பொன்னியின் செல்வன்-23

பொன்னியின் செல்வன்பாகம் -1

அத்தியாயம் 23

அமுதனின் அன்னை

வேளக்கார வீரர் படை பெரிய கடைவீதியின் வழியாகப் போயிற்று. படையின் கடைசியில் சென்ற சில வீரர்கள் கடைத்தெருவில் சில திருவிளையாடல்களைப் புரிந்தார்கள். ஒருவன் ஒரு பட்சணக் கடையில் புகுந்து ஒரு கூடை நிறைய அதிரசத்தை எடுத்துக் கொண்டு வந்து மற்ற வீரர்களுக்கு விநியோகித்தான்.பிறகு வெறும் கூடையைக் கடைக்காரனுடைய தலையிலே கவிழ்த்த போது, வீரர்களும் வீதியில் சென்றவர்களும் ‘ஹஹ்ஹஹ்ஹா’ என்று இரைந்து சிரித்தார்கள். இன்னொரு வீரன் வழியில் எதிர்ப்பட்ட ஒரு மூதாட்டியின் கையிலிருந்த பூக்கூடையைப் பிடுங்கினான். பூவையெல்லாம் வாரி இறைத்துக் கொண்டே “பூமாரி பொழிகிறதடா!” என்றான். அவன் வாரி வீசிய பூக்களைப் பிடிக்க முயன்ற வீரர்கள் குதித்தும் சிரித்தும் கொம்மாளமடித்தார்கள். எதிரில் வந்த ஒரு மாட்டு வண்டியை இன்னொரு வீரன் நிறுத்தி, மாட்டை வண்டியிலிருந்து பூட்டு அவிழ்த்து விரட்டி அடித்தான். மாடு மிரண்டு மக்கள் கூட்டத்திடையே புகுந்து சிலரைத் தள்ளிக் கொண்டு ஓடியது; மீண்டும் ஒரே கோலாகலச் சிரிப்புத்தான்!

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த வந்தியத்தேவன், “ஆகா! பழுவேட்டரையரின் வீரர்களைப் போல் இவர்களும் விளையாடுகிறார்கள். இவர்களுடைய விளையாட்டு மற்றவர்களுக்கு வினையாக இருக்கிறது. நல்லவேளை, இவர்களுடைய பார்வை நம்மீது விழாமல் ஒதுங்கி நின்றோம். இல்லாவிடில் ஒரு சண்டை ஏற்பட்டிருக்கும். வந்த காரியம் கெட்டுப் போயிருக்கும்” என்று எண்ணிக் கொண்டான்.

ஆனால் ஒரே ஒரு வித்தியாசமும் அவனுக்குப் புலனாயிற்று. வேளக்காரப் படை வீரர்களின் விளையாடல்களை இங்குள்ள ஜனங்கள் அவ்வளவாக வெறுக்கவில்லை. அவர்களுடைய கொம்மாளத்தில் ஜனங்களும் சேர்ந்து சிரித்துக் குதூகலித்தார்கள்! இதைப் பற்றிக் கேட்கலாம் என்று திரும்பிப் பார்த்தபோது பூக்குடலைகளுடன் நின்ற சிறுவனை வந்தியத்தேவன் காணவில்லை. கூட்டத்திலும் கோலாகலத்திலும் அந்த வாலிபன் எங்கேயோ போய் விட்டான். ஒருவேளை அவனுடைய வேலையைப் பார்க்கப் போயிருக்கக்கூடும்.

வேளக்காரப் படை மாலையில் கோட்டையிலிருந்து வெளியேறிய பிறகு மற்ற யாரையும் உள்ளே விடுவதில்லையென்று வந்தியத்தேவன் அறிந்து கொண்டான். இரவு பகல் எந்த நேரத்திலும் கோட்டைக்குள் பிரவேசிக்கும் உரிமை பெற்றவர்கள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், அமைச்சர்களும், தண்டநாயகர்களுந்தான். பழுவேட்டரையர்களின் குடும்பத்தாருக்கும் அவ்வுரிமை உண்டு என்று வந்தியத்தேவன் தெரிந்து கொண்டான். எனவே, இராத்திரியே கோட்டைக்குள் போக வேண்டும் என்ற உத்தேசம் அவனுக்கு மாறி விட்டது. தன்னிடமிருந்த இலச்சினை மோதிரத்தைக் காட்டிச் சோதனை செய்ய வந்தியத்தேவன் விரும்பவில்லை. அதை விட இரவு கோட்டைக்கு வெளியிலேயே தங்கி நகரைச் சுற்றிப் பார்த்து விட்டு நாளை உதயத்துக்குப் பிறகு கோட்டைக்குள் செல்வதே நல்லது. இராத்திரியில் அப்படியே கோட்டைக்குள் பிரவேசித்தாலும் அரசரைத் தரிசித்து ஓலை கொடுப்பது இயலாத காரியமேயல்லவா?

கோட்டை மதிலைச் சுற்றிலும் இருந்த வீதிகளின் வழியாக வந்தியத்தேவன் வேடிக்கை பார்த்துக் கொண்டே மெதுவாகச் சென்றான். அன்று பல காத தூரம் பிரயாணம் செய்திருந்த அவனுடைய குதிரை மிகக் களைத்திருந்தது. சீக்கிரத்தில் அதற்கு ஓய்வு கொடுக்க வேண்டியதுதான். இல்லாவிடில் நாளைக்கு அவசியம் ஏற்படும் போது இக்குதிரையினால் பயனில்லாமல் போய் விடும்! வசதியாகத் தங்குவதற்கு ஓரிடம் விரைவில் கண்டுபிடித்தாக வேண்டும்! தஞ்சைபுரி அப்போது புதிதாகப் பல்கிப் பெருகிப் பரந்து வளர்ந்து கொண்டிருந்த நகரம். அதிலும் அப்போது மாலை நேரம்; நூற்றுக்கணக்கான வீதி விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளிவீசத் தொடங்கியிருந்தன.

வீதிகளெல்லாம் ‘ஜே, ஜே’ என்று ஒரே ஜனக் கூட்டம். வெளியூர்களிலிருந்து பல அலுவல்களின் நிமித்தமாக வந்தவர்கள் அங்குமிங்கும் சென்று கொண்டிருந்தார்கள். அவர்களில் சோழ நாட்டுப் பட்டணங்களிலிருந்தும் கிராமங்களிலிருந்தும் வந்தவர்களும் இருந்தார்கள். புதிதாக சோழ சாம்ராஜ்யத்துக்கு உட்பட்டிருந்த நாடுகளிலிருந்து வந்தவர்களும் காணப்பட்டார்கள். பொருணை நதியிலிருந்து பாலாற்றங்கரை வரையிலும் கீழைக் கடற்கரையிலிருந்து மேற்குக் கடற்கரை வரையிலும் பரந்திருந்த தேசங்களிலிருந்து தலைநகருக்குப் பலர் வந்திருந்தார்கள். விந்திய மலைக்கு வடக்கேயிருந்து வந்தவர்களும் கடல் கடந்த நாடுகளிலிருந்து வந்தவர்களுங்கூடச் சிலர் அம்மாநகரின் வீதிகளில் ஆங்காங்கே தோன்றினார்கள்.

ஆப்பம், அதிரசம் முதலிய தின்பண்டங்கள் விற்ற கடைகளில் மக்கள் ஈ மொய்ப்பது போல் மொய்த்து, அப்பண்டங்களை வாங்கிக் கொண்டிருந்தார்கள். வாழைப் பழங்களும் வேறு பலவிதக் கனிகளும் மலை மலையாகக் குவிந்து கிடந்தன. பூக் கடைகளைப் பற்றியோ சொல்ல வேண்டியதில்லை. முல்லையும் மல்லிகையும் திருஆத்தியும் செண்பகமும் புஷ்பக் குன்றுகளைப் போல் காட்சி தந்தன. அந்த மலர்க் குன்றுகளைச் சுற்றிப் பெண்மணிகள் வண்டுகளைப் போல் ரீங்காரம் செய்து கொண்டு மொய்த்தார்கள்.

புஷ்பக் கடைகளினருகில் சென்றதும் வந்தியத்தேவன் அந்தப் பூக்கார வாலிபனை நினைத்துக் கொண்டான். அவனை மறுபடியும் பார்க்கக்கூடுமானால் எவ்வளவு சௌகரியமாயிருக்கும்? இந்த நகரில் வசதியாகத் தங்குவதற்கு ஓரிடம் அவனைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாமல்லவா?… இப்படி எண்ணியபோதே சற்றுத் தூரத்தில் அந்த வாலிபன் வந்து கொண்டிருப்பதை வந்தியத்தேவன் கண்டான். குதிரையிலிருந்து இறங்கி அவனை அணுகினான்.

“தம்பி! பூக்குடலைகளில் ஒன்றையும் காணோமே” பூவெல்லாம் எங்கே? விற்றாகிவிட்டதா?” என்றான்.

“விற்பதற்காக நான் பூக் கொண்டு வரவில்லை. கோயில் பூஜைக்காகப் பூக் கொண்டு வந்தேன்; பூவைக் கொடுத்தாகி விட்டது; வீட்டுக்குத் திரும்பிப் போகிறேன்.”

“எந்தக் கோயிலுக்கு நீ இந்தப் புஷ்பக் கைங்கரியம் செய்கிறாய்?”

“தளிக்குளத்தார் ஆலயம் என்று கேட்டதுண்டா?”

“ஓகோ! தஞ்சைத் தளிக்குளத்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அந்தக் கோவில் தான் போலிருக்கிறது பெரிய கோவிலா அது?”

“இல்லை; சிறிய கோவில்தான் கொஞ்சகாலமாக இத்தஞ்சையில் துர்க்கையம்மன் கோவிலுக்குத்தான் மகிமை அதிகம். அங்கேதான் பூஜை, பொங்கல், பலி திருவிழா ஆர்ப்பாட்டங்கள் அதிகம். அரச குடும்பத்தாரும் பழுவேட்டரையர்களும் துர்க்கை அம்மன் கோவிலுக்குத்தான் அதிகமாகப் போகிறார்கள். தளிக்குளத்தார் கோவிலுக்கு அவ்வளவு மகிமை இல்லை; தரிசனம் செய்ய ஜனங்கள் அவ்வளவாக வருவதில்லை…”

“நீ இந்தப் புஷ்பக் கைங்கரியம் செய்து வருகிறாயே? இதற்காக ஏதேனும் சன்மானம் உண்டா?”

“எங்கள் குடும்பத்துக்கு இதற்காக மானியம் இருக்கிறது. என் பாட்டனார் காலத்திலிருந்து கண்டராதித்த சக்கரவர்த்தி விட்ட நிவந்தம் உண்டு. தற்சமயம் நானும் என் தாயாரும் இந்தக் கைங்கரியத்தைச் செய்து வருகிறோம்.”

“தளிக்குளத்தார் கோயில் செங்கல் திருப்பணியா? அல்லது கருங்கல் பணி செய்திருக்கிறார்களா?” என்று வல்லவரையன் கேட்டான்.

அவன் வருகின்ற வழியில் பல செங்கல் கோயில்களுக்குக் கருங்கல் திருப்பணி நடந்து கொண்டிருப்பதைப் பார்த்திருந்தபடியால் இவ்விதம் கேட்டான்.

“இப்போது செங்கல் கோயில்தான்; கருங்கல் திருப்பணி விரைவில் தொடங்கும் என்று கேள்வி. இந்தத் திருப்பணியை உடனே நடத்த வேண்டும் என்று பழையாறைப் பெரிய பிராட்டியார் விரும்புகிறாராம் ஆனால்..” என்று அந்த வாலிபன் தயங்கி நிறுத்தினான்.

“ஆனால் என்ன?..”

“பராபரியாகக் கேள்விப்பட்டதையெல்லாம் சொல்வதில் என்ன பயன்? பகலில் பக்கம் பார்த்துப் பேசு, இரவில் அதுவும் பேசாதே என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். இதுவோ நாற்சந்தியும் கூடும் இடம்; நம்மைச் சுற்றிலும் ஜனங்கள்…”

“இந்த மாதிரி இடத்திலே நின்றுதான் தைரியமாக எந்த ரகசியமும் பேசலாம். இந்தப் பெருங்கூட்டத்திலும் இரைச்சலிலும் நம்முடைய பேச்சு யார் காதிலும் விழாது.”

“பேசுவதற்கு இரகசியம் என்ன இருக்கிறது?” என்றான் அந்த வாலிபன், வந்தியத்தேவனைக் கொஞ்சம் சந்தேகத்துடன் பார்த்து.

ஆகா! இந்தப் பிள்ளை நல்ல புத்திசாலி! இவனுடன் சிநேகம் செய்து கொள்வதில் லாபம் உண்டு! பல விஷயங்களை அறியலாம்! ஆனால் இவன் மனத்தில் வீண் சந்தேகத்தை உண்டாக்கக் கூடாது – இவ்விதம் வந்தியத்தேவன் எண்ணி, “ஆமாம்; இரகசியம் என்ன இருக்கிறது? ஒன்றுமில்லைதான். போனால் போகட்டும், தம்பி! இரவு எங்கேயாவது நான் நிம்மதியாகத் தூங்க வேண்டும். வெகு தூரம் பிரயாணம் செய்து மிகவும் களைப்படைந்திருக்கிறேன். எங்கே தங்கலாம்? ஒரு நல்ல விடுதிக்கு வழிகாட்டி எனக்கு உதவி செய்ய முடியுமா?” என்று கேட்டான்.

“இந்த நகரில் தங்குவதற்கு இடங்களுக்கு என்ன குறைவு? சத்திரங்கள் எத்தனையோ இருக்கின்றன; அயல்நாடுகளிலிருந்து வருகிறவர்களுக்கென்று ஏற்பட்ட ராஜாங்க விடுதிகளும் இருக்கின்றன. ஆனால், உங்களுக்கு இஷ்டமாயிருந்தால்…”

“தம்பி! உன் பெயர் என்ன?” என்று வந்தியத்தேவன் கேட்டான்.

“அமுதன்; சேந்தன் அமுதன்.”

“அடடா! எவ்வளவு நல்ல பெயர்? கேட்கும்போதே என் நாவில் அமுது ஊறுகிறதே… எனக்கு இஷ்டமாயிருந்தால் உன்னுடைய வீட்டுக்கு வந்து தங்கலாம் என்றுதானே நீ சொல்லத் தொடங்கினாய்?”

“ஆமாம், அது எப்படி உங்களுக்குத் தெரிந்தது?”

“என்னிடம் மந்திர வித்தை இருக்கிறது; அதனால் தெரிந்து கொண்டேன் உன் வீடு எங்கே இருக்கிறது?”

“நகர எல்லையைத் தாண்டிக் கூப்பிடு தூரத்தில் எங்கள் பூந்தோட்டம் இருக்கிறது; தோட்டத்துக்குள்ளே எங்கள் வீடும் இருக்கிறது” என்றான் அமுதன்.

“ஆகா! அப்படியானால் உன் வீட்டுக்கு நான் வந்தே தீருவேன். இந்தப் பட்டணத்துச் சந்தடியில் என்னால் இன்றிரவைக் கழிக்க முடியாது. மேலும் உன்னைப் போன்ற உத்தமப் புதல்வனைப் பெற்ற உத்தமியைத் தரிசிக்க விரும்புகிறேன்.”

“என்னைப் பெற்ற அன்னை உத்தமிதான்; ஆனால் துர்ப்பாக்கியசாலி…”

“அடாடா! ஏன் அவ்வாறு சொல்கிறாய்”

“ஒருவேளை உன் தந்தை…”

“என் தந்தை இறந்துதான் போனார்; ஆனால் அது மட்டுமில்லை என் தாய் பிறவியிலேயே துர்பாக்கியசாலி. பார்த்தால் தெரிந்து கொள்வீர்கள் வாருங்கள் போகலாம்.”

அரை நாழிகை நேரம் நடந்து அவர்கள் நகர்ப்புறத்துக்கு அப்பாலிருந்த பூந்தோட்டத்துக்கு வந்து சேர்ந்தார்கள். இரவில் மலரும் பூக்களின் இனிய மணம் வந்தியத்தேவனுக்கு அபூர்வ சுகமயக்கத்தை ஊண்டாக்கியது. நகரத்தின் வீதிகளில் எழுந்த கோலாகல இரைச்சலும் சந்தடியும் அங்கே அவ்வளவாகக் கேட்கவில்லை. பூந்தோட்டத்தின் மத்தியில் ஓட்டு வீடு ஒன்று இருந்தது. பக்கத்தில் இரு குடிசைகள் இருந்தன.தோட்ட வேலையில் உதவி செய்த இரு குடும்பத்தார் அக்குடிசைகளில் இருந்தார்கள். அவர்களில் ஒருவனை அமுதன் அழைத்து, வந்தியத்தேவனுடைய குதிரைக்குத் தீனி வைத்து மரத்தடியில் கட்டி வைக்கும்படி கூறினான்.

பிறகு, வீட்டுக்குள் அழைத்துச் சென்றான். அமுதனுடைய தாயாரைப் பார்த்ததும் வந்தியத்தேவனுக்கு அவளுடைய துர்ப்பாக்கியம் இத்தகையது என்று தெரிந்து விட்டது. அந்த மூதாட்டி பேசும் சக்தியற்ற ஊமை, காதும் கேளாது என்று தெரிந்தது. ஆனால் அந்த மாதரசியின் முகத்தில் கருணையும் அன்பும் நிறைந்து ததும்பியதை வந்தியத்தேவன் கண்டான். கூரிய அறிவின் ஒளியும் அம்முகத்திலிருந்து வீசியது. பொதுவாக, ஏதாவது ஒரு அங்கத்தில் ஊனமுற்றவர்கள் மற்றபடி சிறந்த அறிவுக் கூர்மையுள்ளவர்களாக விளங்குவது சிருஷ்டி விசித்திரங்களில் ஒன்று அல்லவா?

அமுதன் சில சமிக்ஞைகள் செய்ததும் அந்த மூதாட்டி வந்திருப்பவன் அயல் தேசத்திலிருந்து வந்த விருந்தாளி என்று தெரிந்து கொண்டாள். முகபாவத்தினாலேயே தன்னுடைய பரிவையும் வரவேற்பையும் தெரிவித்தாள். சற்று நேரத்துக்கெல்லாம் இலை போட்டு அந்த அம்மாள் உணவு பரிமாறினாள். முதலில் இடியாப்பமும் இனிப்பான தேங்காய்ப் பாலும் வந்தன. அந்த மாதிரி இனிய பலகாரத்தை வந்தியத்தேவன் தன் வாழ்நாளில் அருந்தியதில்லை. பத்துப் பன்னிரண்டு இடியாப்பமும், அரைப்படி தேங்காய்ப் பாலும் சாப்பிட்டான். பிறகு புளிக்கறியும் சோளமாப் பணியாரமும் வந்தன; அவற்றையும் ஒரு கை பார்த்தான். அப்படியும் அவன் பசி அடங்கவில்லை; கடைசியாக காற்படி அரிசிச் சோறும் அரைப்படி தயிரும் நுங்கினான்! பிறகுதான் அவன் இலையிலிருந்து எழுந்தான்.

சாப்பிடும்போதே சில விஷயங்களை அமுதனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டான். தஞ்சைக் கோட்டைக்குள்ளே அப்போது சுந்தர சோழ சக்கரவர்த்தியையும் அவருடைய அரண்மனைப் பரிவாரங்களையும் தவிர, இன்னும் முக்கியமாக யார் யார் இருக்கிறார்கள் என்று விசாரித்தான். பெரிய பழுவேட்டரையர், சின்ன பழுவேட்டரையர் இவர்களின் மாளிகைகளும் பரிவாரங்களும் அங்கு இருந்தன. தன பொக்கிஷம், தானிய பண்டாரம் இரண்டும் கோட்டைக்குள் இருந்தபடியால் அவற்றைப் பரிபாலிக்கும் அதிகாரிகளும் கணக்கர்களும் இருந்தார்கள். சுந்தர சோழரின் அந்தரங்க நம்பிக்கைக்கும் அபிமானத்துக்கும் பாத்திரரான அநிருத்த பிரம்மராயர் என்னும் அமைச்சரும், திருமந்திர ஓலை நாயகரும் கோட்டைக்குள்ளேதான் வசித்தார்கள். மற்றும் சின்னப் பழுவேட்டரையரின் தலைமையில் தஞ்சைக் கோட்டையைக் காவல் புரிந்த வீரர்களும் அவர்களுடைய குடும்பத்தாரும் அங்கேயே தங்கியிருந்தார்கள். பொன், வெள்ளி நகை வியாபாரிகளும், நவரத்தின வியாபாரிகளும், பொன்னாசாரிகளும் கோட்டைக்குள் இடம் அளிக்கப்பட்டிருந்தார்கள். பெரிய பழுவேட்டரையரின் கீழ் வரி விதிக்கும் வேலை பார்த்த நூற்றுக்கணக்கான அலுவலர்கள் இருந்தனர். துர்க்கையம்மன் கோயில், கோட்டைக்குள்ளேதான் ஒரு மூலையில் இருந்தது. கோவில் பூசாரிகளும் பணிவிடையாளரும் கணிகையரும் கோவிலுக்கு அருகில் குடியிருந்தார்கள்.

இதையெல்லாம் தெரிந்து கொண்ட பிறகு, “அமைச்சர்கள் அனைவரும் தற்சமயம் கோட்டையில் இருக்கிறார்களா?” என்று வந்தியத்தேவன் கேட்டான்.

“எல்லாரும் எப்படி இருப்பார்கள்? பற்பல காரியமாக வெளியிலே போய்க் கொண்டும் வந்து கொண்டும் தான் இருப்பார்கள்.அநிருத்த பிரமராயர் சில காலமாகவே நகரில் இல்லை. அவர் சேர நாடு சென்றிருப்பதாகக் கேள்வி. பெரிய பழுவேட்டரையர் நாலு தினங்களுக்கு முன்னால் வெளியே சென்றார். கொள்ளிடத்துக்கு வடக்கே நடுநாட்டுக்குச் சென்றதாகக் கேள்வி.”

“போனவர் ஒருவேளை திரும்பி வந்திருக்கலாம் அல்லவா? உனக்குத் தெரியாதாக்கும்!”

“இன்று சாயங்காலம் பழுவூர் இளையராணியின் பல்லக்கு வந்தது. கோட்டை வாசலில் நானே பார்த்தேன்; ஆனால் பழுவேட்டரையர் வரவில்லை. ஒருவேளை வழியில் எங்கேனும் தங்கி விட்டு நாளை வரக்கூடும்.”

“தம்பி! இளவரசர் மதுராந்தகத் தேவரும் கோட்டைக்குள்ளேதானே தங்கியிருக்கிறார்?”

“ஆமாம்; பழுவேட்டரையர் அரண்மனைக்குப் பக்கத்தில் மதுராந்தகரின் மாளிகை இருக்கிறது. சின்னப் பழுவேட்டரையரின் திருமகளை மணம் புரிந்த மருமகர் அல்லவா?”

“ஓஹோ! அதுவும் அப்படியா? எனக்கு இது வரையில் தெரியாதே?”

“ரொம்பப் பேருக்குத் தெரியாதுதான் சக்கரவர்த்தியின் தேக அசௌகர்யத்தை முன்னிட்டுத் திருமணத்தைக் கோலாகலமாக நடத்தவில்லை.”

“நல்லது; மதுராந்தகத்தேவர் இப்போது கோட்டைக்குள்ளேதானே இருக்கிறார்?”

“கோட்டைக்குள்ளேதான் இருக்க வேண்டும்; ஆனால் மதுராந்தகத் தேவர் சாதாரணமாக வெளியில் வருவதில்லை. மக்கள் அவரைப் பார்க்க முடிகிறதும் இல்லை. சிவபக்தியில் ஈடுபட்டுப் பெரும்பாலும் யோகத்திலும் தியானத்திலும் பூஜையிலும் காலம் கழிப்பதாகக் கேள்வி.”

“ஆனாலும் இத்தனை நாளைக்குப் பிறகு கலியாணம் செய்து கொண்டிருக்கிறாரே?”

“ஆமாம்; அது கொஞ்சம் வியப்பான காரியந்தான். கலியாணத்துக்குப் பிறகு மாப்பிள்ளைத் தேவரின் மனமே மாறிப் போயிருப்பதாயும் சொல்கிறார்கள்; நமக்கென்ன அதைப் பற்றி? பெரிய இடத்துப் பேச்சுப் பேசாமலிருப்பதே நல்லது…”

சேந்தன் அமுதனிடம் இன்னும் பல விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளும் ஆவல் வந்தியத்தேவனுக்கு இருந்தது. ஆனால் அதிகமாக ஏதேனும் கேட்டுச் சந்தேகத்தைக் கிளப்பி விட அவன் விரும்பவில்லை. இத்தகைய சாதுப்பிள்ளையின் சிநேகம் தனக்குப் பேருதவியாயிருக்கும். தஞ்சையில் தங்க இம்மாதிரி ஒரு வீடு அகப்பட்டதும் தன்னுடைய அதிர்ஷ்டந்தான். அதையெல்லாம் கெடுத்துக் கொள்வானேன்? மேலும், நீண்ட பிரயாணக் களைப்புடன் முதல்நாள் இரவு கண் விழித்ததும் சேர்ந்து கொண்டது. கண்ணைச் சுழற்றிக் கொண்டு தூக்கம் வந்தது. சேந்தன் அமுதன் அவனுடைய நிலையை அறிந்து விரைவில் படுக்கை போட்டுக் கொடுத்தான்.

தூக்க மயக்கத்தில் கடைசியாக வந்தியத்தேவனுடைய மனத்தில் பழுவூர் இளையராணியின் திருமுகம் வந்தது. அப்பப்பா! என்ன அழகு! என்ன ஜொலிப்பு! அந்த மாயமோகன வடிவத்தைத் திடீரென்று அவன் பார்த்ததும் அடியோடு செயல் இழந்து கண் கொட்டாமல் திகைத்து நின்றது இன்னொரு அனுபவத்தை அவனுக்கு நினைவூட்டியது.

சிறுபிராயத்தில் ஒரு சமயம் காட்டு வழியாய்ப் போய்க் கொண்டிருக்கையில் திடீரென்று படமெடுத்து ஆடிய பாம்பு ஒன்று அவன் முன் எதிர்பட்டது. அதன் அழகே அழகு! கவர்ச்சியே கவர்ச்சி! வந்தியத்தேவனால் பாம்பின் படத்திலிருந்து கண்ணை அகற்றவே முடியவில்லை; கண் கொட்டவும் முடியவில்லை. பார்த்தது பார்த்தபடி நின்றான்; பாம்பும் ஆடிக் கொண்டேயிருந்தது! பாம்பு ஆடிய போது அதற்கிணங்க, இவன் உடம்பும் ஆடியது – இதன் முடிவு என்ன ஆகியிருக்குமோ தெரியாது. திடீரென்று ஒரு கீரிப்பிள்ளை வந்து பாம்பின் மீது பாய்ந்தது. இரண்டும் துவந்த யுத்தம் தொடங்கின. அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு வந்தியத்தேவன் ஒரே ஓட்டமாக ஓடி வந்து விட்டான்!….

சீச்சீ! என்ன உதாரணம்! இந்தப் புவன மோகினியான சுந்தராங்கியைப் படமெடுத்த பாம்புக்கா ஒப்பிடுவது? இவளுடைய பால்வடியும் முகத்தை ஒரு தடவை பார்த்தாலும் பசி தீர்ந்து விடுமே?… நாளைக்கு அவளை மறுபடி காணப்போகிறோமல்லவா! அவளுடைய குரலிலேதான் என்ன மதுரம்! இவள் ஓர் அபூர்வமான அழகிதான். ஆனால் குடந்தை சோதிடர் வீட்டிலும் அரிசிலாற்றங்கரையிலும் பார்த்த அந்த இன்னொரு பெண்?… அவளுடைய முகத்திலும் காந்தி ஒளி விட்டது! அழகு சுடர் விட்டது!… இரண்டு முகங்களும் சுந்தர முகங்களாயினும் அவற்றுக்குள் எத்தனை வேற்றுமை! அதில் கம்பீரமும் பெருந்தன்மையும்; இதில் மோகனமும் கவர்ச்சியும்!.. இப்படி அவன் உள்ளம் அந்த இரு மங்கையரின் முகங்களையும் ஒப்பிட்டுக் கொண்டிருந்தபோது, மற்றொரு மங்கை வந்து குறுக்கிட்டாள். சர்வாதிகாரக் கொடுங்கோல் அரசியான நித்திராதேவி வந்தியத்தேவனைப் பரிபூரணமாக ஆட்கொண்டாள்.

 

This entry was posted in பொன்னியின் செல்வன் and tagged , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *