ஆசிரியர்:முனைவர் மு.ஞானத்தாய்
வெளியீடு:காவ்யா பதிப்பகம்
காவ்யா, 16, இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை-600 024.
வெளியீடு:காவ்யா பதிப்பகம்
காவ்யா, 16, இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை-600 024.
இனவரைவியல் ஆய்வு நூல் இது. திருநெல்வேலி மாவட்ட மறவர் இனக் கதைப்பாடல்கள் பற்றியது. முக்குலத்தோரில் கள்ளர், அகமுடையார் குறித்துப் பொதுவாகவும், மறவர் பற்றிச் சிறப்பாகவும் “மறவரின் வரலாறும் வாழ்வும்’ என்னும் முதல் இயல் பேசுகிறது.
கள்ளர் சோழர் வழித்தோன்றல், அகமுடையார் சேரர் வழித்தோன்றல், மறவர் பாண்டியர் வழித்தோன்றல் எனக்குறித்து அவற்றுக்குரிய புராணம், இலக்கியம், வரலாற்றுச் செய்தி, வரலாற்று ஆய்வாளர் கருத்து என்பவற்றை ஆதாரமாகக் காட்டி எதிர்கால ஆய்வு ஆழம் காணப் பல வித்துக்கள் இவ்வியலில் ஊன்றப்பட்டுள்ளன.
“இனவரைவியலும் கதைப்பாடல்களும்’ என்னும் இரண்டாம் இயல் இனவரைவு குறித்த விளக்கம், கதைப் பாடல்களின் கதைச் சுருக்கம் என்பவற்றைக் கொண்டுள்ளது. பாடல்கள் வாயிலாக அறியலாகும் கதை நிகழ்ந்த காலம், சூழல் பற்றிய விளக்க முடிவு படிப்பவருக்கு தெளிவை தருகிறது.
சீவலப்பேரி பாண்டி நாவல், திரைப்படம் என்னும் வடிவங்களில் மக்களை அடைந்திருப்பது குறிக்கப்பட்டுள்ளது. 1981ம் ஆண்டு நிகழ்ச்சிக்குப் பின் 18 ம் நூற்றாண்டின் கதை இடம் பெறுகிறது. கால வைப்புமுறை நெருடுகிறது.”மறவரினக் கதைப்பாடல்களில் சமூகப் பண்பாடுகள்’ என்னும் மூன்றாம் இயல் சமூகவியல் நோக்கில் ஆராயப்பட்டுள்ளது.
சாதிப்பிரிவு, சிறுதெய்வ வழிபாடு, சகுனம், குறிபார்த்தல், சோசியம், தலையெழுத்து என்பவை பற்றிய மறவர்களின் வாழ்வியல், தனிமனித வாழ்வு, சமுதாய வாழ்வு என்னும் இரண்டிலும் அறியப்படும் வகை, ஆசிரியரின் ஆய்வு முயற்சி அருமைக்கு உரைகல்.
“நாட்டுப்புற (மறவரின)க் கதைப்பாடல்களில் வரலாற்றுச் சான்றுகள்’ என்னும் நான்காவதான இறுதி இயல், விடுதலைப் போரில் இவர்கள் ஆற்றிய பங்கினைப் பேசுகிறது. இரண்டாம் இயலின் தொடர்ச்சியாக இருப்பதால், அங்கு உள்ள பல செய்திகளும் கருத்துக்களும் இடம் பெற்றுள்ளன.
நூலுக்கு ஒரு முடிவுரை இருந்திருந்தால் இனவரைவியல் ஆய்வுலகுக்குக் கிடைத்துள்ள அருமையான வரவு முழுமை பெற்றிருக்கும். “காவ்யா வெள்ளி விழாச் சிறப்பு வெளியீடு’ என்னும் சிறப்புக்குப் பொருந்தும் சிறப்பு இந்நூலுக்கு உண்டு.
…..
One Response to மறவர் கதைப்பாடல்கள்