வீரபாண்டியன் கி.பி. 946 முதல் 966 வரை ஆட்சி புரிந்தவனாவான்.மூன்றாம் இராசசிம்மனின் மகனான இவன் கி.பி. 946 ஆம் ஆண்டில் தனது தந்தையின் இறப்பிற்குப் பின்னர் முடிசூடிக்கொண்டான். சோழாந்தகன்,பாண்டி மார்த்தாண்டன் போன்ற சிறப்புப்பெயர்களை இவன் பெற்றிருந்தான் என திருப்புடைமருதூர் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி,இராமநாதபுரம்,திருவாங்கூர் போன்ற இடங்களில் வீரபாண்டியனைப் பற்றியக் கல்வெட்டுகளைக் காணலாம். வீரபாண்டியனின் 9 மற்றும் 10 ஆம் ஆண்டு ஆட்சிக் காலங்களில் குறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் திருமங்கலம் வட்டம்,கீழ்மாத்தூர்க் கோயில் போன்ற பகுதிகளில் காணலாம்.
சோழரிடமிருந்து முதலில் பாண்டிய நாட்டினை மீட்டு பின் முதல் கண்டராதித்தன் இராட்டிரகூட மன்னன் மூன்றாங் கிருட்டிணதேவனிடம் போர் புரிந்து தோல்வியுற்றதனால் பாண்டிய நாட்டினை இழந்தான் எனக் கருதப்படுகின்றது. சோழ மன்னர்களிற்குக் கப்பம் கட்டாமல் தன்னுரிமை ஆட்சியினை நடத்திய வீரபாண்டியனின் தகவல்களைக் கூறும் கல்வெட்டுக்கள் மதுரை,நெல்லை,இராமநாதபுரம் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.
சேவூர்ப் போரில் வீரபாண்டியன் தோற்றான் என சுந்தரசோழனின் கல்வெட்டொன்றில் “மதுரை கொண்டகோ இராச கேசரிவர்மன்” எனவும் ‘பாண்டியனைச் சுரம் இறக்கின பெருமான்’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளன.சோழ மன்னனுக்குத் துணையாக கொடுப்பாலூர் மன்னன் பூதவிக்கிரம கேசரி வீரபாண்டியனுடன் போர் புரிந்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.’சோழன் தலைக்கொண்டான் கோவீரபாண்டியன்’ என தன்னைக் குறித்துக் கொண்ட வீரபாண்டியன் கொங்கு நாட்டினை தன் ஆட்சியின் கீழ் வைத்திருந்தான்.இவன் பெயரால் வீரபாண்டி என்ற ஊர் ஒன்று உள்ளதுகொல்லிமலையில் பாண்டியாறு என்னும் ஆறு இவன் பெயரில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.வீரபாண்டியனின் 20 ஆண்டு ஆட்சிக் காலக் கல்வெட்டுக்களே இன்றளவும் உள்ளன. இப்பாண்டிய மன்னனின் ஆட்சியின் பின்னர் சோழப்பேரரசினால் பாண்டிய நாடு ஆட்சிசெய்யப்பட்டது.