ஆட்சிக்காலம் கி.பி. 1012 – கி.பி. 1044
தலைநகரம் தஞ்சாவூர்
கங்கைகொண்ட சோழபுரம்
அரசி திருபுவன மகாதேவியார்
முக்கோக்கிலான்
பஞ்சவன் மாதேவியார்
வீரமாதேவி
பிள்ளைகள் இராஜாதிராஜ சோழன்
இராஜேந்திர சோழன் II
வீர ராஜேந்திர சோழன்
அருள்மொழிநங்கையார்
அம்மங்காதேவி
முன்னவன் இராஜராஜ சோழன்
பின்னவன் இராஜாதிராஜ சோழன்
தந்தை இராஜராஜ சோழன்
பிறப்பு தெரியவில்லை
இறப்பு கி.பி. 1044
இராஜேந்திர சோழன் காலத்தில் சோழநாடு கி.பி. 1030
இராசேந்திர சோழன் சோழர்களின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரான இராஜராஜ சோழனின் மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவனுமாவான். விஜயாலய சோழன் காலத்தில் தொடங்கிய சோழப் பேரரசு இராஜேந்திரன் காலத்தில் அதன் பொற்காலத்தை அடைந்தது. சோழ மன்னர்களில் இராஜேந்திரனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெருமை வாய்ந்தவன். தன்னுடைய ஆட்சிக் காலத்தில் இராஜேந்திர சோழன் ஏற்கனவே பரந்து விரிந்திருந்த சோழப் பேரரசின் பரப்பை மேலும் விரிவுபடுத்தினான்.
இராஜேந்திரன் ஆட்சிக்காலத்தில் சோழநாடு; இலங்கை, மாலத்தீவு, கடாரம், ஸ்ரீவிஜயம், மலேயா(சிங்கப்பூர் – மலேசியா), சுமத்ரா ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப்பெரிய நிலப்பரப்பாக இருந்தது. இராஜேந்திர சோழனே முதன் முதலில் அயல்நாட்டிற்குப் பெரும் படை எடுத்துச் சென்ற எடுத்துச் சென்ற முதல் இந்திய மன்னன் ஆவான். மகிபாலனை வென்று வங்காள தேசத்தை சோழநாட்டுடன் இணைத்தவன் அதன் வெற்றியைச் சிறப்பிக்கவே கங்கை கொண்ட சோழபுரம் என்னும் புதிய தலைநகரத்தை உருவாக்கி தன்னுடைய ஆட்சியை அங்கிருந்து நிர்வகித்தான். அங்கே சிவபெருமானுக்காக இராஜேந்திரன் கட்டிய கற்கோயில் சோழர் காலக் கட்டிடக்கலைக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இன்றளவும் விளங்கி வருகிறது.
சிவபெருமானுக்காக இராஜேந்திரன் கட்டிய கற்கோயில்
சோழப் படைத்தலைவன் இராஜேந்திரன்
இராஜேந்திரன் இளவரசனாக இருந்த பொழுதே சோழர் படைகளுக்கு தலைமை வகித்து மேற்குப் பகுதிகளில் போர்களை நடத்தியவன். தொடர்ந்து வேங்கி, கங்கை மண்டலங்களுக்கு மகா தண்ட நாயகனாக அமர்த்தப்பட்டான். ‘பஞ்சவன் மாராயன்’ என்ற பட்டமும் இவனுக்குக் கொடுக்கப்பட்டது. ‘மும்முடிச் சோழனின் களிறு’ என்ற சிறப்புப் பெயரையும் பெற்றிருந்த இராஜேந்திரன், கொங்கணம், துளுவம் முதலான நாடுகளை வென்று கைப்பற்றியதோடு, சேரனை அவனுடைய மலை நாட்டை விட்டு ஓடும்படி செய்து, தெலுங்கரையும் இராட்டிகரையும் வென்றான்.
இணை அரசனாக நிர்வகித்தல்
இராஜராஜ சோழரின் ஆட்சிக் காலத்திலேயே(கி.பி. 1012), இராஜேந்திர சோழன் இணை அரசனாக பொறுப்பேற்றுக் கொண்டான். இராஜராஜரின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற வேங்கி மற்றும் கலிங்கப் போர்களில் இராஜேந்திர சோழன் இராஜராஜ சோழனின் படைகளுக்கு பொறுப்பேற்று வெற்றி பெற்றான்.
முடி சூடுவதும் தொடக்ககால ஆட்சியும்
இராஜராஜ சோழரின் இணை அரசனாக பதவியேற்ற இரண்டு ஆண்டுகளில் இராஜேந்திரன் பட்டத்து அரசனாக முடிசூட்டப்பட்டான். தன்னுடைய ஆட்சிக் காலத்தின் தொடக்கத்திலேயே தன்னுடைய மகனான இராஜாதிராஜ சோழனை இளவரசனாக பட்டம் சூட்டி ஆட்சிப் பொறுப்புக்களை அவனுடன் பங்கிட்டுக்கொண்டான். இந்தப் பழக்கம் தனக்குப் பிறகு யார் முடிசூட்டப்பட வேண்டும் என்பதில் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்கவே நடைமுறைப்படுத்தப் பட்டிருக்க வேண்டும். இராஜாதிராஜ சோழன் கி.பி. 1018ல் இருந்தே தந்தையுடன் ஆட்சிப்பொறுப்பில் இருந்து வந்தான் ஏறக்குறைய 26 ஆண்டுகளுக்கு இருவருமாய் சோழப் பேரரசை நிர்வகித்து வந்தனர்.
தற்போதைய சென்னை, ஆந்திரம் பகுதிகளுடன், மைசூரின் ஒரு பகுதியையும் ஈழத்தையும் உள்ளிட்ட ஒரு பரந்த நாட்டை இராஜராஜன், இராஜேந்திரனுக்கு விட்டுச் சென்றான். அரசாங்க நிர்வாகம் மிகுந்த கவனத்துடன் நிறுவப்பட்டதுடன், பெரு நிலப்பிரபுக்கள், சிறு விவசாயிகள், தொழிற் குழுக்கள் ஆகியோரது உரிமைகளைப் பாதுகாக்கவும், அதே சமயம் மன்னனது அமைதியையும் சமூக உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் வலிமைமிக்க ஒரு அதிகாரவர்க்கமும் உருவாக்கப்பட்டது. நன்கு பயிற்சியளிக்கப்பட்ட வீரர்களைக் கொண்ட படை ஒன்று நாட்டின் விரிந்த எல்லையைக் காக்கும் திறன் பெற்றிருந்ததோடு புதிதாகக் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் எழும் எதிர்ப்புகளை அழிக்கவும், வெளிநாடுகளைக் கைப்பற்றவும் உதவிபுரிந்தது. ஈழம், மாலத்தீவுகள் போன்ற கடல் கடந்த நாடுகளைக் கைப்பற்றியபின் அவற்றைத் தம் அதிகாரத்திற்குள் நீடித்திருக்குமாறும் செய்ய இராஜேந்திரன் ஒரு சிறந்த கடற்படையையும் வைத்திருந்தான்.
இக்கடற்படையின் உதவியுடன் கிழக்கிந்தியத் தீவுகளுடனும், சீனத்துடனும் ஏற்பட்ட வாணிகத்தையும் பாதுகாக்க முடிந்தது. இவற்றைப் பயன்படுத்தி ஆட்சி செய்த 33-ம் ஆண்டுகளில் இராஜேந்திரன் தன் நாட்டை இந்து அரசர்கள் ஆண்ட நாடுகளிலேயே தலைசிறந்த ஒன்றாகவும், மலேயாத் தீபகற்பத்தையும், கீழைக் கடற்கரைப் பகுதிகளையும் உள்ளிட்ட மிகப் பரந்த நாடாகவும் மாற்றி அமைத்தான். ஆட்சியின் முற்பகுதிகளில், இராஜேந்திரன் மேற்கொண்ட எண்ணற்ற போர்களைப் பற்றியும் கைப்பற்றிய நாடுகளைப் பற்றியும் தன் தந்தை போன்றே இராஜேந்திரனும் எண்ணற்ற கல்வெட்டுக்களை விட்டுச் சென்றுள்ளதால் அறிய முடிகிறது. இராஜேந்திரனுடைய இராணுவ சாதனைகள், வெளிநாடுகளில் பெற்ற வெற்றிகள் ஆகியவை பற்றித் திருவாலங்காடு, கரந்தை(தஞ்சை)ச் செப்பேடுகள் ஆதாரத்துடன் தெரிவிக்கிறது.
படையெடுப்பு
தொடக்க காலம்
சோழ தேசத்துக்கான இராஜேந்திர சோழனின் பங்களிப்பு, இராஜராஜ சோழனின் படையில் பட்டத்து இளவரசனாக கி.பி. 1002 ல் பங்கேற்றதில் இருந்தே தொடங்கியது. இதில் மிகவும் முக்கியமானவை இராஷ்ட்டிரகூடர்களுக்கு எதிரான இராஜராஜனின் போரும் மற்றும் சாளுக்கிய அரசன் சத்யாச்சிரயனுக்கு எதிரான போரும். இதில் சாளுக்கிய அரசனுக்கு எதிரான போரில் இராஜேந்திரன் துங்கபத்திரா ஆற்றைக் கடந்து சாளுக்கிய நாட்டின் தலைநகர் வரை படையெடுத்துச் சென்று வெற்றிபெற்றான்.
ஈழத்தின் மீதான படையெடுப்பு
முதலாம் இராஜராஜ சோழன் தொடங்கி வைத்த ஈழத்தின் மீதான படையெடுப்பை நிறைவு செய்யும் விதமாகவும், பராந்தக சோழன் காலத்திலேயே தேடப்பட்டு கண்டறியமுடியாமல் போன, பாண்டிய அரசர்களால் ஈழத்து அரசர்களிடம் கொடுத்து வைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இந்திரன் பாண்டியர்களுக்கு அளித்த இரத்தினக் கற்கள் பொறித்த வாளையும் முத்து மாலையையும் கண்டறியும் விதமாகவும் ஈழத்தின் மீது கி.பி. 1018ல் இந்தப் படையெடுப்பு நடத்தப்பட்டது. படையெடுப்பு பெரும் வெற்றி பெற்று இராஜேந்திரன் ஈழநாட்டு பட்டத்து அரசன், அரசி, இளவரசியை சிறைகொண்டு சோழதேசம் வந்தான். ஈழ அரசன் ஐந்தாம் மஹிந்தா பன்னிரெண்டு ஆண்டுகால சிறைவாசத்துக்குப் பிறகு சிறையிலேயே இறந்து போனான். இதைப்பற்றி ஈழ தேசத்து சுயசரிதைக்கு ஒப்பான “மஹா வம்சமும்” கூறுகிறது.
பாண்டியர்கள் மற்றும் சேரர்களுக்கு எதிரான படையெடுப்பு
ஈழப்படையெடுப்பைத் தொடர்ந்து பாண்டியர்களுக்கும் சேரர்களுக்கும் எதிரான படையெடுப்பை இராஜேந்திரன் கி.பி. 1018ல் மேற்கொண்டான். இதை இம்மன்னனின் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் உறுதி செய்கின்றன. பாண்டியர்களுடைய ஒளிபொருந்திய மாசில்லாத முத்துக்களை கவர்ந்தான் என்றும் தொடர்ச்சியாக கடுமையான மலைப்பகுதிகளைக் கடந்து சேர மன்னர்களை அழித்தான் என்றும் செப்பேடுகள் உறுதிசெய்கின்றன. ஆனால் இந்தப் படையெடுப்பால் சோழ ஆட்சிக்கு உட்பட்ட நிலப்பரப்பில் மாற்றம் எதுவும் இருக்க வாய்ப்பில்லை; ஏனென்றால் இந்தப் பகுதிகள் இராஜராஜ சோழனின் படையெடுப்பால் சோழ நாட்டிற்கு உட்பட்ட நிலப்பரப்புக்களாக இருந்தவையே. இதன் காரணமாக இராஜேந்திரன் பாண்டிய, சேர பகுதிகளில் நடந்த சோழ ஆட்சிக்கு எதிரான கலகங்களை படையெடுத்து அடக்கினான் என்று கொள்ளலாம்.
இராஜேந்திரன் தன்னுடைய மகன்களின் ஒருவனை ஜடாவர்மன் சுந்தர சோழ-பாண்டியனாக பாண்டிய நாட்டில் முடிசூட்டி மதுரையில் இருந்து ஆளும்படி செய்தான். ஆனால் இந்த சோழ-பாண்டியன் இராஜேந்திரனின் எந்த மகன் என்பது தெளிவாக குறிப்பிடப்பட இல்லை.
சாளுக்கிய படையெடுப்பு
இராஜேந்திரன் கி.பி. 1021 ல் தன்னுடைய கவனத்தை மேலைச் சாளுக்கியர்களை நோக்கித் திருப்பினான். இதற்கு கி.பி. 1015ல் சத்யாச்சிரயனுக்குப் பிறகு மேலைச் சாளுக்கிய மன்னனாக முடிசூடிய ஜெயசிம்மன் II பொறுப்பேற்றதும், சத்யாச்சிரயன் சோழர்களிடம் இழந்த சாளுக்கிய பகுதிகளை தன்வசப்படுத்தத் தொடங்கியது காரணமாகயிருந்தது.
இராஜேந்திரன் ஈழத்திலும் பாண்டியர், சேரர்களுக்கு எதிரான போர்களில் தன் கவனத்தைச் செலுத்தியிருந்த பொழுது வடதிசையில் இந்தத் திருப்பம் நிகழ்ந்திருந்தது. சாளுக்கிய மன்னன் ஜெயசிம்மன் II இந்த முயற்சிகளில் ஆரம்ப காலத்தில் வெற்றியும் பெற்றிருந்தான்.
இடைப்பட்ட இந்தக் காலத்தில் ஜெயசிம்மன் கீழைச் சாளுக்கிய தேசமான வேங்கியிலும் தன்னுடைய ஆளுமையைச் செலுத்தினான். கீழைச் சாளுக்கிய மன்னனான விமலாதித்தனின் மரணத்திற்குப் பிறகு பட்டத்திற்கான குடும்பப் பூசலில், ஜெயசிம்மன் விஜயாதித்தனை VII ஆதரித்து குடும்பப் பூசலை வளர்த்தான். விமலாதித்தனின் மற்றொரு மகனான இராஜராஜ நரேந்திரனுக்கும் விஜயாதித்தனுக்கும் இடையேயான தாயாதி சண்டையில் இராஜேந்திரன் இராஜராஜ நரேந்திரனை ஆதரித்தான் – இவன் ஒருவகையில் இராஜேந்திரனின் மருமகன் ஆவான்.
இராஜராஜ நரேந்திரன், விமலாதித்தனுக்கும் இராஜராஜ சோழனின் மகளான அதாவது இராஜேந்திரனின் தங்கை குந்தவைக்கும் (இராஜராஜ சோழரின் தமக்கை குந்தவை வேறு நபர்.) பிறந்தவன் ஆவான்.
இதன் காரணமாக ஏற்பட்ட உள்நாட்டுச் சண்டையில் இராஜராஜ நரேந்திரன் இராஜேந்திரனின் உதவியால் சுலபமாக வென்றான். ஜெயசிம்மனுடனான போரில் இராஜேந்திரன் வென்றான் ஆனால் ஜெயசிம்மனை துங்கபத்திரா ஆற்றின் நதிக்கரைக்கு அப்பால் மட்டுமே விரட்டினான். ஜெயசிம்மனைத் தொடர்ந்து சாளுக்கியத் தலைநகரம் வரை செல்லவில்லை. இராஜேந்திரன் தன்னுடைய மகளான அம்மங்கா தேவியை இராஜராஜ நரேந்திரனுக்கு கி.பி. 1022ல் மணம்முடித்து சாளுக்கிய அரசியலில் தொடர்ந்து சோழர்களின் பங்கு இருக்குமாறு செய்தான்.
பின்னர் மீண்டும் ஜெயசிம்மன் கி.பி. 1031ல் வேங்கி மீது படையெடுத்து விஜயாதித்தனை கீழைச் சாளுக்கிய மன்னராக்கினான் இதன் காரணாம மீண்டும் ஒரு முறை இராஜேந்திரன் வேங்கி மீது படையெடுத்து கி.பி.1035ல் விஜயாதித்தனையும் அவனுடைய மேலைச் சாளுக்கிய ஆதரவான ஜெயசிம்மனின் படைகளையும் வேங்கியில் இருந்து துரத்திவிட்டு மீண்டும் இராஜராஜ நரசிம்மனை வேங்கி மன்னனாக அறிவித்தான்.
கங்கையை நோக்கிய படையெடுப்பு
மேலை கீழைச் சாளுக்கிய தேசங்களிளும் ஈழம் பாண்டிய சேர தேசங்களிலும் கிடைத்த தொடர்ச்சியான வெற்றியும், அதன் காரணமாக இல்லாமல் போயிருந்த சோழ நாட்டிற்கெதிரான கிளர்ச்சிகளும் கலகங்களும் இராஜேந்திரனை கங்கை நோக்கிய படையெடுப்பை நடத்த வைத்த காரணிகளாகயிருந்தன.
கி.பி 1019ல் இராஜேந்திரனின் படை கங்கையை நோக்கிய தன்னுடைய படையெடுப்பைத் தொடங்கியது. கோதாவரி கரையில் இராஜேந்திர சோழன் கங்கை நோக்கிய தன் படைகளின் படையெடுப்பிற்கான பாதுகாப்பிற்காக நின்றான். சோழர் படைகள் வங்கதேசத்தின் பால வமிசத்து புகழ்பெற்ற மன்னனான மகிபாலனை எதிர்த்து பெரும் வெற்றிபெற்றது.
திருவாலங்காட்டுச் செப்பேடுகள் இந்த இராஜேந்திரனின் கங்கை நோக்கிய படையெடுப்பு ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் நீடித்தன என்று சொல்கின்றன. இந்த இரண்டு ஆண்டு காலத்தில் வட இந்தியாவின் அரசுகள் சோழர்களின் பெரும்படைக்கு முன் தோல்வியுற்றன; ரனசுராவின் படைகளை வென்று தர்மபாலாவின் நாட்டிற்குள் நுழைந்தன என்றும் அங்கே அம்மன்னனை வென்று கங்கை வரை சென்றதாகவும்.
தோல்வியுற்ற மன்னர்கள் மூலமாகவே கங்கை நதியை சோழநாட்டுக்கு எடுத்து வந்தான் என்றும் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியமுடிகிறது.
இராஜேந்திரனின் படைகள், சக்கரக்கோட்டம், தண்டபுக்தி மற்றும் மகிபாலனை தோற்கடித்தது உண்மையே, ஆனால் நிரந்தரமான தன்னுடைய ஆட்சிக்குட்பட்ட நாடுகளாக இராஜேந்திரன் இந்த நாடுகளை சோழநாடுடன் இணைத்துக் கொள்ளவில்லை.
சோழர்களின் பலத்தை வட இந்திய மன்னர்களிடம் நிரூபித்துக் காட்டிவிட்டுவரும் ஒரு முயற்சியாக இந்த கங்கை நோக்கிய படையெடுப்பை எடுத்துக் கொள்ளலாம்.
கடல்கடந்த படையெடுப்புக்கள்
கடாரம் படையெடுப்பு
இராஜராஜனின் ஆட்சியின் 14வது ஆண்டுக் கல்வெட்டுகளில், முதல் முறையாக, கடல் கடந்து கடாரம் கொண்ட செய்தி காணப்படுகிறது. இதைத் தெரிவிக்கும் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கடலைக் கடந்து திறமையான படையுடன் இராஜேந்திரன் சென்று கடாஹ என்னும் பகுதியைக் கைப்பற்றினான் என்று சுருக்கமாக ஒரு செய்யுளில் சில வரிகளில் கூறிமுடிக்கிறது என்றாலும் இந்தச் சாதனையை இவனுடைய தமிழ் மெய்க்கீர்த்தி மிக விரிவாகச் சொல்கிறது.
அலை நிறைந்த கடலின் நடுவே பல கப்பல்களை இராஜேந்திரன் அனுப்பினேன்; கடாரத்தை ஆண்ட சங்கிராம விஜ்யோத்துங்க வர்மனையும், புகழ் படைத்த அவனுடைய படையில் இருந்த யானைகளையும் பிடித்துக் கொண்டான். நியாயமான வழியில் அந்த அரசன் சேமித்து வைத்திருந்த எண்ணற்ற செல்வங்களையெல்லாம் இவன் எடுத்துக் கொண்டான்; பரந்துவிரிந்திருந்த இந்த நகரத்தின் “போர் வாயில்” அருகேயுள்ள வித்தியாதரதோரணம் என்ற வளைவை வெற்றி முழக்கத்துடன் கைப்பற்றினான்.
நகைகள் பதித்த சிறுவாயிலை உடைய ஸ்ரீவிஜயன் பெரிய நகைகள் கொண்ட வாயிலையும் அழகுபடுத்தி அலங்கரித்துக் கொண்டான். பண்ணையில் தீர்த்தக் கட்டங்களில் நீர் நிறைந்திருந்தது.
பழமையான மலையூர், வலிமையான மலைக்கோட்டையாகவும் திகழ்ந்தது. மாயிருடிங்கம், ஆழ்கடலால் அழகாகச் சூழப்பட்டு பாதுகாப்படுகிறது. எத்தகையபோரிலும் அஞ்சா நெஞ்சனாக விளங்கிய இலங்காசோகன்(லங்காசோக), மாபப்பாளம், ஆழமான தண்ணீரைப் பாதுகாப்பாகக் கொண்டிருந்தது.
மே விளிம்பங்கம், அழகிய சுவர்களை பாதுகாப்பு அரணாகக் கொண்டிருக்கிறது. ” வலைப்பந்தூரு” என்பதுதான் வளைப்பந்தூரு போலும்; தலைத்தக்கோலம், அறிவியல் புலமை உடயோரால் செய்யுள்களில் புகழப்பட்டிருக்கிறது.
பெரிய போர்களிலும் அதுவும் கடுமையான போர்களில் தன் நிலைகுலையாத மாடமாலிங்கம்; போரால் தன் வலிமையான ஆற்றல் மேலும் உயர்ந்த பெருமையுடைய இலாமுரித்தேசம்; தேன்கூடுகள் நிறைந்த மானக்கவாரம்; மற்றூம் ஆழ்கடலால் பாதுகாக்கப்பட்டதும் மிகவும் சக்தி வாய்ந்ததுமான கடாரம்
கி.பி. 1025ல் சோழர்களின் கப்பற்படை சங்கராம விஜயதுங்கவர்மன் ஆண்ட ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தை நோக்கிய போரைத் தொடங்கியது. ஸ்ரீவிஜயத்தின் படைவலிமை பெற்ற கடாரத்தையும் தாக்கி அழித்தது சோழர்களின் கப்பற்படை.
சங்கராம விஜயதுங்கவர்மன் சைலேந்திர குலமன்னனான மார விஜயதுங்கவர்மனின் மகனாவான். இந்த ஸ்ரீவிஜயம் தற்கால சுமத்ரா நாட்டின் தீவில் உள்ள பாலம்பங்கில் உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இராஜேந்திரனின் இந்த ஸ்ரீவிஜயத்தின் மீதான கடற்படைத் தாக்குதல் என்ன காரணத்தால் நிகழ்ந்தது என்பதற்கு எந்த வரலாற்று ஆதாரமும் கிடைக்கவில்லை.
ஏனென்றால் சைலேந்திர குல ஸ்ரீவிஜய மன்னர்களுக்கும் இராஜராஜ சோழனுக்கும் நல்ல நட்புறவு இருந்து வந்துள்ளது. மார விஜயதுங்கவர்மன் மன்னன் தான் சூடாமணி விகாரத்தை நாகப்பட்டினத்தில் கட்டிக்கொடுத்தவன் இதற்கு இராஜராஜ சோழரின் முழு ஆதரவும் இருந்திருக்கிறது.
இராஜேந்திரனின் ஆதரவும் இருந்தது என்று கல்வெட்டு ஆதாரங்கள் தெரிவிக்கின்றன; இதன் காரணமாகவே இராஜேந்திரனின் இந்த ஸ்ரீவிஜய படையெடுப்பின் காரணம் என்ன என்பதில் குழப்பம் நீடிக்கிறது.
நீண்ட காலமாகவே ஸ்ரீவிஜயத்துடனான சோழர்களின் நட்புறவு நெருக்கமாக இருந்ததும், சீன அரசர்களுடனான சோழ அரசர்களின் தொடர்புக்கு ஸ்ரீவிஜயம் உதவிவந்துள்ளதும்.
சோழர்களின் கல்வெட்டுக்கள் மூலமாகவும் சீன தேசத்து அறிஞர்களின் குறிப்புக்கள் மூலமாகவும் அறியமுடிகிறது. ஒரு காரணம் இருக்கலாம் என்று ஊகிக்க முடிகிறது; சீன அரசுடனான சோழ அரசின் வணிகத்தை தடுக்கும் நோக்கம் ஸ்ரீவிஜய சாம்ராஜ்ஜியத்துக்கு இருந்திருக்கலாம்.
அதன் காரணமாகவே இந்தப் படையெடுப்பும் நிகழ்ந்திருக்கலாம். இந்தப் படையெடுப்பின் மூலமும் எந்த நிலப்பரப்பும் சோழ அரசுடன் இணைக்கப்படவில்லை என்றும் ஸ்ரீவிஜயத்தை சோழ நாட்டிற்கு அடங்கியதாய் ஒப்புக்கொள்ள வேண்டியே இந்த படையெடுப்பு நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்றும் தெரிகிறது.
மீண்டும் சங்கராம விஜயதுங்கவர்மனே மன்னனாக சோழர்களால் முடிசூட்டப்பட்டான். குறிப்பிட்டக் கால அளவில் திறையாக இவ்வளவு செலுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடுடன் என்றும் சோழர்களின் கல்வெட்டுக்கள் மூலம் தெரியவருகிறது.
பண்ணை
இராஜேந்திரனுடைய மெய்க்கீர்த்தீல் ஸ்ரீவிஜயத்திற்குப் பிறகு பண்ணை என்ற இடம் குறிக்கப்படுகிறது. பண்ணை என்பது சுமத்திராவின் கீழ்க்கரையில் உள்ள் பனி அல்லது பன்னெய் என்ற ஊராகும். மலையூர் என்பது லேயா தீபகற்பத்தின் தென்கோடியில் பழைய சிங்கப்பூர் ஜலசந்திக்கு வடக்கே மலாயூர் ஆற்றுக்கு அருகில் உள்ளது.
இலாமுரி தேசம்
இலாமுரி தேசம் என்பது சுமத்திராவின் வடபகுதியிலுள்ள நாடாகும்.இதனை அரேபியர்கள் லாமுரி என்றும், மார்க்கோபோலோ லம்பரி என்றும் அழைத்தனர்.
சௌஜுகுவா இதனை லான்வூரி என்றார். மாநக்கவரம் என்பது நிக்கோபார் தீவுகளாகும். இந்த இடங்களைக் காணும் பொழுது, சுமத்திராவிலுள்ள ஸ்ரீவிஜய இராச்சியத்தையும், அதன் அதிகாரத்திற்கு உட்பட்ட மலேயா நாடுகளையுமே, இராஜேந்திரன் கைப்பற்றினான் என்பது தெளிவாகிறது.
இராஜேந்திரன் ஆட்சியின் இறுதி ஆண்டுகள்
கடாரம் படையெடுப்பிற்குப் பின் இராஜேந்திரன் இருபது ஆண்டுகள் ஆட்சி செய்தான். போர் முதலியன நடவாத அமைதிக் காலம் என்று வரலாற்று ஆசிரியர்கள் இக்காலப் பகுதியை சிறப்பித்துள்ளனர். ஆனால் இராஜேந்திரனின் மக்களின் கல்வெட்டுகள் இதனை மறுக்கின்றன.
இவற்றின் மூலம் நாட்டில் பல பகுதிகளில் இவர்கள் போரிட வேண்டியிருந்தது எனத் தெரியவருகிறது. தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே திக் விஜயம் செய்த இராஜேந்திரன், இதன் பின்னர் ஏற்பட்ட போர்களில் தானே கலந்து கொள்ளாமல் தன் மக்களிடம் பொறுப்பை ஒப்படைத்ததான். இதன் மூலம் அவர்கள் வெற்றி பெற்றுப் புகழடையச் செய்தான்.
எனினும் இராஜாதிராஜனின் கல்வெட்டுகள் அனைத்தும் இராஜேந்திரனின் ஆட்சிகாலத்திற்குட்பட்டனவாக உள்ளதால், இவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கும் விவரங்களும் முக்கியமாகின்றன.
தெற்கில் குழப்பம்
பாண்டிய, கேரள நாடுகளில் குழப்பங்கள் ஏற்பட்டதை ஒடுக்க வேண்டியிருந்தது. எனவே இராஜாதிராஜன் ஒரு நீண்ட படையெடுப்பை மேற்கொள்ள வேண்டிய நெருக்கடி உண்டாயிற்று. ஆனால் பாண்டிய, கேரள நாடுகளின் மீதான படையெடுப்பு எப்பொழுது மேற்கொள்ளப்பட்டது என்பது சரிவர தெரியவில்லை.
இக்காலத்திய பாண்டிய கல்வெட்டுக்கள் இதைப் பற்றி ஒன்றும் கூறவில்லை. வெற்றிகொண்ட சோழர்களின் கல்வெட்டுகள் மூலமே இதனை நாம் அறிகிறோம். நடுநிலைச் சான்றுகள் கிடைக்கவில்லை, எண்ணற்ற சோழ பாண்டிய கல்வெட்டுகளும் இதைப்பற்றி ஒன்றும் கூறவில்லை.
சுந்தரபாண்டியனே இக்கலகத்தை நடத்திய இயக்கத்தின் தலைவனாயிருக்கவேண்டும்.
‘திங்களேர்’ என்று தொடங்கும் இராஜாதிராஜனின் மெய்க்கீர்த்தியின் ஒரு கூற்று, மூன்று [[பாண்டியர்
பாண்டியர்களுடன்] இம்மன்னன் செய்த போரை விவரிக்கும் பொழுது, தன் தந்தையை எதிர்த்த(‘தாதை முன்வந்த’)விக்கிரம நாராயணனுடன் போரிட்டு அவனை வென்றதாகக் கூறுகிறது. பத்துநாள் நடைபெற்ற போரின் முடிவில் இராஜாதிராஜன் பூபேந்திரச் சோழன் என்ற பட்டத்தைச் சூடிக் கொண்டான்.
விக்கிரம நாராயணன் ஒரு தென்னாட்டு மன்னனாகவே இருத்தல் வேண்டும். ஆனால், இந்த மெய்க்கீர்த்தியிலேயே பின்பகுதியில் கூறப்படும் சாளுக்கியருடனான இரண்டாம் போரில், இவனே சக்கரவர்த்தி விக்கிரம நாராயணன் என்று குறிப்பிடப்படுவதால், இவன், சாளுக்கிய படைத்தலைவனாகயிருக்க வேண்டும்.
பாண்டிய நாட்டுப் படையெடுப்பைத் தொடர்ந்து இராஜாதிராஜன் காந்தளூருக்குச் செல்லும் வழியில் வேணாடு மன்னனை ‘விண்ணுலகத்திற்கு அனுப்பினான்’. பின்னர் தென் திருவாங்கூரைச் சேர்ந்த கூபகர்களின் தலைவனைப் பலம் இழக்கச் செய்தான் என்றும் கல்வெட்டுக்கள் கூறுகின்றன.
சோழப்பேரரசின் கருணை
சோழர்களால் கைப்பற்றப்பட்ட பிறகும், பாண்டிய நாட்டிலும், கேரள நாட்டிலும் பழமையான பரம்பரை மன்னர்களே தொடர்ந்து ஆட்சி செய்து வந்தனர் என்பதும், சோழப் பிரதிநிதிகள் அந்நாடுகளில் இருந்தும்கூட, இவர்கள் சோழ மன்னர்களுக்குத் தொல்லை கொடுத்தனர் என்பதும், சோழர் ஆட்சி இந்நாடுகளில் எதேச்சாதிகாரமற்றிருந்தது என்பது விளங்குகிறது.
இராஜேந்திரனின் கடைசி ஆண்டுகள்
இராஜேந்திரன் ஆட்சியின் கடைசி ஆண்டுகள்ள், விஜயாலயச் சோழ வமிசத்தின் வரலாற்றின் பொற்காலமாக அமைந்தன. சோழ நாடு மிகப் பரந்து விரிந்தது; சோழருடைய பெரும் படையின் வல்லமையும் கடற்போரின் விளைவால் உண்டான மதிப்பும் வானோங்கி நின்றன.
புதிதாய்ச் சேர்க்கப்பட்ட நாடுகளில் ஆங்காங்கு ஏற்பட்ட குழப்பங்களை அடக்க வேண்டியிருந்தது. திறமை படைத்த புதல்வர்கள் அப்பணியைச் செவ்வனே செய்தனர்.
சுந்தர பாண்டியனையும், அவனுடைய நண்பர்களையும் பாண்டியரோடு நடைபெற்ற போரில் தோற்கடித்தும் ஆகவமல்லனுக்கு எதிராக சாளுக்கியப் போரில் ஈடுபட்டும் சோழர்கள் தொடர்ச்சியாக அப்பகுதிகளை கைவசப்படுத்தியிருந்தார்கள். இவ்விரு போர்களிலும் பட்டத்து இளவரசனான இராஜராஜன் தலைமை ஏற்றான். மைசூரிலும் நம்பிஹல்லி என்ற பகுதியிலும் சோரியருடன் ஏற்பட்ட சிறு பூசல்களைச் சமாளிக்க, குறுநில மன்னர்கள் பலர் சோழருக்கு உதவினர்.
விருதுகள்
இராஜராஜ சோழனைப் போன்றே இராஜேந்திரனும் சிறந்த விருதுகள் பலவற்றைப் பெற்றான். இவற்றில் குறிப்பிடத்தக்கவை, முடிகொண்ட சோழன், பண்டித சோழன் என்பன. இவன் ஒருமுறை வீர ராஜேந்திரன் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறான்.
இவற்றையெல்லாம் விட, இம்மன்னனே விரும்பி சிறந்த விருதாகக் கருதி ஏற்றது, ‘கங்கை கொண்ட சோழன்’ என்பதாகும். இவ்விருது இம்மன்னன் புதிதாக நிறுவிய தலைநகரின் பெயரைக் கொண்டது.
பட்டத்தரசிகள்
திருப்புவன அல்லது வானவன் மாதேவியார், முக்கோலான், பஞ்சவன் மாதேவியார், வீரமாதேவி என்போர் இராஜேந்திரனின் மனைவியர் ஆவர். வீரமாதேவி என்பாள், இம்மன்னனுடன் உடன்கட்டை ஏறி உயிர்துறந்தாள்.
இவன் புதல்வர்களில் மூவர் இராஜாதிராஜன், இராஜேந்திரன், வீர இராஜேந்திரன் ஆகியோர் இவனுக்கு அடுத்தடுத்துச் சோழ அரியணையில் அமர்ந்தனர். இம்மூவரில் யார் சோழபாண்டிய பிரதிநிதியான ஜடாவர்மன் சுந்தர சோழ பாண்டியன் என்று கூற இயலாது.
இம்மூவரைத் தவிர வேறு புதல்வர்களும் இருந்தனர். இராஜேந்திரனின் மகள் அருண்மொழி நங்கையார் என்ற பிரானார், தன் சகோதரன் இராஜாதிராஜனின் ஆட்சியின் தொடக்கத்தில் திருமழவாடிக் கோயிலுக்கு விலையுயர்ந்த முத்துக்குடை அன்பளித்தாள்.
இம்மன்னனின் மற்றோரு மகள் புகழ் மிக்க அம்மங்காதேவி ஆவாள். இவள் கீழைச் சாளுக்கிய மன்னன் முதலாம் இராஜராஜனின் மனைவியும், முதலாம் சாளுக்கிய மன்னர்களில், குலோத்துங்கனின் தாயும் ஆவாள். இராஜேந்திரனின் கல்வெட்டுகளில் காணப்படும் இவனுடைய ஆட்சி ஆண்டுகளில் 33-ம் ஆண்டே கடைசியானது.
இராஜாதிராஜனின் 6-ம் ஆண்டு கல்வெட்டு ஒன்று, இராஜேந்திரன் இறந்ததைக் கூறுகிறது. ஆகையால் இராஜேந்திரன் கி.பி 1044ல் காலமாயிருக்க வேண்டும்.