வியாசர் விருந்து

 

வியாசர் எழுதிய ‘மகாபாரதம்’ என்னும் காப்பியத்தை ‘வியாசர் விருந்து’ என்னும் பெயரால், எளிய தமிழ்நடையில் ராஜாஜி எழுதி, அந்த நூல் வெளியீட்டு விழா மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் ஆடி வீதியில் நடைபெற்றது.

அந்த விழாவிற்கு தேவர் திடீரென வந்தார். அப்போது ராஜாஜி பேசிக் கொண்டிருந்தார். ராஜாஜி பேசிக் கொண்டிருந்த கருத்து கை தட்ட வேண்டிய கருத்தல்ல. சாதாரண பேச்சின் ஓட்டமாகத்தான் இருந்தது.

ஆனால் கைதட்டல் பலமாக இருந்தது. காரணம் என்னவென்று தெரியாமல் ராஜாஜி திகைத்து திரும்பிப் பார்த்தபோது தேவர் மேடையை நோக்கி வந்துகொண்டிருந்தார். அவரைப் பார்த்துத்தான் மக்கள் கைதட்டினர் என்பதை ராஜாஜி புரிந்துகொண்டார்.

“இப்போதுதான் நீங்கள் எதற்காக கைதட்டினீர்கள் என்று புரிந்தது” என்று சொன்ன ராஜாஜி தொடர்ந்து பேசி முடித்தார்.

ராஜாஜி பேசி முடிப்பதற்குள் தேவர் மேடையில் வந்து அமர்ந்தார். ராஜாஜி பேசி முடித்தததும் தேவரைப் பேசச் சொன்னார். புத்தகத்தில் கை வைத்து புத்தகத்தை பற்றி மட்டும் பேசுமாறு சைகை மூலம் தெரிவித்தார். அதைப் புரிந்துகொண்ட தேவர் பேச ஆரம்பித்தார். பேச்சின் தொடக்கத்திலேயே ராஜாஜி காட்டிய சைகை பற்றி பேசும் தோரணையில், “அடியேன் எப்போதும் எடுத்துக் கொண்ட பொருள் மீது எல்லை மீறாமல் பேசுகிற பழக்கம் உள்ளவன்” என்று சொல்லிவிட்டு பேச ஆரம்பித்தார். அந்த சொற்பொழிவின் சாரம்.

தெய்வீகத்தை பெறுவதற்கு தடையாக இருப்பவை மூன்று ஆசைகள். அதில் ஒன்றைக் குறைத்து இரண்டாக்கினார்கள் ஞானிகள். மண், பொன், பெண் என்று மூன்று ஆசையாக இருந்ததை மண்ணாசையும், பொன்னாசையும் பொருள் ஒன்றுதான். மண் இருந்தாலும் பொன் கிடைக்கும், பொன் இருந்தாலும் மண் கிடைக்கும். ஆகையால் இந்த இரண்டையும் சேர்த்து ‘காஞ்சனம்’ என்று ஒரே வார்த்தையில் முடிக்கலாம் என்று கருதினார்கள்.

பெண் என்ற ஒன்றைக் காமம் என்று வைத்தார்கள். ஆக, மூவாசை என்று வைத்த மண், பொன், பெண் என்ற மூன்றையும், ‘காம-காஞ்சனம்’ என்ற இரண்டாகக் குறைத்தார்கள். இந்த காம-காஞ்சனம் மூலம் வருகிற அழிவு என்ன? என்பதை, அகில இந்தியாவுக்கும் காட்டுவதற்காக,  தமிழ் மூலம், நாட்டில் சிறப்பாக இலக்கியம் மூலம் காட்டுவதற்காகத்தான் இரண்டு நூல்கள் வந்தன.

“காஞ்சனத்தின் மூலம் அழிந்தவன் துரியோதனன்

காமத்தின் மூலம் அழிந்தவன் ராவணன்”

 காமத்தின் மூலம் உலகம் எந்நிலை பெறும்? எந்நிலையில் உள்ளவனும் எவ்வாறு கெடுவான் என்பதை காட்டுவதற்காக ‘ராமாயனம்’ ஒரு நூலாக வந்தது.

காஞ்சம் என்ற மண்ணாசையையும், பொன்னாசையையும் வைத்து, பங்காளிக்கு உரியதைக் கொடுக்க மறுக்கும் காஞ்சனம் எப்படி சாம்ராஜ்யங்களை அழிக்கும் என்பதைக் காட்டுவதற்காகவே ‘பாரதம்’ வந்தது.

அந்த இரண்டு முறையில், சாதாரணமாக வருகின்றவர்கள் நூலை ஆராய்ச்சி செய்வார்கள். ஆனால் பொறுப்பு வாய்ந்த மேதைகள் அந்த நூலுக்கு ஆதாரமான குறிக்கோளை கவனிப்பார்கள். ஒரு கட்டடத்தை பார்க்கும் இருசாரரைப் போல. சாதாரணமாக ஒரு கட்டடத்தை அலங்காரத்திற்காக பார்க்கிற நபர்கள் மேலேயுள்ள சித்திரங்கள், சிற்பங்களை பார்ப்பார்கள். ஆனால் கட்டடம் எந்நிலையில் எவ்வளவு காலத்திற்கு உறுதியாக இருக்கும் என்பதை பார்க்கிற என்ஜினீயரிங் தொழிலில் இருப்பவர்கள் அதைப் பார்க்க மாட்டார்கள்.

புதையுண்ட ஒன்றைப் பார்ப்பது புத்திசாலியின் கடமை. புறத்தோற்றத்தை பார்ப்பது வீண் வாழ்க்கை வாழ்கின்றவனின் பழக்கம்.  அப்படியுள்ள நிலையில் இந்த இரண்டு நூல்களும் இரண்டு புதையுண்ட பொருட்களை வைத்துள்ளன. ராமாயணம் வைத்திருக்கின்ற புதைபட்ட பொருள்தான் வாதிஷ்டம் என்கின்ற ஞான நூலாகும். அதுபோல பாரதம் வைத்திருக்கின்ற புதைபட்ட பொருள்தான் ‘பகவத் கீதை’ அதிஞான நூலாகும்.

பாரதம், ராமாயணம் ஆகிய இரண்டில் ஞானிகள் எடுத்துக் கொள்வது வாதிஷ்டம், பகவத் கீதை என்ற இரண்டைத்தான். சாதாரண மனிதர்கள் எடுத்துக்கொள்வது நடந்த முறைகளைத்தான் என்பது பெரியோர் அறியோர் அறிந்ததே. அம்மாதிரியாக நின்ற இரண்டில், இன்றைக்கு இருக்கின்ற நிலைமையில் பல விபரீத எண்ணங்கள் எழுந்துள்ளன. இப்படி விபரீத எண்ணங்கள் பல வரும் என்று கருதியே தமிழ் முன்னோடிகள் என்ன சொன்னார்கள்?

“முகத்தில் கண் கொண்டு பார்க்கின்ற மூடர்காள்,

அகத்தில் கண்கொண்டு பார்ப்பதே ஆனந்தம்”

 என்று குறிப்பிட்டார்கள். முகத்தின் கண்கொண்டு புறத்தோற்றத்தை பார்க்கின்ற நபர்கள், அகத் தோற்றமாக இருக்கின்ற ஒன்றை காணச் சக்தியற்று, காணுவதற்கு முயற்சி செய்யாது, முயற்சி செய்பவனை வீணாக முயற்சி செய்பவன் என்று இகழ்ந்து, நல்ல காரியங்கள் அனைத்தையும் அவைகள் எல்லாம் கையாளுவதற்கு அனுபவத்திற்கு வராதவை, வர முடியாதவை, வரவேண்டாதவை என்று பலவீனத்தினால் மூன்றாக பிரித்துப் பேசி விடுகிறார்கள்.

இதை ஆங்கிலம் படித்தவன், அதெல்லாம் நடைமுறைக்கு உதவாத வெறும் தத்துவங்கள் என்று பிதற்றி, இப்படிப் பிதற்றுபவன் பெரிய மனிதனாகி, அவன் மூலம் ஞானம் பாழான காலம்தான் இந்தக் காலம். ஏனென்றால் நம்முடைய தாய்மொழித் தமிழிலேயே தகராறு ஏற்பட்டிருக்கும் காலம் இது.  வடமொழி-தென்மொழி ஆகிய இரண்டும் நமது சொந்த மொழிகள்தான். இது அடியேன் சாகசத்திற்காகச் சொல்லுவதல்ல, சமாதானத்திற்காக சொல்வதல்ல, ஒப்புக்காகச் சொல்லுவதல்ல. இப்படிச் சொன்னால் கிடைக்கும் பலன் கருதி ‘பாப்புலாரிட்டிக்காகவும் சொல்லுவதல்ல. அந்த முறைக்குப் போவதும் எனக்குப் பழக்கமும் அல்ல. என் பிறவிக் குணமும் அதுவல்ல. நமது முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள். அப்பர் சுவாமிகளை உங்களுக்குத் தெரியும். அவர் ஒரு தெய்வீகத் தமிழர். அவரைப் பற்றி இங்கு யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. அவர் நமது மொழி பற்றி என்ன சொல்லுகிறார் தெரியுமா?

சிவ பெருமானுக்கு லட்சணம் சொல்கின்ற பொழுது,

“வானவர் காண் வானவர்க்கும் மேலானான் காண்

வடமொழியும் – தென் தமிழும் ஆணவன் காண்’’

 என்று குறிப்பிடுகிறார்.  இது தெரிந்தால் சைவ சித்தாந்தியாக இருக்கின்ற எவரும் அப்பரை விட பெரிய சைவ சித்தாந்தியாக இருக்க முடியாது. வட மொழி நமக்கு உரியதல்ல என்று சொல்லும் பாவத்தை உடனே கைகழுவ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அதற்கடுத்தாற்போல் வடமொழி என்ற சமஸ்கிருதம் வருகின்ற காலத்தில் வட மொழிக்கு முக்கிய கர்த்தாவாக இருந்தவர்கள் பலர். இருப்பினும் வடமொழியை நன்றாக பயின்று தெய்வ கிருபையாலே 16 வயதிலேயே சர்வகாரியங்களையும் விரிவாக எழுதத் தெரிந்த நிலையில் இருந்தவர் ஆதிசங்கராச்சாரியார் ஆவார். அவர் பராசக்திக்கு மீனாட்சிக்கு லட்சணம் கூற வருகின்ற காலத்தில், மீனாட்சியின் முலைப்பாலுக்கு லட்சணம் கொடுக்கிறார்.

நாம் ஏன் மீனாட்சி என்று பெயர் கொடுத்தோம் என்பது நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயமாகும். நம்முடைய முன்னோர்கள் விஞ்ஞானம் தெரிந்தவர்கள் அல்ல. மெய்ஞானத்தை குருட்டு நம்பிக்கை கொண்டவர்கள் என்று நினைக்கின்ற ஆங்கிலப் படிப்பு இன்றைக்கு இருக்கின்றது. ஆகையால் நான் இதனை உங்களுக்கு வெளியிட ஆசைப்படுகிறேன்.

மீன்ட்சி என்பது வடமொழி. அங்கயற் கண்ணி என்பது தென்மொழி. இந்த இரண்டையும் தெரிவிக்க வேண்டிய இடம் மதுரை. அங்கயற் கண்ணி என்ற பெயரையும் மீனாட்சி என்ற பெயரையும் ஏன் பராசக்திக்குக் கொடுத்தார்கள்? என்று நாம் கருதுவோமானால், உலகிலேயே நித்திரையற்ற ஒரு ஜென்மம் இருக்கிறதென்றால், அது மீன்தான். நித்திரையற்ற நிலையில் இருக்கின்றதெல்லாம் யோகாரூடமான நிலையில் வசிக்கிறது என்பதுதான் சித்தாந்தம். அந்த முறைக்கு வருவதைத்தான்,

“நித்திரை கெட்டு நினைவோடு இருப்போருக்கு

முத்திரை ஏதுக்கடி குதம்பாய்?”

 என்று குறித்து, ஆசனங்கள், முத்திரைகள் அவர்களுக்குத் தேவையில்லை. அவர்களின் உடல் என்றைக்கும் நல்ல நிலையில் இருக்கும் என்று கண்டார்கள். அவ்வாறு நின்றதால்தான் உலக லௌகீக தோரணையில் அந்த மீனினம் உற்பத்தியாவதில்லை. ஆண் மீன் பெண் மீனை நோக்க – பெண் மீன் ஆண் மீனை நோக்க கருக்கொள்ளும், பார்வையால் கருக்கொண்டு, அது சினப்படைந்து முட்டைகளை ஈனும். அந்த முட்டைகள் தண்ணீரில் மிதந்து நிற்கும். அதற்கு ஒரு காலம் வருகின்ற காலத்தில்  மீண்டும் அந்த இரு மீனும் அவற்றை நோக்க  அவை குஞ்சுகளாக மாறும்.

நோக்கால் கர்ப்பம், நோக்க உற்பத்தி மீனினம் ஒன்றுக்கேதான். அவைகள் அப்படியானதன் பிறகு மிகச்சிறிய ரத்த அணுக்களாக மிதந்து கொண்டு நிற்கும் காலத்தில், விரால் போன்ற பெருத்த மீன்கள் பாய்ந்து சென்று இரையெடுக்கச் போகுமானால், அவை சின்னாபின்னமாக சிதைந்து அழிந்து போகும்.

இதற்காக அந்த ரத்தமாக நிற்கின்ற கொடி போன்ற  இளம் மீன் குஞ்சுகள் கெட்டிபடும் வரை மீண்டும் பார்த்துப் பார்த்து பசியமர்த்தும் அந்த மீன் வர்க்கம். இதைத் தெரிந்துதான் ‘பார்த்தால் பசி தீரும்’ என்ற பெரும்பாடலை மீனாட்சி குறித்துப் பாடினான் நமது தமிழன்.

இது பெருமைக்காகப் பாடியதல்ல. லௌகீகமாக, காம ரீதியாக வாழ்கின்ற வாழ்க்கையில் முலைப்பாலைத் தந்து பசியமர்த்த வேண்டும். தாய் பராசக்தி பார்வையாலேயே பசியமர்த்துவாள். அந்தப் பெருமைக்குரிய பராசக்தியை வணங்குபவர்கள் தமிழர்கள். இதை நாகரீகப் பெயரால் நமது விஞ்ஞானிகள் மீனினம் இப்படி வாழ்கிறது என்று ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அப்படியானால் இதைத் தெரிந்து பெயர் வைத்திருக்கிற நமது முன்னோர்கள்?

“எங்கள் தத்துவ ஞானிகள் எல்லாரும் சாதாரண விஞ்ஞானிகள் மட்டுமல்ல. அவர்கள் அனைவரும் அதிமேதையான விஞ்ஞானிகள்” என்று அன்றே குறிப்பிட்டார்கள். ஆகையால் ஒன்றும் தெரியாதிருந்த காலத்தில், மூடபக்தியை உண்டாக்கி தெய்வம் என்று மக்களை பாழ்படுத்தி விட்டார்கள் என்று கூறுபவர்களுடைய சித்தாந்தம், விவரமற்றவர்களின் சித்தாந்தமாகும். அப்படிப்பட்ட மீனாம்பிகைக்கு முலைப்பால் எப்படிப்பட்டது என்பதை அவர் குறிக்கின்ற நிலைமை வரும்பொழுதுதான் அந்த முலை உன்னாமுலை குறிக்கின்றார்கள். ஏன் அதை அப்படிக் குறிக்கின்றார்கள் என்று நீங்கள் கேட்பீர்களோயானால், அது சாதாரணமாக இயங்குவது அல்ல என்பதற்காகத்தான். சிவசக்திக் கூறையும்  இரண்டாகப் பிரித்தது போன்றும் அவை ஒன்றே என்று குறிக்கின்றார்கள். அப்படி குறிக்கின்ற பொழுதுதான்,

“சிவம் சக்தி தன்னை ஈன்றும்

சக்தி சிவம் தன்னை ஈன்றும்

உவந்து இருவரும் புணர்ந்து உலகு உயிர்

எல்லாம் என்றும் பவன் பிரம்மச்சாரியாகும்

பான் மொழி கன்னியாகும்

தவம் தரும் ஞானத்தோருக்கு

இத்தன்மைதான் தெரியும் அன்றோ.”

 என்று குறித்தது தமிழ் நாகரீகம். இந்த தன்மையில் நிற்கின்ற பொழுதுதான், அந்த பராசக்தியின் முலைப்பால் எத்தன்மையுடையது என்று சொல்லும் பொழுது, அது திருஞான சம்பந்த குழந்தைக்கு தரப்பட்ட காலத்தில், அதைப் பெறுவதற்காக  நின்ற குழந்தையை யார் என்று ஆதிசங்கரர் குறிக்கிறார் என்று கேட்டால், ‘திராவிட சிசு’ என்று குறிக்கின்றார். எப்படி?

“வானவர் காண் வானவர்க்கும் மேலானான் காண்

வடமொழியும் – தென் தமிழும் ஆணவன் காண்’’

 என்று அப்பர் குறித்தாரே அதுபோல. இப்படி அம்பிகையின் திருமுலைப்பாலை வாங்குவதற்காக நின்ற குழந்தையை அவர் ‘திராவிட சிசு’ என்று குறிக்கின்றார். இதை ஆதிசங்கரரே குறிப்பாரேயானால், திராவிட என்ற ஒரு நாகரீகமே கிடையாது. தமிழ் என்ற ஒரு மொழியே கிடையாது. அதற்கு ஒரு அறிவு கிடையாது. எல்லாம் சமஸ்கிருதத்தினின்று மொழி பெயர்க்கப்பட்டவை என்று பேசும் பிராமணர்கள் அத்தனை பேரும் சங்கரருக்குப் பாவம் செய்தவர்கள் ஆவர். துரோகம் செய்தவராவார்கள்.

ஆகையால் இங்கே வடமொழி, தென்மொழி என்பவை இரண்டு பிளவை.  இரண்டு சாரரும் உண்டு பண்ணினார்கள். ஒரு சாரர் மட்டுமல்ல இந்த இருசாரரும் பண்ணின பாவம்தான் இந்த இருசாரரையும் அழித்த, தனித்த நாஸ்தீகத்தில் கொண்டு வந்து தள்ளியிருக்கிறது.

இந்த வீண் சண்டை இல்லாதிருக்குமேயானால், இந்த விரயமான புத்தி தமிழ்நாட்டிற்கு வந்திருக்க மாட்டாது.  அது தீர வேண்டும் என்பதுதான் இன்றைக்கு நாம் அடைய வேண்டிய விருந்தாகும். அந்த நிலைமைக்கு நாம் வருவோமேயானால், வாதிஷ்டத்தில் இருக்கின்ற ஞானத்தையும் நம்முடைய சிவஞானபோதத்திலும் திருக்குறளிலும் இருக்கின்ற ஞானத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது ஒன்றுக்கொன்று குறைந்ததல்ல. ஒன்றை விட்டு ஒன்று பிரிந்து நின்றதல்ல. ஒன்றை விட்டு ஒன்று இயங்க முடியாது என்பதை உத்தம இந்தியன் உணர்வான். இந்த நிலைக்கு வருகின்றபொழுது இது மற்றொன்றைக் காட்டுகின்றது,

“முகத்தில் கண் கொண்டு பார்க்கின்ற மூடர்காள்,

அகத்தில் கண்கொண்டு பார்ப்பதே ஆனந்தம்”

என்று மகான்கள் சொன்னார்களே, அவர்கள் எதன் மூலம் சொன்னார்கள் என்று கேட்டால், பகவான் இந்த பகவத் கீதையைச் சொல்கின்ற காலத்தில் “அர்ஜுனா, என்னுடைய விஸ்வரூபத்தை நான் உனக்குக் காட்டுகின்றேன். நீ அதை இந்தக் கண்கொண்டு பார்க்க முடியாது. அதைப் பார்ப்பதற்கு ஒரு கண் தருகிறேன்” என்று சொல்கிறார். அதே நேரத்தில் தான் குருடாக உள்ள அந்த அரச பரம்பரையில் உள்ள ஒருவருக்கு, “உனக்குத் கண்ணைத் தருகிறேன் நடக்கின்ற பாரதத்தை பார்க்கிறாயா?” என்று வியாசர் கேட்கிறார். அவர், “இந்தக் கொடுமையைப் பார்க்க எனக்கு கண் வேண்டாம்” என்று சொல்கிறார்.

ஆனால் தூரத்தில் இருக்கின்ற ஒன்றை, என்ன நடக்கிறது என்று தெரிந்துகொண்டே, அந்த முறையிலே வியாசர் அதைக் குறிக்கின்றார். கிருஷ்ண பரமாத்மா சொல்லுகின்ற இடத்திலிருந்து குறித்ததல்ல இது. நீண்ட தூரத்திற்கப்பாலிருந்து, “ஆத்ம சக்தியால் காதின்றி கேட்கலாம், கண்ணின்றி பார்க்கலாம், மூக்கின்றி முகரலாம், முடவனும் மலையேறலாம்” என்று சொல்லுகின்ற உபநிஷத்தின் லட்சணங்களுக்கிணங்க, தூரத்திலிருந்து கிருஷ்ண பரமாத்மா போதித்த ஒன்றை, இன்னதை போதித்தார் என்று எழுதியவர் வியாசர்.

அந்த நிலைக்கு வருகின்றபொழுது நெற்றிக் கண் என்ற ஞானக் கண் உண்டு என்பதைக் காட்டுவதற்காகவே உலகிற்கு வந்த நூல் பாரதமாகும். ஆனால் இது இருக்க முடியுமா? அப்படி மூன்றாவது கண்ணைப் பார்த்தவர்கள் யார்? அப்பொழுது ஒற்றைக் கண் ஞானி என்று புத்தகத்தில் எழுதி இருக்கின்றார்களே அப்படி கேலிக் கூத்தாக இருப்பதா? என்று கேட்கின்ற காலம் இந்தக் காலம். நம்பு என்று சொல்லுகின்ற மாடல் 57 அல்ல.

உதாரணமாக காட்டவேண்டுவது கடமையாகும். இதிலே இரண்டு பேர் பிரசாங்கிகள், இரண்டு தன்மையில் தவறிழைக்கிறார்கள். பண்டிதர்கள் என்பவர்கள் பேசுகின்ற பொழுது தங்கள் பாண்டிதத்தை காட்டவேண்டியதற்காக பாமரனுக்குப் புரியாத நிலைமையில் பேசிப் பாழாக்குகின்றார்கள். அதேபோல பாமரனுக்குப் புரிகின்ற நிலையில் இலக்கியம் பேசுகிறேனென்று சொல்லி பண்டிதத் தன்மையிலுள்ள லட்சணம் தெரியாதவர்கள் வீணாக வார்த்தைக்கு மேல் வார்த்தைகளைக் கொட்டி மக்களைப் பாழாக்குகின்றார்கள்.

உத்தமப் பிரசங்கம் எப்படி இருக்க வேண்டும் என்கின்ற பொழுதுதான், பண்டிதனுக்கும் ரசிக்க வேண்டும், பாமரனுக்கும் புரியவேண்டும் என்று சொன்ன நாடு இந்த நாடு. அதுதான் பிரசங்கியின் கடமையாகும். அப்படி பிரசங்கத்திற்கு வருகின்ற பொழுது, மூன்றாவது கண் எத்தன்மையது என்பதை உங்களுக்கு உதாரணமாக அடியேன் காட்ட வேண்டும்.

மனிதனுக்குச் சும்மா இருக்கின்ற காலம் ஆணுக்கும் பெண்ணுக்கும் சாக்கிராவஸ்தைக் காலம். இதே நபர்களுக்கு நித்திரையவஸ்தை என்ற ஒன்று உண்டு. அதுதான் சொப்பன அவஸ்தை என்று சொல்லப்படுகின்ற காலம்.  சொப்பனத்திலே, தூக்கத்திலே இருக்கின்ற காலத்திலே கண்ணைத் திறந்து கொண்டு தூங்குகின்றவர்களும் உண்டு. சிறுபான்மையினோர் பாதிக் கண்ணை திறந்துகொண்டு தூங்குகின்றவர்களும் உண்டு. பூராக் கண்ணையும் மூடிக் கொண்டு தூங்குகின்றவர்கள்தான் பெரும்பான்மையோர் ஆவார்கள். பூராவும் திறந்து தூங்கினாலும், சரிபாதி திறந்து தூங்கினாலும் சரி.

நித்திரை காலத்தில் பார்வை கிடையாது போனதன் காரணம் என்ன?  அடியேன் இப்போது பேசிக்கொண்டிருக்கின்ற காலத்திலேயே உங்களுக்கு ஞாபகம் பசி அதிகமாகிவிட்டது என்று வந்தாலோ, நேரமாகிவிட்டது என்று வந்தாலோ, வீட்டை நினைத்தாலோ என்ன ஆகும்? நான் பேசுகின்ற வார்த்தைகள் அலைகள் ரூபமாக வந்து உங்கள் காதுகளில் விழுந்தாலும் உள்ளே இருக்கின்ற சுலோதாம் என்கின்ற இயந்திரம் அதை வாங்கி ஒழுங்காக உங்களுக்குச் செய்ய வேண்டியதைச் செய்தாலும் ஞாபகம் ஆகிய மனம் வேறிடத்திற்குச்  சென்றுவிட்டதால், நான் பேசியது உங்களுக்குக் கேட்காது. “என்ன சொல்லுகின்றீர்கள்? ஐயா, என்ன சொல்லுகின்றீர்கள்? ஒரு ஞாபகமாகவல்லவா இருந்தேன்” என்று சொல்வீர்கள். இது மனிதப் பழக்கம்.

அப்படியானால் மனிதன் உடம்போடு எங்கு இருந்தானோ, இந்த இடத்தில் ஐம்புலனும் இருந்தாலும் மனம் அதனோடு ஒன்றியில்லாதபோது அது மனம் இருக்கின்ற இடத்திற்குப் போகுமே தவிர, உடல் இருந்த இடத்திற்குப் போகாது என்பது சித்தாந்தம். ஆகையால்தான்,

“எத்தொழிலைச் செய்தாலும் ஏதவஸ்தைப் பட்டாலும்

முத்தர் மனம் இருக்கும் மோனத்தே”

என்று குறித்தார்கள். அந்த நிலையைப் பெற்ற பெரியோர்தான் பூலோகத்தில் வாழ்ந்தாலும் வானுலகில் வாழ்ந்தார்கள் என்று குறித்தார்கள். அவர்கள் எழுதிய நூல்தான் பாரதமே தவிர, பூலோகத்தில் தன்னைப் பெரிய மனிதனாக்கிக் கொள்ள வேண்டுமென்று, அரசியல்வாதியைப் பின்பற்றி, பத்திரிகைக்காரனைப் பின்பற்றி வாழ்க்கையைப் பெரிது படுத்துவதற்காக இன்றைக்கு நூல் எழுதுகின்றார்களே நபர்கள், அப்படி எழுதிய நூல் அல்ல இந்த வியாசர் விருந்து. அந்த நிலைக்கு வருகின்றபொழுது மனம் ஒன்றிப்போனதால் நம்முடைய ஐம்புலனாகிய கண்ணுக்குப் பார்வை கிடையாது. அப்படி இருக்கின்ற பொழுது சொப்பனம் என்ற ஒன்று வருகின்றது.

சொப்பனம் வருகின்ற காலத்திலே அழகாக வருகின்ற உருவத்தைக் கண்டு நாம் சந்தோஷிக்கின்றோம். அருவருப்பான உருவத்தைக் கண்டும் நாம் அருவருப்படைகின்றோம். பயங்கரமான உருவத்தைக் கண்டு நாம் பயபீதியடைகின்றோம். இதைப் பார்ப்பது எந்தக் கண்? இதுதான் இந்த சபைக்கு நான் கொடுக்கக் கூடிய கேள்வியாகும். இந்தக் கண்ணுக்குப் பார்வை கிடையாது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். அப்பொழுது சொப்பனத்தில் பார்வைகள் நடைபெறுகின்றன என்றால் அதைப் பார்ப்பதுதான் அகக்கண். அதைப் பார்ப்பதுதான் மனக்கண் என்பதை யோகிகளும் ஞானிகளும் கண்டார்கள். இதைக் கருமிகள் நித்திரையிலே அனுபவிக்கிறார்கள். அந்தக் கண் கிடைத்தது வியாசருக்கு. அதைக் கொண்டு எழுதினார் இந்த புத்தகத்தை என்பதுதான் அடியேன் இன்றைக்குச் சொல்ல வேண்டுவதாகும்.

அந்த நிலைமையில் அந்தத் தன்மையில் உயர்ந்து நின்றதுதான் இந்த பாரதம். அப்பாரதத்துக்குள்ளே பெருமணியாகக் கிடைத்ததுதான் இந்த பகவத் கீதை. எனவே வியாசர் முனிவர் எழுதிய மகாபாரதம் என்பதை ‘வியாசர் விருந்து’ என்பதன் பெயரால் ராஜாஜி அவர்கள் எழுதி வழங்கி உள்ளார்கள். அதனை வாங்கிப் படித்து பயனடைவது நமது கடமை”

இவ்வாறு தேவர் அந்த விழாவில் பேசினார்.

–       முடிசூடா மன்னர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்

This entry was posted in தேவர் and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *