அரியலூர்:அரியலூர் அருகே பாண்டியர் கால கல்வெட்டு கண்டெடுக்கப் பட்டுள்ளது.அரியலூர் மாவட்டம், கல்லங்குறிச்சி அருகே பொய்யூர் கிராமத்தில் சொர்ணாம்பிகை சமேத சொர்ணபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலை திருப்பணி செய்யும் முயற்சியில், ஊர் மக்கள் ஈடுபட்டபோது, கருங்கல் பலகையில் எழுதப்பட்ட இரண்டு கல்வெட்டுகள் இருப்பது தெரியவந்தது.
அரியலூர் அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத் துறை தலைவர் மற்றும் கல்வெட்டு ஆராய்ச்சியாளருமான பேராசிரியர் தியாகராஜன் கூறியதாவது:இக்கோவிலில் இரண்டு கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. ஒன்று, பாண்டிய மன்னன் முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் காலத்தில் எழுதப்பட்டது.
இதன் காலம் கி.பி.1288.மற்றொரு கல்வெட்டு, உடையார் பாளையத்தை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த, பாளையக்காரர் நல்லநாயக காலாட்கள் தோழ உடையார் என்பவரின் ஆட்சிக் காலத்தில் எழுதப்பட்டது. இதன் காலம் கி.பி.1630.குலசேகர பாண்டியன் காலத்து கல்வெட்டில், இவ்வூர் பெயர் பொய்கையூர் என்றும், இது வடகரை மேல்காரைக்காட்டு சென்னிவன கூற்றம் என்னும் நாட்டு பிரிவின் கீழ் இருந்தாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பொய்கையூரில் இருந்த வேங்கடமுடையான் கோவிலுக்கு, சர்வமானிய இறையிலியாக நிலம் கொடுக்கப் பட்ட செய்தி, இக்கல்வெட்டில் எழுதப்பட்டுள்ளது.இக்கல்வெட்டின் முழுப்பகுதியும் கிடைக்கவில்லை.
இந்த கல்வெட்டில் குறிப்பிடப்படும் பெருமாள் கோவில், தற்போது இல்லை. பாண்டிய மன்னர் காலத்தில் எழுதப்பட்ட கல்வெட்டு, அருகிலுள்ள ராயம்புரம் சிவன் கோவிலில் உள்ளது.பொய்கையூருக்கு அருகில் சென்னிவனம் என்ற ஊர் உள்ளது. சோழர் மற்றும் பாண்டியர் காலத்தில் சென்னிவனக் கூற்றம் என்ற நாட்டு பிரிவுக்கு, தலைநகராக இவ்வூர் இருந்துள்ளது.
இப்பிரிவின்கீழ், சென்னிவனம், சோழங்குறிச்சி, மேட்டுப்பாளையம், கிளிமங்கலம், காவனூர், தேளூர், ஆத்தூர், உஞ்சினி, ஆனந்தவாடி, ராயம்புரம், ஒட்டக்கோவில், பொய்கையூர், ஒரத்தூர், காவேரிப்பாளையம், தாமரைக்குளம் உள்ளிட்ட பல ஊர்கள் இருந்துள்ளன என இக்கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
உடையார்பாளையத்தை தலைநகராக கொண்டு, நல்ல நாயக காலாட்கள் தோழ உடையார் என்ற பாளையக்காரர், கி.பி.1612 முதல் கி.பி.1634 வரை, செஞ்சி நாயக்கர்களுக்கு கட்டுப்பட்டு ஆட்சி செய்துள்ளார்.இவர் காலத்தில் எழுதப்பட்ட இரண்டாவது கல்வெட்டில் இவ்வூர் பெயர் பொய்யூர் என்றும், கோவில் பெயரை பொன்னீசுரமுடையார் கோவில் என்றும் கூறப்பட்டுள்ளது.
தற்போது, இக்கோவில், பொன்னப்பர் கோவில் என்றும் வடமொழியில் சொர்ணபுரீஸ்வரர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.நல்லநாயக காலாட்கள் தோழ உடையார், தை மாதம் 30ம் தேதி, பொய்யூர் சொர்ணபுரீஸ்வரர் கோவிலுக்கு, 180 குழி நிலம் தானமாக வழங்கியுள்ளார். இந்நிலத்தின் எல்லைகளும், கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன.இவ்வாறு தியாகராஜன் கூறினார்.
நன்றி: தினமலர்
…