மறவர் மண்ணில் மதமாற்றம் செய்த பாதிரியார்

2252_bhaskara_sethupati

ராமநாதபுரம் சமஸ்தானத்தை ஆண்ட மன்னர்களில் ‘கிழவன் சேதுபதி’ சிறப்பானவன். அவன் வரலாற்றை திரு மீ.மனோகரன் எழுதியிருக்கிறார். அதில் பிரிட்டோ பாதிரியார் பற்றிய விவரங்கள் கிடைக்கின்றன. தென் மாவட்டங்களில் மதமாற்றம் எப்படி நடந்தது என்பதற்கு இந்த வரலாறு ஒரு எடுத்துக்காட்டு. இனி பிரிட்டோ பாதிரியார் பற்றி படியுங்கள்.

பண்டைய தமிழ் மூவேந்தர்களுக்கு அடுத்ததாக தமிழகத்தில் நீண்ட நெடிய பாரம்பரிய ஆட்சியைப் புரிந்தவர்கள் இராமநாதபுரம் சேதுபதிகள். இராமபிரான் ராமேஸ்வரத்தில் சேதுவை நிறுவிய காலத்தில் இவர்களை அந்த சேதுவைக் காக்கும் அதிபர்களாக நியமித்ததன் காரணமாகத்தான் இவர்கள் சேதுபதி என்று அழைக்கப்பட்டார்கள். மறவர் இனம் ஏழு பிரிவுகளாக இருந்ததில், இவர்கள் அதில் ஒரு பிரிவினர். இவர்கள் மறவர் நாட்டின் அதிபதியாக பலகாலம் விளங்கி வந்தவர்கள். வீரத்துக்கும், விவேகத்துக்கும், பக்திக்கும், தமிழுக்கும், ஆன்மீகத்துக்கும் இவர்கள் ஆற்றியுள்ள பணி அற்புதமானது. இத்தகைய பாரம்பரியமிக்க சேதுபதிகளில் பலரும் புகழ்வாய்ந்தவர்கள். கிழவன் சேதுபதி, முத்துராமலிங்க சேதுபதி, பாஸ்கர சேதுபதி இப்படிப் பலர். இவர்களில் பாஸ்கர சேதுபதி சுமார் நூறு ஆண்டுகளுக்குள் வாழ்ந்தவர். சுவாமி விவேகானந்தரை அமெரிக்காவில் சிகாகோவில் நடந்த சர்வ மத மாநாட்டுக்கு அனுப்பி வைத்தவர். அவர் 1897ல் தாய்நாடு திரும்பிய போது இலங்கை வந்து அங்கிருந்து ராமேஸ்வரம் வந்து காலடி வைத்த போது, சுவாமிஜியின் காலடி பாரத புண்ணிய பூமியில் படுவதற்கு முன் தன் தலைமீது காலடி வைக்க வேண்டுமென்று கேட்டுப் பெற்றவர். பற்பல தானதர்மங்களைச் செய்தவர். அந்தக் காலத்திலேயே சென்னை கிருத்துவக் கல்லூரியில் எஃப்.ஏ. எனப்படும் இண்டெர்மீடியட் பாஸ் செய்தவர். ஆங்கிலம், தமிழ் இவற்றில் பாண்டித்தியம் வாய்ந்தவர். கலை இலக்கியங்களைப் போற்றியவர். இப்படிப்பட்ட பெருமைக்குரியவர்களெல்லாம் வாழ்ந்த குலம் ‘சேதுபதிகள்’ குலம். ஆயினும் இவர்களது வரலாற்றை ஆய்ந்து பார்க்க விரும்பினால், நம்மவர்கள் எவரும் எழுதிவைக்காத நிலையில் போர்த்துகீசிய பாதிரிமார்களும், கிறிஸ்தவ மதப் பிரச்சாகர்களும் எழுதிவைத்தவைகளைத்தான் நம் வரலாற்றாசிரியர்கள் எழுதி வருகிறார்கள். இப்படி ஒருதலைப் பட்சமான செய்திகளை பாதிரிமார்களின் குறிப்புகளிலிருந்தும், ஆங்கில ஏகாதிபத்தியத்தின் கெசட்டுகளிலிருந்தும் எடுத்தாளும் நம்மவர்கள் இதிலுள்ள உண்மைகளை வெளிக்கொணர்வதற்கு மாறாக, அவர்களது செயல்களைப் போற்றியும், இங்கிருந்த இந்து மன்னர்களின் செய்கைகளைக் குறை கூறியும் எழுதி வைத்திருப்பது தலைக்குனிவை ஏற்படுத்துகிறது. அப்படிப்பட்டதொரு வரலாற்று செய்தி இராமநாதபுரத்தை நெடுங்காலம் ஆண்ட கிழவன் சேதுபதி காலத்தில் நடந்திருப்பதாக நமக்குத் தெரிகிறது. பிரிட்டோ எனும் போர்த்துகீசிய பாதிரியாருக்கு மனிதாபிமானத்தோடு கிழவன் சேதுபதி ஒரு வழிபாட்டுத் தலத்தைக் கட்டிக்கொண்டு தன் மத வழிபாட்டை நடத்த அனுமதி கொடுத்தான். அதைப் பயன்படுத்திக் கொண்டு அந்த பிரிட்டோ பாதிரியார் மறவர்களை மதமாற்றம் செய்யத் தலைப்பட்டார். அவர் எல்லை மீறி அரண்மனையிலேயே கைவைத்ததும், அதனால் கிழவன் சேதுபதியின் மருமகளும், தம்பியும் கூட பாதிக்கப் பட்டதும், மன்னன் விழித்துக் கொண்டான். தன் தம்பியிடம்  ”ஏன் இப்படிச் செய்தாய்? நமது இந்து தர்மத்தில் இல்லாத எதை அந்த கிருத்துவ மதத்தில் கண்டுவிட்டாய்? அந்த பாதிரியார் உன்னை என்ன சொல்லி மதமாற்றம் செய்தார்? மன்னர் குடும்பத்து நீயே மதம் மாறினால், அது இந்த ராஜ்யத்துக்கே ஆபத்து அல்லவா?” என்று கேட்டார். அதற்கு அவர் அது என் இஷ்டம் என்றார். சரி, இனி இவனிடம் பேசிப் பயனில்லை என்று அந்த ஜான் பிரிட்டோ பாதிரியாரை வரவழைத்து அவர் மீது விசாரணை நடத்தப் பட்டது.  பாதிரியார் தண்டிக்கப்பட்டார்.

john_de_brito_stampஇதனை அன்னிய அடிவருடிகள், வெளிநாட்டு சரித்திர ஆசிரியர்கள் கூறும் ஒருதலைப் பட்சமான செய்திகளைக் கொண்டு, அந்த பாதிரியாரை வானளாவப் புகழ்ந்து அவரது மரணத்தைப் போற்றியும், கிழவன் சேதுபதியின் முடிவைக் கண்டித்தும் எழுதி வைத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, சமீபத்தில் “இன்று” என்ற தலைப்பில் செய்திக்கு முன் ஒளிபரப்பும் வரலாற்றுச் செய்தியொன்றில் ஒரு தொலைக்காட்சி ஊடகம், இந்த பிரிட்டோ பாதிரியார் செய்தது பெரும் தியாகம் என்றெல்லாம் வர்ணித்தார்கள். இப்போதும் கூட இந்த மதமாற்ற நாடகங்களைப் புரிந்து கொள்ளாத நம் மக்களைப் பற்றி நினைத்தால் வேதனையாகத்தான் இருக்கிறது.

ஆனால், நடந்த வரலாறு என்ன? நாம் பார்க்கப் போகும் இந்தப் பாதிரியாரின் முழுப்பெயர் ஜான் டி பிரிட்டோ என்பதாகும். இவர் காலம் 1647 முதல் 1693 வரை. இவர் போர்த்துகல் நாட்டில் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்தார். பிரேசில் நாட்டில் இவரது தந்தை கவர்னராக இருந்தாராம். வசதியான செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த இந்த பிரிட்டோ, கிறிஸ்தவ மதத்தைப் பரப்பும் நோக்கத்துடன் இந்தியா செல்லத் துடித்தார். அதன் காரணமாக இவர் மதபோதகராவதற்காக 1662இல் அதற்கான பள்ளியில் சேர்ந்து படித்தார். ஐரோப்பா தவிர்த்த ஆப்பிரிக்கா, ஆசியா போன்ற கண்டங்களிலுள்ள நாடுகளில் மதப் பிரச்சாரம், மதமாற்றம் இவைகளைச் செய்வதிலுள்ள ஆபத்துக்களை உணர்ந்தே இவர் இந்தியா வந்தார். குறிப்பாகத் தென் தமிழ்நாட்டில் மறவர் சமூக மக்களைக் குறிவைத்து இவர் மதமாற்றம் செய்ய விழைந்தார். தனது 26ஆவது வயதில் 1674இல் இவர் இந்தியா வந்தார். அதன்பின் 12 ஆண்டுகள் கழித்து இந்தியாவின் நிலைமைகளை நன்கு ஆராய்ந்து பார்த்துத் தனது மதமாற்றப் பணிக்குத் தென்னிந்தியாவில் மறவர் பூமியே சிறந்தது என்ற எண்ணத்தில் இவர் 1686இல் மதுரை வந்து சேர்ந்தார். அங்கிருந்து பனங்குடி எனும் ஊருக்கு அருகிலுள்ள வெள்ளைக்குளம் எனுமிடத்தில்  தனது மதமாற்ற முகாமைத் தொடங்கினார். தாங்கள் பரம்பரை பரம்பரையாக போற்றிப் பாதுகாத்துவந்த சமய நெறிகளில் அலுத்துப் போயோ என்னவோ அந்தப் பாதிரியார் இங்கு குடியேறிய சில நாட்களுக்குள்ளாக, சில பிராமணர்கள் உட்பட இவரது வாசாலப் பேச்சினாலும், புதிய வழிபாட்டு முறைகளைக் கண்டு மோகித்தும், மதம் மாறினார்கள். இது அந்தப் பாதிரியாருக்கு உற்சாகத்தை ஊட்டியிருக்க வேண்டும். பரவாயில்லையே முதல் வியாபாரமே கண்டு முதல் அதிகம் பார்த்து விட்டோமே, இனி மேலும் அடுத்தடுத்த ஊர்களுக்குச் சென்றால் மக்கள் மந்தை மந்தையாக மதம் மாறுவார்கள் போலிருக்கிறதே என்று இவர் வியந்து போனார். நம் மக்களுக்கு அந்தக் காலத்தில் வெள்ளைத் தோலையும், அவர்கள் பேசும் ஆங்கிலம் கலந்த கொச்சைத் தமிழையும் கண்டதும் ஒருவித மோகம் ஏற்பட்டு விடுகிறது. இன்றுகூட அயல்நாட்டிலிருந்து வரும் வெள்ளைக்கார சுற்றுலாப் பயணிகளின் பின்னால், நமது குழந்தைகள் காணாததைக் கண்டது போல ஓடுவதைப் பார்க்கிறோமல்லவா? அந்த தாழ்வு மனப்பான்மைதான் நம் அப்பாவி மக்களை அவர்கள் பின் ஓடவைத்தது.

பிரிட்டோ பாதிரியாரின் புதிய சீடர்கள் அவருக்கு அருளானந்தர் என்று பெயர் சூட்டி பெருமைப் படுத்தினர். இவர் இந்தப் பகுதியில் குடியேறிய ஒரு சில நாட்களிலேயே இவருக்கு நிறையபேர் மதமாற்றத்திற்கு இணங்கி விட்டனர். அந்த நிலையில் அடுத்தடுத்த கிராமங்களுக்கும் செல்லும் நோக்கில் இவர் சிவகங்கை வழியாக பாகனேரிக்கு நான்கு மைல் தூரத்தில் உள்ள மேலமங்கலம் எனும் ஊருக்குப் போய்க் கொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த இராமநாதபுரம் கிழவன் சேதுபதியின் முதலமைச்சராக இருந்த குமார பிள்ளை இந்தப் பாதிரியார் தங்கள் மக்களை மதமாற்றம் செய்யும் செய்தியறிந்து மறவர் படையைக் கொண்டு பிரிட்டோ பாதிரியாரைக் கைது செய்தார். அந்த மறவர் படையினர் இந்தப் பாதிரியாரையும் அவருடன் வந்தவர்களையும் காளையார்கோயிலுக்குக் கொண்டு சென்றனர். அங்கு இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். சுமார் பத்து நாட்கள் காளையார் கோயில் சிறையில் இருந்த பிறகு இவர்கள் அனைவரும் பாகனேரிக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அப்போது கிழவன் சேதுபதியிடமிருந்து, கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் பாதிரியாரையும் அவரோடு இருப்பவர்களையும் இராமநாதபுரத்துக்குக் கொண்டு வரும்படி கட்டளை வந்தது.

அங்கு மன்னனின் அரசவையில் பிரிட்டோ பாதிரியார் விசாரிக்கப்பட்டார்.  அந்த விசாரணையின் போது, இந்த நாட்டில் இந்துக்கள் பல கடவுளர்களை வணங்குவதாகவும், அவர்களுடைய பழக்க வழக்கங்கள் காட்டுமிராண்டித்தனமாக இருப்பதாகவும், கல்லையும், மண்ணையும், மரத்தையும் வணங்கும் இவர்களுக்குச் சரியான பாதையைக் காட்டுவதுதான் தனது மதத்தின் நோக்கமென்றும், அந்தப் புனிதமான பணியைத்தான் தான் செய்து வருவதாகவும் பிரிட்டோ வாதாடினார். அப்படி என்னதான் உங்கள் மதம் போதிக்கிறது என்று மன்னர் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பினார். உடனே அவையிலிருந்த பெரியோர்கள், இந்த பாதிரி நம் மன்னனின் மனதைக் கூட கலைத்து விடுவார் என்று அஞ்சினர். எனினும் மன்னனின் கட்டளைக்கிணங்க பாதிரியார் அரண்மனைக்குச் சென்று அங்கு அரசனுக்குச் சரிசமமான ஆசனத்தில் அமர்ந்துகொண்டு தனது மதத்தின் அருமை பெருமைகளை வர்ணிக்கத் தொடங்கி விட்டார். அவர் சொல்லச் சொல்ல அரசனுக்கு கோபம் கூடியது. ஆனால் தான் குடிப்பழக்கத்துக்கு ஆளானவன், மேலும் பலதாரங்களை மணந்து கொண்டிருப்பவன் என்பதால் ஒருவகைக் குற்ற உணர்வுக்கு ஆட்பட்டு  நேரடியாக பாதிரியாரை எதிர்த்து அவன் வாதம் செய்யவில்லை. எனவே சமாளித்துக் கொண்டு அரசன் சொன்னான் “பாதிரியாரே! நீங்கள் நம் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் தங்கிக் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் மதத்தைப் பின்பற்றுவதையோ, உங்கள் கடவுளை வணங்குவதையோ நான் தடுக்கவில்லை. ஆனால், எங்களுடைய கலாசாரம், நாகரிகம், பண்பாடு இவைகளுக்கு மாறான எதையும் நீங்கள் உபதேசிக்க நான் அனுமதிக்க முடியாது. மீறி நடந்தால் உங்கள் உயிருக்கு நான் ஜவாப்தாரியல்ல” என்று எச்சரித்து பாதிரியைப் போக விடுத்தான். அதன் பிறகு அரசனைச் சந்திக்க பிரிட்டோ பாதிரியார் எடுத்துக் கொண்ட முயற்சிகள் எதுவும் பலிக்கவில்லை. சிலகாலம் தென் தமிழ்நாட்டில் தன் மதமாற்ற வேலைகளை நிறைவுற செய்து முடித்த பின் 1687இல் அவர் போர்சுகல் திரும்பினார். இந்தியாவில் வெற்றிகரமாக மதமாற்றங்களைச் செய்துவிட்டு நாடு திரும்பும் பாதிரியாரை அந்நாட்டு மதவாதிகள் உற்சாகமாக வரவேற்றார்கள். போர்ச்சுகலில் சில காலம் இருந்த பிறகு அவருக்கு மீண்டும் தமிழ்நாட்டுக்கு வந்துத் தன் வேலையைத் தொடர்ந்து செய்ய வேண்டுமென்று விரும்பினார். தனது நண்பரான டிகோஸ்டா எனும் பாதிரியாருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தனக்கு லிஸ்பனில் (போர்த்துகல் தலைநகர்) உள்ள அரண்மனையை விட தென் தமிழ்நாட்டு மறவர் மண்ணே மிகவும் பிடித்திருக்கிறது என்று எழுதியிருக்கிறார். அதன்படி அவர் மீண்டும் இந்தியாவை அடைந்து கோவாவில் தரையிறங்கினார். அங்கிருந்து பாண்டிய நாட்டு மண்ணுக்கு வந்து தனது பணியைத் தொடங்கினார். தாதியாத் தேவன் என்றொரு பாளையக்காரன். இவன் கிழவன் சேதுபதிக்கும் உறவினன்கூட. அவனுக்கு இந்த பாதிரியார் பால் அன்பு ஏற்பட்டது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏதோவொரு வினோதமான வியாதி அவனைப் பீடித்தது. பல மருத்துவர்கள் மருந்து கொடுத்தும் சரியாகவில்லை. அப்போது செய்தியறிந்து அருளானந்த அடிகளான பாதிரியார் பிரிட்டோ தாதியாத் தேவனைப் பார்க்க வந்தார். அவர் வந்த வேளை அந்த பாளையக்காரனின் வியாதி தீர்ந்து குணமடைந்தான். அவன் பாதிரியாரை மிகவும் மதித்து அவர் ஆலோசனைப்படி ஞானஸ்நானம் செய்விக்கப்பட்டு மதமாற்றம் பெற்றான். அவன் மதம் மாறியதில் ஓர் சிக்கல் ஏற்பட்டது. அவனுக்கு ஐந்து மனைவியர். அவன் சார்ந்த புதிய மதக் கோட்பாடுகளின்படி அவனுடைய முதல் மனைவி மட்டும்தான் மனைவியாக இருக்க முடியும். மற்ற நால்வரும் அவனுக்குச் சகோதரிகளாகி விடுகின்றனர். இந்த செய்தி அவனுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டது. முதல் மனைவி நீங்கலாக மற்றவர்கள் என்ன கெஞ்சியும் அவன் அவர்களை மனைவியராக ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டான் பாதிரியாரின் அறிவுரைப்படி. அவர்கள் நால்வரும் கூடிப்பேசி, நால்வரில் இளையவளான காதலி நாச்சியார் என்பவளை அழைத்து, அவளுக்குப் பெரியப்பன் உறவான கிழவன் சேதுபதியிடம் சென்று முறையிடும்படி கேட்டுக் கொண்டனர். அதன்படி காதலி நாச்சியார் சென்று கிழவனிடம் முறையிட்டாள். அவனும் யோசித்தான். தன் உறவினனான தாதியாத் தேவன் மதம் மாறிவிட்டான். தன் தம்பி மகள் கணவன் உறவை இழந்து அழுகிறாள். இப்படியே போய்க்கொண்டிருந்தால் இந்த பாதிரியார் மறவர் இனமக்கள் அனைவரையும் மதம் மாற்றிவிடுவார் என்று நினைத்தார். இந்த தாதியாத் தேவன் முன்னர் கிழவன் சேதுபதியோடு அரியணைக்குப் போட்டியிட்டவன். கிழவனுக்குப் பிறகு அரசனாக ஆகக்கூட வாய்ப்புகள் இருந்தன. மற்றவர்களை மதம் மாற்றியதைப் போல சகட்டு மேனிக்கு இந்த மறவர் பூமிக்கு உரிமையுள்ள ஒருவனையுமல்லவா இந்த பாதிரியார் மதம் மாற்றிவிட்டார் என்ற கோபம், வருத்தம். ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து கடைசியில் நம்மையுமா? சேதுபதியால் கோபத்தை அடக்கமுடியவில்லை.

john_de_brito_christian_pictureஅரச குடும்பத்தில் ஒருவன் மதம் மாறினால் மக்களும் அல்லவா மதம் மாறிவிடுவார்கள்!  அப்படி மக்கள் மதம் மாறத் துணிந்தால் இந்த தாதியாத் தேவனைத் தனக்கெதிராக ஆட்சியைப் பறிக்க போர்த்துகீசியர் தூண்டக் கூடுமல்லவா என்றெல்லாம் யோசித்தான் கிழவன் சேதுபதி. இது வெறும் மதமாற்றம் மட்டுமல்ல; போர்த்துகீசிய ஆதிக்கத்தை கடற்கரையையும் தாண்டி உள்நாட்டில் ஏற்படுத்தும் நோக்கமும் இதில் இருக்கிறது என்று சிந்தித்தார் அவர். இது அவருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. இது ஏதோ கற்பனையான பயம் என்று எண்ணுவதற்கில்லை. வரலாற்று அடிப்படையில் அவ்வாறு சேதுபதி பயந்ததற்குக் காரணங்கள் இருந்தன. 1532 – 1582 காலகட்டத்திலேயே கத்தோலிக்க மதத்துக்கு மாற்றம் செய்யப்பட்ட மீனவர்களுடன் தூத்துக்குடியில் வாழ்ந்தவர்களும் போர்த்துகீசிய குடிமக்களாகக் கருதப்பட்டார்கள். இதனை ஒரு கிறிஸ்தவ பாதிரியாரே எழுதியிருக்கிறார். ஆம்! பிஷப் கால்டுவெல் கூறும் செய்தி இது.

ஐரோப்பாவிலிருந்து நாடுபிடிக்கவும், கீழை நாடுகளில் மக்களை மதமாற்றம் செய்வதற்காகவும் பல நாட்டினர் இங்கு வந்தனர். அவர்களில் டச்சுக்காரர்கள், போர்த்துகீசியர் என பலரும் அடங்குவர். என்றாலும் இங்கு எவரும் மதமாற்றம் செய்வதை கிழவன் அனுமதிக்கவில்லை. சிறையில் அடைக்கப்பட்ட பிரிட்டோ பாதிரியார்  அந்த சிறைவாசத்திலேயே இறந்து போனார். பண்பிலும், அரசாட்சியிலும் சிறந்து விளங்கிய கிழவன் சேதுபதி மற்ற வகைகளில், கடற்கரையில் முத்து எடுப்பது முதல், வியாபாரம் வரை அந்நியர்களை அனுமதித்தாலும் இதுபோன்ற மதமாற்றத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தெரிகிறது. இது குறித்து பல்வேறுபட்ட சர்ச்சைகள்  உள்ளன.  ஆனால் சில வரலாற்று உண்மைகள் கவனத்தில் கொள்ளத் தக்கவை. பாதிரியார்கள் வரிசெலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப் பட்டிருந்தனர் என்பது அவர்கள் மீது கிழவன் சேதுபதி காழ்ப்புணர்வு கொண்டிருக்கவில்லை என்பதைக்காட்டுகிறது.   பாதிரியார்கள் முக்கியமான பிரபல புள்ளிகளை மதமாற்றம் செய்வதில் குறியாக இருந்தார்கள்; தாங்கள் செய்யும் ”தியாகங்களை” எல்லாம் கூறி மக்களின் அனுதாபத்தைப் பெற்று மதமாற்றம் செய்தார்கள் என்பதும் தெளிவாக பதிவு செய்யப் பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் இந்து மதத்தின் அழிவில்தான் கிறிஸ்தவம் வளரமுடியும் என்று அவர்கள் கருதினார்கள் என்பதும் ஐயமின்றி விளங்குகிறது.

 thanks :

தஞ்சை வெ.கோபாலன்

…..

This entry was posted in மறவர் and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *