வேலுநாச்சியார் வரலாறு

images

இராமநாதபுரம் மன்னர் (1749-62) செல்லமுத்து சேதுபதி, சிவகங்கைக்கு  அருகிலுள்ள  ‘சக்கந்தி” என்னும் ஊரைச் சேர்ந்த முத்தாத்தாள் நாச்சியார்  என்பவரைத்  திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஓர் அழகிய பெண் குழந்தை  பிறந்தது.  அவர்கள் அக்குழந்தைக்கு வேலு நாச்சியார் எனப் பெயரிட்டார்கள்.  செல்லமுத்து சேதுபதி தனது மகள் வேலு நாச்சியாரைக் கல்வி –  கேள்விகளில்  சிறந்தவராக வளர்த்து ஆளாக்கினார். வேலு நாச்சியார்  போர்க்களம் சென்று,  வாளெடுத்துப் போர் புரியும் ஆற்றலும் விளங்கினார்.  அவர் ஒரு சிறந்த  வீராங்கணையாக உருவாக்கப்பட்டார். சிவகங்கைச் சீமையின்  இரண்டாவது மன்னர்  முத்து வடுகநாதப் பெரிய உடையத் தேவருக்கு,  வேலுநாச்சியார் திருமணம் செய்து  வைக்கப்பட்டு அவரது பட்டத்து ராணியானார்.

முத்துவடுகநாதத் தேவர், சிவகங்கைச் சீமையை ஆட்சி செய்த போது, அவரது   நிர்வாகத்திற்கு பிரதானி தாண்டவராய பிள்ளை, ராணி வேலு நாச்சியார், மருது   சகோதரர்கள் பெரிதும் துணையாக இருந்தனர். நெடுநாட்களாக வேலு நாச்சியாருக்கு  குழந்தைச் செல்வம் இல்லாமலிருந்தது. பின்னர் அவருக்கு ஒரு பெண் மகவு   பிறந்தது. அக்குழந்தைக்கு வெள்ளச்சி எனப் பெயரிட்டு இளவரசியைப் பாலூட்டிச்  சீராட்டி செல்லமாக வளர்த்து வந்தார்.


இந்நிலையில் முத்து வடுகநாதத் தேவர், ஆற்காடு நவாபிற்கு கப்பம் கட்ட   மறுத்ததால் கம்பெனிப் படையும், நவாபின் படையும் இணைந்து காளையார் கோயிலில்  தங்கியிருந்த முத்து வடுகநாதத் தேவர் மேல் போர் தொடுத்தன. 25-6-1772ல்  நடைபெற்ற காளையார் கோவில் போரில், கம்பெனிப்  படையின் பீரங்கிக்  குண்டுகளுக்குப் பலியாகி, மன்னரும் அவரது இளைய ராணி  கௌரி நாச்சியாரும்,  அவரது படைவீரர்களும் வீர மரணமடைந்தனர். முத்து வடுகநாதர் இறந்தவுடன் வேலு நாச்சியார் உடன்கட்டையேறி, தனது உயிரைப் போக்கிக் கொள்ள விரும்பினார்.
பிரதானி தாண்டவராய பிள்ளை,மருது சகோதரர் கள் வேலு நாச்சியாரைச் சமாதானம்  செய்து, இழந்த சீமையை அவர்கள் எவ்வகையிலும்  மீட்டுத் தருவதாக ராணிக்கு  வாக்குறுதி வழங்கினர். கொல்லங்குடியில்  தங்கியிருந்த வேலுநாச்சியார், வெ  ள்ளச்சி நாச்சியார் முதலியோர் பிரதானி  தாண்டவராய பிள்ளை, மருது சகோதரர்கள்  துணையுடன் மேலூர் வழியாக  திண்டுக்கல்லுக்கருகிலுள்ள  விருப்பாட்சிப்பாளையத்திற்குத் தப்பிச்  சென்றார். விருப்பாட்சிப் பாளையக்காரர் கோபால நாயக்கர், விருப்பாட்சியில் அவர்கள்   மிகப் பாதுகாப்பாகத் தங்குவதற்குத் தகுந்த வசதிகளைச் செய்து கொடுத்தார்.   ஆற்காடு நவாபின் பிடியிலிருந்து இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மறவர் சீமைகளை  விடுவித்து நவாபை விரட்டி அடிப்பதற்கு ராணி வேலுநாச்சியார்   திண்டுக்கல்லில் தங்கியிருந்த மைசூர் மன்னர் ஹைதர் அலியிடம் படை உதவி   கேட்டார்.
பிரதானி தாண்டவராயபிள்ளை 8-12-1772 வேலுநாச்சியார் சார்பாக ஹைதர் அலிக்கு   ஒரு கடிதமெழுதி ஐயாயிரம் குதிரை வீரர்களையும், ஐயாயிரம் போர் வீரர்களையும்  அனுப்பி வைத்தால், அவர்களுடன் இணைந்து போரிட்டு, இரு சமஸ்தானங்களையும்   நவாபிடமிருந்து கைப்பற்ற இயலுமென்று, அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். பிள்ளையவர்கள் உடல் நலிவுற்று முதுமையின் காரணமாக படை உதவி கேட்ட ஆறு   மாதங்களுக்குள் 1773ம் ஆண்டு இம்மண்ணுலகைவிட்டு மறைந்தார்.
பின்னர் வேலு நாச்சியார் தனது படைகளை ‘சிவகங்கை பிரிவு”, ‘திருப்புத்தூர்   பிரிவு”, ‘காளையார் கோயில் பிரிவு” என்று மூன்று பிரிவுகளாகப் பிரித்தார்.   சிவகங்கைப் பிரிவிற்கு தனது தலைமையிலும், திருப்புத்தூர் பிரிவிற்கு   நள்ளியம்பலம் என்பவர் தலைமையிலும், காளையார் கோயில் பிரிவிற்கு மருது   சகோதரர்கள் தலைமையிலும் படைகளைப் பிரித்து வேலு நாச்சியார் அனுப்பி   வைத்தார். வேலுநாச்சியார் அம்முப்படைப் பிரிவை அனுப்பி மும்முனைத்   தாக்குதல் நடத்தி நவாபின் படைகளை எளிதில் வெற்றி கண்டார ராணி வேலுநாச்சியார் ஹைதர் அலியின் படை உதவியை எதிர்பார்த்து, எட்டு   ஆண்டுகள் விருப்பாட்சிப்பாளையத்தில் தங்கியிருந்தார். அவருக்குப்   பக்கபலமாகப் பெரியமருதுவும், சின்னமருதுவும் துணையாக உடனிருந்தனர்.
ஒரு சமயம் வேலு நாச்சியார், அவரது மகள்வெள்ளச்சி நாச்சியார் மருது  சகோதரர்கள் முதலியோர் திண்டுக்கல் கோட்டையிலிருந்த மைசூர் மன்னர்  ஹைதர்  அலியைச் சந்தித்தனர். அவர், அவர்களை வரவேற்று உபசரித்தார்.  ராணியுடனிருந்த  சின்னஞ்சிறு சிறுமி வெ ள்ளச்சி நாச்சியாரைக் கண்டு  மனமிரங்கி அனுதாபம்  கொண்டார். அச்சிறுமி மேல் பரிவும், பாசமும், கருணையும் கொண்டார். அவர்களது  தாய் நாட்டுப் பற்றையும், வீரத்தையும் கண்டு வியந்து  அவர் மகிழ்ச்சியுற்று  அவர்களுக்கு உதவி செய்வதாக ஆறுதல் கூறினார்.
பிரதானியின் மறைவிற்குப் பின்னர், வேலுநாச்சியார் தான் நேரடியாக அரசியல்   விவகாரங்களில் ஈடுபடத் தீர்மானித்தார். பிரதானி விட்டுச் சென்ற பணிகளை   குறிப்பாக, சிவகங்கைச் சீமையின் நாட்டார்களுடன் கொண்ட ஓலைத் தொடர்புகளை,   தொடர்ந்து கடைப்பிடித்து வந்தார். தமது கணவரிடம் மிகுந்த விசுவாசத்துடன்   பணியாற்றிய மருது சகோதரர்களையும் இந்த அரசியல் பணியில் வேலுநாச்சியார்   ஈடுபடுத்தினார்.
விருப்பாட்சியிலிருந்து சிவகங்கைச் சீமைத் தலைவர்களுக்கு அனுப்பிய   ஓலைகளுக்கு நல்ல பலன் கிடைத்தது. சிவகங்கைச் சீமை மக்கள் பலர், சிறுசிறு   குழுக்களாக ஆயுதங்களுடன் விருப்பாட்சி போய்ச் சேர்ந்தனர். அவர்கள் ராணி   வேலுநாச்சியாரைச் சந்தித்து தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். சிலர் அங்கேயே   ராணிக்குப் பாதுகாப்பாகத் தங்கவும் செய்தனர். எட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன.
ராணி வேலு நாச்சியாரது முயற்சிகள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு நெருங்கி   வந்து கொண்டிருந்தது. ஆங்கிலேயர்களையும் ஆற்காடு நவாபையும்,   அழித்தொழிக்கும் அற்புதத் திட்டமொன்றினை உருவாக்கி அதைச்   செயல்படுத்துவதற்கு ஹைதர் அலி ஆயத்தமானார். சிவகங்கைச் சீமையை ஆற்காடு நவாபின் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பதற்கு உதவும்  படைகளைத் திண்டுக்கல் கோட்டை வந்து பெற்றுக் கொள்ளுமாறு ஹைதர் அலி, ராணி  வேலுநாச்சியாருக்கு செய்தி அனுப்பினார்.

விருப்பாட்சியிலிருந்து   சிவகங்கைபுறப்படுவதைத்திண்டுக்கல் கோட்டை கிலேதார் சையது காகிற்கு உடனே   ராணி தகவல் கொடுத்தார். குறிப்பிட்ட நாளன்று, ராணி வேலு நாச்சியார், மருது  சகோதரர்கள் வழிகாட்டுதலில் ஹைதர் அலி வழங்கிய குதிரைப் படைகள், சின்ன  மறவர்  சீமை சிவகங்கை நோக்கிச் சீறிப் பாய்ந்தன.
ஆற்காடு நவாபின் படைகள் வழியில் பல்வேறு தடைகளை அமைத்தன. வேலு நாச்சியாரது  குதிரைப் படைகள், அத்தடைகளைத் தகர்த்தெறிந்து, பெரும் தாக்குதலில்   ஈடுபட்டன. மதுரைக்கருகில் ‘கோச்சடை” என்னுமிடத்தில் கம்பெனிப் படைகளும்,   நவாபின் படைகளும் தடைகள் ஏற்படுத்தித் தாக்கின. வேலு நாச்சியாரது படைகள்,   நவாபின் படைகளைப் பாய்ந்து தாக்கித் தவிடுபொடியாக்கின.

மானாமதுரை   வைகையாற்றுப் பகுதியில், வேலு நாச்சியாரது படைகள், கம்பெனி படைகளைத் தாக்கி  அவை ஓடி ஒளியுமளவிற்குச் சண்டையிட்டு வெற்றி பெற்றன. வெற்றி பெற்ற வேலு நாச்சியார், இளவரசி வெ ள்ளச்சி நாச்சியாரும் மருது   சகோதரர்களும் சிவகங்கைக் கோட்டைக்கு வந்து சேர்ந்தனர். மக்கள் கூட்டம்   அவர்களை மகிழ்வுடன் வரவேற்று வாழ்த்தி வணங்கியது. 1780ம் ஆண்டு   வேலுநாச்சியார், தனது மகள் வெ ள்ளச்சி நாச்சியாரை சிவகங்கைச் சீமையின்   அரசியாக மகிவும் எளிமையான ஒரு விழாவில் முடிசூட்டி, அரியணையில் அமரச்   செய்தார்.

பெரிய மருதுவைத்தளபதியாகவும் (தளவாய்) சின்ன மருதுவை   முதலமைச்சராகவும் (பிரதானி) நியமனம் செய்து வேலுநாச்சியார் ஆணைகள்   பிறப்பித்தார். இளவரசி வெ ள்ளச்சி நாச்சியாரின் பிரதிநிதியாக ராணி   வேலுநாச்சியார் சிவகங்கைச் சிமையை 1780ம் ஆண்டு முதல் ஆட்சி செய்து   வந்தார். சீமையின் நிர்வாக இயக்கத்திற்கு பிரதானிகள் (மருது சகோதரர்கள்)   உதவி வந்தனர்.
‘இளவரசி வெள்ளச்சி திருமணம் ஆகாத கன்னிகையாகவும், ராணி வேலுநாச்சியார்   கணவரை இழந்த கைம்பெண்ணாகவும் இருந்த காரணத்தினால் அவர்கள் இருவரும் அரசயில்  நடவடிக்கைகள் தொடர்பான அனைத்து பணிகளிலும் நேரடியாக ஈடுபட இயலாத நிலை,   அத்துடன் அன்றைய சமுதாய அமைப்பில், இத்தகைய உயர்குலப் பெண்கள், தங்கள்   தனிமை நிலையைத் தவிர்த்து பொது வாழ்க்கையில் முழுமையாக ஈடுபடுவது விரும்பத்  தகாததாகவும் இருந்தது. ‘பெண் உரிமை” என்ற விழிப்புணர்வுடன் பாரம்பரியமாக  வந்த மரபுகள் மீறுவதையும் ஏற்று சகித்துக் கொள்ளாத சமூகநிலை இத்தகைய   இறுக்கமான அகச்சூழலில் அரசியலை பிரதானிகள் மூலமாக அரசியார் சிறப்பாக நடத்தி  வந்திருப்பது அருமையிலும் அருமை.” எனவே சிவகங்கைச்சீமை நிர்வாகத்தை மருது  சகோதரர்கள் மிகச் சிறப்பாக நடத்தி வந்தனர்.
வேலுநாச்சியார் நாலுகோட்டை சசிவர்ணப் பெரிய உடையத்தேவர் குடும்ப வழியில்   வந்த உறவினரான படமாத்தூர் கௌரி வல்லபத் தேவர் என்ற புத்திசாலி இளைஞனைத்   தமது பாதுகாப்பில் வைததிருந்தார். படமாத்தூர் கௌரி வல்லபத் தேவரை சுவீகாரம்  எடுத்து தனக்குப் பின்னர் தனது வாரிசாக அவருக்குப் பட்டம் சூட்ட   வேலுநாச்சியார் விரும்பினார். அவருக்கு தனது மகள் இளவரசி வெ ள்ளச்சி   நாச்சியாரைத் திருமணம் செய்து கொடுத்து, அவரை சிவகங்கை மன்னராக ஆக்கவும்   ராணி முடிவு செய்திருந்தார். அதைஉணர்த்தும் வகையில் அரசு விழா ஒன்றில் அவரை  அறிமுகப்படுத்தி வைப்பது என்று ராணி முடிவு செய்திருந்தார். அதன்படி   காளையர் கோயில் ஆலயத்தில் படமாத்தூர் கௌரி வல்லபத் தேவருககு இளவரசுப்   பட்டம் சூட்டப்பட்டது.
அவ்விழாவிற்கு நாட்டுத் தலைவர்கள் அனைவரும் வந்திருந்தனர். சிறப்பான   வழிபாடுகள் முடிந்த பின்னர் கோயில் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த   இருக்கையில் இளவரசர் கௌரி வல்லபத் தேவரை அமரச் செய்து, பிரதானிகளும்   நாட்டுத் தலைவர்களும் அவருக்கு மரியாதை செலுத்தி வணங்கினர்.
சில காலம் சென்ற பின்னர் சிவகங்கை பிரதானிகளுக்கு (மருது சகோதரர்களுக்கு)   இளவரசர் கௌரி வல்லபத் தேவரை பிடிக்கவில்லை. வேலுநாச்சியார், தமது மகளை   படமாத்தூர் கௌரி வல்லபத் தேவருக்குத் திருமணம் செய்து கொடுப்பது   சம்பந்தமாய், இரு பிரதானிகளுடன் ஆலோசனை செய்தார். மருது சகோதரர்கள் அந்த   திருமண சம்பந்தத்தைக் கடுமையாக எதிர்த்தனர். கௌரிவல்லபத் தேவர் சிவகங்கைச்  சீமைக்கு மருமகனாவதற்குத் தகுதி, திறமையில்லாதவரென்றும், முரட்டுத்  தனமும்,  அரச குடும்பத்திற்குரிய தகுதிகள் இல்லாதவரென்றும், அவர்கள்  மறுப்புத்  தெரிவித்தனர். மிகுந்த வேதனையால் ராணி மிகக் கவலையடைந்தார்.
இதற்கிடையில் ராணி கௌரி வல்லபத் தேவரை தனது வாரிசாகத் தத்தெடுப்பதையும்   திருமண உறவின் மூலம் அதிகாரம் பெறுவதையும் மருது சகோதரர்கள் விரும்பவில்லை.  எனவே, அவர்கள் கௌரி வல்லபத் தேவரை காளையார் கோயில் ஆலயத்தில், தக்க   பாதுகாப்பில் சிறைவைத்து அவரைக் கொலை செய்ய முயன்றனர். இந்தச் செய்தி   ராணியாருக்குக் கிடைத்ததும், மருது சகோதரர்களிடம் இதுபற்றிக் கேட்டார்.
கௌரி வல்லபத் தேவர் சிறையில் வைக்கப்படவில்லையென்றும், அவர் சிவகங்கைச்   சீமையைக் கைப்பற்றி இராமநாதபுரம – சிவகங்கைகொண்ட ஒருமுகப்படுத்தப்பட்ட   ‘சேது நாடு” ஒன்றை உருவாக்க இராமநாதபுரம் முத்துராமலிங்க சேதுபதி மன்னருடன்  ஓலைத் தொடர்பு கொண்டிருப்பதாகவும், அது தொடர்பான விசாரணைக்காக   அவரைக்காளையார் கோயில் ஆலயத்தில் தனிமைப்படுத்தி வைத்திருப்பதாகவும் கூறி   ராணியைச் சமாதானப்படுத்தினர்.
பின்னர் கௌரி வல்லபத் தேவர் காளையர்கோயில் ஆலயத்தில் பணியாற்றும் கருப்பாயி  என்ற நடப் பெண் உதவி செய்து தப்பிக்க வைத்ததின் மூலம் காளையார்   கோயிலிருந்து தப்பிச் சென்று, கரிசப்பட்டிப்பாளையக்காரர் வெ ள்ளை பொம்மை   நாயக்கரிடம் தஞ்சமடைந்தார். பின்னர் மருது சகோதரர்களின்பலம் அறிந்து, அவர்  கௌரி வல்லபத் தேவரைப் புதுக்கோட்டை மன்னரிடம் தஞ்சமடைந்த கௌரி வல்லபத்   தேவரை மன்னர் அறந்தாங்கியில் மிகப் பாதுகாப்பாகத் தங்க வைத்திருந்தார்.
இளவரசி வெள்ளச்சி நாச்சியார் திருமணம் பற்றி மீண்டும் ராணி மருது   சகோதரர்களிடம் ஆலோசனை செய்த போது தக்க மணமகன் ஒருவரை அவர்கள் தேடி   வருவதாகவும், விரைவில் ராணிக்கு முடிவான தகவல் தருவதாகவும் அவர்கள்   தெரிவித்தனர். ராணி மருது சகோதரர்களை மீறி எதுவும் செய்ய முடியவில்லை. சில மாதங்களுக்குப் பிறகு மருது சகோதரர்கள், இளவரசி வெ ள்ளச்சி   நாச்சியாருக்கு சக்கந்தி வேங்கை பெரிய உடையணத் தேவர் என்பவரை   திருமணம்செய்து வைக்கலாம் என்று கூறினர்.

சக்கந்தி வேங்கை பெரிய உடையணத்   தேவர் சிவகங்கைக்கருகிலுள்ள சக்கந்தி நிலக்கிழாரில் ஒருவரான சக்கந்தித்   தேவரின் மகனென்றும் செம்பிய நாட்டு கிளையைச் சேர்ந்த மறவர் என்பதால்,   திருமணம் செய்யலாம் என்றும் மருது சகோதரர்கள் ஆலோசனை கூறினர். ராணி வேங்கை  பெரிய உடையணத் தேவருக்கு தனது மகள் வெ ள்ளச்சி நாச்சியாரைத் திருமணம்   செய்து கொடுத்தார்.
இந்தத் திருமணத்திற்குப் பின்னர் ராணிக்குப் படமாத்தூர் கௌரி வல்லபத்   தேவருடன் திருமண உறவு ஏற்படவில்லையே என்ற ஆதங்கம் இருந்தது. இந்நிலையில்   ராணி வேலுநாச்சியாருக்கும் மருது சகோதரர்களுக்குமிடையே பெருத்த கருத்து   வேறுபாடொன்று உருவாகியது. ஒரு சமயம் சிவகங்கைச் சீமைக்கும், புதுக்கோட்டைத் தொண்டைமான்   நாட்டிற்குமிடையே ஒரு சிறு எல்லைப் பிரச்சனை தோன்றியது. சிவகங்கைப் பிரதானி  சின்னமருது, அந்த எல்லைப் பிரச்சினையில் ராணி வேலுநாச்சியாரைக் கலந்து   ஆலோசனை செய்யாமல், அவரது முன் அனுமதியைப் பெறாமல்தொண்டமான்நாட்டின் மீது   படையெடுத்தார்.
தொண்டமான் நாட்டில் வாழ்பவர்களில் பெரும்பான்மையான மக்கள் கள்ளர் வகுப்பைச்  சார்ந்தவர்கள்.  அவர்களோடு சிவகங்கைச் சீமை மக்கள் திருமண உறவும், பல்வேறு  தொடர்புகளும்  கொண்டுள்ளதால் சிவகங்கைப் படையெடுப்பு கள்ளர் இன மக்களது  விரோதத்தை  வளர்க்கும் என்று ராணி கருதினார்.
1788ம் ஆண்டுராணி வேலுநாச்சியாருக்கும், பிரதானி சின்ன   மருதுவிற்குமிடையேஇருந்த கருத்துவேறுபாடு உச்ச நிலையை அடைந்தது. சிவகங்கைச்  சீமையில் ராணி வேலுநாச்சியார் ஆதரவாளர்களென்றும் பிரதானி சின்னமருது   ஆதரவாளர்களென்றும் இருபிரிவுகள் தோன்றின. சிவகங்கைக் குடிமக்கள் இரு   பிரிவுகளாகப் பிரிந்து அடிக்கடி தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டனர்.
இதனையறிந்த ஆற்காடு நவாப், தனது பிரதிநிதியைச் சிவகங்கைக்கு அனுப்பி   வைத்தான். அப்பிரதிநிதி ராணி வேலுநாச்சியாரை சந்தித்துப் பேசினான்.   ராணியின்பாதுகாப்பைப் பலப்படுத்தவும், அவரது நிர்வாகத்திற்கு உதவுவதற்கு   வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவும், ராணியும், நவாப்பும் ஓர்   உடன்பாடுசெய்து கொண்டனர். அதனால் மருது சகோதரர்கள், ராணியின்   பரிவாரங்களுடன் சண்டையிட்டனர். அதன் காரணமாக ராணி வேலுநாச்சியார்   சிவகங்கைக் கோட்டை வாசலை மூடிவிட்டு மிகப் பாதுகாப்பாகக் கோட்டைக்குள்   தங்கியிருந்தார்.
10-02-1789ல் ராணியின் பாதுகாப்பு தொடர்பாக நவாப், சென்னை கவர்னருக்கு ஒரு  கடிதம் எழுதினார். உடனே கம்பெனியாரும், நவாப்பும் தங்கள் படைகளை   சிவகங்கைகக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தனர். 29-04-1789ம் தேதி தளபதி   ஸ்டூவர்ட் தலைமையில் கம்பெனிப் படை, திருப்புத்தூர் கோட்டைக்கு வந்து   சேர்ந்தது. 8-05-1799ம் தேதி புதுக்கோட்டைத் தொண்டமானின் மூவாயிரம்   வீரர்களிடங்கிய படையும் சிவகங்கை வந்து சேர்ந்தது. பின்னர்   இராமநாதபுரத்திலிருந்து தளபதி மார்ட்டின் தலைமையில் வந்த கம்பெனிப் படையும்  அவர்களுடன் சேர்ந்து கொண்டது.
தளபதி ஸ்டூவர்ட் ராணி வேலுநாச்சியாரைச் சந்தித்துப் பேசினார். ஆங்கிலத்   தளபதி தனது படை வீரர்களுடன் 13-05-1799ல் கொல்லங்குடியைத் தாக்கினார்.   மருது சகோதரர்கள் அங்கு திரண்டிருந்த தனது ஆதரவாளர்களின் உதவியுடன்   துப்பாக்கிகளைப் பயன்படுத்தி கம்பெனிப் படையை எதிர்த்துப் போரிட்டனர்.   கம்பெனிப் படையின் கடுமையான தாக்குதலைச் சமாளிக்க முடியாமல், மருது   சகோதரர்கள் ராம மண்டலம் என்ற காட்டுப் பகுதிக்குப் பின் வாங்கினர்.   கொல்லங்குடிக்கோட்டை கம்பெனி தளபதி ஸ்டூவர்ட்டின் கைவசமானது.
19-05-1789ல் ராணி வேலுநாச்சியார், தளபதி ஸ்டூவர்டிற்கு ஒரு கடிதம்   எழுதினார். அதில் ஆங்கிலேயர்களும், ஆற்காடு நாவப்பும் சிவகங்கைச் சீமை   பொறுப்பை தான் ஏற்றுக் கொள்வதற்குத் தனக்கு உதவி செய்ய வேண்டுமென்று   அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். ராணி எழுதிய கடிதத்தை தளபதி   ஸ்டூவர்;ட் 21-05-1789ல் சென்னை கவர்னருக்கு அனுப்பி வைத்தார். தளபதி ஸ்டூவர்ட் தலைமையில் கம்பெனிப் படைகள் முன்னேறிச்சென்று மருது   சகோதரர்களது படைகளைத் துரத்தி அடித்தன. அடுத்த ஐந்து மாதங்கள் சிவகங்கைச்   சீமையில் அமைதி நிலவியது. கம்பெனிப் படைகள் சிவகங்கைக் கோட்டையில்   பாதுகாப்பிற்குக் காவல் இருந்தன.
ஐந்து மாதங்களுக்குப் பிறகு மருது சகோதரர்கள் மைசூர் மன்னர் திப்பு   சுல்தானின் உதவியைப் பெற்று, திண்டுக்கல் பகுதியிலிருந்து தனது படைகளைத்   திரட்டிக் கொண்டு வந்து, திருப்புத்தூர் கோட்டையைக் கைப்பற்றிக் கொண்டனர்.   மருது சகோதரர்களுடன் தான் போரைத் துவக்கினால், கி.பி. 1783ல் மைசூர்  மன்னர்  திப்புசுல்தானுடன், தான் செய்து கொண்ட உடன்படிக்கையை மீறிய  செயலாகும் என  நவாப் கருதினான். எனவே மருது சகோதரர்களுடன் ஓர் உடன்பாடு  செய்து கொள்ளுமாறு  நவாப்பை கம்பெனித் தலைமை கேட்டுக் கொண்டது.

அந்த  ஆலோசனையை நவாப்பும்  ஏற்றுக் கொண்டான். சக்கந்தி வேங்கை பெரிய உடையத் தேவரின் மனைவி வெ ள்ளச்சி நாச்சியார்,   துரதிஷ்டவசமாக வேலுநாச்சியாருக்கு முன்னரே மரணமடைந்துவிட்டார். எனவே,   சிவகங்கைச் சீமையில் சுமுகமான ஆட்சி மாற்றமும், நிர்வாகமும் ஏற்படும்   வகையில்ஆற்காடு நாவபும், கம்பெனித் தலைமையும் சில ஆலோசனைகளை ராணிக்கு   வழங்கினார்கள்.
ராணி வேலுநாச்சியார் சிவகங்கைச் சீமையின் அரச பதவியிலிருந்து   விலகுவதென்றும், அவருக்குப் பதிலாக சிவகங்கை மன்னராக வேங்கை பெரிய உடையணத்  தேவர் பதவி ஏற்பதென்றும், மருது சகோதரர்கள் பிரதானியாகவும், தளபதியாகவும்  பதவியேற்பதெனவும் ஒரு திட்டம் உருவாக்கப்பட்டது. ராணி வேலுநாச்சியார் இந்த சமரசத் திட்டத்தை தனது அரச பதவியைப் பறிப்பதற்கான  சதித் திட்டமெனக் கருதினார். எனினும், தனது மருமகன் வேங்கை பெரிய உடையணத்  தேவர், தனக்குப் பதிலாகச் சிவகங்கைச் சீமையின் மன்னராகப்   பதவியேற்கவிருப்பதால், வேலுநாச்சியார் இந்த சமரச உடன்பாட்டை வேலுநாச்சியார்  இந்த சமரச உடன்பாட்டை ஏற்றுக்கொண்டார். மருது சகோதரர்களும் இந்த   உடன்பாட்டை வரவேற்றனர். ராணி வேலு நாச்சியாரின் பத்தாண்டு கால ஆட்சி 1789ம்  ஆண்டு டிசம்பரில் முடிவுற்றது. 1800ம் ஆண்டு வேலுநாச்சியார்   இம்மண்ணுலகைவிட்டுமறைந்தார்.
வீரநங்கை வேலுநாச்சியாரை (velu nachchiyar)  ‘இந்தியாவின் ஜோன் ஆஃப் ஆர்க்” என அழைக்கலாம். ‘வெ ள்ளையருக்கு எதிராக வாளெடுத்து வீரப்போர் புரிந்த ‘முத்து வடுகநாதரின்  மனைவி – வீரமங்கை வேலுநாச்சி – அன்று நடத்திய சிறப்பு வாய்ந்த வீரப்போர்   வாயிலாக ‘வேங்கடத்திற்கு வடக்கே ஒரு ஜான்சி ராணி தோன்றுவதற்கு இரு   நூற்றாண்டுகட்கு முன்பே தமிழகம் தன் ஜான்சி ராணியைக் கண்டுவிட்டது” என்று   வரலாற்று ஆசிரியர்கள் போற்றும்படி செய்துவிட்டாள் என்று வரலாற்றுப்   பேராசிரியர் திரு. ந. சஞ்சீவி அவர்கள் ‘மருதிருவர்” என்ற தனது நூலில்   குறிப்பிடுகின்றார்.
மேலும் அதே ஆசிரியர் வீரமங்கை வேலுநாச்சியை ‘தமிழகத்தின் ஜான்சி ராணி”   என்று போற்றுவதைவிட ஜான்சி ராணியை ‘வடநாட்டு வேலுநாச்சி” என்று புகழ்வதே   சாலப் பொருத்தமுடையதாகத் தோன்றுகிறது” என்று வேலு நாச்சியாரைப் பற்றி   சிறப்பாகப் புகழ்ந்து கூறியுள்ளார்.

25-12-1796ம் தேதி வெ ள்ளிக்கிழமை விடிகாலை வீரமங்கை இறந்து போனார் என   வீரம் வளர்ந்த மண் பக்கம் 59ல் உள்ளது. இதற்கு எந்த ஆதாரமும்  கிடையாது.  

This entry was posted in வேலு நாச்சியார் and tagged , , . Bookmark the permalink.

One Response to வேலுநாச்சியார் வரலாறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *