பசும்பூண் பாண்டியன் என்பவன் சங்ககாலப் பாண்டிய மன்னன்.
பூண் என்பது அரசர்கள் மார்பில் அணியும் கவச அணி. பசும்பூண் என்பது பூண் வகைகளில் ஒன்று. பசும்பூண் பாண்டியனின் படைத்தலைவன் அதிகன். வாகைப்பறந்தலை என்னுமிடத்தில் நடந்த வாட்போரில் கொங்கர் படை இவனைக் கொன்று ஆரவாரம் செய்தது.
பசும்பூண் பாண்டியன் யார் :
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனே பசும்பூண் பாண்டியன் என்பது வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து.
பசும்பூண் பாண்டியன், பசும்பூண் செழியன் என்னும் தொடர்களை ஒப்புநோக்கி இவர்கள் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனே எனத் தெளியலாம்.
அடிக்குறிப்பு :
- பரணர் – குறுந்தொகை 393
- முனைவர் வ. குருநாதன் (2001, திருவள்ளுவர் ஆண்டு 2032). சங்ககால அரச வரலாறு. தஞ்சாவூர் – 613005: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம். pp. 162 – 177.
- மயிலை சீனி. வேங்கடசாமி (2007, திருவள்ளுவர் ஆண்டு – 2038). சங்ககாலத் தமிழக வரலாறு. சென்னை: மீனா கோபால் பதிப்பகம். pp. (186 – 188)/232.
- அகம் 162, 231, 253, 338 குறுந்தொகை 393
- புறநானூறு 206
- தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் – பசும்பூண் பெயருடன் பாண்டியர்களை சங்க இலக்கியங்களில் ஐந்து பாடல்களும் (அகம் 162, 231, 253, 338 குறு 393) தொல்காப்பிய பொருளதிகாரக் களவியலுக்கு நச்சினார்க்கினியார் உரையும் (நூற்பா 11), பசும்பூண் வழுதி என்னும் பெயருடன் நக்கீரர் பாடலிலும் குறிப்புகள் உண்டு. தலையாலங்கானத்துச் செழியன் இளமையிலேயே இவ்வெற்றியை பெற்றதால் அவனுக்கு பசும்பூண் பாண்டியன் என பெயர் அமைந்திருக்கலாம்.
- மேலும் தலையாலங்கானத்துச் செழியனை பாடிய இடைக்குன்றூர் கிழார் இவனை பசும்பூண் செழியன் எனப் பாடியுள்ளார். தலையாலங்கானத்துச் செழியனைப் பற்றி பல பாடல்கள் இயற்றிய நக்கீரர் இவனை பசும்பூண் பாண்டியன் (அகம் 253), பசும்பூண் வழுதி (நற் 358) என்றும் பாடியுள்ளார். நக்கீரர் தந்தையான மதுரை கணக்காயனார் (அகம் 253), பரணர் (அகம் 162, குறு 393) மதுரை ஈழத்துப் பூதன் தேவனார் (அகம் 231) இவனை பசும்பூண் பாண்டியன் எனப் பாடியுள்ளனர்.
- மேற்கண்டவற்றிலும் பரணர் செழியன் பெயரைக் குறித்து இவன் கூடற்பறந்தலை போரில் பெற்ற வெற்றியை பாடியதால் பசும்பூண் பாண்டியனும் தலையாலங்கானச் செழியனும் ஒருவனே என நிறுவுவார் முனைவர் வ. குருநாதன்..
- பசும்பூண் பாண்டியன் என்னும் அடைமொழியைக் கொண்டு மட்டும் இவனை வேறு மன்னன் என்பது கூடாது எனவும் மதுரையை இவன் சிறப்பாக ஆட்சி செய்தும் இவனைப் பற்றி புலவர்கள் புறப்பாடல்கள் பாடவில்லை என்றும் எனவே பசும்பூண் பாண்டியனும் தலையாலங்கானச் செழியனும் ஒருவனே என நிறுவுவார் மயிலை சீனி. வேங்கட சாமி.
- மேலும் பாண்டிய நாட்டின் அறியனை கைப்பற்றவே பசும்ப்பூண் பாண்டியனும் தலையாலங்கானச் செழியனும் போர் புரிந்ததால் பசும்பூண் பாண்டியனும் தலையாலங்கானச் செழியனும் ஒருவனே என நிறுவுவார் மயிலை சீனி. வேங்கட சாமி. (அகம் 231)