பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் வெள்ளையர்களின் வரி வசூல் கொடுமைகளுக்கு எதிராகப் போராடிய தென்னிந்தியப் பாளையக்காரர்களின் போராட்டத்திற்கு, நெற்கட்டுஞ்செவல் பாளையக்காரரான பூலித்தேவன், 1750களில் நடத்திய போராட்டம் முன்னோடியாக இருந்திருக்கிறது. சங்கரன் கோவில் அருகே இருக்கும் இந்தப் பாளையம் அன்று நெல்லைச் சீமையின் போராட்ட மையமாக இருந்தது.
நாயக்க மன்னர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் மதுரையை ஆள்வதற்குப் பல்வேறு மன்னர்கள் முயன்றனர். மதுரையைக் கைப்பற்றுவதன் மூலம் அதன் கீழ் இருந்த பாளையங்களின் பெரும் வரிவசூல் தொகையைக் குறி வைத்தே பலரும் போட்டியிட்டனர். “தனக்கு வரவேண்டிய கப்பம் மற்றவர்களுக்குப் போவதா?” என்று ஆத்திரமடைந்த ஆற்காட்டு நவாப், மதுரையைக் கைப்பற்ற தொடர்ந்து படையெடுத்தான். அதற்கு ஆங்கிலேயர்களின் இராணுவத்தையும் பயன்படுத்திக்கொண்டான். 1755இல் ஆற்காட்டு நவாபின் அண்ணன் மாபூஸ்கான் தலைமையில் கர்னல் கீரானின் ஆங்கிலேயப் படையும், கான்சாகிப் தலைமையில் உள்நாட்டுச் சிப்பாய்களடங்கிய படையும் பாளையக்காரர்களிடம் வரிவசூல் செய்யப் புறப்பட்டது.
எல்லாப் பாளையங்களையும் பணியவைத்த இந்தப்படை, பூலித் தேவனை மட்டும் வெற்றிகொள்ள முடியவில்லை. இந்தப் போருக்குப் பின்னர்தான் பூலித்தேவனது புகழ் பரவத்தொடங்கிற்று. வெற்றியடைந்த கையோடு ஏனையப் பாளையக்காரர்களை ஒன்றிணைக்க முயல்கிறார் பூலித்தேவன். பலர் பயந்து ஒதுங்க சிலர் மட்டும் ஆதரிக்கின்றனர்.
திருவிதாங்கூர் மன்னன் ஆரம்பத்தில் அவனது சுயநலத்திற்காக பூலித்தேவனை ஆதரித்து விட்டுப் பின் கம்பெனியை ஆதரிக்கின்றான். இத்தகைய சூழ்நிலையில் பூலித்தேவன் ஹைதர் அலியின் உதவியையும் கேட்டிருக்கிறார். வேறு போர் முனைகளில் வெள்ளையருடன் மோதிக் கொண்டிருந்ததால் ஹைதராலும் உதவ முடியவில்லை.
இந்நிலையில் நவீன ஆயுதங்கள் ஏதுமின்றி மரபு ரீதியான ஆயுதங்களை வைத்தே வீரத்துடன் போரிட்டார் பூலித்தேவன். தனது திறமையால் வெள்ளையர்களிடம் தலைமைத் தளபதி பொறுப்பேற்றிருந்தவனும், போர் வியூகத்திற்கும், கொடூரமான போர் முறைக்கும் பெயர் பெற்றவனுமாகிய கான்சாகிபுவால் கூட பூலித்தேவனை ஆரம்பத்தில் வெல்லமுடியவில்லை. சுமார் 10 ஆண்டுகள் போராடிய பூலித்தேவன், 1760 – 61ஆம் ஆண்டுகளில் தோல்வியுற்றுத் தலைமறைவாகிறார். அதற்குப் பின் அவரைப் பற்றிய செய்திகளில்லை. பூலித்தேவனது காலம் முடிந்த பிறகுதான் காலனியாதிக்க எதிர்ப்பு தென்னகத்தில் பரவலாகக் கருக்கொள்ளத் தொடங்குகிறது.
அதேநேரத்தில், ஆற்காட்டு நவாப்பையும் அவனுடைய கூலிப் படையாக வந்த கம்பெனியின் படைகளையும் எதிர்த்துப் போட்ட அவரது வீரம் பின்னாளைய போராட்டங்களுக்கு ஊக்கமளிக்கும் முன்னுதாரணமாகியது.
thanks :vinavu