மாங்குளம் கல்வெட்டு என்பது தமிழ்நாட்டின் மாங்குளம் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட ஒரு தமிழ் பிராமிக் கல்வெட்டு ஆகும். கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இக் கல்வெட்டே இதுவரை அறியப்பட்டவற்றுள் மிகவும் பழமையான தமிழ்ப் பிராமிக் கல்வெட்டு ஆகும். தமிழக வரலாற்றைப் பொறுத்தவரை மிகவும் முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படும் இக் கல்வெட்டு, சங்ககால அரசன் பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றிக் குறிப்பிடுகிறது.
இக் கல்வெட்டு 1882 ஆம் ஆண்டு ராபர்ட் செவெல் என்பவரால் முதன் முதலில் கண்டறியப்பட்டது எனினும், 1906 ஆம் ஆண்டில் கே. வி. சுப்பிரமணிய ஐயரால் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை ஆய்வு செய்த அவர் இது பற்றிய விரிவான விளக்கங்களுடன் 1924 ஆம் ஆண்டில் இடம்பெற்ற அனைத்திந்திய கீழைத்தேச மாநாட்டின் மூன்றாவது அமர்வில் “பாண்டிய நாட்டின் மிகப்பழைய நினைவுச் சின்னங்களும் கல்வெட்டுக்களும்” என்னும் தலைப்பில் கட்டுரை ஒன்றை வாசித்தார்.
நன்றி : தமிழ் பிராமிக் கல்வெட்டுகள்