மனுநீதிச் சோழன் அல்லது மனுநீதி கண்ட சோழன் என்பவன் நீதி நெறி தவறாது ஆட்சி செய்தலுக்கு உதாரணமாக கூறப்படும் ஒரு சோழ மன்னன் எனக்கருதப்படுபவன். வரலாற்றில் இவ்வாறான மன்னன் ஒருவன் இருந்ததற்கான சான்றுகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. எனினும், தொன்மம் என்று கருதத்தக்க மனுநீதிச் சோழன் கதை பெரும்பாலான தமிழ் மக்களுக்குத் தெரிந்த கதையாகும். இக்கதை பள்ளிப் பாடப் புத்தகங்களிலும் இடம்பெற்றிருப்பதைக் காணமுடியும்.
இலக்கியக் குறிப்புக்கள் :
சோழ நாட்டின் நீதிமுறைக்கு எடுத்துக்காட்டாக மனுநீதிச் சோழன் பற்றிக் கண்ணகி குறிப்பிடுவதாகச் சிலப்பதிகாரத்தில் வருகிறது[1]. இக்காப்பியத்தில் வேறு சில இடங்களிலும் இக்கதை பற்றிய குறிப்புக்கள் வருகின்றன[2]. பதினெண் கீழ்க்கணக்கு நூலான பழமொழி நானூறு என்னும் நூலிலும் இக்கதை எடுத்துக்காட்டாகத் தரப்பட்டுள்ளது. சோழர் காலத்து நூலான சேக்கிழாரின் பெரியபுராணத்திலேயே மனுநீதிச் சோழன் கதை விரிவாகக் காணப்படுகிறது[4]. இவை தவிரச் சோழ மன்னர் பெருமை கூற எழுந்த இராசராசசோழன் உலா, விக்கிரமசோழன் உலா, குலோத்துங்கசோழன் உலா என்பவற்றிலும் இக்கதை வருகிறது.
முன்னர், சோழர் பெருமை கூறுவதற்காக மட்டும் பயன்பட்டுவந்த இக் கதை தற்காலத்தில் முழுத் தமிழ் இனத்தினதும் நீதி முறைசார்ந்த பெருமைக்கு அடையாளமாகப் பயன்பட்டுவருகிறது. சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுநீதிச் சோழன் சிலை இருப்பது இதற்கு நல்ல எடுத்துக்காட்டு ஆகும்.
கதை :
மனுநீதிச் சோழனது மகன், தேரேறி ஊர் சுற்றக் கிளம்பினான். அவனையே அறியாது அவன் சக்கரங்கள் ஏறி ஒரு ஆ கன்று இறந்து விட்டது. இதைக் கண்ட தாய்ப் பசு மன்னன் அவை சென்று ஆராய்ச்சி மணியை முட்டி அடித்தது. பசுவின் துயர் அறிந்த மன்னவன் தானும் தன் மகனை இழத்தலே தகும் என்று மந்திரியிடம் இளவரசனை தேரேற்றிக் கொல்ல பணித்தான். மந்திரியோ மன்னர் குலத்துக்கு ஒரு தீங்கும் செய்யேன் என்று கூற, மன்னனே தன் மகனை தேரேற்றிக் கொன்றான்.
மகாவம்சம் :
கிபி 5 ஆம் நூற்றாண்டுக்கும் 6 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் எழுதப்பட்டதாகக் கருதப்படும், இலங்கையின் வரலாறு கூறும் பாளி நூலான மகாவம்சம் கிமு 2 ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டில் இருந்து வந்து 44 ஆண்டுகள் இலங்கையை ஆண்ட தமிழ் மன்னனான எல்லாளன் மீது இக்கதையை ஏற்றிச் சொல்கிறது .
நன்றி : விக்கிபிடியா