நேதாஜியின் மறைவில் நீடிக்கும் மர்மம்: சிறப்பு விசாரணைக்குழு அமைக்க குடும்பத்தினர் மோடிக்கு கடிதம்
இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய நேதாஜியின் மறைவில் உள்ள மர்மம் இன்னும் நீடிக்கிறது. உண்மையைக் கண்டறியும் பல்வேறு முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன.
பிரிட்டிஷாரின் பிடியில் இருந்து 1941ம் ஆண்டு தப்பித்து நாட்டை விட்டு வெளியேறிய போஸ், நாட்டின் விடுதலைக்காக சர்வதேச நாடுகளின் உதவியை நாடினார். 1945ம் ஆண்டு காணாமல் போன அவர், அந்த ஆண்டு தைவானில் நடந்த விமான விபத்தில் இறந்ததாக கூறப்பட்டது. இருப்பினும் அந்த கருத்தை நீதிபதி மனோஜ் முகர்ஜி தலைமையிலான விசாரணைக் கமிஷன் நிராகரித்தது. 3 கமிஷன்கள் அமைத்து விசாரணை நடத்தியும், அதன் அறிக்கைகள் அரசால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில், நேதாஜி மாயம் மற்றும் மரணத்தின் பின்னணியில் உள்ள மர்மத்தை கண்டறிவதற்கு சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்கவேண்டும் என அவரது குடும்பத்தினர் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக மோடிக்கு அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், “உள்துறை, உளவுத்துறை, சி.பி.ஐ. போன்ற தொடர்புடைய பல்வேறு துறைகளின் நிபுணர்கள் கொண்ட சிறப்பு விசாரணைக்குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும். உச்ச நீதிமன்ற நீதிபதியின் வழிகாட்டுதலின்படி இந்த குழு செயல்படவேண்டும்.
இந்த விவகாரம் தொடர்பான பகுத்தறியப்படாத ஆவணங்கள், சாட்சிகள் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்களிடம் நடத்திய குறுக்கு விசாரணை என அனைத்தையும் சிறப்பு விசாரணைக்குழு மீளாய்வு செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளனர்.
தங்கள் கோரிக்கைகளை நேரில் தெரிவிப்பதற்காக அடுத்த மாதம் மோடியை சந்திக்க அனுமதி கேட்டுள்ளதாக நேதாஜியின் பேரன் சந்திர குமார் போஸ் தெரிவித்தார்.