புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே கண்டெடுக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் மூலம் தெய்வ வழிபாட்டிலும், கோவில்கள் மீதும் சோழமன்னர்கள் கொண்டிருந்த ஈடுபாட்டை பறைசாற்றுகிறது. தமிழகத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மாவட்டங்களில் ஒன்று புதுக்கோட்டை. இங்குள்ள குடவறை கோவில்கள், சமணர் படுக்கைகள், மூவர் கோவில்கள் போன்றவை இதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் மற்றும் அதை சுற்றியுள்ள சிற்றூர்களில் புதையுண்டு கிடக்கும் வரலாற்றுத் தகவல்களை வெளிக்கொணரும் விதமாக ஆராய்ச்சியாளர்கள் இன்றளவும் தொடர்ந்து அகழ்வாராய்ச்சிகள் மற்றும் கள ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்று புதுக்கோட்டை வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வு மையம் சார்பில், அதன் தலைவர் ராஜா முகம்மது, செயலாளர் ராஜேந்திரன் ஆகியோரும் மாவட்டத்தின் பல பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
குளத்தூர் தாலுகா விசலூர் மார்க்கபுரீஸ்வரர்(சிவன்) கோவில் வளாகத்தில் நடந்த இவர்களது கள ஆய்வின்போது கோவில் சுற்றுச்சுவரில் பதித்து வைக்கப்பட்டிருந்த 18 கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தமிழ் எழுத்துகள் அடங்கிய இந்த கல்வெட்டுகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சோழ மன்னர்கள் ஆட்சியின் மாட்சிமையை பறைசாற்றுகிறது. கி.பி., 9ம் நூற்றாண்டில் சோழ மன்னர்கள் ஆட்சியின்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் கருங்கல்லினால் ஆன கலைநயத்துடன் கூடிய பல கோவில்கள் எழுப்பப்பட்டதும், அவற்றில் ஒன்றுதான் விசலூர் மார்க்கபுரீஸ்வரர் கோவில் என்பதும் தெரியவந்துள்ளது.
விமானத்துடன் கூடிய கருவறை, அர்த்தமண்டபம், முன்மண்டபம், மஹாமண்டபம், ராஜகோபுரம், சுற்றுச்சுவர் அடங்கிய இந்த கோவில் முதலாம் பராந்தக சோழன் காலத்தில் கட்டப்பட்டுள்ளது.பழங்கால கட்டிடக்கலைக்கு இந்த கோவில் இன்றளவும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இங்கு அருள்பாலித்துவரும் சிவபெருமான், வாசுகீஸ்வரர் என குறிப்பிடப்பட்டுள்ளது. காலத்தால் முற்பட்ட இப்பெயர் நாளடைவில் மருவி மார்க்கபுரீஸ்வரர் என தற்போது அழைக்கப்படுகிறது.
இக்கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்டுள்ள நிலங்கள், அவற்றில் சாகுபடி செய்யப்படும் பயிர்கள், இதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து கோவிலுக்கு செய்ய வேண்டிய பூஜைகள், சித்திரை மாதத்தில் நடத்தவேண்டிய கோவில் திருவிழா போன்ற செய்திகள் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளது. சித்திரை திருவிழாவுக்காக விசலூரைச் சேர்ந்த அழியாதான் குடும்பத்தினர் தங்களுடைய நிலங்களின் ஒரு பகுதியை கோவிலுக்கு தானமாக வழங்கியுள்ளனர்.
இப்பகுதியில் தளபதியாக இருந்த ஆதித்தன் தென்கரை நாடான்வான் என்பவர் மன்னர் குலோத்துங்க சோழன் மற்றும் அவரது மனைவி சிலைகளை பிரதிஷ்டை செய்ததும், இவற்றை பராமரிப்பதற்காக நிலங்களை கொடையாக வழங்கியுள்ளதும் தெரியவந்துள்ளது. இவை தவிர மன்னர்கள், சிற்றரசர்கள், ஊரார் மற்றும் நிலக்கிழார்கள் இக்கோவிலுக்கு கொடையளித்துள்ள தகவல்களும் இடம்பெற்றுள்ளது.இதன்மூலம் தெய்வ வழிபாட்டிலும், கோவில்கள் மீதும் சோழமன்னர்கள் கொண்டிருந்த ஈடுபாட்டை நாம் அறியமுடிகிறது.
நன்றி : தினமலர்