்லாப் பகுதிகளிலும், இரண்டு கட்சிகள் உண்டு. ஒன்று வலதுசாரிக் கட்சி – மற்றொன்று இடதுசாரிக் கட்சியாக இருக்கும் – இருந்து வருவதை நாமும் அறிஅவாம். இரண்டு கட்சிகளும் ஒன்றை ஒன்று வேறுபடுமேயன்றி தேசியத்தை – தேச நலனைப் பற்றிய துறையில் வேறுபடாது. இரண்டு தேச பக்தக் கட்சிகள் தான். இரண்டுக்கும் மக்கள் ஆதரவு உண்டு, இரண்டு கட்சிகளுமே நாட்டுக்கான கடமையைச் செய்து வருகின்றன. அதேபோல இந்த நாட்டிலும் வலதுசாரி – இடதுசாரி என்ற முறையில் இயங்கினர் – இயங்குகின்றனர்.
தேச விடுதலைக்காகப் பல பயங்கரப் புரட்சிகளைச் செய்த நமது நாட்டு இடதுசாரிகளில், பகவத் கீதையைக் கையில் வைத்துக்கெண்டே அந்நியரின் தூக்கு மேடையில் பலியானோரும், அந்தமான் தீவுகளில் ஆவி துறந்தோரும் கொஞ்சமல்ல, அவர்கள் தேசத்திற்காகவே கடமையைச் செய்து உயிரை இழந்தவர்களாக இருந்தாலும், காந்தீயர்களாக இருக்கவில்லை என்றே கருதப்பட்டார்கள். இதனால் அவர்கள் அடியிட்ட சுதந்திர இந்தியாவில் அவர்களுக்குரிய சிறப்புக்கு இடமில்லாது போய்விட்டது. அதாவது, ஒருவன் தேசத் தியாகியாக மட்டும் இருந்தால் போதாது ? அவன் தேசபக்தன் – தியாகி – என்பதை விட காந்தீயன் – காந்தி பக்தக் கூட்டத்தில் ஒருவனாக இருக்க வேண்டும் என்பதே இதன் பொருள் : போகட்டும்!

‘அகிம்சை’ என்ற கொள்கை நாம் அடிமைகளாக இருந்தபோது ஓரளவுக்குச்சரி, ஆனால் நாம் இப்பொழுது ஒரு குடியரசை நில்மாணித்திருக்கிறோம். நமது சர்க்கார் கோடானுகோடி ரூபாய்களைக் கொண்டும் ராணுவச் செலவைச் செய்கிறது. போர்ச்சுகலும், எல்லைப் புறங்களில் பாகிஸ்தானு புரிகிற கொடுமைகளைப் பற்றி, பேசும்போது கூட அகிம்சையைச் சம்பந்தப்படுத்திக் கொள்ளத் தவறுவதுமில்லை.
கொள்கையோ அகிம்சை; வருமானத்தில் பெரும்பகுதி செலவிடுவதோ ராணுவத்துக்கு! அதே சமயம் அந்நியர்களின் அக்ரமத்திற்கு முனூனே அகிம்சைப் பேச்சு – ஆனால், அதே சமயம் நாக மலை ஜாதியினர் மீது பாய ராணுவத்தை ஏவிவிடுகின்றோம் – நமது அரசியல் எதிர்ப்பாளர்கள், தொழிலாளர்கள், விவசாயிகளைச் சாய்க்கத் துப்பாக்கிகளின் வாய்களைத் திறந்துவிட அனுமதிக்கிறோம்! இது எந்த ரக அகிம்சாவாதம் என்பதை எவராலும் புரிந்துகொள்ள முடியவில்லை.

எந்தக் கொள்கையும், எந்தச் சமயத்திலும் செயலோடு சம்பந்தப்பட வேண்டும். செயலோடு சம்பந்தப்படும் கொள்கையைத்தான் உருவாக்கவும் வேண்டும். பேசுவதற்குக் கொள்கை, செய்வதற்கு வேறு முறை என்றால் அக்கொள்கை வெறும் பிரச்சார அந்தஸ்தோடு நின்றுவிடும். அதற்குச் சாகாத்தன்மையும் ஏற்படாது என்பதைக் கூறிக்கொள்கிறேன்.யுத்த முடிந்த ஆரம்பகாலத்தில் எல்லோருமே அமைதி – சமாதானம் பற்றிப் பேசினார்கள். அதற்காக ஐ.நா. சபையும் உண்டாக்கப்பட்டது. ஆனால், சமாதான சாத்தியத்திற்காக உண்டாக்கப்பட்ட உலகப் பொதுச் சபைக்கு ஐக்கிய நாடுகள் சபை என்று பெயர்தான் வைக்கப்பட்டதேயன்றி, அதன் நோக்கமெல்லாம் ஐக்கியத்தைப் பிளப்பதாகவே இருக்கிறது. அது பேசுகிற சமாதனாப் பேச்சு, செயலை நெருங்கவே அனுமதிக்கப்படவில்லை

ஐ.நா.வின் சமாதானம், அமைதி எல்லாம் பேச்சோடு சரி – அதன் செயல்களெல்லாம் அமைதியை சிதைப்பதிலேயே போய்க் கொண்டிருக்கிறது. எனவே இந்த ஐ.நா. சபை இரண்டாவது சர்வதேசச் சங்கம் என்ற நிலைமைக்கு மேற் போகவில்லை – போகாது.ஜனநாயகம் வந்துவிட்டது – அது சக்திமிக்கது; அதன் பயனாய் மனிதகுலத்தின் வாழ்க்கைத் தரமும், மனப்பாங்கும் உயர்ந்துவிட்டது. எனவே ஒரு நாட்டை ஒரு நாடு படையெடுக்காது. ஒரு நாட்டிற்குள் ஒரு நாடு பலவந்தமாய்ப் பிரவேசிக்காது – பிரவேசிக்கும் என்ற கனவு கூட இனி எவருக்கும் தோன்றாது என்றெல்லாம் அகிலமளாவ பிரச்சாரத்திருக்கிறோம்.

ஆனால் நடப்பது என்ன? ஜனநாயகத்திற்கும், அதன் வழி செல்லும் மனிதப் பாங்கிற்கும் எது ஆகாதோ அது நடக்கிறது. ஒரு நாட்டை ஒரு நாடு படையெடுத்தது. அதைப் பார்த்துக் கொண்டு ஜனநாயகத்தின் மூத்த அண்ணனான அமெரிக்கா சும்மா இருந்தது. சூயஸ் சம்பவத்தைத்தான் குறிப்பிடுகிறேன்.சூயஸ் சம்பவம் மேலும் தொடராது – ஜனநாயக சக்தி தடுத்துவிடும் என்று நினைத்தோம். ஆனால், அதே சூயஸ் நிகழ்ச்சி லெபனானில் ஏற்பட்டது! சூயஸ் நிகழ்ச்சிக்கு சும்மா இருந்த நமது ஜனநாயகத்தின் மூத்த அண்ணனான அமெரிக்கா லெபனான் நிகழ்ச்சியின் போது சும்மா கூட இருக்கவில்லை.சூயஸ் முற்றுகையில் பிரிட்டன் கொட்டிய கொடுமையை விடக் கோரமாகக் கொட்டிற்கு – லெபனானில் தனது வலிமை மிக்க ஆறாவது கடற்படையையும், போர்க் கப்பல்களையும் காட்டி, சின்னஞ்சிறு நாடான லெபனானைக் கோரத்தனமாய்ப் பயமுறுத்திற்கு அமெரிக்கா.

ஜனநாயகமே ஜனநாயகத்தை எதிர்த்துச் சண்டைக்கு மார்தட்டும் நிலைமையை அமெரிக்காவின் மூலம் கண்ட லெபனான், தான் வலிமையிலும், அளவிலும் மிகமிகச் சிறிதாக இருந்தாலும், ஜனநாயகத்தையும் மக்கள் சக்தியையும் நம்பி அமெரிக்காவின் சவாலை ஏற்று அதைக் களத்தில் சந்திக்க கச்சை கட்டிற்று.லெபனானின் இந்தச் துணிச்சலான எதிர்ச் சவால் அமெரிக்கா மூட்டிவிட்ட பிரச்சனையை அடக்கிற்று. நாடு சிறிதாக இருந்தும் சக்தி பெரிதாக இயங்கி களத்திலிறங்கத் தயாராகிவிட்ட லெபனானுக்கு முன்னே, அமெரிக்கச் சவால் அதிகநாள் நிற்கமாட்டாமல் ஓய்ந்ததை உலகம் அறியும்.

ராணுவ சர்வாதிகாரம்


நமது அகிம்சாமுறையில் அகில உலகிலும் ஜனநாயகம் அமைய வேண்டுமென்று நாம் விரும்புகிறோம். ஆனால் நம்மைச் சுற்றி நடப்பது என்ன? ராணுவ சர்வாதிகாரம்!

பாகிஸ்தானில் மட்டுமல்ல – மேலும் சில நாடுகளிலும் ராணுவ சர்வாதிகாரம் நடைபெறுகிறது. தாய்லாந்து, பர்மாவோடு இதர நாடுகளிலும் ராணுவ ஆட்சி அமலில் இருக்கிறது. அந்த நாடுகளெல்லாம் இந்தியாவைச் சுற்றியிருக்கும் நாடுகள். ஆனால் பர்மாவையும் தாய்லாந்தையும் பற்றி நாம் எதுவும் குறிப்பிடுவதற்கில்லை. ஏனெனில் பர்மா, காமன்வெல்த் பிணைப்பில் இல்லை – தாய்லாந்து தென் கிழக்காசிய கூட்டணியோடு (சீட்டோ) இணைத்துக் கருதப்படும் நாடு. ஆனதால் பாகிஸ்தானைப் பற்றி நாம் பிறகு சிந்தித்துக் கொள்ளலாம். ஆனால், இதைப்பற்றி நாம் உடனடியாகச் சிந்தித்தே ஆகவேண்டும். ஏனெனில் அதுவும் நம்மைப்போல் நமது காமன்வெல்த்தில் இணைந்துள்ள நாடு. இந்த நாடு ராணுவ சர்வாதிகாரத்தல் சிக்கியிருக்கிறது. அதை மேற்கு நாடுகளும் அனுமதிக்கக் கொண்டிருக்கின்றன என்றால் நாம் அதில் அதில் எச்சரிக்கையோடு இருந்தாக வேண்டியதோடு, அதற்கு நாம் மறுப்புத் தெரிவிக்க வேண்டாமா?

ஜனநாயக வரம்பிற்குட்பட்டது என்பது காமன்வெல்த் கூட்டின் கோட்பாடு. ஆனால், அதில் அங்கம் வகிக்கும் ஒரு நாட்டில் ராணுவ சர்வாதிகாரம் நடைபெறுகிறது. அதை அதற்கு அதி அண்டை நாட்டினரான நாம் அனுமதித்துக் கொண்டிருந்தால், நமது ஜனநாயகத்தை எந்த வகையில் நம்மால் பரிபாலிக்க இயலும்? நம்மை முரட்டுத் தனமான வழியில் இழுக்க வைக்கும் கொடுஞ் சூழ்ச்சி அல்லவா இது? இதோடு நிற்கவில்லை – நிலைமை மேலும் படருகிறது. பாகிஸ்தானில் அந்நியரின் விமான தளங்கள் மட்டும் நிர்மாணிக்கப் பட்டிருக்கவில்லை – புதுமையான பல பயங்கர ஆயுதங்களைக் குவித்து வைக்கும் கிட்டங்கியும், ராக்கெட் தளங்களும் ஆப்கன் மலைகளுக்கு அருகே கட்டப்பட்டிருக்கின்றன! இது எல்லாம் எந்த வகை ஜனநாயகம் என்று மேற்கு நாடுகள், நம்மிடம் விவரித்திருக்கின்றனவோ அறியேன். இது நிற்க, நமது எல்லைப் புறங்களைக் கவனிப்போம்.

நமது குடியரசுக்கு 11வது வயது நடைபெறுகிறது. ஆனால் நமது எல்லைகளை இன்னும் அளவிட்டு வரையறை செய்து வேலி வைத்துக் கொள்ளவில்லை.ஒரு தனிப்பட்ட சிறு குடும்பத்தினர் கூட பாகப்பிரிவினை செய்து கொண்டுவிட்டால், அவரவர் பாகத்திற்கான பகுதியை சிறு சுவர் எழுப்புவதன் மூலம் பிரித்துக் கொள்கிறார்கள். சுவர் எழுப்பாது போனாலும் தமது பகுதியைப் பிரத்துக் காட்டிக்கொள்ள ஒரு கோடாவது கிழித்துக் கொள்ளாமலிருக்க மாட்டார்கள். சொத்து சுகங்களையும் முறைப்படி பிரத்தே தீருவார்கள்.ஆனால் ஒரு நாடு இரண்டாகப் பிரிக்கப்பட்டு 12 வருடங்களாகியும் எல்லை நிர்ணயங்கூட இன்னும் சரிவரச் செயல்படவில்லை என்பது அதிசயத்திலும் அதிசயம்! இந்த அலட்சிய நிலை பல ஆபத்துகளை பலவித முறைகளில் உற்பத்தி செய்து கொண்டே போகிறது.ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால், அதுபற்றிக் கேள்வி எழும்போது இன்னும் எல்லைக்கோடு கிழித்தாகவில்லை – அதனால் எதுவும் சொல்வதற்கில்லை – அச்சம்பவங்களை எம்.பி.கள் மிகைப்படுத்திப் பேசுகிறார்கள் என்று எளிதாகச் சொல்லிவிடுகிறோம்.

நமது அரசியல் நிர்ணயத்தின் 3வது பிரிவுப்படி தவறு என்பது தெரிந்தும், பாகிஸ்தான் பிரதமரும் நமது பிரதமரும் பேச்சு நடத்திப் பகுதிகளை மாற்றிக்கொள்கிறார்கள். இந்தப் பகுதிமாற்ற விவகாரம் அ.நி. சட்டத்தின் 3வது பிரிவுப்படி தவறு என்று கேள்விகள் எழுப்பப்பட்டால், “இல்லை இல்லை அப்பகுதி விவாதத்திற்குரியதாக இருப்பதால் 3வது சட்டப்பிரிவு அதற்குக் குறுக்கிடாது – எனவே அதைப்பற்றி எந்த சர்ச்சையும் வேண்டாம்” என்று ஒரேடியாக மொத்தத்தில் பதில் சொல்லப்பட்டு விடுகிறது! உண்மையில் அப்பகுதி விவாதத்திற்குரியதாக இருந்தால் அதன் பரிகாரத்துக்குச் சட்டமில்லையா?

எதையும் சட்ட முறைப்படி செய்தால் என்ன? சர்க்கார் தரப்பில் செய்யப்படும் எதையும் முறைப்படி செய்வதற்காகவே சட்டம் வகுக்கப்படுகிறது. சட்ட சம்மதமின்றி சுயநோக்கத்துக்கு எதையும் செய்வதாக இருந்தால் சட்டம்தான் எதற்கு?லோக்சபையிலே தன் பக்கம் மெஜாரிட்டி இருக்கிறதென்ற துணிச்சலில் தேசம் சம்பந்தப்பட்ட எதையும் சுயமூப்பில் செய்வது நல்லதா? என்று கேட்கிறேன்.

மேலும் இந்த எல்லைப் பிரச்சனை, என்றோ ஒரு நாளைய விவகாரமாகவும் இல்லை – நித்தியப் பிரச்சனையாகி வருகிறது. பெரியவர்களின் வாய்களிலிருந்து இம்மாதிரி பதில்கள் வருவதற்கு வேதனைப்படுகிறேன். பொறுப்புள்ள பெரிய மனிதர்களை மதித்து மரியாதை செய்யலாம். ஆனால் அவர்கள் மூத்தவர்கள் என்பதற்காக உயிரினுமினிய கொள்கைகளைத் தியாகம் செய்ய முடியுமா?ஆக, எல்லைப் புறங்களில் பாகிஸ்தான் நடத்துகின்ற துப்பாக்கிப் பிரயோகச் சம்பவங்கள் சின்னஞ்சிறிய சம்பவமாகத்தான் தெரியும். ஆனால், ஒரு பெரிய ஆபத்தான மொத்தச் சம்பவத்தைப் பாகிஸ்தானிகள் இவ்விதச் சிறுசம்பவங்களால் உருவாக்கி வருகிறார்கள் என்பதுதான் உண்மை! சிறிய ஆபத்து பெரிதாக வளரும் மோசமான கட்டத்தில் நாம் நிற்கிறோம் என்பதைச் சொல்லாமல் தீரவில்லை.

1959 ஆம் வருடம் மிக மிக முக்கியமான வருடமாக மாறி இருக்கிறது. இவ்வருடம் 2வது உலக யுத்தத்தைத் தோற்றுவித்த 1939 ஆம் வருடத்தின் மறுபிறவியாக இருக்குமென்று நான் கருதுவதை, பொதுவாக நாட்டிற்கும் குறிப்பாக சர்க்காருக்கும் அறிவித்துக் கொள்கிறேன். இவ்வருடம் மிக மோசமான வருடம் என்ற அறிவிப்பை சர்க்காரும் நாடு ஒரு எச்சரிக்கையாகக் கூடக் கொள்ளலாம்.

இரண்டாவது உலக யுத்தம் முடிந்துவிட்டதாக மிகப் பலர் கருதுகின்றனர். அவர்களைக் கருதும்படி செய்திருக்கிறது செய்தியும், அறிக்கைகளும்! செய்தி – அறிக்கை அளவில் 2வது யுத்தம் முடிந்திருக்கிறதேயன்றி உண்மையான செயல் அளவில் அல்ல! 1914ல் ஆரம்பித்த முதல் யுத்தம் 1918ல் முடிந்தது. 1919ல் வார்சேல்ஸ் சமாதான உடன்படிக்கை கையெழுத்தானவுடன் இருதரப்பு நாட்டு ராணுவங்களும் அவரவர் நாடுகளுக்குத் திரும்பிவிட்டன.இரண்டாவது உலக யுத்தம் 1939ல் ஆரம்பமாயிற்று. 1945ல் முடிந்ததாகச் சொல்லப்பட்டது. சமாதான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகிவிட்டன. இதற்கப்புறம் முதலாவது யுத்த முடிவு மாதிரி ராணுவம் அவரவர் நாட்டுக்குத் திரும்ப வேண்டியதுதானே? ஆனால் திரும்பவில்லை – நின்ற இடங்களில் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால் சமாதான ஒப்பந்தங்கள் மட்டும் கையெழுத்தாகிவிட்டன. பரஸ்பர உதவி என்ற பெயராலோ, நாங்கள் ஆக்கிரமித்த பகுதி என்ற பெயராலோ, தூதுக் குழுக்கள் என்ற பெயராலோ, வேறு எதோ ஒரு பெயராலோ ராணுவங்கள் நிறுத்தப்பட வேண்டாத இடங்களில் ஒப்பந்தமானதற்கப்புறமும் நிறுத்தப்பட்டுள்ளன. இது ஏன்? என்று ஆராய முற்படும் படித்தவர்களுக்கு 2வது யுத்த முடிவில் உட்கட்டு தெரியும்.

நாம் மேற்கத்தியரோடு நேசம் பூண்டிருக்கிறோம். நேச பாவத்திற்கு வழிமுறையும் வைத்திருக்கிறோம். அதன் பயனாய் நாம் பாதுகாப்பாக இருப்பதாகவும் நம்புகிறோம். அதே சமயம் நாம் மேற்கத்தியரோடு கொண்டுள்ள உறவுக்கும் அவர்களின் கொள்கைக்கும் தொடர்பில்லை என்றும், அவர்கள் வழியேதான் நமது வழி என்று ஒப்பந்தமெதுவும் இல்லையென்றம் கூறிக்கொள்ளுகிறோம். இந்தமட்டில் சரி. இதுவே உண்மையில் கடைப்பிடிக்கும் கொள்கையாக இருக்குமேயானால் வழுக்கல் நிறைந்த இந்த வழியில் நமது அதிசயகரமான அகிம்சைக் கொள்கை எவ்வளவு தூரம் சறுக்கி விழாமல் நடை போட முடியும்?

நாம் கொண்டிருப்பது அகிம்சா முறை – அம்முறையில் தான் நமது திட்டங்களும் தயாரிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லிக் கொள்கிறோம். ஆனால் நமது உறவு, ராணுவத் திட்டத்தை வைத்துள்ள மேற்கத்தியரோடு இருக்கிறது. இந்த வக்கிர போக்கோடு மற்றொரு வக்கிரமும் சேருகிறது. நமக்கு அஹிம்சையும், மேற்கத்தியருக்கு ஹிம்சையும் கொள்கை என்பதோடு நிலைமை நிற்கவில்லை. வழிமுறை, செயல், திட்டம், எல்லாம் நமது பண்பாட்டிற்குரிய சுதந்திர ரீதியில் தயாரிக்கப்பட்டவை என்று கூறிக்கொள்கிற நாம், கோடானு கோடி ரூபாய்களைக் கொண்ட ராணுவ பட்ஜெட்டை வைத்திருக்கிறோம்.உண்மையில் நமது பாதை அகிம்சைதான் என்றால் இத்தனை கோடி ரூபாய்களை விழுங்கும் ராணுவ பட்ஜெட் ஏன்? அவ்வளவு பெரிய தொகையை தேசிய நலத்திட்டம் போன்ற பல உருப்படியான காரியங்களுக்குச் செலவிடலாகாதா?

நமது நாட்டை நாம்தானே காப்பாற்றிக் கொள்ள வேண்டும்? என்று கேட்கலாம் – ஒப்புக் கொள்கிறேன். அவ்வாறானால் நம்மிடம் நவீன ஆயுதங்களை நிறைத்துக் கொள்ள வேண்டும். ஏராளமான புதுவித ஆயுதங்களை நிலைமைக் கேற்றவாறு திரட்டிக் கொண்டால், பயங்கரச் சூழ்நிலைகளை அண்டவிடாமல் தடுத்துக் கொள்ளலாம். ஆனால் பாதுகாப்பு என்பதன் பெயரால் நாம் என்ன செய்கிறோம் தெரியுமா? இந்தக் காலச் சூழ்நிலைக்குப் பொருந்தாக மிகப் பழைய ரக ஆயுதங்களை, அதுவும், பிரிட்டன் கம்பெனியில் வாங்குகிறோம். இது ஏதோ விளங்கவில்லை! தாழ்வு நிலையை நோக்கிச் செல்லும் இந்த மாதிரி ராஜதந்திரத்தை நம்மால் புரிந்துகொள்ளவும் முடியவில்லை.

ராஜதந்திரம் என்றால் அதற்கொரு சாமுத்திரிகம், நாகரிகம் கண்ணியம் உண்டு. இம்மூன்றும் இல்லாத ராஜதந்திரத்துக்கு, ராஜதந்திரம் என்ற பெயரை வேண்டுமானால் சூட்டலாம். ஆனால் அது ராஜதந்திரமாகாது. மோசடி நிறைந்த கபடம். ஒரு நாட்டின் எல்லையை ஒரு நாடு வரம்பு மீறித் தாண்டுவது ராஜதந்திரமல்ல – பச்சைத் துரோகம். துரதிர்ஷ்டவசமாக 2வது உலகப் போர் ஒரு தரப்புக்கும் வெற்றியைத் தராமல், ஒரு தரப்பை ஒரு தரப்பு அடக்கிவிட்டது என்ற நிலையை உண்டாக்காமற் செய்துவிட்டது. எனவே இப்பொழுது யுத்தத் தயாரிப்புக்கான இடைக்காலம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது இருதரப்பினருக்குமே தெரியும். இதோடு மூன்றாவது யுத்தத்திற்கு வித்திட்டுவிட்டேதான் இரண்டாவது யுத்தம் இளைப்பாறப் போயிருக்கிறது என்பதும் அவர்களுக்குத் தெரியும். ஆகவேதான், முற்றுகையிட்ட படைகள் ஆங்காங்கே நிற்கின்றன – பரஸ்பர உதவிப் படைகளும் ஆங்காங்கே இருக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையும் ஐக்கியங்கெட்ட நோக்கத்தைக் கொண்டிருக்கிறது.

சமாதானம் வந்துவிட்டதாக நாம் நினைக்கிறோம். ஆனால் இது வெறும் பிரமை, உண்மையில் சமாதானம் சுக்குநூறாக உடைக்கப்பட்டுவிட்டது. இந்த நிலைமையிலாவது நாம் விழிப்புற வேண்டாமா? நம்மை எதிர்நோக்கி வருகிற கோரப் புயலை சமாளிக்கத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டாமா? ஏதோ பேசுகிறோம் – எதையோ திட்டமிடுகிறோம் – எதுவோ நடக்கிறது.

நமது பேச்சு, ஐக்கியத்தில் அழுத்தமாக இருக்கிறது. ஆனால் அந்த ஐக்கிய சாதனைக்கு விதமே நமக்குத் தெரியவில்லை. கூடி வாழ்வோம் என்று சுவைபடப் பேசுகிறோம். இதோடு கூட நிற்கவில்லை. இதற்கு மேலும் கடந்து, அணுகுண்டுகளையும், ஹைட்ரஜன் குண்டுகளையும் கொண்டிருக்கிற நாடுகளுக்கு, கூடி வாழும்படி போதனை செய்யவும் போகிறோம். ஆனால் கண்றாவி! அரசியல் ரீதியில் எதிர் மனோபாவம் கொண்டு எதிர்க்குரல் எழுப்பும் நமது சொந்த சகாக்களோடு கூடி வாழ்வதற்கான சைகையைக் கூடக் காட்டவில்லை.

இதற்கு மாறாக நமது அரசியல் எதிரிகள் மீது சந்தர்ப்பம் வாய்க்கையில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து, உயிர்களை வாங்கத் தயங்கவில்லை. இது ஒரு கோரமான நிலைமையாகும். ராமநாதபுரம் ஜில்லாவில் அகிம்சையைக் குப்புறத் தள்ளிவிட்டுத் துப்பாக்கிப் பிரயோகம் செய்தோம் – பலர் மாண்டனர். மறக்கவொண்ணாத அச்சம்பவத்துக்கு நீதி விசாரணை வேண்டுமென்று வேண்டியதை அப்படியே நிராகரித்துவிட்டோம்.

(இதன்போது ஒரு எம்.பி. எழுந்து பம்பாயிலும், ஆமதாபாத்திலும் துப்பாக்கிப் பிரயோகம் நடந்தது என்று குறிப்பிட்டார்).

சத்தியத்தின் பெயரால் அது சம்பந்தமான செய்திகளை மக்களுக்குப் பரவவொட்டாமல் அமுக்கியேவிட்டோம். இதுதான் எங்கள் கொள்கை – இப்படித்தான் செய்வோம் – இதுதான் சத்தியமும், அகிம்சையும் என்றால், மகத்தான இந்த நாட்டையும் காங்கிரசையும் எங்கே கொண்போய் நிறுத்துமோ? நினைக்கவே இனிக்கும் அற்புதம் பெற்ற தத்துவத்தை நாம் வாயில் வைத்திருக்கத் தவறவில்லை. ஆனால், அதைச் செயலுக்கு இறக்கிவிட நாம் விரும்பவே இல்லை; ஜனநாயகத்தின் தரத்தை நாம் ஒரு அளவுக்கேனும் கையாளாது போனாலும் பாதகமில்லை – போகட்டும் – ஆனால் மனித குலத்திற்கு வேண்டிய மனிதத் தரத்தையாவது மடக்கிச் சாய்க்காமல் விட்டுவிட்டால், அதுவே ஒரு பெரும் சேவையும், தியாகமும், புண்ணியமுமாகும்.

ஜனநாயகத் தத்துவத்தைப் பேச்சால் குளிப்பாட்டுகிற நாட்டில் மனிதத் தரத்திற்கே வாய்ப்பில்லை என்ற நிலைமை சகிக்கவொண்ணாததாகும். ஆகவேதான் உங்களைக் கரங்கூப்பி வேண்டுகிறேன் – ஜனநாயகத்தையாவது உங்கள் நோக்கம் போல் எப்படியும் உபயோகித்துக் கொள்ளுங்கள் – மனிதத் தரத்தையாவது கசக்கிக் கன்னவைக்காமல் விடுங்கள் என்று.கட்சிகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் – இயல்பு. ஆனால் தேசத்தைப் பற்றிய விஷயங்களில் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பொறுப்புண்டு.

மதிப்பிற்குரிய இந்தச் சபையில் நெஞ்சு நடுங்கும் பல தியாகங்களைத் செய்த பெரிய மனிதர்களும் அங்கம் பெற்றிருக்கிறார்கள். மகத்தான கொள்கைப் பற்றுள்ள புதியவர்களும் அங்கம் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் காங்கிரஸ்கார்களாகவும் இருக்கலாம் – இல்லாமலுமிருக்கலாம். ஆனால் கொள்கை பலம் எல்லோருக்குமே உண்டு. கருத்துக் கொள்ளும் உரிமையுமுண்டு. இதை மறந்தோ, மறுத்தோவிட்டு ஒரு உறுப்பினர், இந்து மத்தின் நேர்மை குறித்துப் பேசினால் நீங்கள் அவரை வகுப்புவாதி என்று இலேசாகச் சொல்லி ஒதுக்கிவிடுகிறீர்கள், மற்றொரு உறுப்பினர் முன்வந்து பொருளாதாரத் தத்துவம் பற்றிக் கூறினால், அவரை உங்கள் வாயால் கம்யூனிஸ்ட்டாக்கி விடுகிறீர்கள், வேறொருவர் வேறேதேனும் சொல்லத் துணிந்து முயன்றால், அவரை ஏதேனும் ஒரு கமிட்டிக்குப் பொறுப்புக் கொடுத்து, குல்லாய் மாட்டி உள்ளே இழுத்துக் கொள்கிறீர்கள். இவ்வளவு மோசமான போக்கைக் கொண்டிருந்தால் சக்தி மிக்க எதிர்க்கட்சி எப்படி உருவாகும்? என்று கேட்கிறேன். ஒருக்காலும் முடியாது!

சக்திவாய்ந்த எதிர்க்கட்சியை நீங்கள் விரும்பினால் முதலில் உங்கள் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். சரியான எதிர்க்கட்சியை நீங்கள் விரும்பவில்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் அதை வேண்டுமென்றே தவிர்த்து விடுகிறீர்கள் எனறுதான் சொல்லுகிறேன்.நமது போக்குகள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் இங்குள்ள எங்கள் எல்லோரையும் விட உங்களுக்கு அதிகம் தெரியும். ஆனால், தெரிந்தும் எதற்காக விவாதத்திற்குரிய வகையில் போக்கை வைத்திருக்கிறீர்கள என்பதற்கான உண்மையான காரணத்தைத்தான் என்னால் விளங்கிக் கொள்ள இயலவில்லை.பாகிஸ்தானில் துப்பாக்கிப் பிரயோகம் குறித்து இன்று காலை இந்த சபையில் ஒரு அவசரப் பிரேரணை எழுந்தது. அதற்குச் சரியான முறையில் பதிலளிக்கும் நிலையில் இல்லை – நமது மதிப்பிற்குரிய பிரதமர்! துணிச்சலும் – விஷய விளக்கமும் இருக்க வேண்டிய அவருடைய பதிலில், விக்கி அழவைக்கும் துக்கம்தான் மேவியிருக்கிறது.

“கனம் உறுப்பினர் விவரித்த மாதிரிதான் நிலைமை இருக்கிறது. அதற்காக அவசரத் தீர்மானமும் அவசியம்தான் – ஆயினும் அதை ஏன் கனம் உறுப்பினர் கொண்டு வந்தார் – அதனால் நடைமுறைப் பயன் எதுவுமிராது” என்கிறார் நமது பிரதமர்.

நமது ராணுவம் பாகிஸ்தானுக்குச் சரியான பதில் சொல்லும் என்று சொல்கிறீர்கள். நீங்கள் சொல்வதில் உள்ள சக்தி, விஷயத்தில் இல்லை. நமது ராணுவம் மிகமிகச் சக்தி வாய்ந்தது – சாதுர்யம் மிக்கது – வைர உறுதி கொண்டது என்பதில் சந்தேகம் இல்லை. நீங்கள் அதைச் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நமது ராணுவத்தின் மகத்தான சக்தியை நாங்களறிவோம் – நீங்களுமறிவீர்கள் – நாடும் அறியும் – நானிலத்திற்கும் தெரியும். ஆனால், நவீன ஆயுத வசதியைப் பொறுத்துத்தான் பிரச்சனை எழுகிறது. நமது ராணுவத்திற்கு உள்ள சக்தி மிகமிகப் பெரியது என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை பாகிஸ்தான் ராணுவத்திடம் உள்ள நவீன ரக ஆயுதங்களின் சக்தியும்! நம்மிடம் உள்ள ஆயுதங்களைவிட ஆயிரம் மடங்கு வலிமையான ஆயுதங்களைக் கொண்டிருக்கிறது – பாகிஸ்தான் – சக்திவாய்ந்த ராணுவம் எவ்வளவு பெரிய சக்தியையும் முறியடிக்கும் திறன் வாய்ந்த ராணுவம் அந்த அளவுக்கு நவீன ரக ஆயுத வலிமையின்றி இருக்கிறது.

இந்நிலையில் நமது ராணுவம், பாகிஸ்தானுக்குப் பதிலுக்குப் பதில் கொடுக்கும் என்று எதை வைத்துக் கூறுகிறீர்களோ தெரியவில்லை. இந்த நவீன ரக ஆயுதத் தேவையைப் பற்றிக் கேள்வி எழுப்பினால் அது ராணுவ ரகசியம் – அதை நீங்கள் கிளற வேண்டாம் – என்று சொல்லடி கொடுத்து, பிரச்சனையை பிதுங்கவிடாமல் அடக்கிவிடுகிறீர்கள் நம்மிடமுள்ள ஆயுதங்களைக் கொண்டே பாகிஸ்தான் எழுப்பிவிட்டுள்ள கொடூரமான நிலைமையைச் சமாளித்துவிடலாம் என்று நிஜமாகவே நீங்கள் நம்புகீறர்களா?

முன்பு ஹைதராபாத்தில் நடந்ததே அந்த விவகாரம் என்ன?

சிட்னிகாட்டன் என்ற ஒரு வெள்ளையன், மணிலாக் கொட்டை வியாபாரி என்ற போர்வையில் ஏராளமான ஆயுதங்களைஹைதராபாத்துக்கு விமானம் மூலம் கொண்டு சென்று குவித்தான். இந்த தவறான செயல், குலை நடுங்கும் பயங்கர ரகத்தைச் சார்ந்ததாகும். ஆனால் அதிருஷ்டவசமாய் ஜின்னாவின் மரணத்தையொட்டிய ஒரு நிகழ்ச்சியின் வாய்ப்பில், நமது தளபதி ராஜேந்திர சிங்ஜி நிலைமையை நமது தரப்பு வெற்றியாக மாற்றி, ஹைதராபாத்தில் குவிந்திருந்த சகல ஆயுதங்களையும் நம் வசமாக்கினார் – ஒரே இரவில் போலீஸ் நடவடிக்கையால் இவ்வளவும் சாதித்துக் கொண்டதாகச் சொன்னோம். சரி இதில் இதற்குமேல் உட்புகுந்து கிளற நான் விரும்பவில்லை.

நமது செயலின் முன்னைய வரிசையில் ஒன்றை நீங்கள் நினைத்துப் பார்த்துக் கொள்வதற்காக, சைகையின் ரீதியில் கொஞ்சம் தொட்டுக் காட்டினேன். அவ்வளவுதான். இதற்குமேல் அச்சம்பவத்துக்குள் ஊடுருவிச் செல்ல வேண்டியதுமில்லை. ஏனெனில் நீங்கள் எல்லோரும் பெரியவர்கள். ஆனதால் இதன் உள்விளக்கம், உங்கள் விளங்கும் சக்தியை மீறியல்ல, விளங்கிக் கொள்ளவே செய்வீர்கள். எனவே நான் தொட்டுக் காட்டிய ஓர் ஓரத்தின் ஓரத்தோடு இதைவிட்டு விடுகிறேன். ஏனெனில் இவ்வளவுதான் என்னால் சொல்ல இயலும். இயன்றதைச் சொன்ன நான் காஷ்மீர் விவகாரத்திற்கு உங்களை அழைக்கிறேன்.

காஷ்மீர் விவகாரம்


காஷ்மீர் விவகாரம் எப்படி ஆகிவிட்டிருக்கிறது தெரியுமா?

பாகிஸ்தானை காஷ்மீருக்குள் அனுமதித்துவிட்டு நாம் ஜம்முவில் இருக்கிறோம். இதன் பயனாய் பாகிஸ்தான் ஒன்று மட்டுமல்ல – பாகிஸ்தானுக்குள் ஒரு பாகிஸ்தான் என்ற கதியை அடைந்துவிட்டது பிரச்சனை! பாகிஸ்தானிகள் காஷ்மீரில் இருக்க வேண்டுமென்றே நாம் விரும்பி, அவர்கள் அங்கிருக்க அனுமதியும் கொடுத்து, அதற்காக ஒரு உடன்பாடும் ஆகியிருப்பதாகவே தெரிகிறது…

(இந்த இடத்தில் சபாநாயகர் குறுக்கிட்டு, கனம் உறுப்பினருக்கு அனுமதிக்கப்பட்ட நேரம் தீர்ந்துவிட்டது – 15 நிமிடங்களுக்கு மேல் பேசி வருகிறீர்கள் என்று கூறினார்.)

அதற்கு முத்துராமலிங்க தேவர் :

“எனக்கு மேலும் 15 நிமிடங்கள் அனுமதிக்க வேண்டுகிறேன் – கனம் உறுப்பினர்கள் பலர் தாம் பேச 20 நிமிடங்கள் எடுத்துக் கொண்டதை நான் பார்த்தேன் என்றார்”.

(பிறகு இயன்ற வரை கனம் உறுப்பினர் எவ்வளவு விரைவில் முடிக்க முடியுமோ முடியுங்கள் என்றார் சபாநாயகர்)

பின்னர் தேவர் தொடர்ந்து பேசியதாவது :

காஷ்மீர் விவகாரம் பற்றிக் குறிப்பிடும்போதெல்லாம் பாகிஸ்தானிகள் ஆக்கிரமித்துவிட்டதாக வெகு சுலபமாகச் சொல்லிவிடுகிறார்கள். ஆனால், பாகிஸ்தானிகள் அக்கிரமித்தது மட்டும்தான் உண்மை – அவர்கள் ஆக்கிமித்தது அவர்களின் சொந்த சக்தியால் மட்டுமல்ல – நமது இணக்கமும் சேர்ந்தேதான்.

காஷ்மீர் படையெடுப்பிற்கு இலக்கானபோது நாம் நமது ராணுவத்தை அனுப்பினோம். ஆனால் தலைமைத் தளபதியான ஜெனரல் கரியப்பா அவர்களைக் கலந்து கொள்ளக் கூட இல்லை. ஏனெனில் பாகிஸ்தான் பெயரால் மேற்கத்தியருக்கு அங்கு தளம் இருக்க வேண்டுமென்பதில் நாம் வேறுபடாததால்! நான் இவ்வாறு கூறுவது அவ்வளவு ருசியாக இராது – கசக்கவும் செய்யும் – என்ன செய்யலாம் உண்மை எப்பொழுதுமே ருசிப்பதில்லை – கசக்கவே தான் செய்யும். அதற்காக உண்மையை மேலோட்டமாக விட்டுவிட்டால் விஷயம் புரையோடிவிடும். உண்மையை உடைத்துப் பார்த்தால் காஷ்மீர் விவகாரம் இப்படித்தான் தெரிகிறது. – அதை நம்பாமல் என்ன செய்வது? இந்த உண்மை நமது நண்பர்களுக்கும் புலப்படுத்தப்படுகிறதா? என்பது தெரியவில்¨! நமது நண்பர்கள் என்று சொல்லப்படுகிற மேற்கத்தியர்தான் விவகாரத்தை விறுவிறுப்பாக்குகிறார்கள் – அவர்களே அதை ஆறவும் போடுகிறார்கள். பிறகு உதவி என்பதன் பெயரால் பலரக உபத்திரவங்களை உண்டாக்கி வைக்கிறார்கள். கடைசியில் அவர்கள் செய்யும் உதவி என்ன தெரியுமா?

மேற்கத்தியவர்களாகிய அவர்களை நாம் நண்பர்களாகப் பாவிக்கிறோம். ஆனால், அந்த நண்பர்கள், நமக்குப் பரம எதிரிகள் யாரோ, அவர்களுக்கு ராணுவ உதவி செய்துவிட்டு, நமக்குள்ள உணவுப் பிரச்சனையை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு உணவு உதவுகிறோம் என்கிறார்கள். அந்த உதவியும் நமது திருப்திக்கு இப்பாலேயே நின்றுவிடுகிறது.அவர்களின் நண்பர்களாகிய நமக்கு அவர்கள் உதவும் கோதுமை, மூன்றாந்தரம் – நாலாந்தரத்தையும் கடந்ததாகும். அதாவது அவர்களின் குதிரைகளுக்கு போடும் கோதுமையை எடுத்து நமக்கு உதவுகிறார்கள். அதை நாம் உண்பதற்கில்லை – உண்ணவும் முடியாது. அவர்களின் குதிரைகளுக்குப் போடும் கோதுமையை நமக்குத் தந்துவிட்டு, நமது எதிரிகளுக்கு நல்ல ராணுவ சாதனங்களைக் கொடுத்துவிட்டு இரணமே உதவிதான் என்கிறார்கள். நாமும் அதைக் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். வேறு என் செய்யலாம்? செய்வது…?

இங்கு வலதுசாரி இடதுசாரி நிலைமைகளையும், அவர்கள் இயக்கப்படும் விதங்களையும் பார்த்தால் வேதனையாக இருக்கிறது. ஸ்ரீ இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் ஒரு ராஜ்யத்தின் முதன் மந்திரி. அவர், அவரது பணியைச் செய்யும்போது ஏதோ சில கடிதங்களை எழுதியிருக்கிறார். இதை ஒரு பெரிய பிரச்சனையாக ஆக்கிக்கொண்டு, அதை ஓர் ஒழுங்குப் பிரச்சனையாக வளர்த்து லோக்சபைக்குள்ளேயே வரவிட்டு விவாதம் செய்கிறோம்.ஆனால், அதே சமயம் மத்தாய் விவகாரமும் உள்ளே நுழைந்து ஒரு விவாதத்தை உண்டாக்கி விட்டிருக்கிறது. ஆனால், இந்த மத்தாய் விவகாரத்தை விவாத அளவிற்கு மேற் போகாமல் நிறுத்திக்கொண்டு, கேரள முதன் மந்திரியின் கடிதப் பிரச்சனையை ஒழுங்குப் பிரச்சனையாக உயர்த்திக் கொள்ளுகிறோம். இது ஏனோ தெரியவில்லை. இவ்வளவு கீழ்நோக்கம் நமக்கு நமது கெளரவத்துக்கு ஒவ்வாததாகும். பிரச்சினையாக எடுத்துக்கொண்டு தீர அற விவாதித்து முடிவுகட்ட வேண்டிய விஷயங்கள் எத்தனையோ உள்ளது.

இந்த மத்தாய் விவகாரம் என்ன? அதன் உள் அடக்கம் யாது? முந்திரா மோசடி விவகாரத்திற்குப் பின்னர் வெளிவந்துள்ள பெரிய – முக்கிய விவகாரம் இது. அமெரிக்க ஸ்தானிகராலயத்தில் வேலை பார்த்த ஒரு நபர், நமது சர்க்கார் அலுவலகத்தில் உளவறிய அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்த நபரை நாம் அனுமதித்தோம். அவர், அவருடைய வேலையைச் செய்து கொண்டார். அவர் தனக்கு வாய்த்த வாய்ப்பைக் கைவிடுவார் என்று நாம் எப்படி எதிர்பார்க்கலாம்?இந்த விவகாரம் வெளிக்கு வந்த பின்னர், மாபெரும் மனிதரும் நமது மதிப்பிற்குரிய பிரதமருமான நேரு அவர்களிடமிருந்து ஒரு அறிக்கை வெளிவந்தது. அதில், “என் மனம் சரியில்லாத சமயத்தில் நான் மத்தாயை அனுமதித்துவிட்டேன்” என்று கண்டிருக்கிறது.இம்மாதிரி மனது தவறும் நிலையும், அதன்போது எதுவும் செய்யும் நிலையும் நமது பிரமரின் மரியாதைக்கு மட்டுமல்ல, அகில ஆசியாவும் கொண்ட வெள்ளையரல்லாத வர்க்கத்துக்கே ஆபத்தானதாகும்.

சாதாரண ஒரு மனிதனுக்கு மனது சரியில்லாமற் போகலாம். கொடலாம். சகஜம்! ஆனால் பெரிய நாட்டின் பிரதமருக்கு – அதுவும் ஐந்தாம் படையினர் கழுகுகள் மாதிரி உளவறிய மூலை முடுக்குவிடாமல் வட்டமிட்டுத் திரியும் இந்த 1959ஆம் வருடத்தின் இக்கட்டான முகப்பில் – நமது தலைமைக் காரியாலயங்கள் தீப்பற்றி எரியும் தீமைகரமான சூழ்நிலைச் சந்தியில் – மனம் சரியில்லாத சந்தர்ப்பம் ஏற்படுவது சகஜநிலையாகாது – அது நாட்டுப் பொதுவுக்கு நல்லதுமல்ல.இதில் இன்னொரு வேதனைகரமான சம்பவம், அதவாது நமது சர்க்கார் (சிம்லா) அலுவலகத்திற்குத் தீவைக்க இரண்டு தடவை முயன்றும் முடியாமல், மூன்றாவது தடவை முடித்துவிட்டதாகச் செய்திகள் நமக்கு எப்படியும் ஒன்றும் நடவாதது மாதிரி சும்மாதான் இருக்கிறோம். இவ்வளவு பயங்கரமான செய்திகள் வந்து செயலும் முடிகிற வரை நமது சி.ஐ.டி.கள் என்ன செய்தார்களோ தெரியவில்லை.

அடுத்து உணவுப் பிரச்சனை!

இது மிக மோசமான நிலைமையை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதை எதிர்க்கட்சிகள் மட்டும் சொல்லவில்லை. காங்கிரஸ் உறுப்பினர்களே கூறுகிறார்கள். இந்த சபையில் காங்கிரஸ் உறுப்பினர்கள உணவுப் பிரச்சனை பற்றி இந்தியில் காரசாரமாகப் பேசினார்கள். எனக்கு இந்தி சரளமாகப் பேசவராது போயினும், பேசுவதை ஓரளவுக்குப் புரிந்துகொள்வேன். காங்கிரஸ் உறுப்பினர்கள் உணவுப் பரிச்சனை குறித்துப் பேசுகையில் தோல்வி – தோல்வி – தோல்வி என்று மும்முறை அழுத்தமாக ஆரவாரத்தோடு கூறினார்கள். அவர்கள் அழுத்தமாக இந்தி மொழியில் மும்முறை கூறியதன் அர்த்தத்தை நாமறிவோம். ஆயினும் அரசாங்கம் இப்பிரச்சனையில் வியாபாரத் தோரணையில் ஈடுபடுவதை நிறுத்துவதாகத் தெரியவில்லை.

இந்த உணவுப் பிரச்சனையை வைத்துக்கொண்டு அரசியல் தலைவர்கள் லஞ்சத்தையும், சலுகையையும் வியாபாரம் செய்யும் வியாபாரிகளாகி வருகிறார்களேயன்றி, இதை தேசத்தின் உயிர்ப் பிரச்சனையாகக் கருதவேயில்லை.தேசப் பிரச்சனை, அரசயில் தலைவர்களின் லஞ்ச லாபத் தொழலாக மாற்றப்பட்ட மோசமான கட்டத்தில், நாம் எதைச் செய்து சமாளிப்பது என்பவையல்லவா ஆய்ந்தறிந்து செய்ய வேண்டும். உணவு வியாபாரம் – நிலங்களுக்கு உச்சவரம்பு என்ற கவைக்குதவாத விவகாரங்களை இழுத்து வைத்துக் கொண்டால் பிரச்சனை என்ன வாகும்?

நில உடைமைகளுக்கு உச்சவரம்பு கட்டுவது உணவு வர்த்தகம் புரிவது போன்றவை எல்லாம் பேசுவதற்கு எளிதாகவும், ரஞ்சகமாகவும்தான் இருக்கும். ஆனால் அதை நடைமுறைப் படுத்தும்போதுதான், பேசுவதில் இருந்த சுலபம் செயலில் இல்லை என்பது விளங்கும். விளங்கிய பிறகும், பேசிவிட்டோமே என்பதற்காக செய்தே தீரவேண்டும் என்று அழுத்தமாகச் செய்யத் தொடங்கினால், அதன் முடிவில் நமக்கு என்ன தெரியும்? தெரியுமா? நாடு ஒரு பெரிய ஆபத்தில் சிக்கிவிட்டிருப்பதுதான் தெரியும். அந்த ஆபத்து பொருளாதாரம் சம்பந்தப்பட்டதோடு மட்டும் நில்லாது மக்களின் வெறுப்பையும் கொண்டதாக இருக்கும்.

நாம் ஏற்கனவே அன்னிய ராணுவங்களின் சுற்றுச் சூழ்நிலையில் உருவாகியுள்ள பயங்கரத்தின் நடுவே நிற்கிறோம். இந்நிலையில், வெளி ஆபத்துக்கள் போதாதென்று இது – அது என்பதன் பெயரால் உள்நாட்டில் பொருளாதார நெருக்கடியையும் உண்டாக்கிக் கொள்ள வேண்டியது அவசியம்தானா? என்று கேட்கிறேன். நமது திட்டங்கள் சம்பந்தமாய் நம்மிடம் தெளிவான மனோ நிலையோ கொள்கையோ இல்லை. தெளிவற்ற நிலையில் இந்த விபரீதங்களை ஏனோ ஏற்படுத்திக் கொள்கிறோம்.

நில உடைமைக்கு உச்சவரம்பு என்று பேசுகிறோம். இதைப் பேசுவதற்கு நாசுக்காகவும் இருக்கிறது. இம்மாதிரி வரம்பு கட்டுவது என்பதை வரவேற்க வேண்டியதுதான். ஆனால் அது எல்லாத் துறைகளுக்குமே பொதுவாக இருக்க வேண்டாமா? நிலங்களுக்கு உச்சவரம்பு என்பது கிராமாந்திரங்களில் ஆரம்பிக்க வேண்டிய விஷயம். ஆனால் நிலங்களுக்கு உச்ச வரம்பை கிராமப் பகுதிகளில் தொடங்குவதற்கு முன், நகர்ப்புறங்களிலல்லவா தொடங்கி வைக்க வேண்டும். அதுவும் கனம் பிரதம மந்திரியின் சம்பளத்திலிருந்தல்லவா ஆரம்பமாக வேண்டும்? நிலவுடைமைக்கு உச்சவரம்பு கட்ட விரும்புகிற பிரதமர், முதலில் தமது சம்பளத்திற்கு உச்சவரம்பு கட்டிக்கொண்டு, அதற்கடுத்து நகர்ப்புற வருமானங்களுக்கு வரம்பிட்டு, அதன்பிறகு கிராமங்களுக்குப் போனால், கடமை எளிதாக நிறைவேறுமென்று கருதுகிறேன்.

ஏன் இதைச் செய்யவில்லை – செய்யக்கூடாதா? உச்சவரம்பு என்ற முறையை ஏற்படுத்தும் நீங்கள் அதற்கு ஒரு தரத்தை வரையறை செய்யவேண்டும். ஆரம்பத்துக்கும் முடிவுக்கும் வரையறை செய்யாமல் எடுக்கப்படும் எந்த முயற்சியும் சரிவரச் செயல்படுமென்று நான் கருதவில்லை.

உச்சவரம்பு என்ற கொள்கையின் செயல்பாடு முதலில் நகரங்களில் ஆரம்பமாக வேண்டும். அப்புறம்தான் அதை கிராமங்களுக்கு இழுக்க வேண்டும். இதன்றி, நகர்ப்புறங்களில் வாழுகிறவர்கள், இயன்றவரை பணத்தையோ, உடைமைகளையோ திரட்டலாம் – சேமிக்கலாம் – எவ்வளவு செல்வத்தோடும் சுகிக்கலாம் – என்று அனுமதித்துவிட்டு, கிராமப்புறங்களில் வாழுவோர்களின் நிலங்களுக்கு மட்டும் உச்சவரம்பு கட்டப்போனால், உங்கள் திட்டத்திலும் அதைச் செய்யத் தூண்டிய எண்ணத்திலும் சமநிலை இல்லை என்ற எண்ணம் மக்களிடையே ஏற்படும் என்பதோடு, நமது நாட்டுக்குச் சொந்தமான மொத்த மக்களில் 80 சதவிகிதம் பேரை 20 சதவிகிதம் பேருக்கு அடக்கமாக்குகிறீர்கள் என்றுதான் பொருள்படும்.

அந்த நிலையில், மேற்கத்தியர் முன்பு இங்கு ஆடிப்பார்த்த விளையாட்டை நீங்கள் மறுபடியும் ஆடிப்பார்க்க விரும்புகிறீர்கள் என்பது உறுதியாகிவிடும்! ஆகவே, இடதுசாரிகளிடம் திட்டமில்லை – கொள்கை இல்லை என்றோ, இது பிழை, இது கேடு என்றோ வழக்கம் போல் இதிலும் எதையேனும் சொல்லிவைக்காமல், இந்த உச்சவரம்புப் பிரச்சனையில் நடுநிலையில் நின்று, நடுநோக்கோடு ஆராய்ந்து செயல்படும்படி அக்கறையோடும் அழுத்தத்தோடும் உங்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.

பொறுப்பின்றியும், சரியான காலநிலை தவறியும் பேசி வைக்கும் இடதுசாரியும் இருக்கிறார்கள் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அதற்காக வலதுசாரிகள் மனத்திற்குத் தோன்றியதைச் செய்து, நாட்டை ஆபத்தின் வயப்படுத்திவிடாதீர்கள் என்று, பொறுப்பின் பெயரால் வேண்டி, எனது பேச்சை முடித்துக் கொள்கிறேன்.

இதுவே நாடாளுமன்றத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நிகழ்த்திய முதல் முழக்கமாகும்.

© தேவர் தளம்

This entry was posted in முத்துராமலிங்க தேவர் and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *