பஞ்சவர் என்னும் சொல் பாண்டியரை உணர்த்தும். இப்பெயரில் இலங்கையை பொதுக்காலத்திற்கு சற்று முன்னர் ஆண்ட ஐந்து பாண்டியர்களும் குறிக்கப்படுகின்றனர். சங்ககாலத்திலும் பிற்காலத்திலும் பாண்டியரை பஞ்சவர் என்னும் பெயருடன் அழைப்பது மரபாகவே ஆனது.
சங்ககாலக் குறிப்புகள் :
- சிலப்பதிகாரத்தில் வரும் நெடுஞ்செழியனை வாயில்காவலன் ‘பழியொடு படராப் பஞ்சவ வாழி’ என்று வாழ்த்தி விளிக்கிறான்.
- பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியை, காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் ‘செருமாண் பஞ்சவர் ஏறு’ என்றும், ‘தமிழ் கெழு கூடல் தண்கோல் வேந்து’ என்றும் குறிபிடுகிறார்.
- முத்தொள்ளாயிரம் பாண்டியரைப் பஞ்சவர் எனக் குறிப்பிடுகிறது.
- பஞ்சவன், வானவர்கோன் ஆரம் பூண்டவன் வானவர்கோன் ஆரம் வயங்கியதோள் பஞ்சவன் எனப் பாராட்டப்படுகிறான்.
- கூடல் நகரம் ‘பசிவு இல் உயர் சிறப்பின் பஞ்சவன் கூடல்’ எனப் போற்றப்படுகிறது.
- கருதத்தக்கவை :
- திருமால் ‘பஞ்சவர்க்குத் தூது நடந்தான்’ எனப் போற்றப்படுகிறார்.
- ஐவரும் (5), ஈரைம்பதின்மரும் (100) போரிட்டதைப் புறநானூறு குறிப்பிடுகிறது.
இவற்றால் பஞ்சவர் என்னும் சொல் பாண்டியரைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட காரணம் விளங்கவில்லை.
பிற்காலம் :
சங்ககாலத்துக்கு பிறகு பெரும்பாலும் மதுரையில் மூத்தவனான பட்டத்தரசன் இருக்க தென்பாண்டி நாடு மற்றும் வட தமிழகத்தில் மூத்தவனது நான்கு சகோதரர்கள் இருந்து நடத்துவது வழக்கம். அதனால் பஞ்சவர் என்னும் பெயர் பிற்காலத்திலும் வழக்கில் இருந்தது. இதை பாண்டியர்களின் படைத் தளபதிகளாய் இருந்தவர்கள் சிலரும் தன் பெயரோடு பட்டமாக சேர்த்துக் கொண்டனர். அவற்றில் அதிகம் அறியப்படும் பாண்டியர்கள் சிலரின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுளது.
- குலோத்துங்கச் சோழனால் முறியடிக்கப்பட்ட பஞ்ச பாண்டியர்கள்.
- மார்க்கோ போலோவால் குறிப்பிடப்படும் பஞ்ச பாண்டியர்கள்.
- குலசேகர ராசா கதையில் வரும் பஞ்ச பாண்டியர்.
- தென்காசிப் பாண்டியர்கள் கல்வெட்டுகளில் குறிக்கப்படும் பஞ்ச பாண்டியர்கள்.
அடிக்குறிப்பு :
- சிலப்பதிகாரம் 20-33
- புறநானூறு 58-8
- முத்தொள்ளாயிரம் 12-1
- சிலப்பதிகாரம் 29 வாழ்த்துக்காதை வள்ளைப்பாட்டு
- பரிபாடல் 2-46
- சிலப்பதிகாரம் 17-34-3, 17-37-=2
- புறநானூறு 2