இலக்கியங்களும் கட்டடக்கலை நூல்களும் வரையறுத்த இலக்கணத்துடன் அமைந்தது இக்கோட்டை. கோட்டையைச் சுற்றி முன்னர் ஏழு சுற்று மதில்கள் இருந்தன. கோட்டை வட்டவடிவில் அமைந்துள்ளது.
கோட்டையின் வெளிச் சுவற்றைச் சுற்றி முதலைகளும், நச்சுப் பாம்புகளும் நிறைந்த அகழி இருந்தது. தற்போது அகழி தூர்ந்து போய்விட்டபோதும், பல இடங்களில் அதற்கான அடையாளங்கள் உள்ளன.
கோட்டைக்கு வடக்கு, தெற்கு, தென்கிழக்கு ஆகிய 3 திசைகளிலும் நுழைவாயில்கள் உள்ளன.
தற்போது குன்றின்மேல் காணப்படும் உள்கோட்டை பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ளது. குன்றின் மேல் இயற்கை அரண்களுடன் அமைந்திருக்கிற இதைச் சுற்றி மதில்கள் எழுப்பப்பட்டுள்ளன. உள்கோட்டைக்குச் செல்ல மேற்குப் பகுதியில் வாயில் உள்ளது.
கோட்டைக்குள் தற்போது கட்டடங்கள் எதுவும் காணப்படவில்லை. ஆனால் அங்கிருந்த கட்டடங்கள் அழிக்கப்பட்டதற்கான தடயங்கள் தென்படுகின்றன.
இக்கோட்டையில் கண்டெடுக்கப்பட்ட பீரங்கிகள், பீரங்கிக் குண்டுகள், சங்கிலிப் போர் உடைகள், உடை வாள்கள், பூட்டுகள் ஆகியவை தற்போது புதுக்கோட்டை அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளன.
சிவன், விஷ்ணு குகைக் கோயில்கள் திருமயத்தில் உள்ள குன்றில் சிவபெருமானுக்கும் விஷ்ணுக்கும் அருகருகே குகைக் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிவபெருமான் சத்தியகிரீஸ்வரர் எனவும், விஷ்ணுபெருமான் சத்தியமூர்த்தி எனவும் அழைக்கப்படுகின்றனர்.
சத்தியகிரீசுவரம் என்னும் சிவன் கோயில் குன்றின் தெற்குச் சரிவில் உள்ளது. மூலவர் லிங்கமாகக் காட்சியளிக்கிறார். குகைக் கோயிலின் வாயிலில் உள்ள துவாரபாலகர் சிற்பங்கள் அழகு மிக்கவை.
இக்கோயிலில் ஐந்து கல்வெட்டுகள் உள்ளன.
குகைக்கோயில் மண்டபத்தின் வடக்கு சுவரில் உள்ள ஒரு கல்வெட்டில் “பரிவாதினி’ (இது ஒரு யாழ் வகை) என்று கிரந்த எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.
இக்குகைக் கோயிலை மாவட்டத்திலுள்ள பிற குகைக் கோயில்களைப் போன்று கி.பி. 8-9-ஆம் நூற்றாண்டில் பாண்டியர் காலத்தில் உருவாக்கப்பட்டவை எனலாம்.
சத்தியமூர்த்தி கோயில் ஆதிரங்கம் எனப்படும் இக் குகைக் கோவில் ஸ்ரீரங்கத்தை விடப் பழைமையானதாகக் கருதப்படுகிறது.
இக் கோயிலினுள் அனந்தசயன மூர்த்தியாக விஷ்ணு பெருமான் காட்சியளிக்கிறார். புதுகை மாவட்டத்திலுள்ள குகைக் கோயில்களிலேயே பெரியது இது. அனந்த சயனமூர்த்தி மலையோடு சேர்ந்து பாறையிலேயே வடிக்கப்பட்டிருக்கிறார். அனந்தசயன மூர்த்திக்குப் பின்னுள்ள சுவரில் ஒரு கதை கல்லில் உருவாக்கப்பட்டுள்ளது.
நீண்ட நெடிய வரலாறு
திருமயம் பகுதி நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டது. இங்கு காணப்படும் கல்வெட்டின்படி, கி.பி. 8-9-ஆம் நூற்றாண்டுகளில் இப்பகுதியை முத்தரையர் ஆண்டு வந்திருக்க வேண்டும் எனத் தெரிகிறது.
அதன்பின் சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள், சூரைக்குடி சிற்றரசர்களான பராக்கிரம பாண்டிய விஜயாலயத் தேவர், சுந்தரபாண்டிய விஜயாலயத் தேவர் எனப் பலரால் ஆளப்பட்டுவந்த திருமயம் பகுதி, 16-17-ம் நூற்றாண்டுகளில் ராமநாதபுரம் சேதுபதிகளின் ஆட்சிக்குள்பட்ட பகுதிகளின் வடக்கு எல்லையாகத் திகழ்ந்தது.
சேதுபதி மன்னர்களின் மேலாண்மைக்குட்பட்ட இப்பகுதியை பல்லவராயர்களும், பின்னர் 1636-ஆம் ஆண்டு தொண்டைமான் மன்னர்களும் ஆண்டனர்.
ஆவுடையார்கோவில்
மதுரையை ஆண்ட இரண்டாம் வரகுணப் பாண்டியனின் அமைச்சராக இருந்த மாணிக்கவாசகர், குதிரை வாங்க மன்னன் கொடுத்த பணத்தைச் செலவழித்து இக்கோயிலை எழுப்பினார்.
“ஆவுடையார்’ அருள்பாலிக்கும் இத்தலத்தில் பல்வேறு சிறப்பு அம்சங்கள். உதாரணமாக இக் கோவிலில் கொடிமரம், நந்தி இல்லை. கருவறை மூலவருக்கோ, அம்மனுக்கோ சிலையும் இல்லை. அனைத்துமே அரூப வழிபாடுதான்.
திருமங்கை ஆழ்வார் பாடல் பெற்ற ஆவுடையார் கோவில் சிலைகளும், சிற்பங்களும் கலை நயமிக்கவை, புகழ்பெற்றவை.
பழைமை வாய்ந்த புதுக்கோட்டை
நாட்டின் விடுதலையைத் தொடர்ந்து இணைந்த சமஸ்தான நகரான புதுக்கோட்டையில் அரண்மனைக் கட்டடங்கள் பலவும் தற்போது அரசு அலுவலகங்களாக உள்ளன.
இங்கே பழைய அரண்மனை வளாகத்தில் தட்சிணாமூர்த்தி கோவில், நகரின் கிழக்கே புவனேசுவரி அம்மன் கோவில், அரசு அருங்காட்சியகம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
…..