உடுமலை அமராவதி அணை அருகே கல்லாபுரம் பகுதியில் கிடைத்த சுமார் 800 ஆண்டு பழமையான கல்வெட்டு மூலம் பல்வேறு தகவல்கள் தெரிய வந்துள்ளன.
கல்லாபுரத்தில் உள்ள வீதியொன்றில் கேட்பாரற்றுக் கிடந்த இந்தக் கல்வெட்டு குறித்து இந்த ஊரைச் சேர்ந்த ஜான்சன், கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சுந்தரத்துக்குத் தகவல் கொடுத்தார். சுந்தரத்தின் மூலம் கிடைத்த கல்வெட்டு தகவல்கள்:
கல்வெட்டுத் தூணின் மேற்புற சதுரப் பகுதியில் 5 வரிகளில் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. ஸ்வஸ்திஸ்ரீ எனும் மங்கலச் சொல்லுடன் துவங்குகிறது. சோழ அரசனான வீரராசேந்திரன் பெயரும், அவரது ஆட்சி ஆண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசனின் ஆட்சி ஆண்டு 11 என தமிழ்க் குறியீட்டு எண்களால் குறிக்கப்பட்டுள்ளது. வீரராசேந்திரன் கி.பி. 1207-1256 காலகட்டத்தில் 49 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளான். வட மற்றும் தென் கொங்கு பகுதிகளை இவன் ஆண்டதாகக் கல்வெட்டுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
சுமார் 800 ஆண்டுகள் பழமையான இக்கல்வெட்டுத் தூணை, கோவில் தேவதாசிப் பெண் ஒருவர் கொடையாக அளித்துள்ளார். அப்பெண் உடுமலை அருகே கடத்தூரைச் சேர்ந்த சொக்கன் வேம்பி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சோழர்கள் காலத்தில் கோயில்களில் தினசரி வழிபாடுகளின்போதும் விழாக்களின்போதும் இறைவழிபாட்டில் ஓர் அங்கமாக இசையும் ஆடலும் விளங்கி வந்தன. இதற்காக தேவரடியார்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். தளிச்சேரிப் பெண்டுகள் எனவும் தளிக்கூடப் பிள்ளைகள் எனவும் அழைக்கப்பட்ட இவர்கள், சமுதாயத்தில் செல்வாக்குடன் மதிப்பான நிலையில் வாழ்ந்தனர்.
தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய ராசராச சோழன், சோழநாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 400 தேவரடியார்களை வரவழைத்து, தஞ்சை கோவிலில் பணியில் அமர்த்தியதோடு அவர்களுக்காக 400 வீடுகள் ஒதுக்கித் தந்துள்ளான். பழங்காலக் கோயில் எதுவும் இல்லாத கல்லாபுரம் ஊரில், கல்வெட்டு பொறிக்கப்பட்ட தூண் எப்படி வந்தது, கடத்தூர் கோயிலைச் சேர்ந்ததா என்பது ஆய்வுக்கு உரியது.
அன்னூர் மன்னீசர் கோவிலில் உள்ள கி.பி. 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றில், அரசன கோனேரின்மை கொண்டான் கோயிலுக்குத் தேவதானமாக இராசாடி சோழநல்லூர் என்ற ஊரைக் கொடையாக அளித்து, அவ்வூர் வருவாய் முழுவதையும் கோயில் திருப்பணிகளுக்கும் கோயிலில் இறைப் பணி புரிந்த தேவரடியார், நட்டுவர், திருப்பதியம்பாடுவார் போன்றவர்களின் ஊதியத்துக்கும் செலவிட வேண்டும் என்று ஆணையிட்டுள்ள செய்தி கூறப்பட்டுள்ளது.
அன்னூர், கடத்தூர் ஆகிய இரு ஊர்களில் தேவரடியார்கள் கோயில் பணியில் இருந்துள்ளனர் என்பது தெளிவாகிறது.