வீரபாகுதேவர்

சூரன்போர் – சூரசங்காரம் :

சூர-பத்மன் என்ற அரக்கன் தனது குருவான சுக்கிராச்சாரியாரிடம் உபதேசம் பெற்று; சர்வ வல்லமைகளையும் பெற்றவனாக தானே திகழ வேண்டுமென சிவபெருமானை வேண்டி கடுந்தவம் மேற்கொண்டு; சிவனின் அருளினால் சகல வல்லமைகளையும் பெற்றதுடன், 108 யுகம் உயிர்வாழவும், 1008 அண்டம் அரசாளும் வரத்தையும், இந்திரஞாலம் எனும் தேரையும், சிவசக்தியால் அன்றி வேறு எந்த சக்தியாலும் தனக்கு மரணம் ஏற்படாது” என்ற வரத்தையும் பெற்றான். அதனால் ஆணவம் மேலிட இறுமாப்படைந்த சூரபத்மன் தேவர்களை எல்லாம் தேடி எதுவித அச்சமும் இன்றி சித்திரவதை செய்யலானான்.

 

அசுரர்களின் துன்பத்திற்கு உள்ளான தேவர்கள்; சிவனிடம் முறையிட்டனர். சூரனை அழிக்க சிவபெருமான் தனது ஞானக்கண்ணிலிருந்து ஆறு சுடர்களை வெளிப்படுத்தினார். அந்த ஆறு சுடர்களும் வாயு தேவனால் சரவணப்பொய்கையில் மலர்ந்திருந்த 6 தாமரை மலர்களில் மீது சேர்க்கப் பெறறன. அந்த ஆறு சுடர்களும் இறை அருளால் ஆறு குழந்தைகளாக உருப்பெற்றனர்.
அந்த ஆறு குழந்தைகளையும் கார்த்திகைப் பெண்கள் சீராட்டி பாலூட்டி வளர்த்து வரும் வேளை; அகிலலோக நாயகி பார்வதி தன் மைந்தர்களை அன்புடன் கட்டியணைத்திட அவையாவும் ஒரு திருமேனியாக வடிவங்கொண்டு ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் உடைய ஒரு திரு முருகனாக தோன்றினன் உலகமுய்ய.
சிவபெருமனின் நெற்றிக்கண்களில் இருந்து ஆறு தீப்பொறிகள் புறப்படும்போது அருகில் இருந்த பார்வதி தேவி வெட்பம் தாங்கொணாது பாய்ந்து விலகி ஓடலானார். அப்போது பார்வதிதேவியின் பாதச்சிலம்புகளில் இருந்த நவரத்தினங்கள் சிதறி விழுந்தன. அந்த நவம்ணிகள் மீது இறைவனின் பார்வை பட்டதும் அவைகள் நவசக்திகளாக தோன்றினர். நவசக்திகள் வயிற்றில் வீரபாகுதேவர் முதலிய இலட்சத்து ஒன்பது வீரர்கள் தோன்றினர். இவர்கள் முருகனுக்கு படைவீரர்களாக ஆனார்கள். அம்மையும் தன்னைப்போன்ற ஒரு சக்தியை உருவாக்கி அதனை; தனது சக்திகள் யாவும் கொண்ட ஓர் வீரவேலாக உருமாற்றினார். அம்மையப்பன் வெற்றி தரும் வேலை முருகனிடம் தந்தார். ஈசனும்; தன் அம்சமாகிய பதினொரு உருத்ரர்களைப் படைக்கலமாக்கி முருகனிடம் தந்தார்.
அம்மையப்பனிடம் வேல் வாங்கிய முருகன், தேரேறித் தெற்கு நோக்கிச் செல்கிறான். விந்தியமலை அடிவாரத்து மாயாபுரத்தைத், சூரனின் தம்பி தாராகாசுரன் ஆண்டு வருகிறான். அவன் கிரெளஞ்சம் என்னும் பெரிய மலையாய் உருமாறி வழிமறிக்க, வீரபாகுத் தேவர் அவனுடன் போர் புரிகிறார். ஆனால், தாரகன்; வீரபாகுவையும், முருகனின் சேனையையும், மாயையால் மலைக்குள் அழுத்தி விடுகிறான்.
முருகனின் கூர் வேல் மலையைப் பிளக்க, தாருகன் அழிகிறான். அனைவரும் மலைச்சிறையில் இருந்து விடுபடுகின்றனர். சூரபத்மன் இந்தச் சேதி கேட்டு நடுக்குறுகிறான். அதனால் சூரன்; முருகனின் சேனையைக் கணக்கிட உளவுப்படையை அனுப்புகிறான்.
மன்னி ஆற்றங்கரையில் சிவபிரானுக்கு ஆலயம் எழுப்பச் சொல்லித் தேவதச்சனைப் பணிக்கிறார் முருகப் பெருமான். ஈசனும் முருகனுக்கு முன்னே தோன்றி பாசுபதம் என்னும் அஸ்திரம் அளிக்கின்றார். பின்னர் அந்த ஆற்றங்கரையான திருச்செந்தூர் நோக்கி மொத்தப் படையும் கிளம்புகிறது.

முருகன் அம்மையப்பர் ஆசியுடனும், தன் படைகளோடும், திருச்செந்தூர் வந்து தங்கினார். 
பராசர முனிவரின் ஆறு புதல்வர்கள், முருகனைச் செந்தூரில் கண்டு, வீழ்ந்து வணங்குகிறார்கள். முருகன் புதிதாகக் கட்டப்பட்ட ஆலயத்தில் அமர்ந்து, தேவ குருவான வியாழனிடம், சூரபத்மனின் முழுக் கதையையும் சொல்லுமாறு கேட்கிறார். அதன் பின்னரே வீரபாகுதேவரை மட்டும் வீர மகேந்திரபுரத்துக்குத் தூது அனுப்ப முடிவாகிறது!
முருகப் பெருமான் வீரபாகுதேவைரை சூரனிடம் தூதனுப்பிச் சிறை வைத்த தேவர்களை விடுவித்திடுமாறு செய்தி அனுப்பினார். தூதின் போது, வீரபாகு சிறைப்பட்ட அமரர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, சூரனிடம் தூது உரைக்கிறான். ஆனால் அசுரனின் ஆணவத்தால் தூது முறிகிறது. கைகலப்பில் சூரனின் புதல்வர்கள் சதமுகன், வச்சிரவாகு ஆகிய இருவரும் வீரபாகுவால் கொல்லப்படுகிறார்கள். திருச்செந்தூரிலே ஆறுமுகக்கடவுள் திருமால், பிரமன், இந்திரன் முதலிய தேவர்கள் போற்ற சிங்காசனத்தில் எழுந்தருளி வீற்றிருககும் போது வீரபாகுதேவர் திருச்செந்தூர் திரும்பி வந்து; முருகனிடம் தூது நிகழ்வுகளை முன் வைக்கிறான். 
முருகனும் இனி தாமதிக்கலாகாது என்று செந்தூரில் இருந்து இலங்கை செல்ல தீர்மானிக்கின்றார். கந்தப்பெருமான் வீரபாகு தேவரை நோக்கி “பாவங்களை அளவில்லாமல் புரிந்து கொண்டிருக்கும் சூரபத்மன் முதலான அசுரர்களை அழிந்து, தேவர்கள் துன்பம் நீங்கி, உலகம் நலம் பெறுவதற்காக இப்பொழுதே படையெடுத்து வீரமகேந்திரபுரிக்குச் செல்லவேண்டும்.”நம் தேரைக் கொண்டுவா” என்று கட்டளையிட்டார். 

தங்கள் துயரம் எல்லாம் நீங்கியது என்று கருதிய தேவர்கள் கந்தப்பெருமானின் கழலிணைகளை வணங்கித் துதித்தனர். முருகவேளின் கட்டளைப்படி வீரவாகு தேவர் மனோவேகத் தேருடன் பாகனையும் அழைத்து வந்தார். சிங்காசனத்தில் இருந்து இறங்கிய எம்பெருமான், ” நாம் சூரபன்மனை அழிக்க வீரமகேந்திரபுரி செல்கிறோம். நீங்களும் அவரவரது வாகனங்களில் புறப்பட்டு வாருங்கள்” என்று தேவர்களுக்கு உத்தரவிட்டார்.

பிரம்ம தேவர் அன்னப்பறவை மீதும், திருமால் கருடன் மீதும், இந்திரனும், வீரபாகு தேவரும் லட்சத்து எண்மரான தெய்வ வீரர்களும் மற்றைய தேவர்களும் தத்தம் வாகனங்கள் மீதும் ஏறிக் கந்தவேளைச் சூழ்ந்து சென்றார்கள். நினைத்த மாத்திரத்திலேயே எல்லாப் புவனங்களையும் அழிக்கும் ஆற்றல் பெற்ற படைத்தலைவர்கள் நூற்றியெட்டுப் பேரும் தொடர்ந்தார்கள். அதனை அடுத்து இரண்டாயிரம் வெள்ளம் பூதப்படைகளும் ஆரவாரத்துடன் புறப்பட்டன. வானவர்கள் பூ மழை பொழிந்தார்கள்.
பேரிகை, காளம், கரடிகை பல வாத்தியங்கள் முழங்கின. முருகப்பெருமானுடன் சென்ற பூதப்படைகளின் பேரொலி எங்கும் ஒலித்தது. அவர்கள் சென்றபோது ஏற்பட்ட புழுதி சூரிய சந்திரர்களுடைய ஒளியையும் மறைத்துவிட்டதாம். கடலில் பூத சேனைகள் இறங்கினார்கள். அவர்களுக்கு கடலே கணுக்கால் அளவுதான் இருந்தது. கடலில் இருந்து பெரிய பெரிய மீன்களும் திமிங்கிலங்களும் சிறு புழுக்கள் போன்று இருந்தன. பூதப்படை இறங்கி கலக்கியதால் அது சேறானது. அந்த சேறு உலர்ந்தபின் புழுதியாகி எங்கும் பறந்தது.

வீரமகேந்திரபுரி (சூரனின் இராசதானி) தென்கடலில் இருந்த ஒரு தீவு (தற்பொழுது அது நீரில் மூழ்கி உள்ளது). வடக்கே உள்ள தீவு இலங்கை. இலங்கை வழியாகப் எம்பெருமான் சென்றபோது, பிரமன், திருமால், இந்திரன் ஆகிய மூவரும் சுவாமியை வணங்கி, “மகா பாவியாக உள்ள சூரபன்மன் இருக்கும் மகேந்திரபுரி தங்கள் திருப்பாதம் பதியத் தகுதி பெற்றதல்ல. அந்நகருக்கு அடுத்த எல்லையாகிய இங்கேயே தங்கியிருந்து போர்செய்வதற்குப் பாசறை அமைத்துக் கொள்ளலாம்” என்று வேண்டிக்கொண்டார்கள். சுவாமி அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார்கள். தேவதச்சனை அழைத்து ” உடனே விரைந்து இங்கு ஒரு பாசறை ஏற்படுத்து” என்று எம்பெருமான் ஆணையிட்டார். தேவதச்சன் உடனே மாடகூடங்களும் மண்டபங்களும் சோலைகளும், வாவிகளும் கொண்ட பாசறை ஒன்றை மனத்தால் நிர்மாணம் செய்து அப்படியே அதை ஸ்தூல வடிவிலும் கட்டினான். அந்தப் பாசறைக்கு “ஏமகூடம்” என்று பெயர் வைத்தார்கள். எம்பெருமானின் தேர் கீழே இறங்கியது. சுவாமி ஏமகூடத்தின் வீதிகளில் பூத சேனைகளை நிறுத்தினார். இலச்சத்தொன்பது வீரர்களோடும், தேவர்களோடும் திருக்கோயிலினுள் சென்று அமர்ந்தார். அந்த ஏமகூடமே கதிர்காமம் என்பது ஐதீகம்.
[கதிர்காமம் என்றால் ஒளிமயமான விருப்பத்தை எல்லாம் நிறைவேற்றித்தருவது என்று பொருள். அங்கே சுவாமி ஒளிமயமாக விளங்குகிறார். எனவே அவரை நேரே தரிசிக்கக் கூடாதென்று திரை போடப்பட்டுள்ளது. அங்கே உள்ள கற்பூர தீப ஒளியைத் தரிசனம் செய்யவேண்டும்.]
கதிகாமத்தில் இருந்துதான் போர் துவங்குகிறது. பானுகோபன் என்னும் சூரனின் மகன், நன்னீர்க் கடலில் முருகன் சேனையை ஆழ்த்த, அதை முருகன் முறியடிக்கிறார்.
தாரகனையும் அவனுக்குத் துணை நின்ற கிரௌஞ்சத்தையும் பிளந்து, சிங்கமுகனை அழித்து பின் சூரனின் சேனை அழிந்த போதும் சூரபதுமனின் ஆணவம் அழிய இல்லை. அதனால் முருகன் தன் திருப்பெரு வடிவம் (விஸ்வரூபம்) காட்டியும், எல்லாம் வல்ல பரம்பொருள் தாமே என பரமேசுர வடிவம் காட்டியும், சிவனும் அவன் மகனும் மணியும் ஒளியும் போல ஒருவரே என்றுணர்த்தியும், தன் தன்மை மாறாது போர் செயலானான்.
வீரமகேந்திரபுரத்தில் பலப்பல மாயங்கள் செய்து போர் புரிகிறான் சூரன். கடலாய், இருளாய் மாறி மாறிச் செய்யும் போர் எதுவும் உதவாமல் போகவே, கடைசியில் வெறுத்துப் போய், நடுக்கடலில் மாமரமாய் நின்ற சூரபத்மனைத் முருகன்; தன் வேலாயுதத்தால் இரு கூறாக்கினார். ஆணவம் அழியப் பெற்ற சூரன் தம் தவறை உணர்ந்து; தன்னை மன்னித்து, தன்னை ஏற்றுக்கொள்ளும்படி மன்றாடிமுருகனை வேண்டி நிற்க; அவ்ன்மேல் இரக்கம் கொணடு; பிளவுபட்ட மாமர பாதிகள் இரண்டையும் முருகன் தன் அருளால் சேவலாகவும், மயிலாகவும் மாற்றி, மயிலை வாகனமாகவும் சேவலைக் கொடியிலும் தன்னுடன் பிணைத்துக் கொண்டார்.
கந்த புராணக் கதையைச் “சங்கரன் மகன் சட்டியில் மாவறுத்தான்” என்ற சொற்றொடர் மூலம் நகைச் சுவையாக பயன் கூறுவார்கள். சங்கரன் புதல்வராகிய முருகப் பெருமான் ஷ்டித் திதியிலே மாமரமாக வந்த சூரனை இரண்டாக அரிந்தார் என்பது இதன் பொருள். 
முருகனின் ஆணைப்படி, வருணன் வீர மகேந்திரபுரியைக் கடலுக்கு அடியில் மூழ்கடிக்க, போர் முடிகிறது. வெற்றி வீரத் திருமகனாய், முருகப் பெருமான் திருச்செந்தூர் திரும்புகின்றான்.
சூரனுடன், முருகப் பெருமான் போர் புரிந்து அவனது ஆணவத்தினை அடக்கி ஆட்கொண்ட நாளே இறுதிநாளாகிய சஷ்டி எனப்படும். சஷ்டி என்பது திதியாகும். இவர்கள் இருவருக்கும் இடையில் போர் நடந்த இடம் முருகப் பெரமான் குடிகொண்டுள்ள ஆறுபடை வீடுகளில் ஒன்றாகியதும், கடலும்,கடல் சார்ந்த பிரதேசமாகிய நெய்தல் நிலமாகிய திருச்செந்தூர் என்னும் தலமென கூறுவாருமுளர்.
சூரனை அழித்த மனக்கேதம் தீர, செந்தூரில் போருக்கு முன்னரே கட்டப்பட்ட ஈசனின் ஆலயத்தில், கைகளில் ஜபமாலையோடு, சிவ பூசை செய்கிறான் முருகன். இந்தக் கோலமே நாம் இன்றும் திருச்செந்தூர் கருவறையில் காண்பது. கைகளில் ஜப மாலையுடன் செந்தூர் மூலத்தானத்து முதல்வன் நிற்க, சற்று எட்டிப் பார்த்தால், கருவறைக்குள் சிவலிங்கமும் தெரியும்.
சூரசம்ஹாரம் நடைபெறும் தினத்தில் திருச்செந்தூர் ஆலயக் கடல் நீரானது சம்ஹாரம் நடைபெறுவதற்கு வசதியாக செந்தில் ஆண்டவனின் அருள் கருணையால் உள் முகமாகச் சென்று சூரசம்ஹாரம் முடிந்து செந்தில் ஆண்டவர் இருப்பிடம் திரும்பும் போது கடலானது பழைய நிலைக்கு வருவதை காண முடிவதுடன் கருவறையில் உள்ள மூலவரின் முகத்தில் சூரசம்ஹார களைப்பினால் ஏற்பட்ட வியர்வைத் துளிகளையும் காணக்கூடியதாக இருக்கின்றது. முருகப் பெருமான் சூரபத்மனோடும் அவனது படையினருடனும். பத்து தினங்கள் நடந்த போரில் அசுரர்களை வென்று சூரபத்மனை மயிலாகவும், சேவலாகவும் மாற்றினார். மயில் முருகனுக்கு வாகனம் ஆகியது. சேவல் முருகனின் வெற்றிக்கொடி ஆகியது.
சூர சங்காரங்கள் முடிந்த பின்னர், அமரேந்திரன் (இந்திரன்) தேவயானையை முருகப் பெருமானிடமே ஒப்படைக்க விழைகிறான். முருகனும் சரவணப் பொய்கையில் முன்னர் தாம் அருளிய வாக்கின் படியே, தேவானை அம்மையைப் திருப்பரங்குன்றில் மணக்கிறார். பின்னர், அவ்வண்ணமே, வள்ளி அம்மையையும், திருத்தணிகையில் மணம் புரிகிறார்.
நாலாம் நாள் பகல் அக்கினிமுகாசுரன் சங்காரம் நிகழ்ந்ததாகும்.
நாலாம நாள் இரவு தருமகோபன் சங்காரம் நிகழந்ததாகும்.
ஐந்தாம் நாள் பானுகோபன் சங்காரம் நிகழ்ந்ததாகும்.
ஆறாம் நாள் சிங்கமுகாசுரன் சங்காரம் நிகழ்ந்ததாகும்.
ஏழா நாள் முதல் பத்தாம் நாள்வரை சூரபன்மனுடன் யுத்தம் செய்து பத்தாம் நாள் சூர-சங்காரம் நிகழ்ந்ததாகும்.
சூர-பதுமன்: சூரபன்மன், தாரகாசுரன், சிங்கமுகன் ஆகியோர் காஸ்யப முனிவருக்கும், மாயைக்கும் பிறந்தவர்கள். அவர்களுள் சூரபன்மன் எனபவன் சூரன்-பதுமன் ஆகிய இருவர் சேர்ந்த ஒரே உருவமே . “இரு பேர் உருவின் ஒரு பேர் யாக்கை” என்று திருமுருகாற்றுப்படை இதைக் கூறுகின்றது.
ஆறிருதடந்தோள் வாழ்க 
ஆறுமுகம் வாழ்க 
வெற்பைக் கூறுசெய் தனிவேல் வாழ்க 
குக்குடம் வாழ்க 
செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க 
யானைதன் அணங்கு வாழ்க 
மாறிலா வள்ளி வாழ்க 
வாழ்க சீர் அடியார் எல்லாம்’

….

This entry was posted in வீரபாகுதேவர் and tagged . Bookmark the permalink.

One Response to வீரபாகுதேவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *