சுரண்டை ஜமீன் கட்டாரி வெள்ளைதுரை:
சுரண்டை ஜமீன் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிரமமாகத்தான் அறியப்படுகிறது. ஆனால் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அது 320 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட, பல கிராமங்களை உள்ளடக்கிய ஒரு ஜமீன். தனி நபரால் வரி வசூல் செய்யப்பட்டு, ஆட்சி செய்யப்பட்டு, ஆங்கிலேய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசம். சுரண்டை ஜமீன் அதிக வனப்பகுதியைக் கொண்ட பகுதி. இந்த சுரண்டை ஜமீனுக்கு 700 ஆண்டு வரலாறு சொல்லப்படுகிறது. சுரண்டை ஜமீன் சொந்தக்காரர்கள் பாண்டியர்களின் வழித் தோன்றல்கள் என்றும் நாயக்கர் காலத்தில் சுரண்டை பாளையமாக மாறியது என்றும், பின்னர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அது ஜமீனாக மாறியது என்றும் சொல்லப்படுகிறது.
சுரண்டை ஊர் அமைப்பு :
இப்பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் திருநெல்வேலி மாவட்டம் வீரகேரளம்புதூர் தாலுகாவில் கீழ சுரண்டை,பங்களா சுரண்டை, மேல சுரண்டை என்ற மூன்று ஊர்களை கொண்டுள்ளது.இதன் ஜமீண்தார் கட்டாரி வெள்ளைதுரை என்ற வெள்ளை துரை பாண்டியன் :. இவர் ஆப்ப நாடு நாட்டிலிருந்து வந்த கொண்டையங்கோட்டை, மறக்குலத்தைச் சார்ந்தவர்கள். ஆதியில் இராமநாட்டைச் சேர்ந்த ஆப்ப நாட்டிலிருந்து பாண்டிய நாட்டிற்கு வந்து வாழத் தொடங்கினர். அவர்களில் ஒருவர் வெள்ளைதுரை பாண்டியன். இவரது ஏற்றமும், தோற்றமும் போற்றுவதற்குரியதாக இருந்தது.
ஜமீன் தோற்றம் :
சுரண்டை ஜமீன் 14 ம் நூற்றாண்டில் ஜமீன் தோன்றியது என திருநெல்வேலி சரித்திரம் எழுதிய கால்டுவெல் கூறுகிறார். பாண்டிய மன்னனே இம்மன்னவர்களை இந்த பகுதிக்கு திசைக்காவலானாக நியமித்ததாக வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பின்பு நாயக்கர் கால் ஆட்சி காலத்தில் இந்த பகுதி பாளையமாக மாற்றப்பட்டது. அப்போது இந்த மன்னரின் படைகள் மதுரை காவல் கோட்டத்தின் முக்கிய அரனாக விளங்கியதால் திருமலை மன்னர் இவருக்கு தன் கட்டாரியை வழங்கி கட்டாரியார் வெள்ளைத்தேவன் என்ற பட்டம் அளித்தார்.
வெள்ளை துரை பெயர்-விளக்கம்:
சுரண்டை ஜமிந்தார்களுக்கு வெள்ளைத்தேவர் (அ) வெள்ளைத்துரை அதே போல் ரானியர்களுக்கு வெள்ளச்சி (அ) வெள்ளச்சி நாச்சியார் என்று பெயர் வழக்கம் உள்ளது. வெள்ளை துரை பெயர் நெல்லை தாமிரபரனி உற்பத்தியாகும் பொதிகை மலை பகுதியில் இருந்து கடலில் கலக்கும் இடம் வரையில் உள்ள பகுதி வரை உள்ள மக்கள் வெள்ளையப்பன்,வெள்ளைச்சி போன்ற பெயர்கள் பாண்டியன் காலத்தில் இருந்து மறவர் குலத்தில் வழக்கத்தில் உள்ளது என ஆய்வாலர்கள் கூறுகிறார்கள்.
சுரண்டை ஜமீனில் ஜமீன் இருக்கும் காலத்தில் தனது ஆட்சி முடிந்தவுடன் யார் மன்னராக வர வேண்டும் என்று மன்னர் யாரை கூறுகின்றாரோ அவரே மன்னராக பொறுப்பேற்க முடியும். மன்னர் யாரை வாரிசாக நியமிக்கின்றாரோ, அவர்தான் மன்னராக வரமுடியும். மன்னராகத் தேர்ந்தெடுக்க்பட்டவருக்கு ஒரு பிராமணர்தான் முடிசூட்டுவார். மன்னராக பொறுப்பேற்றவுடன் அவர் சில கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். அதாவது இறந்த உடலை பார்க்க கூடாதென்றும், கண் தெரியாதவர்களைப் பார்க்கக் கூடாது என்றும் இருந்தது. மேலும் மன்னருக்கு உரியதான தண்டிகை, மேளா, பல்லக்கு இதை மன்னர் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்றும், மற்றவர் எவரும் பயன்படுத்தக்கூடாதென்றும் நடைமுறை இருந்தது.
சுரண்டை விடுதலைப்போர்:
ஆங்கிலேயர்களை எதிர்த்து பூலித்தேவர் போரிட்ட காலத்தில், நெல்கட்டுஞ் செவலுக்கு அருகில் உள்ள பாளையக்காரரான வெள்ளைத்துரை இவர் பூலித் தேவருக்கு மிகவும் உதவியாக இருந்தார்.இவர் பூலித்தேவருக்கு உதவியதால் ஆங்கிலேயர்கள் சுரண்டை மீதும் படையெடுத்துச் சென்றார்கள். ஆங்கிலேயப் படைகளால் வெள்ளையத்தேவரின் சுரண்டை கோட்டை முற்றுகை இடப்பட்டது. அந்த படையை மேஜர் ஹெரான் மற்றும் கேப்டன் வெல்லஷ் போன்ற பரங்கித் தளபதிகள் வழிநடத்திச் சென்றனர்.
1759ல் நெல்லையிலிருந்து வந்த அந்த இரண்டு தளபதிகளின் படைகளை பூலித்தேவன் எதிர்த்து நடத்திய போரை வரலாற்றாளர்கள் முக்கியனமான போர் என்று கூறுகின்றனர். பரங்கிப்படை அப்படி ஒரு தாக்குதலை அதுவரை கண்டதில்லை எனக் கூறப்படுகிறது. பரங்கிப்படை பூலித்தேவனின் தாக்குதல் முறையை கணிப்பதற்கு முன்பே பரங்கிப்படையில் பாதியை பூலித்தேவன் அழித்துவிட்டான். மேலும் அதில் ஐந்து முக்கிய பரங்கித்தளபதிகள் கொல்லப்பட்டனர். அதனால் வலிமையிழந்த பரங்கிப்படை பின் வாங்கியது.
இறுதிப் போர்:
1799ல் மீண்டும் பரங்கிப்படை சுரண்டை கோட்டையை கர்னல் ஜே.பானர்மேன் கீழ் பீரங்கிப்படையுடன் தாக்கியது. இம்முறை பரங்கிப்படை நெல்லை தவிர்த்து சென்னையிலிருந்தும் வந்ததால் சுரண்டை பானர்மேனால் கைப்பற்றப்பட்டது. மன்னர் சுளுவ வெள்ளை துரை கைதியாக்கப்பட்டார்.சுரண்டை ஆங்கிலேயரால் தகர்க்கப்பட்டது.
ஜமீண்களுடன் தொடர்பு:
சுரண்டை மன்னர்கள் தனது பகுதிகளில் முக்கிய நிகழ்ச்சிகளில் தவறாது கலந்து கொண்டனர். மேலும் அவர்கள் சிங்கம்பட்டி, சேத்தூர், சிவகிரி, கங்கைக் கொண்டான்,தலைவன் கோட்டை ஆகிய ஜமீனின் இல்ல விழாக்கள், அந்த பகுதி திருவிழாக்களிலும் ஜமீன்தார் கலந்துக் கொண்டனர். வடகரை ஜமீனுடன் நல்லுறவு வைத்திருந்தன.
முடிவுரை:
சுரண்டை பிற்காலத்தில் ஊற்றுமலை ஜமினுடன் இனைக்கபட்டுள்ளது. இன்றும் சிறப்புடன் திகழ்கிறது. இன்றும் இந்த ஜமீந்தார்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
நன்றி:விக்கிபீடியா