புதுக்கோட்டை சமஸ்தானம் 1947 ஆகஸ்ட்டு 15 வரை பிரிட்டீஷ் ஆளுகைக்கு உட்படாத தனி நாடு.தனி ஆட்சி, தனி சட்டம், தனி நாணயம் ( இந்தியக் காசை எப்படி ரூபாய் என்கின்றோமோ அதுபோல புதுகை காசின் பெயர் அம்மன் காசு) என்று தனிக்காட்டு இராஜாவாக இருந்தவர்கள் நாங்கள். இன்றைக்கும் புதுகையில் யாரேனும் என்னிடம் கையில் ஒரு பைசாக்கூட இல்லை என்பதனைக் குறிப்பிடும் முகமாக “கையில் அம்மஞ் சல்லிகூட இல்லை” என்ற பதத்தை வழக்கில் புழங்குவதைப் பரவலாகக் காணலாம்.
தொண்டைமான் மன்னர்களின் முடியாட்சியில் இருந்த புதுக்கோட்டைத் தனியரசு(சமஸ்தானம்) 3.3.1948ல் ஒன்றுபட்ட இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
புதுக்கோட்டை அம்மன் காசு
வரலாற்றுக்கு முற்பட்டக் காலம்
பாண்டியப் பேரரசு
கி.பி மூன்றாம் நூற்றாண்டிலிருந்து ஆறாம் நூற்றாண்டு வரை தமிழகப் பகுதி கலப்பிரரின் ஆளுகையின் கீழ் இருந்தது. பிறகு பாண்டிய பேரரசு (3-880)வரை ஆட்சி செய்தார்கள்.
பல்லவர்
இதற்கு இடைப்பட்ட காலங்களில் பல்லவ பேரரசும் அவ்வபோது ஆண்டு வந்திருகிறது
முத்தரையர்
தமிழகத்து வரலாற்றுக் கதாப்பாத்திரங்களில் முத்திரையர் குறிப்பிடத்தக்கவர். புதுக்கோட்டைப் பகுதியில் பல்லவர் ஆட்சி நிலைக்க உறுதுணையாக நின்றவர்கள் இவர்களே.
முற்காலத்தில் பெருநிலக் கிழார்களாக வாழ்ந்துவந்த முத்தரையர் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக தஞ்சாவூர்,திருச்சி புதுக்கோட்டை பகுதிகளில் பல்லவ மன்னர்களின் மேலாண்மைக்குட்பட்ட குறுநில மன்னர்களாக ஆளத் தலைப்பட்டனர்.
முத்தரையரின் தோற்றுவாய் பற்றி அறிஞர்களிடையே கருத்துவேறுபாடு உண்டு. முத்தரையர் கலப்பிரர்களின் கிளைக்குடியினர் என்று டாக்டர் எஸ்.கே. அய்யங்கார் போன்ற அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால் களப்பிரர் என்ற சொல்லில் இருந்து முத்தரையர் என்ற சொல் எப்படிவந்தது என்று தெரியவில்லை.
தமிழகத்தின் கலை, கலாச்சாரம், சமய சடங்குகள், பண்பாடு அனைத்தையும் நிலைகுலையச் செய்த களப்பிரரையும் கலக் காவலர்களாக காட்சியளிக்கும் முத்தரையரையும் தொடர்பு படுத்த முடியாது. முத்தரையர் என்பவர் பல்லவரே என வேங்கடசாமி நாட்டாரும், கள்ளர் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று ராகவ அய்யங்காரும் கூறுகின்றனர்.
முத்தரையர் ஆரம்ப காலத்தில் பாண்டி நாட்டு முத்துக்குளிக்கும் துறைமுகப் பகுதிகளில் ஆட்சி செய்திருக்க வேண்டும். முத்து + அரையர் = முத்தரையர்(அரையர் என்றால் நாடாள்வோர் என்று பொருள்.
முத்தரையர், மாறன், மீனவன், தென்னவன் போன்ற பாண்டியனின்பெயர்களைப் பெற்றிருந்த செய்தியை புதுக்கோட்டை கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. செந்தலைக் கல்வெட்டில் முத்தரையரின் கொடிச் சின்னம் ‘கயல்’ எனக் காணப்படுகிறது.
மேற்கண்ட கருத்துக்களை கூர்ந்து ஆராயும் பொழுது முத்தரையர் பாண்டியரின் கிளைக்குடியினராக இருந்திருக்க வ்ஏண்டும். இவர்கள் கொடும்பாளூர் வேளிருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்களாகவும் இருக்க வேண்டும்.
முத்தரையர் பாண்டியரின் கிளைக்குடியினர் ஆயினும், இவர்கள் பல்லவர் ஆட்சிக்கு பக்கபலமாக இருந்து பாண்டியரை எதிர்த்துப் போரிட்டிருக்கின்றனர.
பழைய அரண்மனை
பழைய அரண்மனை
இதற்கு அப்புறம் துவங்கியது தொண்டைமான் அரசர்களின் ஆதிக்கம். சுதந்திர இந்தியாவோடு புதுகை இணையும் வரை ஆண்ட வம்சம் தொண்டைமான் வம்சம்.
புதுக்கோட்டை சமஸ்தானம் இராச்சியம் (1800 வரை இராமநாத ஜமீனுக்குள்),
இந்தியாவிற்குள் (1800–1947)
- 1 இரகுநாத தொண்டைமான் (1686 – 1730)
- 2 விஜயரகுநாதராய தொண்டைமான் (1730-1769)
- 3 இராயரகுநாத தொண்டைமான் (1769 – 1789)
- 4 ராஜா விஜயரகுநாத தொண்டைமான் பகதூர் (1789 – 1807)
- 5 இராஜா விஜய ரகுநாதராய தொண்டைமான் பகதூர் (1807 – 1825)
- 6 ஹிஸ் எக்சலென்சி இராஜா ரகுநாத தொண்டைமான் பகதூர் (1825 – 1839)
- 7 ஹிஸ் ஹைனெஸ் ஸ்ரீ பிரகதம்பாதாஸ் இராஜா ராமச்சந்திர தொண்டைமான் பகதூர் (1839 – 1886)
- 8 ஹிஸ் ஹெனெஸ் ஸ்ரீ பிரகதாம்பாதாஸ் இராஜ மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் பகதூர் ஜி.சி.ஐ.இ. (1886முதல்)
- 9 மாட்சி பொருந்திய விஜயரகுநாத துரராஜ தொண்டைமான் பகதூர் (1922 முதல்)
- 10 ஸ்ரீ பிரகதாம்பதாஸ் ராஜகோபாலத் தொண்டைமான்
கல் வட்டம் அதிசயங்கள்
ஆம், தொல்லியல் துறை அறிவிப்பு / எச்சரிக்கை பலகை. ஆனால் அருகில், கோயிலோ , இடிபாடுகளோ எதுவும் கண்ணுக்கு தென்படவில்லையே என்று சற்று குழம்பி நிற்கும் போது ..
அதோ பின்னால் இருக்கிறதே, ஒரு அழகிய கல் வட்டம். சுமார் 1000 இருந்து 300 BCE ஆண்டு என்று சரித்திர கூறுகள் காலம் கணிக்கும், இவை நமது முன்னோர் இறந்தவரின் ஈம பொருள்களை தாழிகளில் புதைத்து , அதனை சுற்றி அடையாளமாக இந்த கற்களை வைத்தனர் எனக் கூறப்படுகிறது.
இதில் என்ன அதிசயம் என்றால், இந்த வகை கற்கள் அருகாமையில் எங்கும் இல்லை. இந்த வட்டங்கள் இருக்கும் இடத்தை விட்டு பத்து அல்லது இருபது கிலோ மீட்டர் தொலைவில் இருந்து எடுத்து வரப்பட்டவை. ஏதோ ஒரு மூதாதையர் வழிபாடு முறையை ஒட்டி உள்ளது.
இந்த அழகு – அந்த வட்டம் இன்றும் நம் முன்னே இருப்பது தான்.
மீண்டும், நான் முதலில் சொன்னததப் போல, கண்டிப்பாக தென்னகத்தில் இரு முறையாவது பெரிய கடல் கொண்ட சரித்திரம் உள்ளது. பெரும் பகுதி அழிந்து, அதனால் முதல் இரு சங்கங்களும் களைந்து, பாண்டிய மன்னன் மதுரையை இன்றைய தென்னிந்திய நிலப் பரப்பின் நடுவில் நிறுவினான் என்றும் வழக்கில் உள்ளது. அப்படி இருப்பினும், எஞ்சி இருப்போர் திரும்பவும் இப்படி கற்கால / உலோக கால மனிதனை போல பின் தள்ளப்படுவரோ? இது ஒரு இடம் என்று அல்ல, தமிழகம் முழுவதும் இது போல உள்ளன. தொல்லியல் துறை சுட்டியில் சென்று பாருங்கள் !!!
திருமயம் அதிசயங்கள்
இங்கு சிவனுக்கும் திருமாலுக்கும் குடைவரை கோயில்கள் உண்டு. இங்கே இசை கல்வெட்டுக்கள் உண்டு. சிவன் கோயில் சற்று பழையது என்பர். வைணவர்களுக்கு இவ்வூர் சிறப்பு மிக்கது.
கிபி 630-688ல் நரசிம்மவர்ம பல்லவனால் கட்டப்பட்டது தான் திருமயம். கருவரையுடன் கூடிய குடைவரைக் கோவிலை மட்டும் தான் பல்லவர்கள் கட்டியுள்ளார்கள்.
அங்கு உள்ள சத்திய மூர்த்திப் பெருமாள் கோயில் முழுவதும் படிபடியாக பலரால் பிற்காலத்தில் சோழர்கள், முத்தரையர்கள், பாண்டியர்கள், விஜய நகர அரசர்கள், நாயக்கர்கள், சேதுபதி மன்னர்கள், நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் முதலானோர்கள் பல நிலைகளில் இக்கோயிலை கட்டியுள்ளார்கள்.
இங்கு உள்ள பெருமாள் பெரிய திருமேனியுடன் முப்பது அடிநீளத்தில் ( அரங்கநாதனை விட பெரிய திருமேனி) காட்சியளிக்கிறார்.
குடைவரை கோயிலில் ஐந்து தலைகளை உடைய ஆதிசேஷன் மீது சயனத்தில் பெருமாள் காட்சியளிக்கிறார். காலடியில் பூமாதேவி, மார்பினில் திருமகள், இடமிருந்து வலமாக கருடன், தர்மராஜன், சித்திரகுப்தன், சந்திரன், சூரியன், ராகு பிரம்மா, தேவர்கள், ரிஷிகள், வலதுகோடியில் மது,கைடபன் முதலான அரக்கர்கள் என அழகாக செதுக்கப்பட்டுள்ளது. இவை தவிர, கானப்பறை, பேரிகை, சல்லிகை, தக்கை, தண்ணுமை தடாகமும், தடாரி, உடுக்கை, கிடக்கை, கரடிக்கை முதலான பண்டைக்கால கருவிகளும் மலையில் வடிக்கப்பட்டுள்ளன!.
கோயிலுக்கு மேல் இருக்கும் கோட்டை ஒரு சின்ன குன்றின் மேல் அமைந்துள்ளது. இந்த கோட்டை ஊமையன் கோட்டை என்று அழைக்கப்படுகிறது. ஊமையன் வீரப்பாண்டிய கட்டபொம்மனின் தம்பி. இந்த கோட்டை ராமனாதபுரம் இரகுநாத சேதுபதியால்(1678) கட்டப்பட்டது.
பிறகு(1728) தன் மாமன் இரகுநாத ராயத் தொண்டைமானுக்கு கொடுக்கப்பட்டது. இந்த கோட்டை ஏழு பிரகாரங்களை கொண்டவை. கடைசி பிரகாரம் தற்போது குப்பை தொட்டியாக பயண்படுகிறது.
இந்த திருமயம் கோட்டையின் ஒரு புறமாக , அக்கால போர்முறைகளை கண்முன் கொண்டுவரும் சுழலை காணலாம்.
வரலாற்று புகலிடமான இந்த திருமயம் , இன்று திரைப்படங்களின் பாடல் காட்சிக்குதான் பயன்படுகிறது . நீங்களும் கூட பார்த்திருக்கலாம் ( போட்டுத்தாக்கு என்ற பாடலுக்கு சிம்புவும் ரம்யா கிருஷ்ணனும் ….)
புதுமை விரும்பிகளே … பழமை காலத்தையும் கொஞ்சம் திரும்பி பார்க்கணும்ன்ன புதுக்கோட்டைக்கு வாங்க பார்க்கலாம்.. நானும் கூட வர்றேன்..
சித்தன்னவாசல் அதிசயங்கள்
இங்கே அழியும் தருவாயில் உள்ள பழங்கால ஓவியம், அந்த ஓவியம் அமைந்துள்ள குகைக்கோயில், அதன் பிறகு சில பல சமணர் படுக்கைகள், மிகப் பழமையான கல்வெட்டுக்கள் என்று அனைத்தும் ஓரிடத்தில் காணக்கிடைக்கின்றன. இவை அனைத்தும் நமது பாரம்பரியத்திற்கு சமணர்களின் பங்களிப்பாகும். அவை மட்டுமின்றி, ஏகப்பட்ட முதுமக்கள் தாழிகள் இங்கே கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பொதுவாக புதுக்கோட்டை மாவட்டத்தில் சமணர்கள் பலகாலம் தங்கி இருந்ததற்கான சான்றுகள் அதிக அளவில் கிடைத்துள்ளன. சில சில ஊர்களின் கூட இடிந்து போய் அடிவாரம் வரை மிச்சமமுள்ள சமணர் கோயில்களையும், அனாதையாக கைவிடப்பட்டுள்ள சமணர் சிலைகளும் கிடைத்துள்ளன.
தமிழக தொல்லியல் துறையின் சமணர் பட்டியலில் புதுக்கோட்டை மிக முக்கியத்துவம் பெறுகிறது. அப்படிக் கைவிடப்பட்டுள்ள சில சமணர் சிலைகள் சில இடங்களில் வழிபாட்டிலும் உள்ளன. மொட்டைப் பிள்ளையார், சடையர் என்று மக்கள் அவர்கள் விருப்பத்திற்கேற்ப பெயர் சூட்டி, செவ்வந்திப்பூ மாலை, சாம்பிராணி, குழாயில் மாரியம்மன் பாடல் என்று சில புண்ணியம் பெற்ற சமணர் சிலைகள் வழிபாட்டில் உள்ளன.
இந்த இடம் ஒரு குன்று. கிட்டத்தட்ட 200 அடி உயரம் உடையது. சாலையிலிருந்து போனதும் செங்குத்தான அந்த மலையில் ஓரத்திலிருந்து படிக்கட்டுகள் தொடங்குகின்றன. ஒரு புறம் ஏறி மறுபுறம் அடைந்தால் முதலில் வருவது சமணர் படுக்கைகள்.
அவற்றை விடுத்து கீழே இறங்கி அடுத்த அரை கிலோமீட்டர் போனால் குகைக்கோயிலும் அதனுள் வரையப்பட்டிரு்ககும் அழகிய ஓவியமும் உள்ளன.
அந்த குன்றைச் சுற்றி பல்வேறு இடங்களில் முதுமக்கள் தாழிகளைப் பார்க்கலாம். கிமு 2 அல்லது 3ஆம் நூற்றாண்டு தொடங்கி கிபி 10 ஆம் நூற்றாண்டு வரை சித்தன்னவாசலில் சமணம் தழைத்தோங்கி உள்ளது. கிபி 7 அல்லது 9ஆம் நூற்றாண்டுகளில் புகழ்பெற்ற ஓவியம் வரையப்பட்டுள்ள அறிவர் கோயில் குடையப்பெற்றுள்ளது.
இங்கே சமணர் படுக்கைகள் மற்றும் எழுத்துருக்கள் உள்ள ஏழடிப்பட்டம்
குகைக் கோயிலும் ஓவியமும் உள்ள அறிவர் கோயில் மலை உச்சியில் ஒரு சுனை, நவ்வாச்சுனை என்று ஒரு பாதி நாளுக்கு வரலாற்றுசு் சுற்றுலா கொண்டாட ஏதுவான வசதிகள் அனைத்தும் உண்டு.இந்த இடத்தை ஏழடிப்பட்டம் என்று கூறுகிறார்கள்.
முன்னரே சொன்னது போல, ஒரு மலையில் செங்குத்தாக கடந்து மறுபக்கம் இறங்கவேண்டி உள்ளது. இருக்கும் ஒரு அடி இடத்தில் நமக்காக பாதை அமைந்துத் தந்துள்ளது தொல்லியல் துறை. கொஞ்சம் பலமாகக் காற்றடித்தால், இதயம் உடலை விட்டு வெளியில் வந்து துடிக்கும், அந்த அளவுக்கு செங்குத்தான சரிவு மறுபுறம். எழு காலடித்தடங்களைச் செதுக்கி அதன் மூலமாக முனிவர்கள் இந்த இடத்தை வந்த போயிருக்கிறார்கள். அதனாலேயே இந்த அழகான பெயரைச் சூட்டியிருக்கின்றனர்.
இந்த ஏழடிப்பட்டம் என்பது இயற்கையாகவே மலையில் அமைந்த ஒரு குகை. மலையில் மடிப்பு மாதிரியான ஒரு அமைப்பு. காதில் கூச்சலிடும் காற்று, தனிமை, அமைதி, பக்கத்தில் உதவிக்கு என்று அழைக்க யாருமே இல்லாத ஒரு புதர் காடு என்று இந்த இடம் துறவிகளுக்காகவே அமைக்கப்பட்டிருக்கும் போல.
கயாவின் லோமாஸ் ரிஷி, புவனேஸ்வரத்தின் உதயகிரி குகைகள், தமிழ்நாட்டின் ஆனைமலை, அழகர்மலை போன்றவையும் இத்தன்மையதே. புதுக்கோட்டையிலேயே, குடுமியாமலை, நார்த்தாமலையில் இத்தகைய குகைகள் உண்டு. மலை இருந்தால் குகை இருப்பது சகஜம்தானே!
இங்கேதான் சமண துறவிகள் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தங்கி சமய சேவைகள் செய்து, நோண்பிருந்து தம் நல்லுயிர் ஈந்திரு்கின்றனர். இந்த குகை ஒரு அறை போன்று தோற்றம் உடையது. தொலலியல் துறைக்கே உண்டான வவ்வால் நாற்றமும் உண்டு. இங்கே 17 படுக்கைகள் அமைந்துள்ளன, கல் தலையணையோடு! அதில் ஒன்று மட்டும் பெரியது, அனேகமாக அதுவே பழையது.
இதைப் பற்றி குறிப்பிட காரணம் உண்டு. அனேகமாக இந்த படுக்கையைச் சுற்றித்தான் தென்னிந்தியாவின் மிகப் பழமையான எழுத்துவடிவம் கல்வெட்டாய் நமக்குக் கிடைக்கிறது. தமிழ் மொழியை அசோக பிராமியில் பதித்துள்ளார்கள். இதன் காலம் கிமு 2 அல்லது 3ஆம் நூற்றாண்டு. கிட்டத்தட்ட 2010 வருடங்களுக்கு முந்தியது!!
படத்தைச் சுற்றி எழுதியிருப்பது கல்வெட்டின் வடிவம். எருமிநாட்டில் உள்ள குமிழூரில் பிறந்த காவுடி (துறவியோட பெயர்)க்காக, தென்கு சிறுபோசில் ஊரைச் சேர்ந்த இளையர் செய்தளித்த படுக்கை என்பதே அதில் கூறப்படம் செய்தி. செய்தியில் விசேசமில்லை, அது செய்யப்பட்ட காலத்தில்தான் சிறப்பு உள்ளது.
பெரும்பாலும் அனைத்துப் படுக்கைகளும் கல்வெட்டுக்களைக் கொண்டுள்ளன. பொதுவாக யாருக்காக யார் செய்து கொடுத்த படுக்கை என்ற அதில் எழுதப்பட்டிருக்கும். சில படுக்கைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட கல்வெட்டுக்களும் உண்டு. ஒரே படுக்கையை பலரும் பயன்படுத்தி இரு்ககலாம் அல்லவா.
ஓவியங்கள் 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த குகைக்கோயில்தான் அறிவர் கோயில். சாலையிலிருந்து ஒரு நூறு அடி தூரத்தில் உள்ளது இந்த கோயில். இதன் உள்ளே சமண ஆச்சாரியர்களின் சிலைகளும், விதானத்தில் ஓவியங்களும் காண்பபடுகின்றன
கர்ப்ப கிரகத்தின் சிற்பங்கள்,சித்தன்னவாசல் ஓவியங்கள், கிமு 2- கிபி 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அஜந்தா, 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இலங்கை சிகிரியா, 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாக் குகை ஓவியங்கள் (மத்தியபிரதேசம்) இவற்றுடன் காலத்திலும், வரையும் முறையிலும், தரத்திலும் ஒப்பிடத்தக்கது. தென்னிந்தியாவைப் பொறுத்தவரை, சித்தன்னவாசல் மட்டுமே முற்கால சமண ஓவியங்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.
சமவஸரணம் என்ற சமண சமய தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்டுள்ள விதான ஓவியங்கள் நிஜமாகவே அழகான மற்றும் நேர்த்தியானவை. மேலே கொடுக்கப்பட்டுள்ள ஓவியங்களில் கோட்டோவியங்களாகக் கொடுக்கப்பட்டுள்ள நடன மாதர்களின் படங்கள் அழிந்துவிட்டன.
நவ்வா மரத்தூர்களில் ஒளிந்திருக்கும் நவ்வாச்சுனை, இந்த சுனையின் உள்ளே ஒரு குகைக்கோயில் உள்ளது. சிவனுக்கானது.இதுமாதிரியான கல் வட்டங்களை நிறைய பார்க்கலாம். பழங்கால மக்களைப் புதைத்த இடங்கள் இவை. இங்கிருந்து எடுக்கப்பட்ட தாழிகளில் ஆயுதங்கள் போன்றவையும் இருந்திருக்கின்றன.
போக்குவரத்து
புதுக்கோட்டை – மணப்பாறை சாலையில் புதுக்கோட்டையிலிருந்து 17 கி.மீட்டர்கள். பேருந்து வசதிகள் உண்டு. உத்தேசமாக அரை மணிக்கு ஒன்று.
கவனத்தில் கொள்ளவேண்டியவை. சித்தன்னவாசல் ஓவியங்களை காலத்தின் அடிப்படையிலேயே அதன் முக்கியத்துவத்தைப் பார்க்கவேண்டும்.
அஜந்தா குகை ஓவியங்களைப் போன்று பல ஓவியங்களைப் பார்க்க இயலாது. இருப்பது சிறிய குகைக்கோயில்தான். அதுவும் ஒனறுதான்.
இருக்கும் ஓவியங்களும் அழிந்து வருகின்றன. இருப்பவையும் பக்கத்தில் நடைபெற்றுவரும் கல்குவாரிகளால் நாளுக்கு நாள் உதிர்கின்றன. சமண சமயத்திற்கு என்று நமக்கு இருக்கும் ஒரே இடம் இதுதான்.
அம்மதத்தைச் சேர்ந்த அல்லது சேராத அமைப்புகளோ தனி மனிதர்களோ, சற்று கவனம் எடுத்து சித்தன்னவாசலைக் காப்பாற்றினால் மட்டுமே நமது சந்ததியினருக்கு சித்தன்னவாசல் ஓவியத்தைக் காட்டலாம்.
2 Responses to புதுக்கோட்டை வரலாறு