சோழர்கள் வரலாறு – முழு தொகுப்பு

சோழர் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர். மற்ற இரு குலங்கள் சேரர்களும் பாண்டியர்களும் ஆவர். சோழர் என்னும் பெயர் எவ்வாறு வழங்கத்தொடங்கியது என்பது தெரியவில்லை, சேரர், பாண்டியர் என்ற பெயர்களைப் போன்று சோழர் என்பது பண்டைக் காலந்தொட்டே ஆட்சி செய்து வரும் குடும்பம் அல்லது குலத்தின் பெயராகும் என்று பரிமேலழகரால் கருதப்பட்டது. சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவரும் சகோதரர்களே என்று கூறப்படுகின்றன. இது மரபு வழிச்செய்தி வரலாற்று ஆதாரமற்றது. இது எவ்வாறாயினும் சோழ அரச மரபின் மன்னர்களது ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளும், மக்களும் பண்டைக்காலம் முதலே இப்பெயராலேயே குறிப்பிடப்பட்டு வந்துள்ளனர். சோழர் குலம் வளம் பொருந்திய காவிரி ஆற்றுப் படுகைப் பகுதியிலேயே தோற்றம் பெற்றது.

காவிரியின் பெருமையைப் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் புகழ்ந்து பாடுகின்றன. சூரிய புத்திரர்களுக்காகவும் காந்தமன் என்ற மன்னனின் வேண்டுதலுக்காகவும் அகத்திய முனிவரின் கமண்டலத்திலிருந்து பிறந்ததே இக்காவேரி நதி என்று கூறப்படுகின்றது. நீதியைப் பேணீ வளர்த்த சோழ மன்னர்களின் குலக்கொடியாக விளங்கிய காவிரி, நீண்ட வறட்சிக் காலங்களிலும் அவர்களைக் கைவிடவில்லை. ஆண்டுதோறும் மழை பெய்து, காவிரியாறு பெருக்கெடுத்து ஓடும்போது மன்னன் முதல் சாதாரண உழவன் வரை சோழநாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுகூடி திருவிழாக் கொண்டினார்கள்.

கிறித்துவுக்கு முந்தைய நூற்றாண்டுகளிலேயே சோழர் குலம் பெருமையுற்று விளங்கியதாயினும், கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் சிற்றரசர் நிலைக்குத் தாழ்ந்து போயினர். பழைய சோழமண்டலப் பகுதிகளிலே, உறையூர், பழையாறு போன்ற இடங்களில் அவர்களது சிற்றரசுகள் நிலவின. கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தமிழ் நாட்டில் சோழர்கள் மீண்டும் வலிமை பெறத்தொடங்கினர். பத்தாம், பதினோராம் நூற்றாண்டுகள் சோழர் குலத்தின் பொற்காலமாக விளங்கியது. கி.பி 13 ஆம் நூற்றாண்டு வரை சோழரது ஆட்சி தமிழகத்தில் நிலவியது.

கி.பி இரண்டாம் நூற்றாண்டையும் அதற்கு முந்திய காலப்பகுதியையும் சேர்ந்த சோழர் முற்காலச் சோழர் என வரலாற்று ஆய்வாளரினால் குறிப்பிடப்படுகின்றனர். முற்காலச் சோழர்களில் கரிகால் சோழன் புகழ் பெற்று விளங்கினான். 9 ஆம் நூற்றாண்டுக்குப் பின் வலிமை பெற்று விளங்கிய சோழ மன்னர் பிற்காலச் சோழர் எனப்படுகின்றனர். இவர்களில், முதலாம் இராஜராஜ சோழனும், அவனது மகனான முதலாம் இராஜேந்திர சோழனும், இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க மன்னர்களாவர்.

கி.பி பத்தாம், பதினோராம், பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில், சோழர் வலிமை மிகவும் உயர் நிலையில் இருந்தது. அக்காலத்தில் அந்நாட்டையாண்ட மன்னர்களில், முதலாம் இராஜராஜனும், முதலாம் இராஜேந்திரனும் முதன்மையானவர்கள். அவர்கள் காலத்தில் சோழநாடு, படையிலும், பொருளாதாரத்திலும், பண்பாட்டிலும் வலிமை பொருந்திய பேரரசாக ஆசியா முழுவதிலும் செல்வாக்குக் செலுத்தியது. இவர்களுடைய எல்லை வடக்கே ஒரிசா வரையிலும் கிழக்கில் ஜாவா, சுமத்ரா, மலேசியா வரையும், தெற்கே மாலத்தீவுகள் வரையிலும் விரிந்து இருந்தது. இராஜராஜன், தென்னிந்தியா முழுவதையும் வெற்றி கொண்டதுடன், தெற்கே இலங்கையின் வடக்குப் பகுதியையும், மாலைத் தீவையும் கூடக் கைப்பற்றியிருந்தான். இராஜேந்திரன் காலத்தில் சோழர் படை வட இந்தியாவிலுள்ள கங்கைக் கரை வரை சென்று பாடலிபுத்திரத்தின் மன்னனான மகிபாலனைத் தோற்கடித்தது. அத்துடன் சோழரின் கடற்படை மலாய் தீபகற்பத்திலுள்ள கடாரம், ஸ்ரீவிஜயம் மற்றும் சில நாடுகளையும் தாக்கித் தோற்கடித்ததாகவும் தெரிய வருகிறது. இந்திய அரசர்களுள் கடல் தாண்டி கடற்படை மூலம் வெற்றி கொண்டவர்கள் சோழர்களே ஆவர்.

சோழர்களின் கொடி புலிக்கொடி. சோழர்களின் இலச்சினையான புலிச்சின்னம் அவர்களது கொடியிலும் பொறிக்கப்பட்டது. இப்புலிச் சின்னத்தைப்பற்றி பல இடங்களில் கூறும் இலக்கியங்கள், இதன் தோற்றத்தைப்பற்றி ஒன்றும் கூறவில்லை. அவர்கள் சூடும் மலர் ஆத்தி.

தோற்றமும் வரலாறும் :

சோழர்களின் தோற்றம் பற்றிய தெளிவான சான்றுகள் எதுவும் இல்லை. பொதுவாகத் தமிழ் நாட்டு அரச குலங்கள் பற்றிய தகவல்களைப் பெற உதவும் மூலங்களான, சங்க இலக்கியங்கள் கிறித்து சகாப்தத்தின் தொடக்க காலங்களை அண்டிய காலப் பகுதிகளைச் சேர்ந்த சோழ மன்னர்கள் பற்றி ஓரளவு தகவல்களைப் பெற உதவினாலும், அவர்கள் வாழ்ந்த காலப் பகுதிகளை ஐயத்துக்கு இடமின்றி அறிந்து கொள்வதோ, அவர்கள் வரலாறுகளை முழுமையாக அறிந்து கொள்வதோ சாத்தியமாகவில்லை. இலங்கையின் பாளி மொழியில் எழுதப்பட்ட வரலாற்று நூலான மகாவம்சத்தில் தரப்படுகின்ற விபரங்கள் சில சோழ மன்னருடைய காலங்களைத் தீர்மானிப்பதற்குப் பயனுள்ளவையாக அமைகின்றன. இவற்றைவிட, சோழ நாடு மற்றும் அங்கிருந்த நகரங்கள் பற்றிய சில தகவல்களைப் பெறுவதற்கு, கிறித்து சகாப்தத்தின் முதலாவது நூற்றாண்டில், அலெக்சாந்திரியாவைச் சேர்ந்த வணிகன் ஒருவன் எழுதிய எரித்ரேயன் கடலின் வழிகாட்டி நூல் (Periplus of the Erythraean Sea), அதன் பின் அரை நூற்றாண்டு கழித்து தொலெமி (Ptolemy) என்னும் புவியியலாளரால் எழுதப்பட்ட நூல் என்பனவும் ஓரளவுக்கு உதவுகின்றன. இவற்றுடன், கல்வெட்டுக்கள், செப்புப் பட்டயங்கள் என்பனவும் சோழர் பற்றிய தகவல்களைத் தருகின்றன.

சோழ நாடு :

தமிழ் மரபுகளின்படி பண்டைய சோழ நாடு தற்காலத் தமிழ் நாட்டின் திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களை உள்ளடக்கியிருந்தது. சோழநாடு, கடலை நோக்கிச் சரிந்து செல்கின்ற ஆனால் பொதுவாக, மட்டமான நில அமைப்பைக் கொண்டது. காவிரி ஆறும், அதன் கிளை ஆறுகளுமே சோழ நாட்டின் நிலத் தோற்றத்தின் முக்கியமான அம்சங்கள். பொன்னி என்றும் அழைக்கப்படுகின்ற காவிரி ஆற்றுக்குச் சோழநாட்டின் பண்பாட்டில் சிறப்பான இடம் இருந்தது. ஆண்டுதோறும் பொய்க்காது பெருகும் காவிரி வெள்ளம் சோழ நாட்டு மக்களுக்கு ஒரு விழாவுக்கான ஏதுக்களில் ஒன்றாக இருந்தது. ஆண்டு தோறும் கொண்டாடப்பட்ட ஆடிப்பெருக்கு விழாவில் அரசர்கள், ஆண்டிகள் எல்லோருமே பங்கு பெற்றனர்.

உறையூர் கி.பி 200 ஆம் ஆண்டுக்கு முன் சோழரின் தலை நகரமாக விளங்கியது. அகழிகளாலும், மதிலாலும் சூழப்பட்ட பாதுகாப்பான நகரமாக இது விளங்கியது. காவேரிப்பட்டினம் என்றும் அழைக்கப்பட்ட காவிரிப்பூம்பட்டினம் காவிரிக் கழிமுகத்துக்கு அண்மையில் அமைந்திருந்த ஒரு துறைமுக நகராகும். தொலமியின் காலத்திலேயே காவிரிப்பூம் பட்டினமும், இன்னொரு துறைமுக நகரான நாகபட்டினமும் சோழநாட்டின் முக்கிய துறைமுக நகரங்களாகப் பெயர் பெற்றிருந்தன. இவ்விரண்டு பல்லின மக்கள் வாழ்ந்த நகரங்களும், வணிக மையங்களாக விளங்கிப் பல மதத்தவரையும் கவரும் இடங்களாக இருந்தன. பண்டைய ரோமர்களின் கப்பல்களும் இந்தத் துறைமுகங்களுக்கு வந்தன. கிறீத்து சகாப்தத்தின் தொடக்க காலங்களைச் சேர்ந்த ரோமரின் நாணயங்கள் பல காவிரியின் கழிமுகப் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சோழ நாட்டின் இன்னொரு முக்கிய நகரம் தஞ்சாவூர் ஒன்பதிலிருந்து பதினொன்றாம் நூற்றாண்டு வரை சோழப்பேரரசின் தலைநகரமாக விளங்கியது. விஜயாலயன் தஞ்சையைத் தன் தலைநகரமாகத் தேர்ந்தெடுத்து வெற்றிகள் பல பெற்றான். பல்லவ நாட்டைக் கைப்பற்றிய பிறகு காஞ்சியை இரண்டாம் தலைநகரமாகக் கொண்டு அவ்வப்போது சோழ அரசர்கள் அங்கிருந்தும் ஆட்சிப்பொறுப்பை கவனித்துவந்தனர். எனினும் தஞ்சையே முக்கிய நகரமாக விளங்கியது. சிறிது காலத்திற்கு அப்பால் தஞ்சை அதன் முதன்மை இடத்தை இழந்தது. இராஜராஜனின் மகன் முதலாம் இராஜேந்திரன் கங்காபுரி என்ற புதியதோர் திருநகரை உருவாக்கி அதைத் தன் தலை நகராகக் கொண்டான். பின்னர் பதினொன்று முதல் பதிமூன்றாம் நூற்றாண்டு வரை கங்கைகொண்ட சோழபுரம் தலைநகரமாக இருந்தது. ‘சோழ கங்கம்’ என்ற அழகிய பெரிய ஏரியைக் கொண்ட இந்நகர் பல நூற்றாண்டுகளாய் இராஜேந்திரனின் பெருநோக்குக்கும் பெருமைக்கும் சின்னமாய் விளங்கி இருந்தது.

கும்பகோணத்தை அடுத்துள்ள பழையாறையில் ஒரு அரண்மைனையும், முதலாம் இராஜராஜனுடைய பெயரிலேயே “அருள்மொழி தேவேச்சுரம்” என்ற கோவிலும் இருந்தது. இந்த அரண்மனையில் இராஜராஜனின் தமக்கை குந்தவை பல காலம் விரும்பித் தங்கியிருந்தாள் என்றும் இராஜராஜனும் சிலகாலம் தங்கியிருந்ததாகவும் கல்வெட்டுக் குறிப்புகள் கூறுகின்றன. முதலாம் இராஜேந்திரன் மதுரையில் மிகப் பெரியதோர் அரண்மனை கட்டியதும் தவிர உத்திரமேரூர் போன்ற இடங்களிலும் சோழர் அரண்மனைகள் இருந்ததாக கல்வெட்டுக்களில் இருந்து அறிகிறோம். சாளுக்கிய சோழர்களின் காலத்தில், சிதம்பரம், மதுரை, காஞ்சிபுரம் ஆகியவையும் மண்டலத் தலை நகரங்களாக விளங்கின.

ஆட்சி :

இடைக்காலச் சோழர் காலத்தில் முதன்முறையாகத் தென்னிந்தியா முழுவதும் ஒரே அரசின் கீழ் இருந்தது. சோழர்களின் அரசு முடியாட்சியாகவே என்றும் இருந்து வந்தபோதிலும், சங்ககாலத்துச் சோழர்களுக்கும், பிற்காலத்தில் ஆட்சிபுரிந்த சோழர் முடியாட்சிக்கும் இடையே நிரம்ப வேறுபாடுகள் இருந்தன. இராஜராஜன் மற்றும் அவன் வழி வந்தவர்கள், அதிகாரத்திலும், ஆடம்பரத்திலும் மேம்பட்டவர்களாக இருந்தனர். தலைநகரமும், பல்வேறு துணைத் தலைநகரங்களும் இருந்தன. சமயங்களில் துணைத் தலைநகரங்களிலும் அரசவை கூடியது. அரசன், உயர்நிலைத் தலைவனாகவும், சர்வாதிகாரியாகவும் இருந்தான். முறையீடுகள் தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு வாய்மூலமாகக் கட்டளைகள் பிறப்பித்தல் அரசனுடைய நிர்வாகக் கடமையாக இருந்தது. நிர்வாக மற்றும் செயலாக்க நடவடைக்கைகளில் அரசனுக்கு உதவுவதற்காக வலுவான அதிகார அமைப்பு இருந்தது. நிர்வாகம், நீதி வழங்கல், வரி விதித்தல், பாதுகாப்புப் போன்ற விடயங்களில் ஆலோசனைகள் கூறுவதற்காக அமைச்சர்கள் இருந்தனர். தற்காலத்தில் போல சட்டசபையோ, சட்டவாக்க முறைமையோ இல்லாதிருந்ததால், அரசன் நீதியாகச் செயற்படுவது, தனிப்பட்ட அரசர்களின், நற்குணங்களிலும், அறவழிகளின்மீது அவனுக்கிருக்கக்கூடிய நம்பிக்கையிலுமே தங்கியிருந்தது.

அரசுரிமை :

அரசுரிமை பொதுவாக மூத்த ஆண் வாரிசுக்கே வழங்கப்பட்டது. சில சந்தர்ப்பங்களில் அரசர்களின் தம்பிமார்கள் பட்டத்துக்கு வரும் வழக்கமும் காணப்பட்டது. பெரும்பாலும் அரசன் வாழும் காலத்திலேயே இளவரசர்களை நியமிக்கும் வழக்கம் இருந்தது. இதனால் வாரிசுப் போட்டிகள் பெருமளவு குறைவாகவே இருந்தன. நேரடி வாரிசுகள் இல்லாத போது அரச குடும்பத்திலிருந்து வேறொருவரை அரசனாக்கிய நிகழ்வுகளும் உண்டு. இரண்டாம் இராஜேந்திர சோழனின் பெண்வழி வாரிசாக முதலாம் குலோத்துங்கன் அரச பதவி பெற்றது இதற்கு எடுத்துக்காட்டு ஆகும்.

உள்ளாட்சிப் பிரிவுகள் :

பேரரசு மண்டலங்களாகவும், மண்டலங்கள், கோட்டம், கூற்றம் அல்லது வளநாடு எனப்பட்ட பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு இருந்தன. கூற்றம், நாடுகள் என்ற சிறிய அலகுகளாகப் பிரிக்கப்பட்டன.

மண்டலங்கள், ஆளுநர்களின் பொறுப்பில் இருந்தன. அரசகுமாரர்களும், அரசனின் நெருங்கிய உறவினர்களும் இப்பதவியில் அமர்த்தப்பட்டனர். மண்டலங்களின் பாதுகாப்பு, ஒழுங்கு ஆகியவற்றைப் பராமரிப்பதும், கீழுள்ள நிர்வாகப் பிரிவுகளின் செயற்பாடுகளைக் கண்காணிப்பதும், ஆளுநர்களுடைய கடமையாக இருந்தது. மத்திய அரசுக்கும்,மண்டலங்களுக்கும் இடையிலான தொடர்புகளையும் நல்ல நிலையில் பேணிவருவதும் இவர்களுடைய கடமையாகும். கோட்டங்கள் மட்டத்திலிருந்த நிர்வாகிகள், மண்டல ஆளுநர்களுக்கு உதவியதுடன், கோட்டங்களில் அமைதி காத்து, சமுதாயப் பணிகளையும் கண்காணித்தனர்.

குடியிருப்புக்கள் கிராமங்கள், ஊர்கள், நகரங்கள் எனப் பிரிக்கப்பட்டிருந்தன. பிராமணர்களுடைய குடியிருப்புக்கள் கிராமங்கள் எனவும், சாதாரண மக்களுடைய குடியிருப்புக்கள் ஊர்கள் எனவும், வணிகர் குடியிருப்புக்கள் நகரங்கள் எனவும் வழங்கப்பட்டன. இவற்றை நிர்வாகம் செய்வதற்கெனக் கிராம சபைகள், ஊர் அவைகள், நகர சபைகள் போன்ற தன்னாட்சி அமைப்புக்கள் இருந்தன. இவற்றுக்கான உறுப்பினர்களுக்கான தகைமைகளும், அவர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் முறைகளும் இருந்தன.

வெளிநாட்டு வணிகம் :

ஜாவாவில், பிராம்பாணன் என்னும் இடத்திலுள்ள இந்துக்கோயில். திராவிடக் கட்டிடக்கலையின் செல்வாக்குத் தெளிவாகத் தெரிகிறது.

சோழர்களின் வெளிநாட்டு வணிக முயற்சிகளின் செல்வாக்கு, சீனா, தென்கிழக்காசியா ஆகிய பகுதிகள் வரை எட்டியிருந்தது. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், தென்னிந்தியாவில் இருந்த நாடுகள் விரிவான கடல்கடந்த வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன. தென்னிந்தியாவின் கிழக்கு, மேற்குக்கரைகள் இரண்டிலும் ஆதிக்கம் பெற்றிருந்த சோழர்கள், இந்த நடவடிக்கைகளில் முன்னணியில் திகழ்ந்தனர். சீனாவின் டாங் வம்சம் (Tang dynasty), சைலேந்திரர்களின் கீழிருந்த, மலாயத் தீவுக் கூட்டங்களைச் சேர்ந்த ஸ்ரீவிஜயப் பேரரசு, பாக்தாத்தின், அப்பாசிட் கலீபகங்கள் (Abbasid Kalifat) என்பன இம்முயற்சிகளில் சோழர்களின் கூட்டாளிகளாக இருந்தன.

சீனாவின் சோங் (Song) வம்சத்தின் குறிப்பொன்று, சோழ வணிகக் குழுவொன்று, கி.பி 1077 ஆம் ஆண்டில், சீன அரசவைக்குச் சென்றது பற்றிக் கூறுகின்றது. சுமாத்ராத் தீவில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் சாசனப் பகுதியொன்று, சோழநாட்டு வணிகக் கணங்களில் ஒன்றாகிய நானாதேச திசையாயிரத்து அஞ்ஞூற்றுவர் பற்றிக் குறிப்பிடுகின்றது. இது 1088 ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகும். இச் சாசனத்தின் கண்டுபிடிப்பு, சோழர் காலக் கடல்கடந்த வணிக முயற்கிகளுக்குச் சான்றாக அமைகின்றது.
[தொகு] சோழர்காலப் பண்பாட்டு அம்சங்கள்
பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால வெண்கலச்சிலை. சிவனின் அர்த்தநாரீஸ்வரர் தோற்றம்.

சோழர் காலத்தில் கலை, இலக்கியம், சமயம் முதலிய துறைகளில் பெரு வளர்ச்சி காணப்பட்டது. இத்துறைகள் எல்லாவற்றிலுமே பல்லவர் காலத்தில் தொடங்கப்பட்ட போக்குகளின் உச்ச நிலையாகச் சோழர் காலம் அமைந்தது எனலாம். சோழர் காலத்தை தமிழரின் செவ்வியல் காலம் (classical age) என்றும் குறிப்பிடப்படுவதுண்டு. எனினும் சங்க காலமே தமிழரின் செவ்வியல் காலம் என்ற கருத்தும் இருக்கின்றது.

பாரிய கோயில் கட்டிடங்களும், கற் சிற்பங்களும், வெண்கலச் சிலைகளும், இந்தியாவில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு நுண்கலைத் திறன் வாய்ந்தவையாக அமைந்தன. சோழருடைய கடல் வலிமையும், வணிகமும், அவர்களுடைய பண்பாட்டு பல நாடுகளிலும் தாக்கங்களை உண்டாக்கக் காரணமாயிற்று. தற்காலத்தில் தென்கிழக்காசியாவின் பல பகுதிகளிலும் எஞ்சியுள்ள இந்துப் பண்பாட்டுச் செல்வாக்குக்கான எடுத்துக்காட்டுகளில் பல சோழர் விட்டுச் சென்றவையே.

கலைகள் :

சோழர்காலக் கட்டிடக்கலை, பல்லவர்கள் தொடக்கிவைத்த பாணியின் தொடர்ச்சியே ஆகும். விஜயாலயன் காலத்திலிருந்தே சோழர்கள் பல கோயில்களைக் கட்டினார்கள் ஆனால், முதலாம் இராஜராஜனுக்கு முந்திய சோழர் காலக் கட்டிடங்கள் பெரிய அளவுள்ளவையாக அமையவில்லை. பேரரசின் விரிவாக்கம் சோழநாட்டின் நிதி நிலைமையிலும், ஏனைய வளங்கள் தொடர்பிலும் வளர்ச்சியை ஏற்படுத்தியதனால், இராஜராஜன் காலத்திலும் அவன் மகனான இராஜேந்திரன் காலத்திலும், தஞ்சைப் பெரிய கோயில் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம் கோயில் போன்ற, அளவிற் பெரிய கோயில்களைக் கட்ட முடிந்தது. கி.பி 1009 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட தஞ்சைப் பெரிய கோயில், சோழர்கள் இராஜராஜன் காலத்தில் அடைந்த பொருளியல் மேம்பாட்டுக்கான பொருத்தமான நினைவுச் சின்னமாகும்.
தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில், கி.பி 1200

சோழர் காலம், வெண்கலச் சிலைகளுக்குப் பெயர் பெற்றது. இக் காலத்துக்குரிய, சிவனின் பல்வேறு தோற்றங்கள், விஷ்ணு, மற்றும் பல கடவுட் சிலைகள் தென்னிந்தியக் கோயில்களிலும், பலநாட்டு அரும்பொருட் காட்சியகங்களிலும் காணக் கிடைக்கிறது. இச்சிலைகள் பழங்காலச் சிற்பநூல்கள்களிலும், ஆகமங்களிலும் சொல்லப்பட்டுள்ள விதிப்படியே வார்க்கப்பட்டுள்ளன ஆயினும், 11 ஆம் 12 ஆன் நூற்றாண்டுகளைச் சேர்ந்த சிற்பிகள் இவற்றைச் சிறந்த கலை நுணுக்கத்துடனும், கம்பீரத்துடனும் உருவாக்குவதில் தங்கள் சுதந்திரமான கைத்திறனையும் காட்டியுள்ளார்கள். இத்தகைய சிலைகளுள், ஆடல் கடவுளான நடராசப் பெருமானின் சிலைகள் சிறப்பாகக் குறிப்பிடத் தகுந்தவை ஆகும்.

கல்வி :

சோழர் காலத்தில் கல்வி சமஸ்கிருத மொழியில் பிராமணர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. கோயில்களுடன் இணைந்திருந்த கல்விக்கூடங்களில் மிகவும் ஒழுங்கான முறையில் இந்தக் கல்வி பயிற்றுவிக்கப்பட்டது. இப்படி கல்வி பயின்றவர்களே சோழ அரசின் நிர்வாகத்துறையிலும் கோயில்களிலும் உள்வாங்கப்பட்டார்கள். [8]

இன்று போல் பொதுமக்களுக்கான கல்வி என்று எதுவும் இருக்கவில்லை. ஆனால், சமூகம் அல்லது சாதி சார்ந்த தொழில்துறைகளில், தொழில் பயிலுனர் (apprenticeship) முறைப்படி அறிவூட்டப்பட்டது.[9]

மொழி :

சோழர் காலத்தில் தமிழ் சிறப்புற்று இருந்தது. நிர்வாகம், வணிகம், இலக்கியம், சமயம் என்று பல தளங்களில் தமிழ் பயன்படுத்தப்பட்டது. சோழர்களின் கல்வெட்டுக்களும் பட்டயங்களும் பல தமிழிலேயே அமைந்துள்ளன. இருப்பினும் “அவற்றின் மெய்சீர்த்திகளில் சமற்கிருத ஆட்சியே மேலோங்கி நின்றது”. [10]

இலக்கியம் :

சோழர் காலம், தமிழ் இலக்கியத்திற்குச் சிறப்பானதொரு காலமாகும். ஆனால் சோழர்களால் தமிழ் உயர் கல்வி கூடங்களில் ஊக்கிவிக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.[11] சோழர் காலக் கல்வெட்டுக்களில் பல இலக்கியங்கள் குறிப்பிடப் பட்டுள்ளனவாயினும், அவற்றுட் பல தற்காலம் வரை நிலைத்திருக்கவில்லை. இந்து சமய மறுமலர்ச்சியும், ஏராளமான கோயில்களின் உருவாக்கமும், இருந்த இந்துசமய நூல்களைத் தொகுப்பதற்கும், புதியவற்றை ஆக்குவதற்கும் உந்துதலாக இருந்தன. தேவாரம் முதலிய நூல்கள் திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன. ஜைன, பௌத்த நூல்களும் இயற்றப்பட்டன ஆயினும் அவை சோழருக்கு முற்பட்ட காலத்தை விடக் குறைவாகவே இருந்தன. திருத்தக்க தேவர் என்பவரால் இயற்றப்பட்ட சீவகசிந்தாமணியும், தோலமொழித் தேவரால் இயற்றப்பட்ட சூளாமணியும், இந்து சமயம் சாராத முக்கியமான சோழர்கால இலக்கியங்களாகும்.

மூன்றாம்குலோத்துங்க சோழன் காலத்தில் வாழ்ந்த கம்பர் தமிழில் மிகச் சிறந்த இலக்கியமாகக் கருதப்படும் கம்பராமாயணத்தை எழுதினார். வால்மீகியின் இராமாயணத்தைத் தழுவி இது எழுதப்பட்டதாக இருந்தாலும், கம்பர் இதைத் தமிழ் நாட்டுப் பண்பாட்டுக்கு ஏற்ப ஆக்கியுள்ளார். ஜயங்கொண்டாரின் கலிங்கத்துப்பரணியும் இன்னொரு சிறந்த இலக்கியம். முதலாம் குலோத்துங்க சோழனுடைய கலிங்கத்துப் போரை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டது இந்த நூல். இதே அரசனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு ஒட்டக்கூத்தர் என்னும் புலவர் குலோத்துங்க சோழன் உலா என்னும் நூலை இயற்றியுள்ளார்.

சமயம் :

சோழர் இந்து சமயத்தை, சிறப்பாக சைவ சமயத்தைச் சார்ந்தவர்களாவர். முற்காலச் சோழராயினும், பிற்காலச் சோழராயினும், பௌத்த, சமண மதங்களின் செல்வாக்கால் கவரப்பட்டவர்கள் அல்லர். எனினும் அவர்கள் ஏனைய சமயத்தவர்கள் தொடர்பில் எம்மதமும் சம்மதம் என்ற போக்கையே கடைப்பிடித்ததாகத் தெரிகிறது. சாளுக்கிய சோழர்கள் சிலர் வைஷ்ணவர்பால், சிறப்பாக இராமானுஜர் தொடர்பில் எதிர்ப்புப் போக்கைக் கடைப்பிடித்ததாகத் தெரிகிறது. இது தொடர்பிலேயே அதிராஜேந்திர சோழன் மரணம் அடைந்ததாகச் சிலர் கூறுகிறார்கள்.

This entry was posted in சோழன் and tagged , . Bookmark the permalink.

6 Responses to சோழர்கள் வரலாறு – முழு தொகுப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *