ஸ்ரீவில்லிபுத்தூர் – வரலாறு

ஸ்ரீவில்லிபுத்தூர், வில்லி என்ற மன்னன்
ஆண்டதால் வில்லிபுத்தூர் என்றும், ஆண்டாள் பிறந்த
ஊராதலால், ‘ஸ்ரீ’ என்னும் திருநாமத்தோடு ஸ்ரீவில்லிபுத்தூர்
என்றும் அழைக்கப்படுவதாக, பள்ளி நாட்களில் படித்திருக்கிறேன்.
ஆனால் எனக்குத் தெரியாத விஷயங்களை சமீபத்தில் நாளிதழில்
படித்தேன்.


மதுரையைக் கைப்பற்றிய கான்சாகிப் என்ற மருதநாயகம்,
ஆங்கிலேயருக்கு வரி கொடுக்க மறுத்த ‘நெற்கட்டுச் செவ்வல்’
பாளையக்காரர் பூலித்தேவரை வெல்ல, ஸ்ரீவில்லிபுத்தூரில்
முகாமிட்டார். 1756 மே 6 -ல் நடந்த போரில் அவரை வெல்ல
இயலாமல், ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டையைக் கைப்பற்றினார்.
பின், அதை தரைமட்டமாக்கினார். இப்போது எந்தத் தடயமும்
இல்லாத அந்த இடம் ‘கோட்டைத்தலைவாசல்’
என்றழைக்கப்படுகிறது.

(அந்த இடம் முழுவதும் இப்போது
வீடுகளாகி, கோட்டைத்தலைவாசல் தெருவாக மாறிவிட்டது.
இந்தத் தெருவில்தான் நாங்கள் 18 வருடங்கள் இருந்தோம். எனது
பள்ளி வாழ்க்கை முழுவதும் இங்குதான் கழிந்தது. ஆனால் அந்தத்
தெருவிற்கான வரலாறு இப்போதுதான் தெரிந்தது.)
மதுரைக்கும் நெல்லைக்கும் நடுவில் ஸ்ரீவில்லிபுத்தூர்
கோட்டை இருந்ததால், ஆங்கிலேயர் ஆட்சியில் ‘நடுமண்டலம்’
என்றழைக்கப்பட்டது. ஆங்கிலேயரின் ராணுவ தளவாடமாகவும்
இருந்தது.


ஸ்ரீவில்லிபுத்தூர் பெயர் காரணத்திற்கு புராணங்கள்
உண்டு. சாபத்திற்கு ஆளான வில்லி, கந்தன் என்ற இரு
முனிவர்கள், வேடர்களாக பிறந்து வளர்ந்தனர். ஒருநாள்
கந்தனை புலி அடித்துக் கொன்றது.

சகோதரரைத் தேடி வில்லி
அலைந்தார். அன்றிரவு அவரது கனவில் கந்தன் தோன்றி, தான்
இறந்த செய்தியைத் தெரிவித்தார்.பின், கந்தன் இறந்த இடத்தை
சுத்தம் செய்து ஒரு நகரமாக மாற்றியதுதான், ஸ்ரீவில்லிபுத்தூர்
என்கின்றனர்.
ஆண்டாள் கோயில் கி.பி. 788ல் கட்டப்பட்டது. இங்குள்ள
நரசிம்மர் சன்னதி, கல்வெட்டுகளில் ஒன்றான, சோழனின்
தலைகொண்ட வீரபாண்டியன் (கி.பி.946 -966 ) கல்வெட்டில்,
இக்கோயில் ‘ஜலசயநாட்டுக் கிடந்தருளின பரமசுவாமி கோயில்’
என்றழைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சோழமன்னன் முதலாம் குலோத்துங்கன் (கி.பி.1070 –
1120 ) ஆட்சியில் இந்த ஊர், ‘விக்கிரமசோழ சதுர்வேதி
மங்கலம்’ என்றழைக்கப்பட்டது. பிற்கால பாண்டியர்
கல்வெட்டில், இக்கோயில் வடபெருங்கோயில் பள்ளி
கொண்டருளிய பெருமாள் கோயிலாக இருந்தது.

பின்,
கி.பி.13 ம் நூற்றாண்டில் இந்த ஊர், ‘பிரம்மதேய குலசேகர
சதுர்வேதி மங்கலம்’ என்ற பெரிய நகரமாக பிற்கால
பாண்டியர்களால் விரிவுபடுத்தப்பட்டது. கோயிலைச் சுற்றி
கோட்டைச்சுவர் கட்ட ஸ்ரீவல்லபபாண்டியன் பொற்கிழி வழங்கி
உள்ளார்.
புனர்வேலி என்ற ஊரைச் சேர்ந்த சங்கரன்முறி அருளக்கி
என்பவர் பாராங்குசபுத்தூர் குளத்தை சீர்படுத்தி,  வடக்குப் பகுதி
மதகை புதுப்பித்ததாக இங்கு ஆய்வு செய்த தொல்லியல்
நிபுணர்கள் கண்டுபிடித்து உள்ளனர். இந்த மதகை இப்போதும்
ஸ்ரீவில்லிபுத்தூர் குளத்தில் காணலாம்.
ஆண்டாள் கோயில் பல காலகட்டங்களில், பலரால்
புதுப்பிக்கப்பட்டு, விரிவுபடுத்தப்பட்டது. மதுரையை ஆண்ட
திருமலைநாயக்கர், குற்றாலத்திற்கு செல்லும் வழியில், இங்கு
தங்குவதற்கு ஒரு மாளிகை கட்டினார். பின்னர் அந்தக்கட்டடம்
கோர்ட் அலுவலமாக இருந்தது. தற்போது அதை நினைவுச்
சின்னமாக்க முயன்று வருகின்றனர்.

இக்கோயிலின் சிறப்பம்சமான 192 அடி உயர
ராஜகோபுரம் கி.பி.17ம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. தமிழக
அரசின் முத்திரை சின்னமாக இருப்பதும் இக்கோபுரம்தான்.
புராணம், வரலாறுகளைத் தாங்கி நிற்கும் ஸ்ரீவில்லிபுத்தூர்,
தமிழகத்தின் கிரீடத்தில் வைரமாக ஜொலிக்கிறது.

thanks : ஜிஜி

This entry was posted in வரலாறு and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *