மெட்ராஸ் ஐகோர்ட் வளாகத்தில் உள்ள பல்வேறு சிலைகளில் கம்பீரமாக இருப்பது மனு நீதி சோழ சிலையாகும். இந்த சிலை பின்னணியில் உள்ள வரலாறு வருமாறு:
மனு நீதிச்சோழன் அல்லது மனுநீதி கண்டசோழன் என்பவன் நீதி தவறாது ஆட்சி செய்தலுக்கு உதாரணமாக கூறப்படும் ஒரு சோழ மன்னன் ஆவான். வரலாற்றில் இவ்வாறு ஒரு மன்னன் இருந்ததற்கான சான்று கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.
எனினும் மிகப்பழமையான மனுநீதிச்சோழன் கதை பெரும்பாலான தமிழ் மக்களுக்கு தெரிந்த கதை யாகும்.இக்கதை பள்ளிப்பாடப் புத்தங்களிலும் இடம் பெற்றுள்ளது. மனுநீதிச்சோழனது மகன் ஒரு நாள் தேரேறி ஊர் சுற்றக் கிளம்பினான்.அவனை அறியாமல் தேரின் சக்கரங்கள் ஏறி ஒரு பசுவின் கன்று இறந்து விட்டது.
இதைக்கண்ட தாய்ப்பசு மன்னன் அவை சென்று ஆராய்ச்சி மணியை முட்டி அடித்தது. பசுவின் துயர் அறிந்த மன்னவன் தானும் தன் மகனை இழத்தலே தகும் என்று மந்திரியிடம் இளவரசனை தேரேற்றிக் கொல்ல உத்தரவிட்டான்.
மந்திரியோ மன்னர் குலத்துக்கு ஒரு தீங்கும் செய்ய மாட்டேன் என்று கூற மன்னனே தன் மகனை தேரேற்றிக்கொன்றான். சோழ நாட்டின் நீதி முறைக்கு எடுத்துக்காட்டாக மனுநீதிச்சோழன் பற்றிக்கண்ணகி குறிப்பிடுவதாகச் சிலப்பதிகாரத்தில் இந்த கதை வருகிறது.
இக்கதை தற்காலத்தில் முழுத் தமிழ் இனத்துக்கும் நீதி முறை சார்ந்த பெருமைக்கு அடையாளமாகப் பயன் பட்டு வருகிறது. சோழன் நீதி தவறாதவன் என்பதால் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுநீதிச்சோழன் சிலை நிறுவப்பட்டுள்ளது.
நன்றி : மலை மலர்